Saturday, February 4, 2017

கழிவு நீர் மேலாண்மை அறிவோம்

By எஸ். சந்திரசேகர்  |   Published on : 04th February 2017 02:25 AM  |
சில ஆண்டுகளுக்கு முன்புவரை தெருக்குழாய்களில் தண்ணீர் பிடித்து குடித்துக் கொண்டிருந்தோம். அந்தத் தண்ணீர் சுத்தமானதா, கழிவுநீர் கலந்திருக்குமா என்றெல்லாம் நாம் கவலைப்பட்டது கிடையாது. அந்தத் தண்ணீரைக் குடித்ததால் நோய் வந்ததும் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் மாசுபடாமல் இருந்ததுதான்.
ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப நிலத்தடி நீரின் ருசி மாறுபடுமே தவிர நோய் காரணிகள் அதில் இருந்ததில்லை. உதாரணமாக, திருச்செந்தூர் கடலின் அருகில் இருக்கும் நாழிக்கிணற்றுத் தண்ணீர் உப்புக் கரிப்பதில்லை. ராமேசுவரம் கோயிலில் உள்ள தீர்த்தங்களில் தண்ணீர் வெவ்வேறு ருசிகளில் இருக்கின்றன. அதாவது, நிலத்தடி நீர் அந்தந்த இடத்தின் தன்மைக்கேற்ப இருந்து வருகிறது என்பதே உண்மை.
இன்று நகரமாகியிருக்கும் பல கிராமப் பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதாகவே இருந்தது. குடியேற்றம் பெருகப்பெருக நிலத்தடி நீரின் தன்மை மாறியது. அதற்கு முக்கிய காரணம், கழிவுநீர் நிலத்துக்குள் பாய்ந்ததுதான்.
கழிவுநீர் மேலாண்மையை உலகுக்கே எடுத்துக் காட்டிய பெருமைக்கு உரியது மதுரை நகரம். பல ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடை அமைத்து, வீடுகளில் சேரும் கழிவுநீரை குழாய்கள் வழியே சேகரித்தனர். இதற்காக மூன்று அல்லது நான்கு வார்டுகளுக்கு ஒரு இடத்தில் நீரேற்று நிலையங்கள் அமைத்தனர். அங்கு பிரம்மாண்டமான கீழ்நிலைத் தொட்டி
அமைத்து அதில் சேரும் கழிவுநீரை
பம்பிங் செய்து புறநகர்ப் பகுதியான
வெள்ளக்கல் கொண்டு சென்றனர்.
அங்கு மாநகராட்சிக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் இந்தத் தண்ணீரை பாய்ச்சி அதில் மாட்டுத்தீவனம் பயிர் செய்தனர். இதன் மூலம் அந்தப் பகுதியில் கூட நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்திலேயே இவ்வளவு சிறப்பாக இந்தத் திட்டத்தை செயலாக்கியுள்ளனர்.
பாதாள சாக்கடை அமைத்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தடையற்ற வருமானமும் கிடைக்கும். அதற்கு செலவாகும் நிதியில் பாதியளவுக்கு வீடுகள், வணிக நிறுவனங்களில் பெறும் முன்வைப்புத் தொகை மூலம் ஈடுகட்டிவிடலாம். ஆனால் ஏனோ கழிவுநீர் மேலாண்மையில் தமிழகம் மெத்தனமாகவே உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் புதிதுபுதிதாக கட்டும் கட்டடங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை கழிவுநீர் மேலாண்மைக்குத் தருவதில்லை.
உதாரணமாக விருதுநகரில் சுமார் ஏழு ஆண்டுகளாக பாதாளச்சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரச்னை மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ளது. கழிவுநீர் பிரச்னைக்கு எளிதான தீர்வாக திறந்தவெளி கால்வாய்களை அமைத்து விடுகின்றனர். ஆனால், அது தடையின்றி செல்லும் விதத்தில் அமைக்கப்படுவதில்லை. இதனால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
மேலும் இந்தக் கழிவுநீரை ஏதோ ஒரு கண்மாயில் சென்று கலக்கச் செய்கின்றனர். மதுரையில் செய்தது போன்று மறுசுழற்சி செய்வதில்லை. இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. நாளடைவில் அந்தப்பகுதியில் குடியிருப்போர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இப்படியாக கழிவுநீர் மேலாண்மையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பாதாளச் சாக்கடைக்குத் திட்டமிடும்போதே மேடான பகுதி, பள்ளமான
பகுதிகளை வரையறை செய்து பணிகளை மேற்கொண்டால் நீர் தேங்கும் பிரச்னை இருக்காது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மதுரைக்கு 2-ஆவது வைகை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. வைகை அணை அருகே தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து தண்ணீர் மதுரைக்கு பம்புகளின் உதவி இன்றி வந்து சேர்ந்து மேல்நிலைத் தொட்டிகளிலும் ஏறிவிடும். அதற்கேற்ப மேடான பகுதியைத் தேர்ந்தெடுத்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்தனர். இன்றளவும் அது செயல்பாட்டில் உள்ளது.
இப்போது வீட்டுக்குவீடு கழிப்பறைத் தொட்டிகள் உள்ளன. அவற்றில் சேரும் தண்ணீரை குழிகள் அமைத்து அப்படியே நிலத்துக்குள் விட்டுவிடுகின்றனர். ஒரு
நிலையில் தண்ணீர் உறிஞ்ச முடியாத
அளவுக்கு மாறியபின் கழிவுநீரேற்று
ஊர்திகள் மூலம் தொட்டிகள் சுத்தப்படுத்தப்படுகின்றன.
அந்த வாகனங்கள் கழிவுநீரை என்ன செய்வார்கள்? ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் கொண்டுசென்று எங்காவது கண்மாய்,
நீர்நிலைகள், ஆளில்லாத பகுதிகளில் கொட்டிவிடுகின்றனர். இதனால் அந்தப் பகுதி மாசுபடுகிறது.
குடிநீர் பிரச்னைக்கு நிகரான சவாலாக உள்ளது, கழிவுநீர் மேலாண்மையும்.
இதற்குத் தீர்வுகாண உள்ளாட்சி அமைப்புகள், பாதாள சாக்கடை திட்டத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கழிப்பறைக் கழிவுகள் மட்டுமின்றி, குளியலறை, துணி துவைத்தல் உள்ளிட்ட அன்றாட கழிவுநீரையும் ஒரே குழாய் மூலம் சேகரித்து புறநகர் பகுதிகளுக்கு நீரேற்றம் செய்து மறு சுழற்சி செய்யலாம்.
மேலும் வீடுகளில் கழிப்பறை தண்ணீரை தோட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும். அதுகுறித்து பொதுமக்களை ஊக்குவிக்கலாம். இதன்மூலமும் நிலத்தடிநீர் மாசுபடுவதும் தவிர்க்கப்படும்.
இந்த திட்டங்கள் அனைத்துமே வெற்றிபெறுவது அதிகாரிகள் கையில் மட்டுமின்றி பொதுமக்கள் கையிலும் உள்ளது. வீட்டுக்கு வீடு கழிவுநீரை முறையாக மறுசுழற்சி செய்தும், மழை நீரை முறையாக சேமிக்கவும் செய்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுத்து நிறுத்த முடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024