Thursday, March 2, 2017

குவியும் ரூ.10 நாணயம் : அலறும் சிறு வங்கிகள்

ஊட்டி: பத்து ரூபாய் நாணயங்கள் வங்கி களில் குவிவதால், அவற்றை இருப்பில் வைக்க இடம் இல்லாமல், சிறிய வங்கி கிளைகள் திணறுகின்றன. கடந்த ஓரிரு மாதங்களாக, '10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என்ற தகவல் பரவி வருகிறது. மளிகைக்கடைகள், டீக்கடைகள், பஸ் நடத்துனர்கள், ஆட்டோ டிரைவர்கள், 'டாஸ்மாக்' கடைக்காரர்கள் என, அனைவரும், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர்.இதனால், அனைவரும் வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்வதால், ஒவ்வொரு வங்கிக் கிளையிலும், தினசரி பல ஆயிரம் ரூபாய்க்கு நாணயங்கள் குவிகின்றன. 

இது குறித்து வங்கி ஊழியர்கள் கூறியதாவது:பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என, ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தும், மக்கள் பயப்படுகின்றனர். தினமும் வாடிக்கையாளர்கள் வழங்கும் பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ள, 'கரன்சி செஸ்ட்'டுக்கு அனுப்பி, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று புழக்கத்தில் விடுவோம். ஆனால் செல்லத்தக்க, 10 ரூபாய் நாணயங்களை, 'கரன்சி செஸ்ட்'டுக்கு அனுப்ப முடியாது. சிறிய கட்டடங்களில் இயங்கும் வங்கிக் கிளைகளுக்கு, 10 ரூபாய் நாணயங்களை இருப்பில் வைப்பது, சிரமமான காரியமாக உள்ளது. 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறையும் போது, நாணயங்களுக்கான தேவை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தவணை முறையில் சம்பளம் : அரசு பஸ் ஊழியர்கள் கொதிப்பு

சென்னை: தவணை முறையில் சம்பளம் வழங்கப்படுவதால், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கொதிப்படைந்து உள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோருக்கு, மூன்று மாதமாக, 'பென்ஷன்' கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது, கோவை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, தவணை முறையில் சம்பளம் கொடுக்கும், சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கழகத்தில், பிப்., மாத சம்பளத்தில், தொழில்நுட்ப பிரிவினருக்கு, பாதி சம்பளமே வங்கியில் செலுத்தப்பட்டது; மீதத் தொகை, ஒரு வாரத்தில் வழங்கப்படும் என, கூறப்படுகிறது. அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. ஒரு வாரத்திற்குள், முதல் தவணையும், மீதத் தொகை, இரண்டாவது தவணையாக, அடுத்த வாரமும் வழங்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. இது, ஊழியர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து, கோவை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மாதம், 32 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில், 473 பஸ்களை இயக்குகிறோம். ஒரு நடைக்கு, 1,500 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. நீலகிரி, பெங்களூருக்கு, இரவில் பஸ்களை இயக்க முடிவதில்லை. திருச்சி, மதுரைக்கு இரவில் இயக்கினாலும், வசூல் குறைவாக தான் உள்ளது. இதனால், ஊழியர் சம்பளத்துக்கே, 5 கோடி ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது. இந்த நஷ்டத்தை அரசு ஏற்றால் தான், ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியும். வேறு வழியின்றி, நிலைமைக்கேற்ப தவணையில் வழங்குகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்ஜினியரிங் படிப்பில் சேர, 2018ல், பொது நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுத வேண்டியதில்லை. மருத்துவ படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு தமிழக அரசின் சார்பில், விலக்கு கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும், இன்ஜினியரிங் படிப்புக்கு, பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னை வந்துள்ள, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே, இதுகுறித்து கூறியதாவது:

மாநில அரசு கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகள் என, பல சேர்க்கை முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனால், மாணவர்கள் பல்வேறு நுழைவு தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது.

இந்த நிலையை மாற்ற, இன்ஜினியரிங் படிப்பில், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரி, பல்கலைகளை இணைத்து, அவற்றில் சேர்வதற்கு, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்த உள்ளோம். இதற்காக, மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம். வரும், 2018 - 19ம் கல்வி ஆண்டில், இந்த நுழைவு தேர்வு நடத்தப்படும்.

