Thursday, March 16, 2017

தமிழ்நாடு தற்போது வரலாறு காணாத வறட்சியில் வாடிவதங்கிக் கொண்டிருக்கிறது.

மார்ச் 16, 02:00 AM

தமிழ்நாடு தற்போது வரலாறு காணாத வறட்சியில் வாடிவதங்கிக் கொண்டிருக்கிறது. 1846–ம் ஆண்டுக்குப்பிறகு இப்படியொரு கடுமையான வறட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டதில்லை. இதற்கு முன்பும் சில நேரங்களில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் தண்ணீர் இருக்கும். சிலபகுதிகளில் கடும்வறட்சி நிலவும். அப்படிப்பட்ட நேரங்களில், அண்டை மாவட்டங்களில் தண்ணீர் இருந்தால், அங்கிருந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டுவருவார்கள். எடுத்துக்காட்டாக, 1991–1996–ல் ஒரு ஆண்டு சென்னை நகரம் கடுமையான வறட்சியை சந்தித்துக்கொண்டிருந்தது. அப்போது சென்னை பெருநகர குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனராக எம்.எஸ்.சீனிவாசன் என்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இருந்தார். அவர் ஈரோட்டிலிருந்து ரெயில் மூலமாகவும், நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலமாகவும் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்து நிலைமையை சமாளித்தார். ஆனால், இப்போது அப்படி பக்கத்து மாவட்டங்களிலிருந்து தண்ணீர் கொண்டுவரமுடியாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும்தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. விவசாயத்திற்காக தண்ணீர் இல்லையென்று ஒருபக்கம் இருந்தாலும், குடிநீர் பற்றாக்குறையும் அதிகமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் பொய்த்துவிட்ட நிலையில், நிலத்தடிநீரும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. எப்படித்தான் அரசு இந்த வறட்சியை சமாளிக்கப்போகிறதோ? என்று பெரும்கவலை மக்களை வாட்டிவதைக்கிறது. தமிழ்நாடு இப்போது வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக இருந்தபோது, கடந்த ஜனவரி மாதமே வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி நிதி ஒதுக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு கோரினார். ஆனால், இன்னும் நிதி வந்துசேரவில்லை. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகம், ஆந்திராவில் இருந்து தண்ணீர் கேட்கலாம் என்றால், அங்கும் வறட்சி தொடங்கிவிட்டது. இந்தநிலையில், கேரளாவும், கர்நாடகமும் செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சியில் ஈடுபடலாமா? என்று பரிசீலித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் எல்லா நீர்ஆதாரங்களும் வற்றிப்போய்விட்ட நிலையில், நமக்கும் இப்போது செயற்கை மழையை பெய்விக்க முயற்சி எடுக்கலாமா? என்ற ஒரேயொரு நம்பிக்கை இருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், செயற்கைமழை முயற்சிகள் புதிதல்ல. 1975–ம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் சென்னையில் கடும்வறட்சி ஏற்பட்டிருந்தது. அந்தநேரம் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரும், வேளாண்மைத்துறை செயலாளராக இருந்த சொக்கலிங்கமும் செயற்கை மழையை பெய்விக்க அமெரிக்காவிலிருந்து, ராங்கனோ என்ற வானிலை நிபுணரை வரவழைத்து ஆலோசனை நடத்தினர். அவர், ‘சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளின் மேல் படர்ந்துள்ள மேகக்கூட்டங்களுக்குள் ஒரு குட்டிவிமானத்தில் பறந்து குளிர்ந்த மேகமுறையை பயன்படுத்தி ரசாயனப்பொருளை தூவி செயற்கைமழையை பெய்விக்கலாம். இந்த குட்டிவிமானத்தில் விமானி விவர்க்காவும், நிபுணர் பிரெட்கிளார்க்கும் செல்வார்கள். விமான இறக்கைக்கு கீழே ‘சில்வர் அயோடைடு’ நிரப்பப்பட்டுள்ள குழாய்கள் இருக்கும். சில்வர் அயோடைடை மேகத்தில் தூவினால் மேகம் குளிர்ச்சியடைந்து, 10 நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கும்’ என்று ஆலோசனை கூறினார். உடனடியாக அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நடத்திய பரிசோதனை ஓரளவிற்கு வெற்றிபெற்று மழைபொழிந்தது. ஜெயலலிதா ஆட்சியிலும் ஒருமுறை செயற்கை மழைத்திட்டம் பரிசோதிக்கப்பட்டது. சி.பா.ஆதித்தனார் கொண்டு வந்த திட்டத்தினால், தமிழக அரசுக்கு அப்போது ரூ.12½ லட்சம்தான் செலவானது. இப்போது நவீன தொழில்நுட்பம் வந்துவிட்டது. நல்ல விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். இப்போதைக்கு வேறுவழியில்லாத நிலையில், செயற்கைமழை பெய்விக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலிக்கலாம். கொஞ்சமழை பெய்தாலும் பலன்தானே என்றவகையில், இதுகுறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Wednesday, March 15, 2017


