Wednesday, April 19, 2017

பரமக்குடியில் 2 நிமிடம் ரயில்கள் நிற்கும்

பதிவு செய்த நாள்19ஏப்
2017  00:09  

மதுரை: பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ஏப்., 21 முதல் சில ரயில்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வண்டி எண் 06035 எர்ணாகுளம் -ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஏப்.,24 முதல் இரவு 2:10 மணிக்கு பரமக்குடியில் நின்று செல்லும். ராமேஸ்வரம் -- எர்ணாகுளம் (06036) ஏப்.,24 முதல் இரவு 11:23க்கு நின்று செல்லும். கோவை - -ராமேஸ்வரம் (06062) வாரந்திர ரயில் ஏப்.,21 முதல் மாலை 4:25 மணிக்கு நின்று செல்லும். ராமேஸ்வரம் - -கோவை (06061) வாரந்திர ரயில் ஏப்.,22 முதல் காலை 9:28 மணிக்கு நின்று செல்லும்.
3 ஆண்டுகளில் 40 பேர் பலி: புற்றுநோய் வேட்டையாடும் கிராமம்

பதிவு செய்த நாள்19ஏப்
2017
00:08




திருநெல்வேலி: துாத்துக்குடி மாவட்டம் அய்யனார்ஊத்து கிராமத்தில் 3 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு புற்றுநோய்களால் இறந்துள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நோய் குறித்து சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட ஆய்வு கிடப்பில் உள்ளது.

கயத்தாறு அருகே உள்ளது அய்யனார் ஊத்து. 3,500 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் நான்கு ஆண்டுகளாக அதிக அளவில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒருவருக்கு நோய் பாதிப்பு உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் பெண்கள். பலருக்கும் ரத்த புற்றுநோய், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கிராமத்தினர் கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி கலெக்டருக்கும், முதல்வரின் தனிப்பிரிவிற்கும் மனு அனுப்பினர்.கோவில்பட்டி சுகாதார துணை இயக்குனர் போஸ்கோராஜா தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர். தண்ணீரில் பிரச்னை இருக்கலாம் என நான்கைந்து இடங்களில் குடிநீரில் மாதிரியை சோதனைக்கு எடுத்துச்சென்றனர். சோதனை முடிவு குறித்து அறிவிக்கவோ, மேற்கொண்டு சிகிச்சையளிக்கவோ இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து கோவில்பட்டி சுகாதாரத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜாவிடம் கேட்டபோது, ''அந்த கிராமத்தில் புற்றுநோய் பாதிப்பால் பலரும் இறந்திருக்கின்றனர். இதுகுறித்த மேல்நடவடிக்கையை நெல்லை மருத்துவக்கல்லுாரி புற்றுநோய் மையத்தினரோ, சுகாதாரத்துறை உயர்அதிகாரிகளோதான் செய்ய முடியும்,'' என்றார்.

கிராமத்தில் கோரைப்புல்லில் பாய் தயாரிக்கும் கம்பெனிகள் சில உள்ளன. அங்கிருந்து வெளியேறும் சாயக்கழிவுகளால் இந்த பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. மேலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் அந்த வழியாக செல்கிறது. இருப்பினும் அய்யனார் ஊத்து கிராமத்தில் ஆழ்குழாய் நீரைத்தான் குடிநீருக்கு பயன்படுத்துகின்றனர். அந்த நீரில் குழாயில் வரும் தண்ணீரில் புழுக்கள் நெளிந்தபடி வருகிறது.

நான்கு மாதங்களுக்கு முன், மனைவி பாத்துபீவியை புற்றுநோய்க்கு பறிகொடுத்தவர் கான்சா மைதீன், 47. அவர் கூறுகையில், ''நான் வெளிநாட்டில் வேலைபார்த்துவந்தேன். என் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சென்னை புற்றுநோய் மையம் என இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்தோம். இருப்பினும் மனைவி இறந்துவிட்டார். கான்சா மைதீனின் தம்பி அண்மையில் விபத்தில் இறந்துவிட்டார்.

இதனால் இரு குடும்பங்களிலும் குழந்தைகள் உள்ள சூழலில் தற்போது நிர்க்கதியான நிலை. அய்யனார் ஊத்துக்கு அருகில் மானங்காத்தான், மேலஇலந்தைகுளம் என பல்வேறு கிராமங்கள் உள்ளன.

