ஆந்திராவில் ஒரு பல்பு பயன்படுத்தியவருக்கு ரூ.8.73 லட்சம் மின் கட்டணம்
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு பல்பு கொண்ட வீட்டுக்கு மாத மின் கட்டணமாக ரூ.8.73 லட்சம் செலுத்தும்படி ரசீது அனுப்பி வைக்கப்பட்டதால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
நெல்லூர் மாவட்டம், தோட்டபல்லி கூடு கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ரவீந்தர். இவர் சமீபத்தில் சிறிய வீட்டைச் சொந்தமாக கட்டினார். இதற்கான மின் இணைப்பும் பெற்றார். பின்னர் தனது வீட்டில் ஒரேயொரு பல்பு மட்டும் பொருத்தி இரவில் பயன்படுத்தி வந்தார். அதற்கு கட்டணமாக கடந்த மாதங்களில் ரூ.85 வரை செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான மின் கட்டணத்தை கண்டதும் ரவீந்தர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். ஒரேயொரு பல்பு பயன்பாட்டுக்கு 1 லட்சத்து 26,517 யூனிட் மின்சாரம் செலவாகி இருப்பதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 696 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் குழப்பம் அடைந்த ரவீந்தர் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று முறையிட்டார். மேலும் ஒரு பல்பு பயன்பாட்டுக்கு லட்சக்கணக்கில் மின் கட்டணம் எப்படி வரும் என கேள்வி எழுப்பி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி தவறைக் கண்டுபிடிப்பதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதி யளித்துள்ளனர்.
No comments:
Post a Comment