இதற்கெல்லாம் எப்போது போராட்டம்?
கே.பாலசுப்பிரமணிமெரினா புரட்சி ஓய்ந்துவிட்டது. ஆனால், அது நம் இளைஞர்களின் மனதில் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை. நாட்டு மாடுகளைக் காப்பதற்காகக் களம் இறங்கிய இளைஞர் படைக்கு, இன்னும் நிறைய வேலைகள் மிச்சம் இருக்கின்றன; தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகள் ஏராளம் உள்ளன. தமிழ்நாட்டைச் சூறையாடிக்கொண்டிருக்கும் டாப் 10 பிரச்னைகள் இவை...
விவசாய நிலங்கள்
அதீத விளைச்சல் என்ற பெயரில் மண்ணை மலடாக்கி, மனிதர்களிடம் நோயை உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை உற்பத்தி செய்வதுதான் விவசாயம் என்ற கருத்தியல், மெள்ள மெள்ள அடிபட்டுவருகிறது. இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், விவசாய நிலங்களின் பரப்பளவு நாளுக்குநாள் குறைந்துவருகிறது. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 3.25 கோடி ஏக்கர். கடந்த 35 ஆண்டுகளில் சராசரியாக 20 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காகவும், இதர பயன்பாடுகளுக்காகவும் மாற்றப்பட்டுவிட்டன. விளைநிலங்களைப் பாதுகாக்க, கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்திய போராட்டமே இன்றைய தேவை. கேரள மாநிலத்தில் உள்ளதுபோல் விளைநிலங்களை மனைகளாக மாற்ற, தொழிற்சாலைகளுக்குக் கடும் விதிமுறைகளை தமிழ்நாட்டிலும் உருவாக்க வேண்டும்.
இயற்கை வளங்கள்
தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்துவதற்கும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கும், நீர்நிலைகளில் இருந்த மணல் கொள்ளையடிக்கப்படுவதுதான் பிரதானமான காரணம். தஞ்சை, நாகை, அரியலூர் மாவட்டங்களின் வழியாகப் பாயும் கொள்ளிடம், கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி ஆற்றுப்படுகை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குண்டாறு ஆற்றுப்படுகை ஆகிய இடங்களில் மட்டும்தான் இப்போது மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுகையில் ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்பது பொதுப்பணித்துறையின் விதிமுறை. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மீட்டர் அளவுக்கு மணல் அள்ளப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் ஓடும்போது நிலத்தடிக்குள் நீர் இறங்கும் தன்மை குறைந்துவிட்டது. ஏரிகளிலும் ஒரு மீட்டர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி உண்டு. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டு நீர்நிலைகளின் இயல்புதன்மையை மொத்தமாகக் காலி செய்துவிட்டனர்.
கிரானைட் முறைகேட்டின் காரணமாக, 1,06,145 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்றும், இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சகாயம் பரிந்துரை செய்தார். இவற்றை எல்லாம் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ள வேண்டும். மணல், கிரானைட் விற்பனையில் அரசே ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இயற்கை வளக் கொள்ளையர்களைத் தடுக்க, சிறப்புச் சட்டத்தை உருவாக்கவும் தொடர்ச்சியான முன்னெடுப்பு அவசியம்.
நதி நீர் உரிமைகள்
தமிழ்நாட்டின் நதி நீர் உரிமைகளைத் தருவதற்கு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் தொடர்ந்து மறுத்துவருகின்றன. காவிரி வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, மத்திய அரசும் கர்நாடகா அரசும் செயல்பட்டுவருகின்றன. சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதில் கேரள அரசு தீவிரம் காட்டுகிறது. பாலாறு ஆற்றின் குறுக்கே ஆந்திரா அரசு தடுப்பு அணை கட்டுகிறது. உணவுக்கான அடிப்படை ஆதாரத்தோடு தொடர்புடைய தண்ணீர் உரிமையில் கர்நாடகா அரசு மக்களை வன்முறைப் பாதையில் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. வாக்கு வங்கி என்ற பெயரில் மத்திய அரசு அதற்குத் துணைபோகிறது. காவிரி நீர் வராததால், டெல்டா விவசாயம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நதிநீர் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.
கல்விக் கொள்ளை
குழந்தைகளை வெறும் ஏ.டி.எம் மெஷின்களாக மாற்றும் இன்றைய கல்வி, சமகாலத்தின் சாபக்கேடு. பிரமாண்டக் கட்டடங்களைக் காட்டி எல்.கே.ஜி வகுப்புக்குக்கூட பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் கொள்ளை நடக்கிறது. எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில் சேர ஒரு ரேட், இன்ஜினீயரிங் படிப்புக்கு ஒரு ரேட், கலை மற்றும் அறிவியல் என்றால் ஒரு ரேட் என, கல்வி என்பது ரேட்கார்டுகளுடன்தான் தொடங்குகிறது. கல்விக் கொள்ளை என்ற வார்த்தையை `தரமான கல்வி' என்ற பதத்துக்குள் அழகாக ஒளித்துவைத்து, ஆண்டுதோறும் அமோகமாக வியாபாரம் நடக்கிறது. அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவுடன் செயல்படும் பினாமிகளும் கைகோத்திருக்கும் கல்வி, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான வியாபாரமாக மாறிவிட்டது.
நம் குரல்கள், இந்தக் கல்விக் கொள்ளைக்கு எதிராக எப்போது ஒலிக்கப்போகின்றன? குறைந்தபட்சம், கட்டணக் கொள்ளை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் புறக்கணித்து, அரசுப் பள்ளிகளிலும் அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் மட்டுமே படிப்போம் என்ற முடிவுகூட ஒரு புரட்சிதான்.
மதுவிலக்கு
தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளிச் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே மதுப்பழக்கம் அதிகரித்து இருப்பதாக, பல்வேறு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. `மூடு... டாஸ்மாக்கை மூடு...' என, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் கேட்ட கோஷங்களை, இன்று பலரும் மறந்துவிட்டனர். `படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும்' என, தேர்தலின்போது ஜெயலலிதா அறிவித்தார். `ஆட்சிக்கு வந்ததும் 500 மதுக்கடைகள் மூடப்படும்' என்று முதல் கையெழுத்தையும் போட்டார். மதுக்கடைகளுக்கான நேரக் குறைப்பு செய்தும்கூட கள்ளத்தனமாக மது விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. 500 கடைகள் மூடுவதற்கு முன்னரும், நேரக் குறைப்பு செய்வதற்கு முன்னரும் சராசரியாக தினமும் 80 முதல் 90 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் விற்பனை இருந்தது. இப்போதும் அதே அளவுக்கு விற்பனை நடைபெற்றுவருகிறது. மது குடிப்பவர்களால் அவர்கள் சார்ந்த உறவுகள் தினந்தோறும் பொருளாதார இழப்பையும், உடல்நலக் கேடுகளையும் சந்தித்துவருகின்றனர்.
தமிழ்நாட்டில் தீராத ஒரு சமூக நோயாக மதுப்பழக்கம் இருக்கிறது. மது விற்பனைக்குத் தடை கோரி, தீர்க்கமான ஒரு போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்தால், மாநில அரசு பணிவதைத் தவிர வேறு வழி இல்லை.
மதவாதம்
தென் மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் மதவாதம் வெகு வேகமாகப் பரவிவருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மதவாதம் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், இப்போதுதான் வேர் ஊன்ற ஆரம்பித்துள்ளது. இப்போது கோயில் திருவிழா ஊர்வலங்களிலும் மதவாதத்தைப் புகுத்தி, கிராமங்கள் முதல் மெட்ரோ சிட்டி வரை அனைத்து மட்டங்களிலும் மக்கள் மனங்களைப் பிரித்து மதவாதிகள் கூறுபோடுகின்றனர். தமிழ்த் தொலைக்காட்சி விவாதங்களில் மதசார்பின்மையை வலியுறுத்துபவர்கள் மீது மதவாதிகள் ஆபாச அர்ச்சனைகளைப் பொழிவதும் தொடர்கிறது; பல்வேறு தளங்களில் தாக்குவதும் நடக்கிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சில கொலைகளுக்கு மதச்சாயம் பூசுவதும், மதவாதத் தாக்குதலை மேற்கொள்வதும் அதிகரிக்கிறது. கோவையில் நடைபெற்ற மதவாத அமைப்பின் பிரமுகர் ஒருவரின் கொலையும், அதைத் தொடர்ந்த கலவரங்களுமே இதற்குச் சாட்சி. மதவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மதவாதத்தைப் புகுத்தும் சட்டங்கள், கல்விக் கொள்கை போன்றவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தும் எழுச்சியே இப்போதைய தேவை.
