Saturday, February 4, 2017

ராஜினாமா செய்தால், பல பிரச்னைகள் வரும்!' - பன்னீர்செல்வம் முடிவும் சசிகலா அழைப்பும்

VIKATAN NEWS

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் தலைமைக் கழக அலுவலத்தில் நாளை நடக்க இருக்கிறது. 'சசிகலா முதல்வர் ஆவதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என மன்னார்குடி உறவுகள் தகவல் பரப்புகின்றனர். ஆனால், களநிலவரம் சசிகலாவுக்கு சாதகமாக இல்லை. எம்.எல்.ஏக்கள் தன்பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்குத்தான் கூட்டம் கூடுகிறது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலாவால், முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடிக்க முடியவில்லை. 'பொங்கலுக்குள் முதல்வர் ஆவார்; பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்' என மூன்று முறை கூறி வந்த மன்னார்குடி உறவுகள், கடந்த சில வாரங்களாக மௌனம் சாதித்தனர். தற்போது மீண்டும் முதல்வர் முழக்கம் தொடங்கிவிட்டது. "கட்சி வட்டாரத்திற்குள் ஆதரவு அலைகளைப் பெருக்குவதற்காக செங்கோட்டையன் உள்பட 23 பேருக்கு கட்சிப் பதவிகளை வாரி இறைத்தார் சசிகலா.

ஆட்சி அதிகாரத்தில் ஓ.பி.எஸ் ஆதரவு மனநிலையில் இருக்கும் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனை, நேற்று பதவியில் இருந்து விலகச் சொல்லிவிட்டனர். சட்டசபையில் துரைமுருகன் பேசும்போது, 'ஐந்து ஆண்டுகாலமும் நீங்களே ஆட்சியில் தொடர வேண்டும். நாங்கள் ஆதரிப்போம். உங்கள் பின்னால் உள்ள சக்தியைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என முதல்வருக்கு ஆதரவாக, பகிரங்கமாக பேசியதை கார்டன் தரப்பில் அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள். அதன் ஒருபகுதியாகத்தான் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் சசிகலா. 'கட்சியும் ஆட்சியும் எங்கள் பக்கம்தான்' என்பதை வெளி உலகிற்குக் காட்ட முற்படுகிறார் சசிகலா" என விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

"ஆளுநர் சென்னையிலேயே இல்லை. அதற்குள் பதவியேற்பு விழா வரையில் பேசுகின்றனர். கடந்த சில வாரங்களாக, நடராசன் மீதான லெச்சஸ் கார் இறக்குமதி மோசடி வழக்கு, சசிகலா மீதான அமலாக்கத்துறையின் வழக்கு ஆகியவற்றில் மத்திய அரசு வேகத்தைக் கூட்ட ஆரம்பித்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி சசிகலா காத்திருக்கிறார். ஊழல் வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் ஒருவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வாய்ப்பில்லை. 'பா.ஜ.க ஆட்சியில் இருந்து அகன்றால்தான், முதல்வர் பதவியில் அமர முடியும்' என மன்னார்குடி உறவுகள் நம்புகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் 2019 வரையில் சசிகலா தரப்பினர் காத்திருக்க வேண்டும். சசிகலாவை முதல்வர் பதவியில் அமர வைப்பதால், மத்திய அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை. 'ஜல்லிக்கட்டில் பன்னீர்செல்வம் நல்ல பெயர் எடுக்க வேண்டும்' என்பதற்காகத்தான், மத்திய அரசு சட்ட உதவிகள் செய்தது. பிரதமரை சந்திப்பதற்கு டெல்லி செல்வதற்கு முன்பாக, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துவிட்டுச் சென்றார் ஓ.பி.எஸ். அந்தநேரம் கார்டன் சென்று சசிகலாவை அவர் சந்திக்கவில்லை.



அந்தளவுக்கு ஓ.பி.எஸ்ஸுக்கும் ஆளுநருக்கும் நல்ல உறவு இருக்கிறது. 'மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வராகவும் ஜெயலலிதா அடையாளம் காட்டிய ஒருவராகவும் நீங்கள் இருக்கிறீர்கள். ராஜினாமா நெருக்கடி ஏற்பட்டால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்குச் செல்லுங்கள். நீங்கள் தோற்றாலும், சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சியான தி.மு.கவுக்குத்தான் வாய்ப்பு கொடுப்பேன்' என முதல்வரிடம் ஆளுநர் தெளிவாகக் கூறிவிட்டார். அ.தி.மு.கவில் இரட்டைத் தலைமை நீடிப்பது போன்ற தோற்றம் தென்படுகிறது. அதைச் சரிக்கட்டுவதற்கான வேலையில் சசிகலா இறங்கியிருக்கிறார். அவரது முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவு கொடுக்கவில்லை. மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றவராக ஓ.பி.எஸ்ஸும் தீபாவும் இருக்கின்றனர். அதையொட்டியே அரசியல் நகர்வுகளை பா.ஜ.க முன்னெடுக்கிறது. ஆளுநர் சம்மதம் தெரிவிப்பாரா? நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு உத்தரவிடுவாரா என்பதும் மிக முக்கியமான கேள்விகள்" என்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர்.

"பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட விவகாரம் குறித்து, தேர்தல் ஆணையத்தின் வசம் சில புகார்கள் சென்றுள்ளன. ஆணையத்தை சரிக்கட்ட நினைத்த, அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு தோல்வியே மிஞ்சியது. ஓ.பி.எஸ்ஸை ஓரம்கட்ட நினைத்த தம்பிதுரை, மத்திய அரசால் ஒதுக்கப்பட்டார். பா.ஜ.க தலைமையின் நம்பிக்கைக்குரியவராக ஓ.பி.எஸ் இருக்கிறார். அமித் ஷா, வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் முதல்வருடன் தொடர்பில் இருக்கின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளையும் அரவணைத்துச் செல்கிறார் ஓ.பி.எஸ். அவருக்காகத்தான் மத்திய அரசு பலவகையிலும் இறங்கி வந்திருக்கிறது. பிரதமரின் நம்பிக்கையைப் பெற்றவர், அவருக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்வாரா என்பது மிக முக்கியமானது. ' பதவியை ராஜினாமா செய்தால், பல பிரச்னைகள் வரும்' என சசிகலாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார் ஓ.பி.எஸ். இதையும் தாண்டி, 'முதல்வர் பதவியைக் கைப்பற்றியே தீருவது' என மன்னார்குடி உறவுகள் களமிறங்கினால், அடுத்தடுத்த அதிரடிகளுக்கு மத்திய அரசு தயாராகவே இருக்கிறது" என்கின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள்.

"சசிகலாவின் ஜாதகப்படி, 'ராஜயோக பிராப்தி உச்சத்தில் இருக்கிறது. இந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டால், மீண்டும் பதவியில் அமர்வது சிரமம் ஆகிவிடும்' என கார்டன் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். இவ்வாறு கணித்துக் கொடுப்பது மூன்றாவது முறை. கோட்டை நாற்காலியில் அமர்வதற்கு நல்ல நாள் குறித்தாலும், ராஜயோகம் தள்ளிக் கொண்டே போகிறது. மத்திய அரசின் கவனத்திற்கு சில உறுதிமொழிகளைக் கொடுத்திருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 'ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களும் சசிகலா பக்கம் இருக்கிறார்கள். அவரை முதல்வராக பதவியில் அமர வையுங்கள்' என ஆளுநர் அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ்ஸே சென்றாலும் ஆச்சரியம் இல்லை. எம்.எல்.ஏக்கள் கூடி, 'சசிகலா முதல்வர்' என தீர்மானம் போட்டுவிட்டால், ஆளுநர் அதை ஏற்கத்தான் வேண்டும். ஜனநாயகரீதியிலான நடைமுறைக்கு ஆளுநர் மறுப்பு தெரிவிக்க மாட்டார். அவர் எப்போது சென்னை வருகிறாரோ அப்போது பதவிப் பிரமாணம் நடக்கும். இந்தமுறை கட்டாயம் பதவியில் அமர்வார் சசிகலா' என்கின்றனர் கார்டன் தரப்பில்.

'தற்காலிக அ.தி.மு.க பொதுச் செயலாளர்; சட்டசபையில் பலம் பெற்றுவிட்ட பன்னீர்செல்வம்; மிரட்டும் வழக்குகள்; தீபாவின் வருகை' என பலமுனைத் தாக்குதலில் இருக்கிறார் சசிகலா. 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் ஆவது பற்றிப் பேசுவாரா? மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிப்பாரா' என விவாதித்துக் கொண்டிருக்கின்றனர் ஆளும்கட்சி பிரமுகர்கள்.

- ஆ.விஜயானந்த்

வாளிகள்தான் நவீன கருவிகளா? உலக நாடுகள் என்ன செய்கின்றன?

 #ChennaiOilspill


எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 28-ம் தேதி எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள், எம்.டி. டான் என்ற இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், எம்.டி. டான் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது.கடலில் கலந்த கச்சா எண்ணெயின் அளவைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும் நிலைமை நினைத்ததை விட மோசம்தான். கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் கடலோர காவல் படையின் மாசு அகற்றும் குழுவினர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், எண்ணூர் துறைமுகம் ஊழியர்கள் என்று அரசுத்துறைகளுடன் இணைந்து மீனவர்களும், தன்னார்வலர்களும் கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் பயன்படுத்தும் நவீன கருவி பக்கெட் என்பது பலரையும் பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைப்போன்ற மோசமான சுற்றுச்சூழல் பிரச்னைகளை கையாள அரசிடம் நவீன கருவிகள் இருப்பது அவசியம் இல்லையா என்ற கேள்விகள் அனைவரது மனதிலும் எழுகிறது. கடலில் ஏற்பட்ட ஆயில் கசிவை கையாளவே பக்கெட்டுகளையும், உதவிக்கு தன்னார்வலர்களையும் அழைக்கும் இந்த அரசு நாளை தமிழ்நாட்டில் இருக்கும் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அதை கையாள்வதற்கு தயாராக உள்ளதா என்பது அனைவரது மனதிலும் எழக்கூடிய மிகப்பெரிய கேள்வி....

பல நாடுகளில் இதைப்போன்ற சூழ்நிலைகளை கையாள தனியாக ஒரு துறை செயல்படும் அவர்களிடம் நவீன கருவிகள் இருக்கும் சமாளித்துவிடுவார்கள்..நமது அரசு இனிமேல் கருவிகளை வாங்கி அதன் பின்பு கச்சா எண்ணெயை சுத்தம் செய்வது என்பது இயலாத ஒன்று இருந்தாலும் எளிய வழிகள் சில இருக்கின்றன அது என்னவென்று பார்க்கலாம்..

காளான்கள் மற்றும் முடிகள்..