அட...அப்படியே இருக்காங்க ஷோபனா ரவி!

செய்திகள் 24x7 என்ற அடிப்படையில் மாறியதும், தமிழகத்திலும் நியூஸ் சேனல்கள் அதிக அளவு படையெடுத்துவிட்டன. இதையடுத்து, தினசரி பல்வேறு நியூஸ் ரீடர்களை நாம் பார்க்கத் துவங்கிவிட்டோம். தொலைக்காட்சிகள் அதிகம் இல்லாத காலத்தில், பொதிகை மற்றும் ஆல் இந்திய ரேடியோ செய்திகள் வாசித்தவர்களை எப்போதும் மறக்க முடியாது.



இந்நிலையில், பொதிகை மற்றும் ஆல் இந்திய ரேடியோ செய்திகளைத் தங்களது வலிமையான குரல்களில் ஆட்சிசெய்த ஷோபனா ரவி, ராமகிருஷ்ணன், ஈரோடு தமிழன்பன், சரோஜ் நாராயண் ஸ்வாமி உள்ளிட்டோரின் கெட்- டு- கெதர் நடந்துள்ளது. இதில், செய்தி வாசித்து தங்களது குரல்களால் கேட்போரைக் கட்டிப்போட்டிருந்தவர்கள், தங்களது பழைய நாள்களை நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.







பஸ் நிலையத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பிச்சைக்கார மூதாட்டி: கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்

இரா.வினோத்

கர்நாடகாவில் பேருந்து நிலை யத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிச்சைக்கார மூதாட்டி ஒருவர் பிரசவம் பார்த்து அங்குள்ளவர்களை நெகிழச் செய்தார்.

ரெய்ச்சூர் மாவட்டம், மான்வி அருகேயுள்ள சன்னா பஜாரைச் சேர்ந்தவர் ராஜண்ணா (35). விவசாய தொழிலாளியான இவர் தனது மனைவி எல்லம்மா (30) மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எல்லம்மாவுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. எனவே அவரைப் பேருந்தில் ரெய்ச்சூர் அரசு மருத்துவ மனைக்கு ராஜண்ணா அழைத்துச் சென்றார்.

ரெய்ச்சூரில் பேருந்தில் இருந்து இறங்கும்போது எல்லம்மா தடுமாறி கீழே விழுந்தார். மேலும் அவர் பிரசவ வலியால் துடித்தார். இதனால் ராஜண்ணா செய்வதறியாது திகைத்தார். அப்போது அங்கு ஓடிவ‌ந்த, சுமார் 60 வயது பிச்சைக்கார மூதாட்டி ஒருவர், எல்லம்மாவை மறைவான இடத்துக்கு கொண்டுச் சென்றார். அங்கு எல்லம்மாவுக்கு பிரசவம் பார்க்கும் வேலையில் ஈடுபட்டார். இதைக் கண்ட மற்ற பெண்களும் அவருக்கு உதவியாக இருந்த னர். இறுதியில் எல்லம்மா சுகப் பிரசவம் மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தையை முத்தமிட்ட மூதாட்டி அதை, ராஜண்ணாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தக்க சமயத்தில் உதவிய அந்த பெண்மணிக்கு எல்லம்மா வும், ராஜண்ணாவும் நன்றி கூற முடியாமல் தவித்தனர்.

