Friday, February 3, 2017

H1B விசா கெடுபிடிகள் - என்ன ஆகும் அமெரிக்க கனவு? -

 #h1bvisa


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் "குடியேற்றத்தில் கடுமையான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவேன்" என வாக்குறுதி அளித்துத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் பதவியேற்றவுடன் எச்1பி விசாவில் சீர்திருத்தம் வரும் என்ற சூழலில் இந்திய கணினித்துறையே ஆட்டம் கண்டு போயிருக்கிறது. இதன் பின்புலம், H1B விசாவின் எதிர்காலம் ஆகியவற்றை இக்கட்டுரையில் ஆராயலாம்.



எச்1பி விசா என்பது 90களில் பில் கிளிண்டன் காலத்தில் அமெரிக்கத் தகவல்தொழில்நுட்பதுறைக்கு உலகளாவிய அளவில் தொழிலாளிகளைத் தேடித்தரும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 85,000 எச்1பி விசாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. ஆள் பற்றாக்குறை உள்ள அமெரிக்க கம்பனிகள் இந்தியா, சீனா மாதிரி நாடுகளில் ஆட்களை நேர்முகத்தேர்வு செய்து பணிக்குத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் அதன்பின் எச்1பி விசாவுக்கு அப்ளை செய்து விசா கிடைத்தபின் அமெரிக்கா வருவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் 85,000 விசாக்களுக்கு சுமார் இரு மடங்காக விண்ணப்பங்கள் குவியும். சென்ற ஆண்டு 85,000 விசாக்களுக்கு 175,000 பேருக்கும் மேல் விண்ணப்பித்தார்கள். அந்தச் சூழலில் லாட்டரி முறைமூலம் அந்த 85,000 விசாக்களுக்கு உரியவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த எச்1பி விசா ஃபேஸ்புக், கூகிள் போன்ற அமெரிக்க கம்பெனிகளுக்கும் இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற இந்திய கம்பெனிகளுக்கும் பெரும் உதவியாக இருந்தது. இக்கம்பெனிகளில் இந்தியாவில் இருந்து சென்ற பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றினார்கள். எச்1பி விசாக்களில் பெரும்பங்கு இந்தியருக்கே சென்றது. ஆனால் அதே சமயம் 2008ல் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவானவுடன் வெள்ளைகாலர் வேலைகள் வெளிநாட்டவருக்குச் செல்வதைக் கண்டு அமெரிக்கரிடையே எதிர்ப்புணர்வு எழத் துவங்கியது.

எச்1பி விசா பெற குறைந்தபட்ச சம்பளம் 60,000 டாலர் ஆக இருந்தால் போதும் என்ற நிலையில் அதிக சம்பளம் கொடுத்து அமெரிக்கரைப் பணிக்கு அமர்த்துவதை விடக் குறைந்த சம்பளத்தில் பிறநாட்டவரைப் பணிக்கு எடுக்கலாம் எனப் பல நிறுவனங்கள் செயல்படத் துவங்கின. பெரிய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சென்ற ஆண்டு டிஸ்னி நிறுவனம் தன் அமெரிக்கத் தொழிலாளர்களைப் பணியை விட்டு நீக்குவதாக நோட்டீஸ் கொடுத்து, அவர்களுக்குப் பதில் இந்தியர்களைப் பணிக்கு எடுத்தது. அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேலை நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொண்டது.

இதனால் மிகுந்த கோபமடைந்த அமெரிக்கத் தொழிலாளிகள் டிஸ்னி மேல் வழக்குத் தொடர்ந்ததுடன் டொனால்டு ட்ரம்புக்கும் இத்தகவலைத் தெரியப்படுத்தினர். ட்ரம்ப் அதன்பின் டிஸ்னியை மிகக் கடுமையாக சாடினார். எச்1பி விசாவில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளை நீக்கப்போவதாகக் கூறினார்.

அவர் தேர்தலில் வென்றதும் இப்போது கீழ்க்காணும் சீர்திருத்தங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1) லாட்டரி முறையை ஒழித்து அதிக சம்பளம் யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களுக்கு விசா கொடுப்பது. இதன்மூலம் அதிக சம்பளம் பெறும் நிர்வாகி அளவிலான, திறமையானவர்களுக்கு மட்டுமே விசா கிடைக்கும்.

2) எச்1பி விசா பெற குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 60,000 டாலர் ஆக இருப்பதை 1,30,000 டாலர் ஆக உயர்த்துவது

3) கூகிள், ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே எச்1பி விசாவைக் கொடுப்பது.

லாட்டரி முறையைப் பெரிதும் நம்பியிருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்திய கம்பெனிகளான டி.சி,எஸ், விப்ரோ போன்றவை கூகிள், ஃபேஸ்புக், ஆரக்கிள் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு அதிக சம்பளம் தர முடியாது. 1,30,000 டாலர் எனும் வரைமுறை அமல்படுத்தப்பட்டால் இந்திய மென்பொருள் தொழிலாளிகளில் நூற்றுக்கு 99% பேருக்கு விசா கிடைப்பது நின்றுவிடும்.

இதனால் இந்திய மென்பொருள் துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சி காணப்படுகிறது. இந்தியத் தொழிலாளிகள் பலரும் அமெரிக்க கனவு பகல் கனவாகிவிடும் என்ற அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

அதுபோக ஏற்கெனவே எச்1பி விசா வாங்கி ஆண்டுக்கணக்கில் பணியாற்றி நிரந்தரப் பணியுரிமை வழங்கும் பச்சை அட்டைக்குக் காத்திருக்கும் இந்தியத் தொழிலாளர்கள் பலரும் தம் எச்1பி விசாவைப் புதுப்பிக்க நேர்கையில் அது தள்ளுபடி செய்யப்படுமோ என்ற கவலையில் மூழ்கியுள்ளனர். எச்1பி விசாவில் உள்ளே வந்தாலும் அதன் ஆயுள் 3 ஆண்டுகள்தான். அதன்பின் மீண்டும் அதைப் புதுப்பிக்க வேண்டும். எச்1பி விசாவில் கணவன் வந்தால் மனைவி எச்4 விசாவில் வரலாம். அப்படி வந்தால் எச்4 விசாவில் இருக்கையில் வேலைக்குப் போக முடியாது. படிக்கப் போனால் வெளிநாட்டு மாணவருக்கான அதிகபட்ச கட்டணத்தைச் செலுத்தவேண்டும். வீடு வாங்குவது, வரிகள் உள்ளிட்ட பலவற்றில் சிக்கல் உண்டு.

எனவே இந்தியர்களின் அமெரிக்கக் கனவு பகல் கனவாகிவிடும் சாத்தியங்கள் நிறைய.

- நியாண்டர் செல்வன்
எண்ணூர்

“வங்கக் கடலை வாளியில் அள்ள முடியாது... அரசை நிர்பந்தியுங்கள்!” எண்ணூர் விபத்தும், நம் கடமையும்...! #3MinsRead


வங்கக் கடலை வாளியால் அள்ளிக் கொண்டிருக்கிறது தமிழகம். இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன... யாருக்கும் காயமில்லை சாதரண விபத்துதான் என்று தொடங்கிய வழக்கமான சமாதானங்கள். இன்று, “கொஞ்சம் எண்ணெய் சிந்திவிட்டது. எல்லாம் சரியாக இன்னும் ஆறு மாதங்களாவது ஆகும்” என்ற அளவில் நிற்கிறது. சாதாரணமாக ஒரு கப்பல் ஆழ்க்கடலில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றால், கப்பல் விபத்துக் குறித்து நம் அரசின் செயல்பாடுகள் மணிக்கு 4.5 கி.மீட்டர் வேகத்தில் கூட இல்லை. ஏதோ, கச்சத்தீவுக்கு அப்பால் கச்சா எண்ணெய் சிந்தியது போல மெளனியாக இருக்கிறது தமிழக அரசும், அதன் மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும். பாவம், அப்பாவி தமிழன்தான் நடந்த விபரீதங்கள் புரியாமல் சமுக விரோதியென்ற பட்டத்தை ஏந்திக் கொண்டு வாளியுடன் கடலை அளந்துக் கொண்டிருக்கிறான். என்ன சொல்ல...? எப்போதும் மனதிலிருந்து சிந்திக்க பழகியவன் அவன்.