இயற்கையான காளான்கள் மற்றும் முடிகளை பயன்படுத்தி எளிதில் எண்ணெயை அப்புறப்படுத்த முடியும்.சில வகை காளான்கள் எண்ணெய் பொருட்களை உறிஞ்சும் தன்மையுடையவை....முடியை ஒரு விரிப்பு போல பயன்படுத்தினால் அது எண்ணெயை எளிதாக ஈர்த்து விடும்..

பாக்டீரியாக்களை ஊக்குவித்தல்..

ஏற்கனவே கடலில் வாழும் இயற்கையான பாக்டீரியாக்கள் தான் கடலில் கலக்கும் கழிவுகளை உணவாக உட்கொண்டு சுத்தப்படுத்துகின்றன. தற்பொழுது அதன் செயல்திறனை ஊக்குவிப்பதற்காக சல்பேட் அல்லது நைட்ரேட் போன்றவற்றை
பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் பயன்படுத்தினால் போதும் மீதியை பாக்டீரியாக்கள் பார்த்துக் கொள்ளும்.

வைக்கோல்

வைக்கோல் கடலில் கலந்த எண்ணெயை சுத்தம் செய்ய உதவும் எளிதான மற்றும் விலை குறைவான ஒரு பொருளாகும். மேலும் அதிகளவில் கிடைக்கக்கூடியது.வைக்கோல் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்பதால் அதை பல நாடுகள் பயன்படுத்துகின்றன.

எண்ணெய் நீக்கிகள்

எண்ணெய்களை நீக்கும் திரவ கரைசல்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒன்றுதான்...இயந்திரங்களில் இருக்கும் எண்ணெய் மாசுகளை அகற்ற பல திரவங்கள் பயன்படுகின்றன. அவற்றை பயன்படுத்தினால் அவை எண்ணெய் மூலக்கூறுகளின் வடிவத்தை மாற்றி அகற்றுவதற்கு எளிதாக இருக்கும். இதைக் கடலில் பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் பயன்படுத்தலாம்.

திரவ ஜெல்கள்

பல நாடுகள் கடலில் கசிந்திருக்கும் கச்சா எண்ணெயை அதிக பரப்பளவில் பரவாமல் இருப்பதற்காக ஜெல்களை பயன்படுத்துகின்றன. இவை எண்ணையை பரவ விடாமல் தடுத்து பிரிப்பதால் அகற்றுவதற்கு எளிதாக இருக்கும்.

தேங்காய் நார் கூட எண்ணெயை உறிஞ்சும். அதை எப்படி பெரிய அளவில் பயன்படுத்தலாம் எனபதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.



இதைப்போன்ற சுற்றுச்சூழல் விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகளின் தாக்கம் பல காலத்திற்கு இருக்கும். மேலும் அது கடலின் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.அரசு அதை உணர்ந்து தற்போது பயன்படுத்தும் நவீன கருவியான "பக்கெட்டுகளை" பயன்படுத்துவதை கைவிட்டுவிட்டு உண்மையாகவே நவீன கருவிகளை பயன்படுத்தி நிரந்தரமாக கச்சா எண்ணெய் பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோள்.

கனவிலும் நினைத்துப் பார்க்காத வாழ்க்கை இது: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

By DIN  |   Published on : 04th February 2017 12:11 PM
remo345

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த முதல் படம் மெரினா. அந்தப் படம் வெளியாகி 5 வருடங்கள் ஓடோடிவிட்டன. இதையொட்டி ஒரு பதிவை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் அவர் கூறியதாவது: 
2012, பிப்ரவரி 3 அன்று என்னை முதல்முதலாகப் பெரிய திரையில் பார்த்த நாள். இந்த 5 வருடங்கள் மகத்தான அனுபவங்கள் கிடைத்தன. எனக்கு ரசிகர்கள் அளித்த வாழ்க்கையை நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. என் சகோதரர்கள், சகோதரிகள், என் படக்குழு உறுப்பினர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு அதிபர்கள், எல்லா நடிகர்களின் ரசிகர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. 
இந்த வாழ்க்கையைத் தொடங்கிய வைத்த இயக்குநர் பாண்டிராஜுக்கு சிறப்பு நன்றிகள். நான் இன்னும் பல மைல் தூரம் போகவேண்டும் என்று எனக்குத் தெரியும். இன்னமும் நான் இங்கே கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். எப்போதும் கற்றுக்கொண்டே தான் இருப்பேன். பொழுதுபோக்குள்ள படங்களை அளிக்க எப்போதும் முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

இப்படியும் நடக்கிறது உஷார்: உ.பி.யில் பெண்களின் செல்பேசி எண்களை பேரம் பேசி விற்ற ரீசார்ஜ் கடைகள்

By DIN  |   Published on : 04th February 2017 12:18 PM  |   
which-cell-phone-select

லக்னௌ: கடைக்கு ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களின் செல்பேசி எண்களை அதிக விலைக்கு விற்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைத்த காவல்துறை உதவி எண் 1090க்கு, 24 மணி நேரமும் ஏராளமான பெண்கள், தொடர்ந்து தங்களுக்கு அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் பெண்கள் அளித்த சுமார் 6 லட்சம் புகார்களில் 90 சதவீதப் புகார்கள் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்ததாக இருந்தது.
பெண்களை செல்பேசியில் தொடர்பு கொள்ளும் நபர்கள், உங்களிடம் தோழமை கொள்ள விரும்புவதாகக் கூறி பேச்சைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ரீசார்ஜ் கடைக்கு ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களின் எண்களை குறித்து வைத்துக் கொண்டு, அவர்களது எண்களை ஆண்களுக்கு விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. மிக அழகான பெண்களின் செல்பேசி எண்களை ரூ.500க்கும், சாதாரண தோற்றம் கொண்ட பெண்களின் எண்களை ரூ.50க்கும் விற்பனை செய்த விவரமும் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் கணவன்களால் சந்தேகத்துக்கு ஆளாகி கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இந்த குற்றத்துக்காக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கழிவு நீர் மேலாண்மை அறிவோம்