ஆந்திராவில் ஒரு பல்பு பயன்படுத்தியவருக்கு ரூ.8.73 லட்சம் மின் கட்டணம்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு பல்பு கொண்ட வீட்டுக்கு மாத மின் கட்டணமாக ரூ.8.73 லட்சம் செலுத்தும்படி ரசீது அனுப்பி வைக்கப்பட்டதால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

நெல்லூர் மாவட்டம், தோட்டபல்லி கூடு கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ரவீந்தர். இவர் சமீபத்தில் சிறிய வீட்டைச் சொந்தமாக கட்டினார். இதற்கான மின் இணைப்பும் பெற்றார். பின்னர் தனது வீட்டில் ஒரேயொரு பல்பு மட்டும் பொருத்தி இரவில் பயன்படுத்தி வந்தார். அதற்கு கட்டணமாக கடந்த மாதங்களில் ரூ.85 வரை செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான மின் கட்டணத்தை கண்டதும் ரவீந்தர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். ஒரேயொரு பல்பு பயன்பாட்டுக்கு 1 லட்சத்து 26,517 யூனிட் மின்சாரம் செலவாகி இருப்பதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 696 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் குழப்பம் அடைந்த ரவீந்தர் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று முறையிட்டார். மேலும் ஒரு பல்பு பயன்பாட்டுக்கு லட்சக்கணக்கில் மின் கட்டணம் எப்படி வரும் என கேள்வி எழுப்பி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி தவறைக் கண்டுபிடிப்பதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதி யளித்துள்ளனர்.

போக்குவரத்து கழகங்களில் நிதி பற்றாக்குறை : ஓய்வூதியம் கிடைக்காமல் 62 ஆயிரம் ஓய்வூதியர்கள் தவிப்பு

கி.மகாராஜன்

அரசு போக்குவரத்து கழகங்களில் நிதி நெருக்கடி காரணமாக 62 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்துக்கான ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 62 ஆயிரம் பேருக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாதத்தின் முதல் நாள் மற்றும் 15-வது நாள் என இரு தவணையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியத்துக்காக மாதம் சுமார் ரூ.72 கோடி செலவிடப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழகங் களுக்கு மாணவர்களுக்கான இலவச பஸ் உள்ளிட்ட பல்வேறு இலவச பயணங்களுக்கு அரசு ஆண்டுதோறும் வழங்கும் மானியத் தொகையில் ஒரு பகுதியை ஓய்வூதியம் வழங்கு வதற்காக போக்குவரத்து கழ கங்கள் பயன்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு இலவச பயணங்களுக்கான மானியமாக தமிழக அரசு ரூ.505 கோடி வழங் கியது. ஓய்வூதியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, கூடுதல் செலவீனங்கள் காரணமாக மானியத் தொகை ஒதுக்கீட்டுப் பணம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிந்தது.

அதன் பின்னர் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்கிய பணம் இதுவரை போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் போக்கு வரத்து கழகங்களில் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்துக்கான ஓய்வூதியம் இது வரை வழங்கவில்லை. மாதத்தின் இரண்டாவது தவணை நாளான இன்றும் (மார்ச் 15) ஓய்வூதியம் தராவிட்டால் போராட்டத்தில் குதிக்க ஓய்வூதியதாரர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர் சம்மேளன செயலர் இளங்கோ கூறும்போது, ஓய்வூதியர்கள் அனைவரும் ஓய்வூதியத்தை நம்பியே உள் ளனர். இந்த மாதம் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க பணம் இல்லாமலும், மருத்துவ செ லவை ஈடுகட்ட முடியாமலும் தவிக்கிறோம். இரண்டாவது தவணை நாளான இன்றும் ஓய்வூதியம் வழங்காவிட்டால், ஓய்வூதியர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் குதிப்பார்கள் என்றார்.

பட்ஜெட்டில் ரூ.4000 கோடி

தமிழக அரசின் பட்ஜெட் சட்டப் பேரவையில் மார்ச் 16-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4000 கோடி முதல் ரூ.5000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்தளவுக்கு பணம் ஒதுக்கினால் மட்டுமே போக்குவரத்து கழங்களுக்கான செலவீனத்தை ஈடுகட்டுதல், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை பணத்தை வழங்குதல் போன்ற தேவைகளை நிறைவேற்ற முடியும் என தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

வானவில் பெண்கள்: மக்களுக்கான மருத்துவர்!