“பாதுகாப்பில்லை, சூழல் கேடு, வாழ்வாதார இழப்பு”

“கடலில் சிந்தியிருக்கிற எண்ணெய்யை வெறும் கைகளில் கையாள்வது உடனடியாக தீங்குவிளைவிக்காதென்றாலும்... நாட்கள் செல்லச் செல்ல தோல் நோய்கள் உட்பல சில நோய்கள் வர காரணமாக அமையும். உடல் பலகீனமானவர்கள் என்றால், மூச்சுத்திணறல் கூட வரலாம்”என்கிறார்கள் அறிவியலாளர்கள். இதை அரசுப் புரிந்துக் கொள்கிறதா இல்லை இவன் தானே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமக்கு எதிராகக் கோஷம் போட்டான். எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று வேண்டுமென்றே மெளனம் சாதிக்கிறதா என்று தெரியவில்லை.

கடலில் இறங்கி அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துவது மட்டும் ஆபத்தில்லை. அந்தக் கடற்கரை மண்ணிலும் எண்ணெய் படிமங்கள் படிந்திருக்கும். அதையும் முழுவதுமாகச் சுத்தப்படுத்த வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதில் கவனம் செலுத்த அரசுக்கு விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால், அதே நேரம் தமிழக அரசு, உளவுத்துறையின் அனைத்துக் கரங்களையும் முடுக்கிவிட்டு, யாரை வீழ்த்த முன்னாள் தமிழக தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார யாகம் நடத்தினார் என்று மிக அக்கறையாக விசாரித்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ,“கப்பல்கள் விபத்தால் உயிரிழப்பு ஏதும் இல்லை” என்கிறார். இவர்களுக்கெல்லாம் பிரச்னையின் தீவிரம் புரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை? உயிரிழப்பு மட்டும் இழப்பில்லை. கடல் சூழல் முழுவதுமாக சிதைந்து போனதும் இழப்புதான் என்பதை எப்படி அவருக்குப் புரியவைப்பது?



நேற்று காலை மீன்பிடிக்க எண்ணூர் பகுதியிலிருந்து படகை எடுத்த காந்தி, ஏறத்தாழ 7 நாட்டிகல் மைல் கடலில் பயணித்து... ஐந்து மணிநேரம் கடலில் வலையுடன் காத்திருந்து வெறும் மூன்று கிலோ மீனுடன் வீடு திரும்புகிறார். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்போல என்று தனக்குத் தெரிந்த கடலறிவிலிருந்து வெள்ளந்தியாகப் பேசுகிறார். இவருக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்புகளுக்கு யார் பொறுப்பு...?

34,000 சதுர மீட்டர் பரப்பளவில் எண்ணூரிலிருந்து காசிமேடு வரை எண்ணெய் படிமம் பரவி இருக்கிறது. இது என் கண்டு பிடிப்பல்ல. இது கடலோரக் காவல்படை அதிகாரி ராஜன் பர்கோத்ரா சொல்லிய கணக்கு. இந்தளவுக்குப் பரவியுள்ள எண்ணெய் படிமங்களை எத்தனை தசாப்தங்கள் ஆனாலும், நிச்சயம் வெறும் கரங்களால் வாளியை வைத்து அள்ள முடியாது. அப்படியானால், இந்தப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாராம்?