By எஸ். சந்திரசேகர்  |   Published on : 04th February 2017 02:25 AM  |
சில ஆண்டுகளுக்கு முன்புவரை தெருக்குழாய்களில் தண்ணீர் பிடித்து குடித்துக் கொண்டிருந்தோம். அந்தத் தண்ணீர் சுத்தமானதா, கழிவுநீர் கலந்திருக்குமா என்றெல்லாம் நாம் கவலைப்பட்டது கிடையாது. அந்தத் தண்ணீரைக் குடித்ததால் நோய் வந்ததும் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் மாசுபடாமல் இருந்ததுதான்.
ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப நிலத்தடி நீரின் ருசி மாறுபடுமே தவிர நோய் காரணிகள் அதில் இருந்ததில்லை. உதாரணமாக, திருச்செந்தூர் கடலின் அருகில் இருக்கும் நாழிக்கிணற்றுத் தண்ணீர் உப்புக் கரிப்பதில்லை. ராமேசுவரம் கோயிலில் உள்ள தீர்த்தங்களில் தண்ணீர் வெவ்வேறு ருசிகளில் இருக்கின்றன. அதாவது, நிலத்தடி நீர் அந்தந்த இடத்தின் தன்மைக்கேற்ப இருந்து வருகிறது என்பதே உண்மை.
இன்று நகரமாகியிருக்கும் பல கிராமப் பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதாகவே இருந்தது. குடியேற்றம் பெருகப்பெருக நிலத்தடி நீரின் தன்மை மாறியது. அதற்கு முக்கிய காரணம், கழிவுநீர் நிலத்துக்குள் பாய்ந்ததுதான்.
கழிவுநீர் மேலாண்மையை உலகுக்கே எடுத்துக் காட்டிய பெருமைக்கு உரியது மதுரை நகரம். பல ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடை அமைத்து, வீடுகளில் சேரும் கழிவுநீரை குழாய்கள் வழியே சேகரித்தனர். இதற்காக மூன்று அல்லது நான்கு வார்டுகளுக்கு ஒரு இடத்தில் நீரேற்று நிலையங்கள் அமைத்தனர். அங்கு பிரம்மாண்டமான கீழ்நிலைத் தொட்டி
அமைத்து அதில் சேரும் கழிவுநீரை
பம்பிங் செய்து புறநகர்ப் பகுதியான
வெள்ளக்கல் கொண்டு சென்றனர்.
அங்கு மாநகராட்சிக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் இந்தத் தண்ணீரை பாய்ச்சி அதில் மாட்டுத்தீவனம் பயிர் செய்தனர். இதன் மூலம் அந்தப் பகுதியில் கூட நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்திலேயே இவ்வளவு சிறப்பாக இந்தத் திட்டத்தை செயலாக்கியுள்ளனர்.
பாதாள சாக்கடை அமைத்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தடையற்ற வருமானமும் கிடைக்கும். அதற்கு செலவாகும் நிதியில் பாதியளவுக்கு வீடுகள், வணிக நிறுவனங்களில் பெறும் முன்வைப்புத் தொகை மூலம் ஈடுகட்டிவிடலாம். ஆனால் ஏனோ கழிவுநீர் மேலாண்மையில் தமிழகம் மெத்தனமாகவே உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் புதிதுபுதிதாக கட்டும் கட்டடங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை கழிவுநீர் மேலாண்மைக்குத் தருவதில்லை.
உதாரணமாக விருதுநகரில் சுமார் ஏழு ஆண்டுகளாக பாதாளச்சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரச்னை மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ளது. கழிவுநீர் பிரச்னைக்கு எளிதான தீர்வாக திறந்தவெளி கால்வாய்களை அமைத்து விடுகின்றனர். ஆனால், அது தடையின்றி செல்லும் விதத்தில் அமைக்கப்படுவதில்லை. இதனால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
மேலும் இந்தக் கழிவுநீரை ஏதோ ஒரு கண்மாயில் சென்று கலக்கச் செய்கின்றனர். மதுரையில் செய்தது போன்று மறுசுழற்சி செய்வதில்லை. இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. நாளடைவில் அந்தப்பகுதியில் குடியிருப்போர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இப்படியாக கழிவுநீர் மேலாண்மையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பாதாளச் சாக்கடைக்குத் திட்டமிடும்போதே மேடான பகுதி, பள்ளமான
பகுதிகளை வரையறை செய்து பணிகளை மேற்கொண்டால் நீர் தேங்கும் பிரச்னை இருக்காது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மதுரைக்கு 2-ஆவது வைகை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. வைகை அணை அருகே தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து தண்ணீர் மதுரைக்கு பம்புகளின் உதவி இன்றி வந்து சேர்ந்து மேல்நிலைத் தொட்டிகளிலும் ஏறிவிடும். அதற்கேற்ப மேடான பகுதியைத் தேர்ந்தெடுத்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்தனர். இன்றளவும் அது செயல்பாட்டில் உள்ளது.
இப்போது வீட்டுக்குவீடு கழிப்பறைத் தொட்டிகள் உள்ளன. அவற்றில் சேரும் தண்ணீரை குழிகள் அமைத்து அப்படியே நிலத்துக்குள் விட்டுவிடுகின்றனர். ஒரு
நிலையில் தண்ணீர் உறிஞ்ச முடியாத
அளவுக்கு மாறியபின் கழிவுநீரேற்று
ஊர்திகள் மூலம் தொட்டிகள் சுத்தப்படுத்தப்படுகின்றன.
அந்த வாகனங்கள் கழிவுநீரை என்ன செய்வார்கள்? ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் கொண்டுசென்று எங்காவது கண்மாய்,
நீர்நிலைகள், ஆளில்லாத பகுதிகளில் கொட்டிவிடுகின்றனர். இதனால் அந்தப் பகுதி மாசுபடுகிறது.
குடிநீர் பிரச்னைக்கு நிகரான சவாலாக உள்ளது, கழிவுநீர் மேலாண்மையும்.
இதற்குத் தீர்வுகாண உள்ளாட்சி அமைப்புகள், பாதாள சாக்கடை திட்டத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கழிப்பறைக் கழிவுகள் மட்டுமின்றி, குளியலறை, துணி துவைத்தல் உள்ளிட்ட அன்றாட கழிவுநீரையும் ஒரே குழாய் மூலம் சேகரித்து புறநகர் பகுதிகளுக்கு நீரேற்றம் செய்து மறு சுழற்சி செய்யலாம்.
மேலும் வீடுகளில் கழிப்பறை தண்ணீரை தோட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும். அதுகுறித்து பொதுமக்களை ஊக்குவிக்கலாம். இதன்மூலமும் நிலத்தடிநீர் மாசுபடுவதும் தவிர்க்கப்படும்.
இந்த திட்டங்கள் அனைத்துமே வெற்றிபெறுவது அதிகாரிகள் கையில் மட்டுமின்றி பொதுமக்கள் கையிலும் உள்ளது. வீட்டுக்கு வீடு கழிவுநீரை முறையாக மறுசுழற்சி செய்தும், மழை நீரை முறையாக சேமிக்கவும் செய்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுத்து நிறுத்த முடியும்.