எல்.ரேணுகாதேவி

மருத்துவர்கள்தான் மக்களைத் தேடி வரவேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளின் எஜமானர்கள் அல்ல, சேவகர்கள்’என்று வலியுறுத்தியவர் சீனாவில் பணியாற்றிய உலகப் புகழ்பெற்ற மருத்துவர் நார்மன் பெத்யூன். அவருடைய கருத்தைக் களத்தில் செயல்படுத்திவருகிறார் பொன்னேரி அரசு மருத்துவமனைத் தலைவர் (பொறுப்பு) மருத்துவர் அனுரத்னா.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தார் அனுரத்னா. மருத்துவராக வேண்டும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருந்தது.

“கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைந்த காரணத்தால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் எந்தப் பகுதியிலும் மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. மருத்துவராகும் கனவு அவ்வளவுதானா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் அப்பா ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிறாயா என்று கேட்டார். மாஸ்கோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, மருத்துவம் படிக்க வாய்ப்பும் கிடைத்தது. ரஷ்யாவில் ஆறரை ஆண்டுகள் மருத்துவம் படிக்கச் சென்றேன். எனக்கு மொழி ஒரு பிரச்சினையாகவே இல்லை. தமிழ் வழிக் கல்வியில் படித்துவிட்டதால் எந்த விதத்திலும் நான் கஷ்டப்பட்டதில்லை. எந்த மொழியில் படித்தாலும் தமிழில்தான் உள்வாங்கிக்கொள்வேன். தாய்மொழியில் படிப்பது பெருமையான விஷயம்தான்” என்கிறார் அனுரத்னா.

மருத்துவப் பணி

படிப்பு முடித்த பிறகு சிவகங்கையில் உள்ள பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த மருத்துவராகச் சேர்ந்தார். திருமணத்தால் தேனிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை. மருத்துவப் பணிக்கு விண்ணப்பம் செய்ததும் கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த மருத்துவராக மீண்டும் பணியில் சேர்ந்தார். தமிழக அரசு சார்பில் மருத்துவர்களுக்காகச் சிறப்பு மருத்துவத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நிரந்தர அரசு மருத்துவராகத் தகுதி பெற்றார் அனுரத்னா.

எம்.பி.பி.எஸ். படிப்பு மட்டும் மக்களுக்குச் சேவை செய்யப் போதாது என்பதால், மகப்பேறு மருத்துவப் படிப்பை முடித்தார். ‘‘மகப்பேறு படிப்பு இரண்டு உயிர்களைக் காப்பாற்றுவதற்கான படிப்பு!. பணி நியமனக் கலந்தாய்வில் நான் விரும்பும் எந்த மருத்துவமனையையும் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு என்னிடம் இருந்தது. ஆனால் சக மருத்துவர்கள் பொன்னேரிக்கு மட்டும் போகாதே, மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்றனர். ஆனால் நான் பொன்னேரியைத்தான் தேர்வு செய்தேன். மக்கள் பிரச்சினை செய்கிறார்கள் என்றால், அதில் ஒரு நியாயம் இருக்கும். அதை என்னால் சரி செய்ய முடியும் என்று நம்பினேன்” என்கிறார் அனுரத்னா.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் செய்ய முடியாமல் போகும் சிகிச்சைகளுக்காக, அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பும் சூழ்நிலை இருந்தது. இதுதான் மக்களின் பிரச்சினை என்று புரிந்துகொண்டார் அனுரத்னா. மருத்துவமனையின் தலைவர் (பொறுப்பு) பதவிக்கு வந்தவர், அரசு உதவியோடு பல விஷயங்களை மேற்கொண்டார். மாதத்துக்கு 40 பிரசவங்கள் மட்டும் பார்க்கப்பட்டு வந்த மருத்துவமனையில் தற்போது 100 பிரசவங்கள் பார்க்க முடிகிறது. மூட்டு மாற்று அறுவைசிகிச்சை, தோல், பல், காது, மூக்கு, தொண்டை போன்ற சிகிச்சைகள் தற்போது பொன்னேரி அரசு மருத்துவமனையிலேயே நடைபெறுவதால் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