சாதிய வன்கொடுமைகள்
தமிழ்நாடு முழுக்க சாதிரீதியாக நடத்தப்படும் வன்கொடுமைகள், மிக அதிக அளவில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி 6-ம் தேதி சென்னை வந்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ``தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தலித்களுக்கு எதிராக 1,766 வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன'' எனக் கூறினார். தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதல், பாலியல் வன்முறை அதிகமாக நடைபெறும் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. குஜராத்தின் உனா மாவட்டத்தில் இறந்துபோன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக, தலித் ஆண்கள் ஏழு பேரை, பசு பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் தாக்கும் வீடியோ வைரல் ஆனது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், ரோஹித் வெமுலா என்கிற தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த அளவுக்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அமலில் இருக்கத்தான் செய்கிறது. சட்டங்கள் இருந்தபோதும் அமல்படுத்தும் களத்தில் இருப்பவர்கள் அதற்கு எதிராக இருந்தால், கொடுமைகள் தொடரத்தானே செய்யும். தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காகவும் இளைஞர்கள் எழுச்சி தேவை.
ஆணவக்கொலைகள்
தர்மபுரி இளவரசன், உடுமலைப்பேட்டை சங்கர் உள்ளிட்ட வெளியே தெரிந்த ஆணவக்கொலைகள் தவிர, வெளியே தெரியாமல் செல்வாக்குமிக்கக் குடும்பங்களில் போலீஸ் துணையுடன் நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகள் ஏராளம். ஆணவக்கொலைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த விவாத்தின்போது இதற்குப் பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், `தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலைகள் நடப்பது இல்லை. தனிநபர் குடும்பப் பிரச்னைதான் அந்தக் கொலைகளுக்குக் காரணம்' என்று கூறினார். மாநில அரசின் ரியாக்ஷன் இப்படி இருக்கும்போது, ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு அளித்த பதில், `தனிச்சட்டம் கொண்டுவருவது பற்றி மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது' எனக் கூறப்பட்டது. இந்தியாவில் 22 மாநிலங்களில் ஆணவப்படுகொலைகள் நடக்கின்றன. இதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. `கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 279 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன' என, கடந்த டிசம்பர் மாதம் லோக் சபாவில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கூறியுள்ளார். ஆணவக்கொலைகளைத் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இளைஞர்கள் ஒன்றுசேர வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
பெண்கள், பல்வேறு தளங்களில் வன்முறைக்குப் பலியாகின்றனர். சுவாதி படுகொலை, சேலம் வினுப்பிரியா தற்கொலை, காரைக்கால் வினோதினி மீது ஆசிட் வீச்சு... என ஒருதலைக் காதல் விபரீதத்துக்குப் பலியானவர்கள் இவர்கள். அரசின் துறைகளில் அதிகாரிகளின் ஆதிக்கத்துக்குப் பலியானவர் டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா. குடும்ப வன்முறைகள் காரணமாக விவாகரத்து கேட்டு, திருமணம் ஆன பெண்கள் நீதிமன்றங்களை நாடுவது அதிகரித்துவருகிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி `2015-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளில் 5,847 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு மட்டும் 421 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்' என இந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது. பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைவுதான். பதிவுசெய்யப்படாமல் தமிழ்நாட்டில் தினந்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க, இப்போது இருக்கும் சட்டங்களை வலுவாக்கவேண்டிய போராட்டங்களை நடத்துவது அவசியம்.
ஊழல்
`அரசாங்க சேவை முழுவதும், வெளிப்படைத் தன்மையோடு நடக்கிறது' எனச் சொல்லிக் கொண்டுதான் கோடிகளைப் பதுக்குகிறார்கள். மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே வலுவான சட்டங்கள் இயற்றுவதில் சுணக்கம் காட்டுகின்றனர். அப்படித்தான், ஊழல் ஒழியும் என்ற கோஷத்தில் முன்னெடுக்கப்பட்ட லோக்பால் மசோதா சிக்கித் தவிக்கிறது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றுவிட்டது. ஆனால், அதை அமல்படுத்தாமல், லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது மோடி அரசு. அதே போல மாநிலங்களில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டத்தை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும். தமிழ்நாடு, நாகலாந்து மாநிலங்களில் மட்டும்தான் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவில்லை. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், `விரைவில் லோக் ஆயுக்தா உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு உறுதி அளித்தது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில்கூட, `லோக் ஆயுக்தா உருவாக்கப்படும்' எனக் கூறியது. ஆனால், தேர்தல் முடிவடைந்து ஏழு மாதங்களுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா மசோதா கொண்டுவரப்படவில்லை. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளது. அந்தத் துறையின் கமிஷனராக இருப்பவர் தலைமைச் செயலாளர். முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவும் லஞ்ச ஒழிப்புத் துறை கமிஷனராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார் என்பதில் இருந்தே அந்தத் துறையின் லட்சணத்தைப் புரிந்துகொள்ளலாம். இந்தச் சூழலில்தான் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றவும் அமல்படுத்தவும் வேண்டும்.
No comments:
Post a Comment