சட்டத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்: நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது நல்லது- தமிழக அரசு அதிகாரிகள் தகவல்

சி.கண்ணன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை யாக நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண் ணப்பிப்பது நல்லது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீதம் மாநில அரசுக்கு உள்ளது. அதேபோல் தனியார் (சுயநிதி) மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அரசு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) இருந்து விலக்கு பெறும் வகையிலான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல் லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும். மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 31-ம் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தது. விண்ணப்பிக்க மார்ச் மாதம் 1-ம் தேதி என்ற காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை நம்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிடலாமா அல்லது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக் கலாமா என்ற குழப்பமான நிலையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி களில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறவே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப் பட்டால்தான், இந்த சட்டம் செல்லத் தக்கதாக இருக்கும். நீட் தேர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீட் தேர்வு நடக்கும் தேதியும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளையும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும்போது கிடைக்கட்டும், மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நல்லது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்து விட்டால், கடந்த ஆண்டு போலவே பிளஸ் 2 தேர்வு அடைப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
ஒருவேளை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்காவிட்டாலோ, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டாலோ மாணவர்கள் மருத்துவம் படிப்பது கேள்விக்குறியாகிவிடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Friday, February 3, 2017

போலீஸ் உடையில் 'பொம்மை' ஆட்சி!


சசிகலா, நடராசன், திவாகரன் மூவருக்கும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையைவிட, ஜார்ஜ், சேஷசாயி, சங்கர் போன்ற காவல் துறை அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புதான் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.

‘இதுதான்டா போலீஸ்’ ராஜசேகர் போல ஜார்ஜும், ‘சாமி’ விக்ரம் போல சேஷசாயியும், ‘சிங்கம்’ சூர்யா போல சங்கரும் பேட்டி மேல் பேட்டி கொடுப்பதைப் பார்த்தால், அரசாங்கமே இவர்களைக் காப்பாற்ற இயங்குவதுபோலத் தெரிகிறது. ஜெயலலிதா வளர்த்துக் கொடுத்த கட்சியையும், கைப்பற்றிக் கொடுத்த ஆட்சியையும் இவர்கள் வைத்துக் காப்பாற்ற மாட்டார்கள் என்பதற்கு, பட்டவர்த்தனமான உதாரணம் ஆகிவிட்டது சென்னை கடற்கரையில் நடந்த காளைப் புரட்சியைக் காக்கிக் களங்கமாக ஆக்கிய நிகழ்ச்சி.

ஆளும் தலைமையும் சரி இல்லை, ஆளும் கட்சியின் தலைமையும் சரி இல்லை என்பது எதிர்க்கட்சிகளைவிட காவல் துறைக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான் தனது `லத்தி ஆட்சி'யைக் கூச்சமே இல்லாமல் நடத்துகிறது. எல்லா அராஜகங்களையும் செய்துவிட்டு, அதற்குப் பொய்யான ஆதாரங்களைப் புதிது புதிதாக அடுக்குகிறது.

ஒரு நாயைக் கொல்வதாக இருந்தாலும், அதற்கு பைத்தியம் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே பின்பற்றும் நெறிமுறையாக இருக்கிறது. இன்று எந்த மனிதனைக் கொல்வதற்கும் இந்த நெறிமுறை அவசியம் இல்லை. சிட்டுக்குருவிகளைப்போல் இதே சென்னை கடற்கரையில் பலரைச் சுட்டுக் கொன்ற ‘மீசை’ போலீஸ் அதிகாரிதான் ஒருமுறை சொன்னாராம், ‘`நான் யாரையாவது சுட வேண்டும் என முடிவுசெய்தால், சுட மாட்டேன். முதலில் என் கையை வெட்டிக்கொள்வேன். அதன் பிறகுதான் சுடுவேன்'' என்று.

“என்னை வெட்டிவிட்டான். அதனால் சுட்டேன்!” என்பது, அவர் தமிழ்நாடு காவல் துறைக்குக் காட்டிச் சென்ற வழிமுறை.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக ஆறு நாட்கள் அமைதியாக நடந்தது சென்னை கடற்கரைப் போராட்டம். ஏழாவது நாள் எப்போது காவல் துறை உள்ளே நுழைந்ததோ, அப்போதே ‘ஏழரை’ விதைக்கப்பட்டுவிட்டது. ‘`அரசாங்கம், ஓர் அவசரச் சட்டம் கொண்டுவருகிறது. எனவே, ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை. உங்களது நோக்கம் நிறைவேறிவிட்டது. நீங்கள் கலைந்து செல்லலாம்'' என்று காவல் துறை அதிகாரி பாலகிருஷ்ணன் சொன்னபோது, ‘`எங்களது வழக்குரைஞரை அழைத்துள்ளோம். அவர் வந்ததும் அவசரச் சட்டத்தைப் படித்துப் பார்த்துவிட்டுக் கலைந்துவிடுகிறோம்” என்றுதான் இளைஞர்கள் சொன்னார்கள். நான்கு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள். தரவில்லை. இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள் தரவில்லை. ஒரு மணி நேரம் கேட்டார்கள். தருகிறோமா... இல்லையா எனச் சொல்லாமலேயே பாலகிருஷ்ணன் போனார்.

எதையுமே சொல்லாமல் பாலகிருஷ்ணனை அழைத்துச் சென்றார் சங்கர். இதை, நேரலையில் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒவ்வொருவரையும் இழுத்துப் போடத் தொடங்கியது காவல் துறை. `‘சார்... குழந்தைங்க இருக்காங்க, பெண்கள் இருக்காங்க. நாங்க கலைஞ்சுடுறோம் சார்” என்று அப்போதும் குரல் வந்தது. காவல் துறை அதிகாரிகள், அதைக் காதில் வாங்கவே இல்லை. பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தி, ஒவ்வோர் இளைஞனின் கையையும் ஒடித்து, பூட்ஸ் கால்களால் மிதித்து, பெண்களை நசுக்கி, காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டதைப் பார்த்தப் பிறகுதான் பலரும் `கலைய மாட்டோம்' என மறுபடியும் உட்கார்ந்தார்கள்.

“ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள். அதன் பிறகும் கலையவில்லை” என்கிறார் சென்னை காவல் துறை கமிஷனர் ஜார்ஜ். ஒரு மணி நேரம் அவர்களுக்கு அவகாசம் தரப்பட வில்லை. சங்கரும் பாலகிருஷ்ணனும் கூட்டத்தை விட்டு வெளியேறியதும் கூட்டத்துக்குள் வேதாளம் புகுந்தது. இருந்த இடத்திலேயே சங்கிலிபோல் கைகோத்துக்கொண்டு சிலர் படுத்துக் கொண்டார்கள்.

பாதிப் பேர், கலைந்து ஓட ஆரம்பித்தார்கள். ஓடியவர்களை விரட்டியது போலீஸ். இவர்கள்தான் மீனவக் குப்பத்துக்குள் அடைக்கலமாக ஓடியவர்கள். சிலர், கடலை நோக்கி ஓடினார்கள். தண்ணீரை நோக்கி பல நூறு பேர் ஓடிவருவதைப் பார்த்து, மீனவர்கள் அந்த இடத்தில் சூழ்ந்தார்கள். போராட்டக் காரர்களுடன் மீனவர்கள் கைகோத்தது, அந்த இடத்தில்தான். காவல் துறையால் போராட்டக்காரர்களை அடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் மீனவர்கள் அரண் அமைத்து நின்றதுதான். இந்தக் கோபத்தில்தான் குப்பத்துக்குள் போலீஸ் கல் வீசுகிறது. அவர்கள் திருப்பி கல் வீசுகிறார்கள். அகிம்சைப் போராட்டத்தை அராஜகப் போராட்டமாக மாற்றும் வேலை, இரண்டு மணி நேரத்தில் நடந்து முடிந்துவிடுகிறது.

‘`சுடுவதற்கு முன் கையை வெட்டிக் கொள்வேன்!” என்ற விதிப்படி போலீஸாரே ஆங்காங்கே கொளுத்திக்கொண்டார்கள்.

நின்றுகொண்டிருந்த ஆட்டோவுக்குத் தீ வைக்கிறார் காக்கிச் சீருடை அணிந்த சென்னை காவல் துறை நண்பர். குடிசைக்குத் தீ வைத்துவிட்டு, கொக்கோ விளையாட்டில் ஓடுவதைப்போல் ஓடுகிறார் சென்னை காவல் துறை தோழி.
இதுபற்றி கேட்டால் உடனே ‘மார்ஃபிங்’ என்கிறார் ஜார்ஜ். மதியம் நடந்தது சம்பவம். இரவுக்குள் ‘மார்ஃபிங்’ எனக் கண்டுபிடித்து விட்டார். கூடுதல் ஆணையர்கள் சங்கர், சேஷசாயிக்கு மனச்சாட்சி உறுத்துகிறதுபோல. ‘`அந்தக் காட்சியைத் திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். அந்த போலீஸார் மீது நடவடிக்கை எடுப்போம். கமிஷனர் நடவடிக்கை எடுப்பார்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதைச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? தீயை முதலில் மூட்டிய சமூக விரோதிகள் யாரெனத் தெரிகிறதா?

“இரண்டு போலீஸாரை மட்டும் வைத்து ஒட்டுமொத்த போலீஸாரையும் மதிப்பிடக் கூடாது” என்று திருவாய் அருள்கிறார் சேஷசாயி. உண்மைதான். இது போராட்டம் நடத்தி யவர்களுக்கும் பொருந்தாதா? யாரோ சிலர், சட்டம் மீறிய முழக்கங்களை எழுப்பியிருக்கலாம். அதற்காக மொத்தக் கூட்டமும் தேச விரோதிகள், சமூக விரோதிகள் ஆகிவிடுவார்களா?

பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். ஜல்லிக்கட்டு விவகாரத்தை இந்த மூன்று பேரும் சரியாகக் கையாளவில்லை. தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக் கானவர்கள் உட்கார்ந்த பிறகுதான் இந்த மூன்று பேருக்கும் சொரணை வந்தது. அந்தக் கோபத்தை வெளிக்காட்ட மாட்டார்களா?

மத்திய-மாநில அரசுகளுக்கும், உளவுத் துறைக்கும், சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் காவல் துறைக்கும் இது என்ன மாதிரியான கூட்டம் என்றே தெரியவில்லை. கடைசி வரை அது புரியவே இல்லை.

ஜல்லிக்கட்டுக்குத் தடை என்றதும், `தமிழர் விளையாட்டுக்குத் தடையா?' என்றவர்கள் முதலில் அணி சேர்ந்தார்கள். ‘நம்முடைய கலாசாரம் அல்லவா?’ என்று சிலர் வந்தார்கள். ‘இதற்குத் தடைபோட இவர்கள் யார்?’ என்று சிலர் வந்தார்கள். பெரியாரிசம், மார்க்ஸியம், தமிழ்த் தேசியம், பற்றிப் படிக்கக்கூடியவர்கள் வந்தார்கள். சிறு சிறு அமைப்புகள், இவற்றோடு இணைந்தன. ‘நாட்டுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?’ என்று சிலர் வந்தார்கள். ‘நானும் தமிழன்டா’ எனக் காட்டிக்கொள்ள சிலர் வந்தார்கள்.

பொங்கலை, இந்து பண்டிகையாக சிலர் பார்த்தார்கள். பொங்கலை, தமிழர் திருநாளாக இஸ்லாமியர்கள் சிலர் பார்த்தார்கள். விஷ்ணு புராணத்தில் ஏழு காளைகளை அடக்கித்தான் ருக்மணியைத் திருமணம் செய்தார் கிருஷ்ணர் என வைஷ்ணவர்கள் வந்தார்கள். திருவான்மியூர் பக்கத்து கோயில் ஐயர் ஒருவர், தான் வர முடியவில்லை என தனது மகன்களை அனுப்பி வைத்தார்.

`விவசாயத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மழை இல்லை, வறட்சி' என வேதனைப்படுபவர்கள் வந்தார்கள். மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான சிந்தனை உடையவர்கள் வந்தார்கள். இந்தப் போராட்டக் களத்துக்குப் போகவில்லை என்றால், `தமிழினத் துரோகி' எனச் சொல்லி விடுவார்களோ எனப் பயந்த பல அமைப்பினர், அவசர அவசரமாக வந்தார்கள். கடற்கரை என்பதால் காற்று வாங்க வந்தவர்கள், காதல் செய்ய வந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

சிறு மைதானமாக இருந்தால் இறுக்கமாக இருந்திருக்கும். பரந்துபட்ட இடம். கார் பார்க்கிங் பிரச்னை இல்லை. எனவே, அது சுற்றுலாத் தளம் ஆனது. வெளியூரில் இருந்து பேருந்து எடுத்து இங்கு வந்தார்கள். வெளியூர்க்காரர்கள், சென்னையில் இருப்பவர்களை ‘மெரினாவுக்குப் போகலையா?’ எனக் கேட்பதை வழக்கமாக்கினார்கள்.

மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குபவர், அங்கு வந்து குப்பைகளை அள்ளிக்கொண்டி ருந்தார். 70 லட்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் ஒரு பெண், தனது தோழிகளுடன் வந்து அங்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார். அரசு வாகனமான ‘G’ பொறிக்கப்பட்ட வாகனம் வருகிறது. போலீஸார் வழி அமைத்துத் தருகிறார்கள், ‘ஏதோ அதிகாரி வருகிறார்’ என்று. நான்கு பையன்கள் கறுப்புச் சட்டையுடன் இறங்கி, கூட்டத்தில் போய் உட்காருகிறார்கள்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம். காவல் துறை அதிகாரிகளுக்கு எரிச்சல் ஏற்படுத்தியதே இதுதான்.

மக்கள் எதன் பொருட்டும் கூட்டம் சேர்ந்தால், இவர்களுக்குப் பிடிக்காது. ‘இன்னொரு முறை இப்படி இவர்கள் கூடிவிடக் கூடாது’ என்பதை உணர்த்த போலீஸ் விரும்பியது. ‘கூட்டத்தோடு சேர்ந்தால் அடி விழும்’ என்ற பயத்தை ஏற்படுத்தி னார்கள். ‘புதிதாக யாராவது போன் செய்து `தோழர்' எனப் பேசினால், `பேச வேண்டாம்’ என நல்ல பிள்ளையாக காவல் துறை அதிகாரி சொல்வதற்குக் காரணம் இதுதான். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலமாக செய்திகள், போராட்டக் களங்கள் உருவாவதை இவர்களால் தடுக்க முடியவில்லை. நாளிதழ்களில் விளம்பரம் காட்டியும், டி.வி சேனல்களை கேபிள் ஆசை காட்டியும் மிரட்டலாம். ஆனால், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்-க்கு அவனவன் முதலாளி. என்ன செய்ய முடியும்?

`அடுத்த பத்து வருஷங்களுக்கு எவனும் மெரினா பக்கம் வர மாட்டான்’ என்று ஒரு போலீஸ் அதிகாரி சொன்னாராம். போலீஸ் உணர்த்த விரும்பியது இதுதான்.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பக்கம் போராட்டம் நடந்ததால், அதிகமான இஸ்லாமிய மக்கள் வந்தார்கள். அதற்காக இதை `தேச விரோதிகள்' என போலீஸ் அடையாளம் காட்டுமானால்...

கடற்கரையில் போராட்டம் நடந்ததால், அதிகமான மீனவர்கள் பங்கெடுத்தார்கள். அதற்காக, இதை `சமூக விரோதிகள்' என போலீஸ் அடையாளம் காட்டுமானால்...

இந்தியப் பிரஜைகளை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. குறிப்பிட்ட சமூக மக்களை தேச விரோதிகள், சமூக விரோதிகள் எனச் சொல்லும் போலீஸ், ‘பொதுவான போலீஸாக’ எப்படி இருக்க முடியும்?

இந்த மொத்தக் கலவரத்துக்கும் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் காவல் துறையும் காட்டும் முதல் ஆதாரம், ‘ஒசாமா பின்லேடன் படத்தை, கூட்டத்தில் எடுத்து வந்தார்கள்’ என்பது. அப்படி ஒரு காட்சி இந்தப் போராட்டத்தில் நடக்கவே இல்லை. ‘`ஒசாமா பின்லேடன் படத்தை எனது கட்சிக்காரர்கள் எடுத்து வந்தது, பி.ஜே.பி அலுவலகத்துக்கு எதிராக தாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போனபோது. அப்போதே அவர்களைக் கண்டித்து, படத்தைக் கிழிக்கச் சொன்னேன். அந்தப் படத்தை மெரினாவில் நடந்ததாகக் காட்டுகிறார்கள்’' என்று ‘தடா’ ரஹீம் சொல்கிறார். இந்த ஆதாரத்தை காவல் துறையின் மேலிடம் வரை அவர் சொல்லிவிட்டார். இதன் பிறகும் அந்தப் படத்தை வைத்துக்கொண்டு பேசுவது உள்நோக்கம்கொண்டது அல்லவா?

போலீஸ் எழுதிக் கொடுத்ததையா சட்டமன்றத்தில் பன்னீர்செல்வம் வாசிக்க வேண்டும்? சுயபுத்தி இருந்திருந்தால், இந்தப் புகைப்படம் எந்தத் தேதியில் எடுக்கப்பட்டது என்ற அறிக்கை கேட்டிருக்க வேண்டாமா? ஜார்ஜ், நான்கு மாதங்களில் ஓய்வுபெற்று போய்விடுவார். உங்களுக்கு நான்கு ஆண்டுகள் இருக்கின்றன.

பன்னீருக்கும், சசிகலாவுக்கும், நடராசனுக்கும், திவாகரனுக்கும் அரசியல்தான் தொழில். ஒரே ஒரு பொய்யால் ஓர் இனத்தையே, ஒரு போராட்டத்தையே தேச விரோத, நாசக்காரச் சக்திகளின் கைவேலையாகச் சித்திரிக்கும் புதைகுழிக்குள் அ.தி.மு.க அரசு அழுத்திக்கொண்டு இருக்கிறது. ‘கடல் மேல் பிறக்கவைத்தான்...’ பாடல் மூலமாக, கடலில் பிறந்த கட்சி நடத்தும் ஆட்சியில், மீனவனைச் `சமூக விரோதி' எனச் சொல்லி அடிப்பது பாவம் அல்லவா?
இப்படி ஒரு புகைப்படத்தைக் கொடுத்து, நிச்சயம் ஜெயலலிதாவை ஏமாற்ற முடியாது. கருணாநிதி ஆட்சியிலும் கலவரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன காவல் துறையால். மிக சாமர்த்தியமாக, ‘நான் இது பற்றி காவல் துறையிடம் அறிக்கை கேட்டேன். அவர்கள் எனக்கு என்ன அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள் என்றால்...’ என்ற பீடிகை போட்டுத்தான் பதிலை வாசிப்பார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது எனச் சொல்வது, இதை வைத்துத்தான்.தமிழ்நாட்டுக்கு, தலை இல்லை; தலையாட்டி பொம்மை இருக்கிறது. பொம்மை, போலீஸ் யூனிஃபார்ம் போட்டிருப்பதுதான் பயமாக இருக்கிறது.

NEWS TODAY 24.08.2026