ஆக, நம் அரசுகளிடம் ஒரு விபத்து ஏற்பட்டால் அதைக் கையாளும் திறனுமில்லை, தொழில்நுட்பமும் இல்லை. குறைந்தப்பட்சம் அதை புரிந்துக் கொள்ளும் அறிவும் இல்லை. இப்படித்தான் , நம் அரசுகள் விபத்தைக் கையாளுமென்றால், கூடங்குளம், கல்ப்பாக்கம் அணு உலைகளில் நாளை விபத்து ஏற்பட்டால் அணுக்கதிர் வீச்சுகளை விசிறிவைத்து அரசு கையாளும் என்று ஒரு வாட்ஸ அப் அங்கதம் உலாவுகிறதே அதை உண்மையென்று எடுத்துக் கொள்ளலாமா...?



நீங்கள் செல்லாதீர்கள்... அரசை நிர்பந்தியுங்கள்...!

அறிவியலாளர்க்ளும், ஆராய்ச்சியாளர்களும், சூழலியலாளர்களும் சொல்வதில் எள்முனை அளவும் மிகையில்லை. அந்த எண்ணெய் படிமங்கள் ஆபத்து விளைவிக்கக்கூடியது. தோல் வியாதிகள் வரலாம். விபத்து நிகழ்ந்தால் நாம்தான் முன் நிற்கவேண்டும் என்கிற நம் இளைஞர்களின் வெள்ளை மனம் புரிகிறது. ஆனால், எல்லாவற்றுக்கும் நாம்தான் முன் நிற்போமென்றால், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எதற்கு? ஜல்லிகட்டுக்காக நாம் மெரினாவில் திரண்டோம். அது சரி ஆனால், இந்த முறை நாம் திரள வேண்டியது எண்ணூரில் அல்ல. நமக்கு வேறொரு கடமை இருக்கிறது. அது அரசை நிர்பந்திப்பது. எங்களை கடலை, தமிழர் கடலை சுத்தம் செய் நவீன தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்து. கடலை மாசாக்கிய அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடு. எண்ணூர் முதல் காசிமேடுவரை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கு என்று அரசுகளையும், ஆட்சியாளர்களையும் நிர்பந்திப்பதுதான் நம் கடமை.

1500 பேர் மட்டுமே எண்ணெயை அப்புறப்படுத்துகிறார்கள். மெரினாவில் இருந்தவர்கள் எங்கே போனார்கள்? என்று கேட்கும் ராஜாக்களைப் புறந்தள்ளுவோம்.

அது நம் கடல்தான். அதை நாம்தான் பாதுகாக்கவேண்டும், சுத்தப்படுத்தவேண்டும். மாற்று கருத்தில்லை. ஆனால், இந்தமுறை நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் மூலம் அதைச் செய்வோம். அதுதான் சரியும் கூட...!

- மு. நியாஸ் அகமது

சென்னை கடலை பாழாக்கிய இரண்டு கப்பல்கள் சிறைபிடிப்பு


சென்னை எண்ணூர் அருகே, விபத்துக்குள்ளான 2 கப்பல்களை இந்திய கடலோர பாதுகாப்புப்படை சிறைபிடித்துள்ளது.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே, கடந்த வாரம் 28-ம் தேதி மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூரை நோக்கி வந்த டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் மீது ஈரான் கப்பல் மோதியது. இதில் மும்பையில் இருந்து டீசலை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் சேதமடைந்து, கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த விபத்து காரணமாக, கடலில் கொட்டிய கச்சா எண்ணெய், எண்ணூர் முதல் திருவான்மியூர் கடல் பகுதி வரை பரவியது. இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. இதனைத்தொடர்ந்து, கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் சிறைப்பிடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் இந்திய கடலோர பாதுகாப்புப்படை இன்று சிறைபிடித்தது.

61 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே நிரம்பிய அணை... தப்பிக்குமா தமிழகம்?

 TN drought 2017


பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை கேரள அரசு துரிதப்படுத்தி வருகிறது. அரசியல் கட்சியினர், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினர் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர். பவானி நதி நீரை முழுக்க முழுக்க நம்பி இருக்கும் கீழ்பவானி பாசன விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அணைகட்டப்படும் அட்டப்பாடி பகுதிக்கு சென்று ஆர்பாட்டம் செய்துவந்துள்ளனர்.

