அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன?
சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில், அ.தி.மு.க., - சசி அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர்.
அப்போது, சசிகலா குடும்பத்தினருக்கு, கட்சி தொண்டர்களிடமும், பொது மக்களிடமும், கடும் எதிர்ப்பு இருப்பதை கண்கூடாக பார்த்தனர். மேலும், தினகரன் வெற்றி கேள்விக் குறியானதை தொடர்ந்து, பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்தது.
அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளரான, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கினார். இதெல்லாமே, சக அமைச்சர்களை யோசிக்க வைத்தது. இனிமேலும் சசிகலா குடும்பத்தின் பின்னால் சென்றால், அரசியல் எதிர்காலம் வீணாகிவிடும் என்பதை உணரத் துவங்கினர்.அதன் பிறகே, சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் வெளியேற்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.
'நிபந்தனையை கைவிட மாட்டோம்!'
பெரியகுளத்தில், நேற்று பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: எம்.ஜி.ஆர்.,- - ஜெ., ஆகியோர், குடும்ப அரசியலை ஒருபோதும் ஏற்றதில்லை.
தன் அண்ணன் அரசியலுக்கு வருவதை கூட, எம்.ஜி.ஆர்., விரும்பவில்லை. 2011ல் சசிகலாவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 16 பேரும், கட்சியி லிருந்து நீக்கப்பட்டனர். நான்கு மாதத்திற்கு பின், சசிகலா, மன்னிப்பு கடிதம் கொடுத்து, கட்சியில் சேர்ந்தார். ஜெ., இறக்கும் வரை, நீக்கப்பட்ட சசிகுடும்பத்தினரை, கட்சியில் உறுப்பினராக்க வில்லை.
கட்சி பொதுச்செயலரை, தொண்டர்கள், நிர்வாகிகள் தான் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு மாறாக, நியமன முறையில், சசிகலா, பொதுச்செயலரானது செல்லாது. அவரால் நியமிக்கபட்ட துணைப் பொதுச்செயலர், தினகரன் நியமனமும் செல்லாது. சசிகலா குடும்பம் இல்லாமல், எம்.ஜி.ஆர்., - ஜெ., கொள்கைக்கு உடன்பட்டு பேச்சு நடத்தினால், இணைவதற்கு தயாராக உள்ளோம்.
கட்சியில் இணைந்தாலும், நாங்கள் முன்பே தெரிவித்தது போல, ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு அளித்த சிகிச்சை முறைகள், மரணத்தில் பொதிந்துள்ள உண்மைகளை, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வெளிக்கொண்டு வர வேண்டும்.
தேர்தல் கமிஷனில், குறுக்கு வழியில் சின்னத்தை பெற, புரோக்கர் மூலம் தினகரன் பணம் கொடுத்துள்ளதை, மத்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
3 மாதங்களுக்கு முன்ஒலித்த முதல் குரல்!
சசிகலா குடும்பத்திற்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எதிர்ப்பு குரல் எழுப்பிய, 90வது நாளில், அவர்கள் கட்சியில் இருந்து விலக்கப்படுவதாக, அமைச்சர்கள்
அறிவித்துள்ளனர்.
ஜெ., மறைவுக்கு பின், ஜன., 18ம் தேதி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 'சசிகலா குடும்பத்திடம் இருந்து, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும். ஜெ., மறைவில் உள்ள சந்தேகம் தீர, நீதி விசாரணை நடத்த வேண்டும்' என, முதலில் குரல் கொடுத்தார்.
அவர் எதிர்ப்பு குரல் கொடுத்து, நேற்றுடன், 90 நாட்கள் நிறைவு பெற்றது. நேற்றைய தினம், சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து விலக்குவதாக, அமைச்சர்கள் அறிவித்தனர்.
விரைவில் பொதுக்குழு!
அறிவித்தபடி, சசிகலா, தினகரனை, கட்சியில் இருந்து நீக்கவும், புதிய பொதுச்செயலரை தேர்வு செய்யவும், அ.தி.மு.க., பொதுக்குழு, விரைவில் கூட்டப்படுகிறது. முதல்வர் பழனிசாமி வீட்டில், நேற்றிரவு நடந்த ஆலோசனையில், இந்த முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.
இரு அணிகள் இணைப்புக்கு பின், இதற்கான தேதி அறிவிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment