வாளிகள்தான் நவீன கருவிகளா? உலக நாடுகள் என்ன செய்கின்றன?
#ChennaiOilspill
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 28-ம் தேதி எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள், எம்.டி. டான் என்ற இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், எம்.டி. டான் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது.கடலில் கலந்த கச்சா எண்ணெயின் அளவைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும் நிலைமை நினைத்ததை விட மோசம்தான். கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் கடலோர காவல் படையின் மாசு அகற்றும் குழுவினர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், எண்ணூர் துறைமுகம் ஊழியர்கள் என்று அரசுத்துறைகளுடன் இணைந்து மீனவர்களும், தன்னார்வலர்களும் கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் பயன்படுத்தும் நவீன கருவி பக்கெட் என்பது பலரையும் பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைப்போன்ற மோசமான சுற்றுச்சூழல் பிரச்னைகளை கையாள அரசிடம் நவீன கருவிகள் இருப்பது அவசியம் இல்லையா என்ற கேள்விகள் அனைவரது மனதிலும் எழுகிறது. கடலில் ஏற்பட்ட ஆயில் கசிவை கையாளவே பக்கெட்டுகளையும், உதவிக்கு தன்னார்வலர்களையும் அழைக்கும் இந்த அரசு நாளை தமிழ்நாட்டில் இருக்கும் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அதை கையாள்வதற்கு தயாராக உள்ளதா என்பது அனைவரது மனதிலும் எழக்கூடிய மிகப்பெரிய கேள்வி....
பல நாடுகளில் இதைப்போன்ற சூழ்நிலைகளை கையாள தனியாக ஒரு துறை செயல்படும் அவர்களிடம் நவீன கருவிகள் இருக்கும் சமாளித்துவிடுவார்கள்..நமது அரசு இனிமேல் கருவிகளை வாங்கி அதன் பின்பு கச்சா எண்ணெயை சுத்தம் செய்வது என்பது இயலாத ஒன்று இருந்தாலும் எளிய வழிகள் சில இருக்கின்றன அது என்னவென்று பார்க்கலாம்..
காளான்கள் மற்றும் முடிகள்..
இயற்கையான காளான்கள் மற்றும் முடிகளை பயன்படுத்தி எளிதில் எண்ணெயை அப்புறப்படுத்த முடியும்.சில வகை காளான்கள் எண்ணெய் பொருட்களை உறிஞ்சும் தன்மையுடையவை....முடியை ஒரு விரிப்பு போல பயன்படுத்தினால் அது எண்ணெயை எளிதாக ஈர்த்து விடும்..
பாக்டீரியாக்களை ஊக்குவித்தல்..
ஏற்கனவே கடலில் வாழும் இயற்கையான பாக்டீரியாக்கள் தான் கடலில் கலக்கும் கழிவுகளை உணவாக உட்கொண்டு சுத்தப்படுத்துகின்றன. தற்பொழுது அதன் செயல்திறனை ஊக்குவிப்பதற்காக சல்பேட் அல்லது நைட்ரேட் போன்றவற்றை
பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் பயன்படுத்தினால் போதும் மீதியை பாக்டீரியாக்கள் பார்த்துக் கொள்ளும்.
வைக்கோல்
வைக்கோல் கடலில் கலந்த எண்ணெயை சுத்தம் செய்ய உதவும் எளிதான மற்றும் விலை குறைவான ஒரு பொருளாகும். மேலும் அதிகளவில் கிடைக்கக்கூடியது.வைக்கோல் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்பதால் அதை பல நாடுகள் பயன்படுத்துகின்றன.
எண்ணெய் நீக்கிகள்
எண்ணெய்களை நீக்கும் திரவ கரைசல்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒன்றுதான்...இயந்திரங்களில் இருக்கும் எண்ணெய் மாசுகளை அகற்ற பல திரவங்கள் பயன்படுகின்றன. அவற்றை பயன்படுத்தினால் அவை எண்ணெய் மூலக்கூறுகளின் வடிவத்தை மாற்றி அகற்றுவதற்கு எளிதாக இருக்கும். இதைக் கடலில் பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் பயன்படுத்தலாம்.
திரவ ஜெல்கள்
பல நாடுகள் கடலில் கசிந்திருக்கும் கச்சா எண்ணெயை அதிக பரப்பளவில் பரவாமல் இருப்பதற்காக ஜெல்களை பயன்படுத்துகின்றன. இவை எண்ணையை பரவ விடாமல் தடுத்து பிரிப்பதால் அகற்றுவதற்கு எளிதாக இருக்கும்.
தேங்காய் நார் கூட எண்ணெயை உறிஞ்சும். அதை எப்படி பெரிய அளவில் பயன்படுத்தலாம் எனபதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதைப்போன்ற சுற்றுச்சூழல் விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகளின் தாக்கம் பல காலத்திற்கு இருக்கும். மேலும் அது கடலின் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.அரசு அதை உணர்ந்து தற்போது பயன்படுத்தும் நவீன கருவியான "பக்கெட்டுகளை" பயன்படுத்துவதை கைவிட்டுவிட்டு உண்மையாகவே நவீன கருவிகளை பயன்படுத்தி நிரந்தரமாக கச்சா எண்ணெய் பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோள்.
No comments:
Post a Comment