Friday, February 3, 2017

61 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே நிரம்பிய அணை... தப்பிக்குமா தமிழகம்?

 TN drought 2017


பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை கேரள அரசு துரிதப்படுத்தி வருகிறது. அரசியல் கட்சியினர், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினர் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர். பவானி நதி நீரை முழுக்க முழுக்க நம்பி இருக்கும் கீழ்பவானி பாசன விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அணைகட்டப்படும் அட்டப்பாடி பகுதிக்கு சென்று ஆர்பாட்டம் செய்துவந்துள்ளனர்.

இது குறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி கூறியதாவது;

பவானி நதியின் குறுக்கே , கேரளா வனப்பகுதியில் 6 தடுப்பணைகளை கேரளா அரசு கட்டிவருகிறது. அட்டப்பாடி, மஞ்சக்கண்டி, தேக்குவட்டை, பாடவயல், சீரக்கடவு, சாவடியூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் வேலை துரிதமாக நடக்கிறது. மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்ற பிறகுதான் எந்த வனப்பகுதியிலும் கட்டுமானப் பணிகளை செயல்படுத்த முடியும். ஆனால், கேரளா அரசு இந்த துறையின் அனுமதி பெறாமல் வனப்பகுதியில் தடுப்பணைகள் கட்டிவருகிறது.

கேரளா ஒரு மழை மாநிலம், ஆனால், தமிழ்நாடு அப்படி அல்ல. இது ஒரு மழை மறைவு மாநிலம். மேற்கு தொடர்ச்சி மலை நதிகளை நம்பித்தான் பெரும்பாலான மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்தேவை இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும், கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் சந்திக்கும் நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மலைச்சரிவில் உள்ள அமைத்திப் பள்ளத்தாக்கு என்கிற இடத்தில்தான் பவானி நதி உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் இந்த நதி கேரளாவுக்குள் 35 கி.மீ. தூரம் மேற்கு நோக்கி பயணித்த பிறகுதான் தமிழ்நாட்டு வனப்பகுதியில் நுழைகிறது. அது தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் உள்ள பில்லூர் மின் அணையில் நிரம்பி வழிந்து பவானி சாகர் அணையை வந்தடைகிறது. பில்லூர் அணையில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.

அதேபோல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், காலிங்கராயன் பாசன அணை, கொடிவேறி கால்வாய் ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் ஈரோடு,திருப்பூர்,கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர்நிலத்திற்கு பாசனம் கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால், ஈரோடு மாவட்டத்திற்கு உலகபுகழ் சேர்க்கும் மஞ்சள் விவசாயம் அழிந்து போய்விடும்.

பவானி சாகர் அணைக்கட்டப்பட்டு 61 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலக்கட்டத்தில் 6 முறை மட்டும்தான் இந்த அணை முழுமையாக நிறைந்துள்ளது. எப்போதுமே பற்றாக்குறை பாசனம்தான் நடந்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு சம்பந்தமான இறுதித்தீர்ப்பில், காவிரியில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி. தன்ணீர் கொடுக்கவேண்டும் என்று ஆணை உள்ளது. கபினி அணையில் இருந்து 21 டி.எம்.சியும், பவானியில் இருந்து 6 டி.எம்.சியும். அமராவதியில் இருந்து 3 டி.எம்.சி.தண்ணீரும் வழங்க வேண்டும் என்கிறது அந்த தீர்ப்பாணை. ஆனால், பவானி நதி பயணிக்கும் 35 கி.மீ. கேரளா எல்லைப்பகுதியில் வசிக்கும் பலரும் நீர் ஏற்று பாசனமுறையில் ஆற்றில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீரை முறை தவறி எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் 2,500 ஏக்கர் பாசனம் செய்கிறார்கள்.

இது காவிரி நதி நீர் பங்கீடு இறுதி தீர்ப்புக்கு புறம்பானது. மேற்கு மாவட்டங்களை பாலைவனமாக்கும் செயல் இது. கேரளா அரசின் இந்த அத்து மீறலை, மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.. இல்லையென்றால், பாரம்பரியம் காக்க நடந்த கடல் புரட்சி போல, பவானி நதியை காக்கும் நதி புரட்சி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.” என்றார்.

தமிழக விவசாயிகளின் நலன்காக்க இயற்கையும், அரசும் மனது வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024