அங்கெல்லாம் இத்தகைய பாதிப்பு இல்லை. புற்றுநோய் பாதிப்பில் ஒரே வீட்டில் கணவன், மனைவி, தாய், மகள் எனவும் இறந்துள்ளனர். இவர்களில் அனேகம் பேர் சென்னை புற்றுநோய் மையம், திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய புற்றுநோய் மையம் போன்றவற்றிற்கு அலைந்தபடியே உள்ளனர். நோய் பாதித்த பலரும் வீட்டை விட்டே வெளியே வர மறுக்கின்றனர். சிலர் தங்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என்பதால் சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு கூட மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கின்றனர். மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையினரும் இணைந்து இக்கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தினால் மட்டுமே
இந்த ஒட்டுமொத்த கிராமத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தெரியவரும்.
ரயில்களில் மீண்டும் 'லெட்டர் பாக்ஸ்' : ஒரே நாளில் தபால் பட்டுவாடா

பதிவு செய்த நாள்18ஏப்  2017   23:57

கடிதங்களை அதிவிரைவில் பட்டுவாடா செய்ய, ரயில்களில், 'லெட்டர் பாக்ஸ்' அமைக்கும் திட்டத்தை மீண்டும் தபால் துறை துவக்கியுள்ளது. நாடு முழுவதும் தொலைதுார கடிதப் போக்குவரத்து, புத்தகங்கள், ஆவணங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனுப்பும் பதிவு தபால்கள், மணியார்டர்கள், இதர பார்சல்களை, தபால் துறையின் ரயில்வே மெயில் சர்வீஸ் எனும், ஆர்.எம்.எஸ்., பிரிவு, ரயில் போக்குவரத்து வழியாக நடத்தி வருகிறது. இதற்கென பிரத்யேக பெட்டிகளும் ரயில்கள் தோறும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கடிதங்கள், போஸ்ட் கார்டுகளை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய ரயில்களில், 'லெட்டர் பாக்ஸ்' பொருத்தும் திட்டத்தை தபால்துறை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்மூலம், இதர தபால் பெட்டிகளில் கடிதங்களை போடுவோர், அடுத்த நாள் சென்று சேரும் வரை காத்திருக்க அவசியமில்லை. ரயில்களில் உள்ள லெட்டர் பாக்சில் போட்டாலே, குறிப்பிட்ட முகவரிக்கு அதிவிரைவில் அனுப்பப்பட்டு விடும். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மார்க்கமாக செல்லும் ரயில்களில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில், மேட்டுப்பாளையம் - சென்னை செல்லும், நீலகிரி எக்ஸ்பிரஸ்; எர்ணாகுளம் - நாகூர் செல்லும், டீ கார்டன் எக்ஸ்பிரஸ்; நாகர்கோவில் - பெங்களூரு செல்லும், ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்களில், 'லெட்டர் பாக்ஸ்'கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை கோட்ட தலைமை தபால் அதிகாரி, சுப்ரமணியம் கூறியதாவது:மாலை, 5:30 மணிக்கு மேல், கடிதம் அனுப்ப விரும்புவோருக்கு இந்த, 'லெட்டர் பாக்ஸ்' மிகவும் கைக்கொடுக்கும். அந்தந்த ஜங்ஷன்களில் ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் பார்த்து, தபால்களை போட்டால் போதும். நள்ளிரவில் போடப்படும் தபால்கள் கூட, காலையில் பட்டுவாடா செய்யப்படும்.

மேலும் இதில், போஸ்ட் கார்டு, கடிதங்கள், அழைப்பிதழ், வாழ்த்து அட்டைகள் மட்டுமே அனுப்ப இயலும்; இதர பதிவு, விரைவு தபால்கள் அனுப்ப இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன?
சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில், அ.தி.மு.க., - சசி அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர்.



அப்போது, சசிகலா குடும்பத்தினருக்கு, கட்சி தொண்டர்களிடமும், பொது மக்களிடமும், கடும் எதிர்ப்பு இருப்பதை கண்கூடாக பார்த்தனர். மேலும், தினகரன் வெற்றி கேள்விக் குறியானதை தொடர்ந்து, பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்தது.
அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளரான, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கினார். இதெல்லாமே, சக அமைச்சர்களை யோசிக்க வைத்தது. இனிமேலும் சசிகலா குடும்பத்தின் பின்னால் சென்றால், அரசியல் எதிர்காலம் வீணாகிவிடும் என்பதை உணரத் துவங்கினர்.அதன் பிறகே, சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் வெளியேற்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.

'நிபந்தனையை கைவிட மாட்டோம்!'

பெரியகுளத்தில், நேற்று பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: எம்.ஜி.ஆர்.,- - ஜெ., ஆகியோர், குடும்ப அரசியலை ஒருபோதும் ஏற்றதில்லை.