இது குறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி கூறியதாவது;

பவானி நதியின் குறுக்கே , கேரளா வனப்பகுதியில் 6 தடுப்பணைகளை கேரளா அரசு கட்டிவருகிறது. அட்டப்பாடி, மஞ்சக்கண்டி, தேக்குவட்டை, பாடவயல், சீரக்கடவு, சாவடியூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் வேலை துரிதமாக நடக்கிறது. மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்ற பிறகுதான் எந்த வனப்பகுதியிலும் கட்டுமானப் பணிகளை செயல்படுத்த முடியும். ஆனால், கேரளா அரசு இந்த துறையின் அனுமதி பெறாமல் வனப்பகுதியில் தடுப்பணைகள் கட்டிவருகிறது.

கேரளா ஒரு மழை மாநிலம், ஆனால், தமிழ்நாடு அப்படி அல்ல. இது ஒரு மழை மறைவு மாநிலம். மேற்கு தொடர்ச்சி மலை நதிகளை நம்பித்தான் பெரும்பாலான மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்தேவை இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும், கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் சந்திக்கும் நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மலைச்சரிவில் உள்ள அமைத்திப் பள்ளத்தாக்கு என்கிற இடத்தில்தான் பவானி நதி உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் இந்த நதி கேரளாவுக்குள் 35 கி.மீ. தூரம் மேற்கு நோக்கி பயணித்த பிறகுதான் தமிழ்நாட்டு வனப்பகுதியில் நுழைகிறது. அது தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் உள்ள பில்லூர் மின் அணையில் நிரம்பி வழிந்து பவானி சாகர் அணையை வந்தடைகிறது. பில்லூர் அணையில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.

அதேபோல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், காலிங்கராயன் பாசன அணை, கொடிவேறி கால்வாய் ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் ஈரோடு,திருப்பூர்,கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர்நிலத்திற்கு பாசனம் கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால், ஈரோடு மாவட்டத்திற்கு உலகபுகழ் சேர்க்கும் மஞ்சள் விவசாயம் அழிந்து போய்விடும்.

பவானி சாகர் அணைக்கட்டப்பட்டு 61 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலக்கட்டத்தில் 6 முறை மட்டும்தான் இந்த அணை முழுமையாக நிறைந்துள்ளது. எப்போதுமே பற்றாக்குறை பாசனம்தான் நடந்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு சம்பந்தமான இறுதித்தீர்ப்பில், காவிரியில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி. தன்ணீர் கொடுக்கவேண்டும் என்று ஆணை உள்ளது. கபினி அணையில் இருந்து 21 டி.எம்.சியும், பவானியில் இருந்து 6 டி.எம்.சியும். அமராவதியில் இருந்து 3 டி.எம்.சி.தண்ணீரும் வழங்க வேண்டும் என்கிறது அந்த தீர்ப்பாணை. ஆனால், பவானி நதி பயணிக்கும் 35 கி.மீ. கேரளா எல்லைப்பகுதியில் வசிக்கும் பலரும் நீர் ஏற்று பாசனமுறையில் ஆற்றில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீரை முறை தவறி எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் 2,500 ஏக்கர் பாசனம் செய்கிறார்கள்.

இது காவிரி நதி நீர் பங்கீடு இறுதி தீர்ப்புக்கு புறம்பானது. மேற்கு மாவட்டங்களை பாலைவனமாக்கும் செயல் இது. கேரளா அரசின் இந்த அத்து மீறலை, மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.. இல்லையென்றால், பாரம்பரியம் காக்க நடந்த கடல் புரட்சி போல, பவானி நதியை காக்கும் நதி புரட்சி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.” என்றார்.

தமிழக விவசாயிகளின் நலன்காக்க இயற்கையும், அரசும் மனது வைக்க வேண்டும்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் சிக்கிய சென்னை இன்ஸ்பெக்டர்!