தேடிவந்த விருதுகள்

“2015-ம் ஆண்டு டிசம்பரில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. பல முகாம்களில் பிரசவ வலியால் பெண்கள் அவதிப்பட்டனர். முகாம்களிலேயே சிசேரியன்கூடச் செய்ய வேண்டிய  நிலை ஏற்பட்டது. எங்கள் மருத்துவக் குழுவினருடன் தைரியமாகச் செய்து முடித்தேன். வர்தா புயல் பாதிப்பின் போதும் ஒருநாள்கூட விடுமுறை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனையிலேயே தங்கிப் பணிகளை மேற்கொண்டேன்” என்கிறார் அனுரத்னா.

அவசரக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தால் அனுரத்னாவுக்கு இரண்டு முறை சிறந்த மருத்துவருக்கான மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டுள்ளது. பென்னேரியில் அதிக அளவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காகவும் மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

“வர்தா புயலின்போது பொன்னேரி இருட்டில் மூழ்கியிருந்தது. ஆனால் எங்கள் மருத்துவமனையில் மட்டும் ஜெனரேட்டர் வைத்து இரவு, பகலாக மருத்துவ உதவி செய்தோம். அந்த நேரம் நான் உட்பட அனைத்து மருத்துவ ஊழியர்களும் தொய்வின்றி வேலை செய்தோம். அதை இப்போது நினைத்தாலும் நெகிழ்ச்சியாக உள்ளது. பொன்னேரி மருத்துவமனைக்குப் பெரும்பாலும் பின்தங்கிய மக்கள்தான் வருவார்கள். அவர்களுக்கு மருத்துவத் தேவை அதிகமாக உள்ளது. தொலைவிலிருக்கும் இருளர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்துவோம். திருநங்கைகளுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியிருக்கிறோம். நான் படித்த மருத்துவம் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த எண்ணமே என்னைச் சோர்வடையாமல் வைத்துள்ளது” என்று உற்சாகமாகக் கூறுகிறார் அனுரத்னா.

வெயிலின் தீவிரத்தை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு பாக்கெட் மோர்; 2 மணி நேரத்துக்கு ஒருமுறை குளிர்பானம் வழங்க அரசு உத்தரவு

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், போக்குவரத்து போலீஸாருக்கு நேற்று முதல் பாக்கெட் மோர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மோர் அருந்தி தாகத்தைத் தணித்துக் கொள்ளும் போலீஸார். படம்: இ.ராமகிருஷ்ணன்

வெயிலின் தீவிரத்தை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு நேற்று பாக்கெட் மோர் வழங்கப்பட்டது. கோடைகாலம் முடியும் வரை போக்குவரத்து போலீஸாருக்கு தினமும் மோர் வழங்கப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போக்குவரத்து போலீஸாரின் முக்கிய பணியாக உள்ளது. போக்குவரத்து போலீ ஸார் கோடைக் காலத்தில் கடும் வெயிலில் சாலைகளிலும், சாலை சந்திப்புகளிலும், நிழலுக்கு ஒதுங்கக் கூட இயலாத இடங்களில் நின்று பணிபுரிய வேண்டியுள்ளது.
இவர்களது சிரமத்தைக் குறைக் கும் வகையில், இவர்களுக்கு பணியில் இருக்கும் போது, காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை, உள்ள நேரத்தில், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை குளிர்பானம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் போக்குவரத்து போலீஸாருக்கு நேற்று முதல் பாக்கெட் மோர் வழங்கப்பட்டது. தொடர்ந்து 122 நாள் இவ்வாறு பாக்கெட் மோர் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நேற்று சென்னையில் உள்ள போக்குவரத்து போலீஸார் 2,500 பேருக்கு தலா 2 வீதம் 5 ஆயிரம் மோர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

களத்தில் பணி செய்யும் போக்குவரத்து போலீஸாருக்கு மோர் சீராக வழங்கப்படுகிறதா? என்பதை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங், இணை ஆணையர் பவானீஸ்வரி கண்காணித்து வருகின்றனர்.

NEWS TODAY 21.12.2025