தன் அண்ணன் அரசியலுக்கு வருவதை கூட, எம்.ஜி.ஆர்., விரும்பவில்லை. 2011ல் சசிகலாவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 16 பேரும், கட்சியி லிருந்து நீக்கப்பட்டனர். நான்கு மாதத்திற்கு பின், சசிகலா, மன்னிப்பு கடிதம் கொடுத்து, கட்சியில் சேர்ந்தார். ஜெ., இறக்கும் வரை, நீக்கப்பட்ட சசிகுடும்பத்தினரை, கட்சியில் உறுப்பினராக்க வில்லை.
கட்சி பொதுச்செயலரை, தொண்டர்கள், நிர்வாகிகள் தான் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு மாறாக, நியமன முறையில், சசிகலா, பொதுச்செயலரானது செல்லாது. அவரால் நியமிக்கபட்ட துணைப் பொதுச்செயலர், தினகரன் நியமனமும் செல்லாது. சசிகலா குடும்பம் இல்லாமல், எம்.ஜி.ஆர்., - ஜெ., கொள்கைக்கு உடன்பட்டு பேச்சு நடத்தினால், இணைவதற்கு தயாராக உள்ளோம்.

கட்சியில் இணைந்தாலும், நாங்கள் முன்பே தெரிவித்தது போல, ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு அளித்த சிகிச்சை முறைகள், மரணத்தில் பொதிந்துள்ள உண்மைகளை, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வெளிக்கொண்டு வர வேண்டும்.
தேர்தல் கமிஷனில், குறுக்கு வழியில் சின்னத்தை பெற, புரோக்கர் மூலம் தினகரன் பணம் கொடுத்துள்ளதை, மத்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

3 மாதங்களுக்கு முன்ஒலித்த முதல் குரல்!

சசிகலா குடும்பத்திற்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எதிர்ப்பு குரல் எழுப்பிய, 90வது நாளில், அவர்கள் கட்சியில் இருந்து விலக்கப்படுவதாக, அமைச்சர்கள்
அறிவித்துள்ளனர்.

ஜெ., மறைவுக்கு பின், ஜன., 18ம் தேதி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 'சசிகலா குடும்பத்திடம் இருந்து, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும். ஜெ., மறைவில் உள்ள சந்தேகம் தீர, நீதி விசாரணை நடத்த வேண்டும்' என, முதலில் குரல் கொடுத்தார்.
அவர் எதிர்ப்பு குரல் கொடுத்து, நேற்றுடன், 90 நாட்கள் நிறைவு பெற்றது. நேற்றைய தினம், சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து விலக்குவதாக, அமைச்சர்கள் அறிவித்தனர்.

விரைவில் பொதுக்குழு!

அறிவித்தபடி, சசிகலா, தினகரனை, கட்சியில் இருந்து நீக்கவும், புதிய பொதுச்செயலரை தேர்வு செய்யவும், அ.தி.மு.க., பொதுக்குழு, விரைவில் கூட்டப்படுகிறது. முதல்வர் பழனிசாமி வீட்டில், நேற்றிரவு நடந்த ஆலோசனையில், இந்த முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.
இரு அணிகள் இணைப்புக்கு பின், இதற்கான தேதி அறிவிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுகலை மருத்துவ படிப்பு விதிகளை பின்பற்ற உத்தரவு