ரூபாய் நோட்டு விவகாரத்தில் சென்னை அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற காலஅவகாசமும் கொடுக்கப்பட்டதையடுத்து மக்கள் அதை மாற்றினர். கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், புரோக்கர்கள் உதவியுடன் சில வங்கி அதிகாரிகள் மூலம் கறுப்புப் பணம் மாற்றப்பட்டதாக ஆர்.பி.ஐ.க்கு தகவல்கள் சென்றன. அதை நிரூபிக்கும் வகையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகள் ஆகியோர் இணைந்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டு மாற்றிய விவகாரத்தில் சிக்கினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். தற்போது வேலியே பயிரை மேய்ந்த கதையாக பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தில் அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், "சென்னை அண்ணாநகரில் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்கும் புரோக்கர்களின் நடமாட்டம் அதிகளவில் இருந்ததாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதில் அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் வந்தது. அதன்பேரில் நேற்று அவரிடம் விசாரணை நடத்தினோம். விசாரணை முடிவில் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு வந்தார். அவர், வழக்குகளை விசாரிக்கும் ஸ்டைலே தனி ரகம் என்பது போலீஸ் வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும். துறைரீதியான விசாரணை அவரிடம் நடந்து வருவதாக போலீஸ் உயரதிகாரிகள் சொல்வதற்கும் ஒருகாரணம் இருக்கிறது. ஜெயசந்திரன் மீதுள்ள குற்றச்சாட்டில் இன்னும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் இந்த விவகாரத்தை மூடிமறைக்கவே போலீஸார் முயற்சித்தனர். சென்னை போலீஸ் ஐ.பி.எஸ் உயரதிகாரிகளுக்கு மட்டுமே இந்த விவகாரம் முழுமையாகத் தெரியும். குறிப்பாக பத்திரிகைகளுக்கு தெரியக்கூடாது என்ற அந்த உயரதிகாரிகளின் உத்தரவை அப்படியே அவருக்கு கீழ் உள்ள சில அதிகாரிகளும் பின்பற்றி வருகின்றனர். ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டத்திலேயே இந்த விவகாரத்தை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த விசாரணை குழுவில் உள்ள நேர்மையான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, இன்ஸ்பெக்டர் விவகாரத்தை வெளியில் சொல்லி விட்டார்.

ஜெயசந்திரன் விவகாரம் வெளியில் தெரிந்ததும் ஐ.பி.எஸ்.விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கடும் தலைவலி ஏற்படுத்தி உள்ளது. இதனால் எந்த தகவலும் சொல்லாமல் நேற்று வரை மூடிமறைத்த அவர்கள் ஜெயசந்திரனிடம் விசாரணை நடந்து வருவதை மட்டும் சொல்லத் தொடங்கி உள்ளனர். இதற்கிடையில் விசாரணை முடிந்து ஜெயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஜெயசந்திரனை காப்பாற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் முயற்சித்து வருகிறார். இதனால் ஜெயசந்திரன் மீது புகார் கொடுத்தவரின் பெயரைக் கூட சொல்ல போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர்" என்றனர்.

-எஸ்.மகேஷ்

Thursday, February 2, 2017

பெட்ரோல் ஊத்தி கொளுத்தச் சொன்னதா காதல்?! - கேரள கல்லூரி அதிர்ச்சி

கேரளாவின் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் லஷ்மி (20) மற்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான ஆதர்ஷ் (26) இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணங்களால், ஆகாஷ் உடனான தன் காதலை முறித்துக்கொண்டு லஷ்மி விலகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை சில மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்திருந்த லஷ்மி மீது பெட்ரோலை ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் லைட்டரைக் கொண்டு தீயைப் பற்ற வைத்துள்ளார் ஆதர்ஷ். கண்ணிமைக்கும் நேரத்தில் தன்மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டுள்ளார் ஆதர்ஷ். ஆதர்ஷ் புதன் அன்று இரவே இறந்துவிட, 65 சதவிகித தீக்காயங்களுடன் லஷ்மி மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இவர்களைக் காப்பாற்ற வந்த சக மாணவர்கள் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஆதர்ஷ் உடனான காதலை முறித்துக்கொண்ட லஷ்மியின் மீதான கோபத்தினால்தான் ஆகாஷ் இவ்வாறு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இச்சம்பம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை முடிவில்தான் இச்சம்பவத்துக்கான காரணம் தெரியவரும்.