அதேபோல், கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மூத்த குடிமக்களுக்கு விமான சுற்றுலா வாய்ப்பு

ஜெய்ப்பூர்: நாட்டின் முக்கிய புனித தலங்களுக்கு, 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களை, விமானத்தில் அழைத்து செல்லும் திட்டத்தை, ராஜஸ்தான் மாநில அரசு துவங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், மூத்த குடிமக்கள், ரயிலில் புனித தலங்களுக்கு சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது, மாநில அரசின் சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக, 'தீன்தயாள் உபாத்யாயா மூத்த குடிமக்கள் புனித யாத்திரை திட்டம்' அமல்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், புனித யாத்திரை செல்ல விண்ணப்பித்தவர்களில் இருந்து, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோர், விமானம் மூலம், நான்கு புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான செலவு, தங்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்கும். முதற்கட்டமாக, 28 பயணிகள், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து, திருப்பதிக்கு விமானத்தில் பறந்தனர். விமான பயணத்தை, முதல்வர் வசுந்தரா ராஜே கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து அறநிலையத் துறை பொறுப்பு ஆணையர், அசோக் குமார் கூறியதாவது:முதற்கட்டமாக, திருப்பதிக்கு, 28 பயணிகள் விமானத்தில் புறப்பட்டனர். அடுத்ததாக, ராமேஸ்வரத்துக்கு, 357 பேரும், புரி ஜகன்நாதர் கோவிலுக்கு, 225 பேரும் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 28, 04:15 AM

உயிரியல் பூங்கா

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1985–ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது பூங்கா நுழைவுக்கட்டணமாக ரூ.2 வசூல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 முறை பூங்கா நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போது பூங்காவை சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் வார்தா புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா வரலாறு காணாத அளவுக்கு சேதம் அடைந்தது. 2 மாதத்துக்கு பிறகு பூங்கா சீரமைக்கப்பட்டு இந்த மாதம் 10–ந்தேதி திறக்கப்பட்டது.நுழைவுக்கட்டணம்

இந்நிலையில் நாளை (புதன்கிழமை) முதல் பூங்கா நுழைவுக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு (5 முதல் 12 வயது வரை) ரூ.20 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும்.

புகைப்படக்கருவிக்கு (கேமரா, செல்போன் உள்ளிட்டவை,) ரூ.25, வீடியோ கேமராவுக்கு ரூ.150, பூங்காவை பேட்டரி வாகனத்தில் சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, சிங்க உலாவிடம் வாகன கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 என கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

நுழைவுக்கட்டணம் வாங்காமல் பிடிபட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.

மார்ச் 02, 02:19 AM

செங்குன்றம்,

தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.

அதன்படி புழல் சிறையில் தண்டனையை கைதிகள் 20 பேரும், விசாரணை கைதிகள் 4 பேரும், திருச்சியில் இருந்து 15 பேரும், கோவையில் இருந்து 13 பேரும், மதுரையில் இருந்து 11 பேரும், வேலூரில் இருந்து 8 பேரும், சேலத்தில் இருந்து 9 பேரும், பாளையங்கோட்டையில் இருந்து 10 பேரும், கடலூரில் இருந்து 3 பேரும், புதுக்கோட்டையில் இருந்து 5 பேரும் என மொத்தம் 98 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு ஏற்பாடுகளை புழல் சிறை துறை அதிகாரிகள் செய்து உள்ளனர்.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் அமல்.

மார்ச் 02, 05:00 AM

புதுடெல்லி,

கருப்பு பணம் பதுக்குதல், கள்ளநோட்டு புழக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கடந்த டிசம்பர் 30-ந் தேதி வரை அவகாசம் அளித்த மத்திய அரசு, அதற்குப்பின் இந்த நோட்டுகளை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தது.

அதன்படி தனிநபர் ஒருவர் 10-க்கும் மேற்பட்ட நோட்டுகள் வைத்திருந்தாலோ, ஆய்வு மற்றும் நாணயம் சேகரிப்பில் ஈடுபடுவோர் 25 நோட்டுகளுக்கு மேல் வைத்திருந்தாலோ அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் அல்லது மொத்த தொகையில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வகை செய்யும் வகையில் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

‘குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் (பொறுப்பு நிறுத்தம்) சட்டம் 2017’ என்ற அந்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 27-ந் தேதி ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை வருகிற 31-ந் தேதி வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் செலுத்த இந்த சட்டம் வகை செய்வதுடன், தவறான தகவல்களை அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS TODAY 18.12.2025