பதிவு செய்த நாள்19ஏப்
2017
00:16


சென்னை: முதுகலை மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிமுறையை பின்பற்றும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு டாக்டராக பணியாற்றும், ராஜேஷ் வில்சன் என்பவர், தாக்கல் செய்த மனு:
முதுகலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வில், 874 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். மலை பகுதியில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருவதால், 30 சதவீத மதிப்பெண்கள் பெற, எனக்கு தகுதி உள்ளது. 'நீட்' மதிப்பெண் மற்றும் 30 சதவீத மதிப்பெண்ணையும் சேர்த்தால், மொத்த மதிப்பெண், 1,500க்கு, 1,136 மதிப்பெண் வர வேண்டும்.
எனவே, அரசு டாக்டர்களுக்கான, மாநில அரசின், 50 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், மாணவர்கள் சேர்க்கைக்கான வரிசை பட்டியலை தயாரிக்கும் போது, 'நீட்' மதிப்பெண்ணுடன், 30 சதவீத மதிப்பெண்ணையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பான, மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவு:
முதுகலை மருத்துவம் மற்றும் பட்டய படிப்புகளுக்கான விளக்க குறிப்பேடு, மார்ச் 27ல், மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, ஜனாதிபதி அளிக்கும் ஒப்புதலை பொறுத்து, இது அமையும்.
ஆனால், இதுவரை, ஜனாதிபதியின் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. எனவே, இந்த
விளக்க குறிப்பேடு, மனுதாரரை கட்டுப்படுத்தாது.
முதுகலை மருத்துவ படிப்புக்கான, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை புறக்கணிக்க, தமிழக அரசு முயல்கிறது. மத்திய அரசின் ஒப்புதலுடன் தான், இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த விதிமுறைகளுக்கு முரணாக, மாநில அரசு, சட்டம் இயற்ற முடியாது. எனவே, பணியில் இருக்கும் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊக்க மதிப்பெண்களை, 'நீட்' தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்க்க வேண்டும்.
அதன் படி, முதுகலை மருத்துவ கல்விக்கான விதிமுறைகளை, மாநில மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் தேர்வுக் குழு பின்பற்ற வேண்டும். மனுதாரர் பெற்ற, 30 சதவீத மதிப்பெண்களை, 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் சேர்த்து, வரிசைப் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, April 18, 2017

வருமான வரித்துறை அறிக்கை

தமிழக அமைச்சர் மற்றும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய அதிரடிச் சோதனை, அரசியல் சுனாமியாகி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.இது தொடர்பான ரகசிய அறிக்கையை, டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர் சென்னை வருமான வரி அதிகாரிகள். 7,000 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கை, தமிழக அரசியலை ஒரு வழி செய்துவிடும் என்கின்றனர், இதை படித்து பார்த்தஅதிகாரிகள்.'ஆளும் கட்சியின் வீழ்ச்சி, இந்த அறிக்கையிலிருந்து துவங்கி விட்டது' என்கின்றனர், 

அதிகாரிகள். தமிழக அரசியல்வாதிகள் கொள்ளை அடித்த பணம் தொடர்பான முழு விபரங்களும் விலாவாரியாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. சேகர் ரெட்டி கைதான பின், அவருக்கு யார் யாருடன்தொடர்பு இருந்தது, அவருக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் யார் என சில மாதங்களாக சத்தமில்லாமல் விசாரித்து வந்தது, வருமான வரித்துறை.அதன் விளைவு தான் அமைச்சர் வீட்டில் நடந்த சோதனை. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு கலைக்கப்பட்டுவிடும் என செய்திகள் அடிபடுவதைப் பற்றி கேட்ட போது, அதெல்லாம் வதந்தி; தமிழக அரசைக் கலைப்பதைப் பற்றி, டில்லியில் யாரும்நினைக்கவே இல்லையாம்.இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது சட்ட ரீதியாக முடியாத காரியம். ஆனால், இந்த அறிக்கை, விரைவில் மீடியாக்களுக்கு கசிய விடப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, பழனிசாமி அரசு மீது, மக்கள் கடுப்பில்உள்ள நிலையில், இந்த அறிக்கையின் முக்கியவிபரங்கள் வெளியானால் நிலைமை மோசமாகும். அமைச்சர்களுக்கு எதிராக கோர்ட்டை, சிலர் அணுக வாய்ப்புள்ளது. எது எப்படியோ; வருமான வரி சோதனைக்கு பின், தமிழக அரசுக்கு நேரம் சரியில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

ரெய்டின் பின்னணி!

வருமான வரித்துறையின் சோதனையின் பின்னணியில் இருப்பது மத்திய அரசும், பா.ஜ.,வும் என, தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.ஆனால், சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் அனைத்தும்,'அரசியல்வாதிகள் எப்படியெல்லாம், யார் யாரையெல்லாம் ஏமாற்றி பணம் சுருட்டினர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது' என, விஷயம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். 

அதே சமயம் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு, பா.ஜ., தலைமையும்காரணம் என்றும் பேசப்படுகிறது.இதற்கு ஒரு, 'ப்ளாஷ் பேக்' சொல்லப்படுகிறது.- ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அனைத்து அரசியல்வாதிகளும் வந்து, பார்த்துச் சென்றனர். பா.ஜ., தலைவர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் மருத்துவமனைக்கு வந்தனர். ஜெ., அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே கண்ணாடி வழியாக பார்த்துவிட்டு போக முயன்றனர்.ஆனால், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த இருவரையும், டாக்டர்கள் சந்தித்து, 'மேடம் நன்றாக இருக்கிறார்' என்றனர்; சசிகலா, இவர்களை வந்து சந்திக்கவே இல்லையாம். இந்த விவகாரத்தை அமித் ஷா மறக்கவே இல்லை. 'அவரைத்தான் பார்க்க முடியவில்லை; கண்ணாடி வழியாக பார்க்க, அனுமதிக்கலாமே; குறைந்தபட்சம், சசிகலா எங்களை வந்து மரியாதை நிமித்தமாக பார்த்திருக்கலாம்; அதை கூட அந்த பெண்மணி செய்யவில்லை; மரியாதை தெரியாத ஆளாக இருக்கிறாரே' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் இன்று வரை சொல்லி வருகின்றனர்,அமித் ஷாவும், ஜெட்லியும்.