இந்நிலையில் காதல் முறிவு, ஒருதலைக்காதல் போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு உதாரணம் சுவாதி, வினுப்பிரியா, பிரியதர்ஷினி ஆகியோர் மீது நடத்தப்பட்ட ஒருதலைக் காதல் கொடூர நிகழ்வுகள். அதன் வடுக்கள் மறையாத சூழலில்....இப்போது லஷ்மி.

லஷ்மி மற்றும் ஆதர்ஷ் இடையே என்ன பிரச்னையாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அதற்கு ஒருவரை கொலை செய்யும் அளவுக்கு வன்முறையை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம். கோட்டயத்தில் நடைபெற்ற சம்பவத்தை வாசகராகிய நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள். மேலும் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்யலாம்?

உங்கள் கருத்தை கீழே இருக்கும் கமென்ட் பாக்ஸில் பதிவிடலாம்.

- கு.ஆனந்தராஜ்
Dailyhunt
மூக்கில் நுழைந்து மூளை அருகில் உலாத்திய கரப்பான். உயிருடன் வெளியே எடுத்த அரசு மருத்துவர்கள்

சென்னை: எப்போதாவது அரிதாக நடைபெறும் சில சம்பவங்கள் உண்டு. அதுபோன்று தூங்கும் போது மூக்கின் வழியே சென்று மூளைக்கு அருகில் உலவிக் கொண்டிருந்த கரப்பான் மூச்சியை அறுவை சிகிக்சை இன்றி உயிருடன் வெளியே எடுத்துள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

சென்னையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார் செல்வி. 42 வயதான இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு 11.30 மணியளவில் அவரது மூக்கில் ஏதோ நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு எழுந்தார். மூக்கில் எரிச்சல், அரிப்பு, வலி உள்ளிட்ட தொந்தரவுகள் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த செல்வி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு நள்ளிரவில் சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் செல்விக்கு மூக்கில் சதை வளர்ந்திருக்கும் என்று சந்தேகமாக கூறப்பட்டது. அவர்கள் கொடுத்த மருந்தை சாப்பிட்டும் செல்விக்கு வலி குறையவில்லை.

வலியை தாங்க முடியாத செல்வி அருகில் இருந்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கும் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட ஸ்கேனில் செல்வியின் மூளைக்கு அருகில் கரப்பான் இருப்பது தெரியவந்தது.


மூளை அருகில் கரப்பான் இருப்பது தெரிய வந்தவுடன் செல்வி பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதைவிட அவரை மேலும் அதிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது தனியார் மருத்துவமனையில் அதனை எடுக்க வழிவகை இல்லை என்பதுதான். அதனால் அவர் உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

இதையடுத்து, செல்வி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேற்று காலை சென்றார். காது, மூக்கு தொண்டை பிரிவு டாக்டர்கள் எம்.என்.சங்கர், முத்து சித்ரா ஆகியோர் மூக்கு உள்நோக்கு கருவி மூலம் அவரை பரிசோசதனை செய்தனர். அப்போது மூளையின் அடிப்பகுதியில் கரப்பான் பூச்சி உயிரோடு உலாத்திக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.


மருத்துவமனையில், வேக்கம் சக்ஷன் கருவி மூலம் கரப்பான் பூச்சியை வெளியே எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. பின்னர், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மூக்கு உள் நோக்குக் கருவி மூலம் கரப்பான் பூச்சி உயிருடன் வெளியே எடுக்கப்பட்டது.


எந்த வித அறுவை சிகிச்சையும் இன்றி நவீன கருவிகள் மூலம், மூளையின் அருகில் இருந்த கரப்பான் பூச்சி நீக்கப்பட்டதால் செல்விக்கு வலி தீர்ந்தது. இதனால் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

NEWS TODAY 24.08.2026