Thursday, March 16, 2017

தமிழ்நாடு தற்போது வரலாறு காணாத வறட்சியில் வாடிவதங்கிக் கொண்டிருக்கிறது.

மார்ச் 16, 02:00 AM

தமிழ்நாடு தற்போது வரலாறு காணாத வறட்சியில் வாடிவதங்கிக் கொண்டிருக்கிறது. 1846–ம் ஆண்டுக்குப்பிறகு இப்படியொரு கடுமையான வறட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டதில்லை. இதற்கு முன்பும் சில நேரங்களில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் தண்ணீர் இருக்கும். சிலபகுதிகளில் கடும்வறட்சி நிலவும். அப்படிப்பட்ட நேரங்களில், அண்டை மாவட்டங்களில் தண்ணீர் இருந்தால், அங்கிருந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டுவருவார்கள். எடுத்துக்காட்டாக, 1991–1996–ல் ஒரு ஆண்டு சென்னை நகரம் கடுமையான வறட்சியை சந்தித்துக்கொண்டிருந்தது. அப்போது சென்னை பெருநகர குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனராக எம்.எஸ்.சீனிவாசன் என்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இருந்தார். அவர் ஈரோட்டிலிருந்து ரெயில் மூலமாகவும், நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலமாகவும் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்து நிலைமையை சமாளித்தார். ஆனால், இப்போது அப்படி பக்கத்து மாவட்டங்களிலிருந்து தண்ணீர் கொண்டுவரமுடியாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும்தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. விவசாயத்திற்காக தண்ணீர் இல்லையென்று ஒருபக்கம் இருந்தாலும், குடிநீர் பற்றாக்குறையும் அதிகமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் பொய்த்துவிட்ட நிலையில், நிலத்தடிநீரும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. எப்படித்தான் அரசு இந்த வறட்சியை சமாளிக்கப்போகிறதோ? என்று பெரும்கவலை மக்களை வாட்டிவதைக்கிறது. தமிழ்நாடு இப்போது வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக இருந்தபோது, கடந்த ஜனவரி மாதமே வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி நிதி ஒதுக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு கோரினார். ஆனால், இன்னும் நிதி வந்துசேரவில்லை. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகம், ஆந்திராவில் இருந்து தண்ணீர் கேட்கலாம் என்றால், அங்கும் வறட்சி தொடங்கிவிட்டது. இந்தநிலையில், கேரளாவும், கர்நாடகமும் செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சியில் ஈடுபடலாமா? என்று பரிசீலித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் எல்லா நீர்ஆதாரங்களும் வற்றிப்போய்விட்ட நிலையில், நமக்கும் இப்போது செயற்கை மழையை பெய்விக்க முயற்சி எடுக்கலாமா? என்ற ஒரேயொரு நம்பிக்கை இருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், செயற்கைமழை முயற்சிகள் புதிதல்ல. 1975–ம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் சென்னையில் கடும்வறட்சி ஏற்பட்டிருந்தது. அந்தநேரம் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரும், வேளாண்மைத்துறை செயலாளராக இருந்த சொக்கலிங்கமும் செயற்கை மழையை பெய்விக்க அமெரிக்காவிலிருந்து, ராங்கனோ என்ற வானிலை நிபுணரை வரவழைத்து ஆலோசனை நடத்தினர். அவர், ‘சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளின் மேல் படர்ந்துள்ள மேகக்கூட்டங்களுக்குள் ஒரு குட்டிவிமானத்தில் பறந்து குளிர்ந்த மேகமுறையை பயன்படுத்தி ரசாயனப்பொருளை தூவி செயற்கைமழையை பெய்விக்கலாம். இந்த குட்டிவிமானத்தில் விமானி விவர்க்காவும், நிபுணர் பிரெட்கிளார்க்கும் செல்வார்கள். விமான இறக்கைக்கு கீழே ‘சில்வர் அயோடைடு’ நிரப்பப்பட்டுள்ள குழாய்கள் இருக்கும். சில்வர் அயோடைடை மேகத்தில் தூவினால் மேகம் குளிர்ச்சியடைந்து, 10 நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கும்’ என்று ஆலோசனை கூறினார். உடனடியாக அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நடத்திய பரிசோதனை ஓரளவிற்கு வெற்றிபெற்று மழைபொழிந்தது. ஜெயலலிதா ஆட்சியிலும் ஒருமுறை செயற்கை மழைத்திட்டம் பரிசோதிக்கப்பட்டது. சி.பா.ஆதித்தனார் கொண்டு வந்த திட்டத்தினால், தமிழக அரசுக்கு அப்போது ரூ.12½ லட்சம்தான் செலவானது. இப்போது நவீன தொழில்நுட்பம் வந்துவிட்டது. நல்ல விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். இப்போதைக்கு வேறுவழியில்லாத நிலையில், செயற்கைமழை பெய்விக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலிக்கலாம். கொஞ்சமழை பெய்தாலும் பலன்தானே என்றவகையில், இதுகுறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...