பன்னீருக்கு மோடி ஆலோசனை:

சமீபத்தில், அ.தி.மு.க.,வின் இரண்டு கோஷ்டிகளும் பிரதமரைச் சந்தித்தன. சசி தரப்பிலிருந்து தம்பிதுரையும், பன்னீர் தரப்பிலிருந்து, மைத்ரேயனும், மோடியை டில்லியில் சந்தித்தனர். அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியது குறித்து, தம்பிதுரை பேசியதாக கூறப்படுகிறது. பன்னீர் தரப்பிலிருந்து பேசும் போது, அவர்களது கோஷ்டிக்கு மத்தியஅரசு ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப் பட்டது.'தேர்தல் ரத்து பெரியஅடியாயிற்றே' என்ற மோடி, 'பன்னீர், சென்னையிலேயே உட்கார்ந்திருந்தால் எந்த பலனும் கிடைக்காது; ஊர் ஊராக சென்று, மக்களைசந்திக்கச்சொல்லுங்கள்' என, மைத்ரேயனிடம்,'அட்வைஸ்' கொடுத்தாராம் மோடி.தமிழகத்தின் பல இடங்களில் கூட்டம் போடுவது, கிராமங்களில் மக்களைச் சந்திப்பது என அதிரடியாக, பன்னீர் பணியாற்ற வேண்டும்; இதை, நான் கூறியதாக, அவரிடம் சொல்லுங்கள்' என்றாராம். சசிகலா கோஷ்டிக்கு எதிராக மத்திய அரசு இருந்தாலும்; ஜனாதிபதி தேர்தலில், அவர்கள், பா.ஜ., நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பரா என்ற சந்தேகம், பா.ஜ., தலைவர் களுக்கு உள்ளது.இவர்களின் ஆதரவைப் பெற, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மூலம் முயற்சி செய்து வருகிறது, பா.ஜ., மேலிடம்.
இன்ஜி., கவுன்சிலிங் அறிவிப்பு தாமதம் ஏன்?

பதிவு செய்த நாள்17ஏப்  2017   23:12

மாணவர் சேர்க்கைக்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு தாமதமாகி  உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், உயர் கல்வித்துறை கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுவர். அண்ணா பல்கலை குழுவினர், கவுன்சிலிங்கை நடத்துவர். ஒவ்வொரு ஆண்டும், ஏப்., 10க்கு மேல், விண்ணப்ப பதிவு துவங்கி, மே மாதம் முடியும். கடந்த ஆண்டு, ஏப்., 15ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது. இந்த ஆண்டு, ஏப்., 18ல் துவங்க, மாணவர் சேர்க்கை கமிட்டி முடிவு செய்திருந்தது. 

ஆனால், கவுன்சிலிங் அறிவிப்பு தள்ளிப்போடப்பட்டு உள்ளது. அதன் பின்னணியில், சில தனியார் கல்லுாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல இன்ஜி., கல்லுாரிகள், 'அட்வான்ஸ்' பெற்று, இடங்களை, 'புக்கிங்' செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, உயர்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அண்ணா பல்கலை கவுன்சிலிங் விண்ணப்ப பதிவும், கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட்டால், தனியார் கல்லுாரிகளில் நிர்வாக இடங்கள் ஒதுக்கீடு நின்றுவிடும். முதல் தர கல்லுாரிகளுக்கு, எந்த சிக்கலும் இல்லை.

போதிய உள்கட்டமைப்பும், 'கேம்பஸ்' வேலைவாய்ப்பு வசதியும் இல்லாத கல்லுாரி களுக்கு, கவுன்சிலிங்கில், 'சீட்' நிரம்புவதே கடினம். எனவே, தற்போதே மாணவர்களிடம் பேசி, புக்கிங் செய்து வருகின்றனர். ஆளுங்கட்சியினர் நடத்தும் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் வசதிக்காக, கவுன்சிலிங் அறிவிப்பு தாமதம் செய்யப்படுவதாக தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...