H1B விசா கெடுபிடிகள் - என்ன ஆகும் அமெரிக்க கனவு? -
#h1bvisa
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் "குடியேற்றத்தில் கடுமையான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவேன்" என வாக்குறுதி அளித்துத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் பதவியேற்றவுடன் எச்1பி விசாவில் சீர்திருத்தம் வரும் என்ற சூழலில் இந்திய கணினித்துறையே ஆட்டம் கண்டு போயிருக்கிறது. இதன் பின்புலம், H1B விசாவின் எதிர்காலம் ஆகியவற்றை இக்கட்டுரையில் ஆராயலாம்.
எச்1பி விசா என்பது 90களில் பில் கிளிண்டன் காலத்தில் அமெரிக்கத் தகவல்தொழில்நுட்பதுறைக்கு உலகளாவிய அளவில் தொழிலாளிகளைத் தேடித்தரும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 85,000 எச்1பி விசாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. ஆள் பற்றாக்குறை உள்ள அமெரிக்க கம்பனிகள் இந்தியா, சீனா மாதிரி நாடுகளில் ஆட்களை நேர்முகத்தேர்வு செய்து பணிக்குத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் அதன்பின் எச்1பி விசாவுக்கு அப்ளை செய்து விசா கிடைத்தபின் அமெரிக்கா வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் 85,000 விசாக்களுக்கு சுமார் இரு மடங்காக விண்ணப்பங்கள் குவியும். சென்ற ஆண்டு 85,000 விசாக்களுக்கு 175,000 பேருக்கும் மேல் விண்ணப்பித்தார்கள். அந்தச் சூழலில் லாட்டரி முறைமூலம் அந்த 85,000 விசாக்களுக்கு உரியவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த எச்1பி விசா ஃபேஸ்புக், கூகிள் போன்ற அமெரிக்க கம்பெனிகளுக்கும் இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற இந்திய கம்பெனிகளுக்கும் பெரும் உதவியாக இருந்தது. இக்கம்பெனிகளில் இந்தியாவில் இருந்து சென்ற பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றினார்கள். எச்1பி விசாக்களில் பெரும்பங்கு இந்தியருக்கே சென்றது. ஆனால் அதே சமயம் 2008ல் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவானவுடன் வெள்ளைகாலர் வேலைகள் வெளிநாட்டவருக்குச் செல்வதைக் கண்டு அமெரிக்கரிடையே எதிர்ப்புணர்வு எழத் துவங்கியது.
எச்1பி விசா பெற குறைந்தபட்ச சம்பளம் 60,000 டாலர் ஆக இருந்தால் போதும் என்ற நிலையில் அதிக சம்பளம் கொடுத்து அமெரிக்கரைப் பணிக்கு அமர்த்துவதை விடக் குறைந்த சம்பளத்தில் பிறநாட்டவரைப் பணிக்கு எடுக்கலாம் எனப் பல நிறுவனங்கள் செயல்படத் துவங்கின. பெரிய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சென்ற ஆண்டு டிஸ்னி நிறுவனம் தன் அமெரிக்கத் தொழிலாளர்களைப் பணியை விட்டு நீக்குவதாக நோட்டீஸ் கொடுத்து, அவர்களுக்குப் பதில் இந்தியர்களைப் பணிக்கு எடுத்தது. அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேலை நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொண்டது.
இதனால் மிகுந்த கோபமடைந்த அமெரிக்கத் தொழிலாளிகள் டிஸ்னி மேல் வழக்குத் தொடர்ந்ததுடன் டொனால்டு ட்ரம்புக்கும் இத்தகவலைத் தெரியப்படுத்தினர். ட்ரம்ப் அதன்பின் டிஸ்னியை மிகக் கடுமையாக சாடினார். எச்1பி விசாவில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளை நீக்கப்போவதாகக் கூறினார்.
அவர் தேர்தலில் வென்றதும் இப்போது கீழ்க்காணும் சீர்திருத்தங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1) லாட்டரி முறையை ஒழித்து அதிக சம்பளம் யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களுக்கு விசா கொடுப்பது. இதன்மூலம் அதிக சம்பளம் பெறும் நிர்வாகி அளவிலான, திறமையானவர்களுக்கு மட்டுமே விசா கிடைக்கும்.
2) எச்1பி விசா பெற குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 60,000 டாலர் ஆக இருப்பதை 1,30,000 டாலர் ஆக உயர்த்துவது
3) கூகிள், ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே எச்1பி விசாவைக் கொடுப்பது.
லாட்டரி முறையைப் பெரிதும் நம்பியிருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்திய கம்பெனிகளான டி.சி,எஸ், விப்ரோ போன்றவை கூகிள், ஃபேஸ்புக், ஆரக்கிள் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு அதிக சம்பளம் தர முடியாது. 1,30,000 டாலர் எனும் வரைமுறை அமல்படுத்தப்பட்டால் இந்திய மென்பொருள் தொழிலாளிகளில் நூற்றுக்கு 99% பேருக்கு விசா கிடைப்பது நின்றுவிடும்.
இதனால் இந்திய மென்பொருள் துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சி காணப்படுகிறது. இந்தியத் தொழிலாளிகள் பலரும் அமெரிக்க கனவு பகல் கனவாகிவிடும் என்ற அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
அதுபோக ஏற்கெனவே எச்1பி விசா வாங்கி ஆண்டுக்கணக்கில் பணியாற்றி நிரந்தரப் பணியுரிமை வழங்கும் பச்சை அட்டைக்குக் காத்திருக்கும் இந்தியத் தொழிலாளர்கள் பலரும் தம் எச்1பி விசாவைப் புதுப்பிக்க நேர்கையில் அது தள்ளுபடி செய்யப்படுமோ என்ற கவலையில் மூழ்கியுள்ளனர். எச்1பி விசாவில் உள்ளே வந்தாலும் அதன் ஆயுள் 3 ஆண்டுகள்தான். அதன்பின் மீண்டும் அதைப் புதுப்பிக்க வேண்டும். எச்1பி விசாவில் கணவன் வந்தால் மனைவி எச்4 விசாவில் வரலாம். அப்படி வந்தால் எச்4 விசாவில் இருக்கையில் வேலைக்குப் போக முடியாது. படிக்கப் போனால் வெளிநாட்டு மாணவருக்கான அதிகபட்ச கட்டணத்தைச் செலுத்தவேண்டும். வீடு வாங்குவது, வரிகள் உள்ளிட்ட பலவற்றில் சிக்கல் உண்டு.
எனவே இந்தியர்களின் அமெரிக்கக் கனவு பகல் கனவாகிவிடும் சாத்தியங்கள் நிறைய.
- நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment