Wednesday, April 19, 2017

3 ஆண்டுகளில் 40 பேர் பலி: புற்றுநோய் வேட்டையாடும் கிராமம்

பதிவு செய்த நாள்19ஏப்
2017
00:08




திருநெல்வேலி: துாத்துக்குடி மாவட்டம் அய்யனார்ஊத்து கிராமத்தில் 3 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு புற்றுநோய்களால் இறந்துள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நோய் குறித்து சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட ஆய்வு கிடப்பில் உள்ளது.

கயத்தாறு அருகே உள்ளது அய்யனார் ஊத்து. 3,500 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் நான்கு ஆண்டுகளாக அதிக அளவில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒருவருக்கு நோய் பாதிப்பு உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் பெண்கள். பலருக்கும் ரத்த புற்றுநோய், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கிராமத்தினர் கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி கலெக்டருக்கும், முதல்வரின் தனிப்பிரிவிற்கும் மனு அனுப்பினர்.கோவில்பட்டி சுகாதார துணை இயக்குனர் போஸ்கோராஜா தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர். தண்ணீரில் பிரச்னை இருக்கலாம் என நான்கைந்து இடங்களில் குடிநீரில் மாதிரியை சோதனைக்கு எடுத்துச்சென்றனர். சோதனை முடிவு குறித்து அறிவிக்கவோ, மேற்கொண்டு சிகிச்சையளிக்கவோ இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து கோவில்பட்டி சுகாதாரத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜாவிடம் கேட்டபோது, ''அந்த கிராமத்தில் புற்றுநோய் பாதிப்பால் பலரும் இறந்திருக்கின்றனர். இதுகுறித்த மேல்நடவடிக்கையை நெல்லை மருத்துவக்கல்லுாரி புற்றுநோய் மையத்தினரோ, சுகாதாரத்துறை உயர்அதிகாரிகளோதான் செய்ய முடியும்,'' என்றார்.

கிராமத்தில் கோரைப்புல்லில் பாய் தயாரிக்கும் கம்பெனிகள் சில உள்ளன. அங்கிருந்து வெளியேறும் சாயக்கழிவுகளால் இந்த பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. மேலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் அந்த வழியாக செல்கிறது. இருப்பினும் அய்யனார் ஊத்து கிராமத்தில் ஆழ்குழாய் நீரைத்தான் குடிநீருக்கு பயன்படுத்துகின்றனர். அந்த நீரில் குழாயில் வரும் தண்ணீரில் புழுக்கள் நெளிந்தபடி வருகிறது.

நான்கு மாதங்களுக்கு முன், மனைவி பாத்துபீவியை புற்றுநோய்க்கு பறிகொடுத்தவர் கான்சா மைதீன், 47. அவர் கூறுகையில், ''நான் வெளிநாட்டில் வேலைபார்த்துவந்தேன். என் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சென்னை புற்றுநோய் மையம் என இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்தோம். இருப்பினும் மனைவி இறந்துவிட்டார். கான்சா மைதீனின் தம்பி அண்மையில் விபத்தில் இறந்துவிட்டார்.

இதனால் இரு குடும்பங்களிலும் குழந்தைகள் உள்ள சூழலில் தற்போது நிர்க்கதியான நிலை. அய்யனார் ஊத்துக்கு அருகில் மானங்காத்தான், மேலஇலந்தைகுளம் என பல்வேறு கிராமங்கள் உள்ளன.

அங்கெல்லாம் இத்தகைய பாதிப்பு இல்லை. புற்றுநோய் பாதிப்பில் ஒரே வீட்டில் கணவன், மனைவி, தாய், மகள் எனவும் இறந்துள்ளனர். இவர்களில் அனேகம் பேர் சென்னை புற்றுநோய் மையம், திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய புற்றுநோய் மையம் போன்றவற்றிற்கு அலைந்தபடியே உள்ளனர். நோய் பாதித்த பலரும் வீட்டை விட்டே வெளியே வர மறுக்கின்றனர். சிலர் தங்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என்பதால் சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு கூட மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கின்றனர். மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையினரும் இணைந்து இக்கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தினால் மட்டுமே
இந்த ஒட்டுமொத்த கிராமத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தெரியவரும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024