Tuesday, April 25, 2017

துணை கருவூலத்தில் முத்திரைத்தாள் திருட்டு
பதிவு செய்த நாள்24ஏப்
2017
23:03



கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு துணை கருவூலத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள் மற்றும் நீதிமன்ற ஸ்டாம்புகள் திருடு போயின. கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் துணை கருவூலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை, 10.00 மணிக்கு பணிக்கு வந்த ஊழியர்கள், அலுவலக கதவுகள் திறந்து கிடந்ததையும், முத்திரைத்தாள் வைக்கும் அறைக்குள், இரும்பு பெட்டி, மரப்பெட்டி மற்றும் பீரோக்கள் அனைத்தும் திறந்து கிடந்தன.
பீரோவில் இருந்த முத்திரைத்தாள், நீதிமன்ற ஸ்டாம்புகள் திருடப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

பீரோவில் இருந்த, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 100 முத்திரைத்தாள்கள், 5.08 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற ஸ்டாம்ப் என மொத்தம், 25 லட்சம் ரூபாய் மதிப்புக்கு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், நேரடி விசாரணை நடத்தினர். துணை கருவூலத்தில் பணம் எதுவும் இருப்பு வைப்பதில்லை. முத்திரைத்தாள்கள் மற்றும் நீதிமன்ற ஸ்டாம்புகள் மட்டுமே இருப்பில் இருந்தன. அவற்றை குறி வைத்தே, மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த துணிகர திருட்டில், அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்; அவர்களிடமும் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
போராட்டத்திற்கு தள்ளிய தமிழக அரசு : ஊழியர்கள் குமுறல்

மதுரை: 'புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கினோம்; நடவடிக்கை எடுக்காத அரசு, போராட்டத்திற்கு தள்ளிவிட்டது' என அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் 61 சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. 'புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இருபது சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்' போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.

அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வம் கூறியதாவது: வேலைநிறுத்தம் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே அரசுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது; நேற்று வரை, ஊழியர்களிடம் அரசு பேசவில்லை. போராட்டத்தில் ஊழியர்களை தள்ளியுள்ளது. இன்றும், நாளையும் தாலுகா அளவில் ஆர்ப்பாட்டமும், ஏப்., 27, 28 ல் தலைநகரங்களில் மறியலும், ஏப்., 29, மே 1ல் போராட்ட எழுச்சி கூட்டங்களும், மே 2 முதல் மாநில நிர்வாகிகள் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதமும், மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டமும் நடக்கும். அரசு உடனடியாக நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். இவ்வாறு கூறினார்.

வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலர் முருகையன் கூறியதாவது: வருவாய்த்துறையில் உதவியாளர் முதல் தாசில்தார் வரை, 12 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர்; தாலுகா அலுவலகங்கள் செயல்படாது. இதனால் சான்றிதழ்கள் வழங்குவது உட்பட பணிகள் பாதிக்கும். இவ்வாறு கூறினார்.
இன்று லீவ், வார விடுப்பு கிடையாது : பஸ் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு
பதிவு செய்த நாள்24ஏப்
2017
23:31

சென்னை: 'விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று, 'பந்த்' நடக்கும் நிலையில், பஸ் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்' என, அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு கோரி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதற்கு, அரசு போக்குவரத்து சங்கங்களும், ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், 'போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அறிவித்தார்.

இதையடுத்து, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், அரசு நேற்று அனுப்பிய சுற்றறிக்கை: பொதுமக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபடும் வகையில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும், இன்று கண்டிப்பாக பணிக்கு ஆஜராக வேண்டும். 'பந்த்'தில், தொழிலாளர்கள் ஈடுபடக்கூடாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பு, வார விடுப்பு, பணி ஓய்வு போன்றவை உடனே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'அரசு போக்குவரத்து கழகத்தில், தினக்கூலி, சேமநல பணியாளர்கள், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் மூலம் பஸ்களை இயக்க, அரசு முயற்சிக்கிறது' என்றனர்.
பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் : 'நீட்' தேர்வு குறித்து விளக்கம்
பதிவு செய்த நாள்24ஏப்
2017
20:32

'எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வு தேர்ச்சியுடன், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், வரும் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, மே, 7ல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 11.37 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு மதிப்பெண் மட்டும் போதுமா; பிளஸ் 2 மதிப்பெண் தேவையா என, பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, கோவை, குனியமுத்துாரைச் சேர்ந்த, கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகத்தில், தகவல் கேட்டிருந்தார்.

அதற்கு, சி.பி.எஸ்.இ., அளித்துள்ள பதில்: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியின மாணவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும், 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்கலாம். பொது பிரிவு மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீதம், மற்ற மாற்றுத் திறனாளிகள், 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

இந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பட்டியலில், இடம் பெற்றிருந்தால் மட்டுமே, மருத்துவம் படிக்கும் தகுதி பெறுகின்றனர். இவ்வாறு சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -
ஜனாதிபதி தேர்தல்: 10 அம்சங்கள்

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2012ம் ஆண்டு ஜூலை, 25ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர், ஐந்து ஆண்டுகள் அப்பதவியை வகிக்க வேண்டும். அதன்படி, வரும் ஜூலை, 25ம் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இந்த தேர்தல் தொடர்பாக, 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:




1. ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், 31 சட்டசபைகளின் எம்.எல்.ஏ.,க்கள் தான் ஓட்டு போட வேண்டும். அந்த வகையில், 784 எம்.பி.,க்கள், 4,114 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர்.

2. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் விதிகள் - 1974ன் கீழ், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு, 'எலக்ட்ரோல் காலேஜ்' என, பெயர். இதன்படி ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு, 708. ஆனால், ஒரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு, அவர் சார்ந்த சட்டசபையின் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதன்படி, உ.பி., எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு, 208. மிக குறைந்த ஓட்டு மதிப்பு கொண்டது சிக்கிம் மாநில எம்.எல்.ஏ., தான். அவரது ஓட்டு மதிப்பு, 7 .
3. நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு புறமும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றொரு புறமும் உள்ளன.

இதுதவிர இந்த இரண்டு தரப்பையும் விருப்பாமல், அ.தி.மு.க., உள்ளிட்ட ஆறு மாநில கட்சிகள் மூன்றாவது தரப்பில் உள்ளன.

4. பா.ஜ., கூட்டணியில், 23 கட்சிகள் உள்ளன. இவர்களிடம், மொத்தம், 1,691 எம்.எல்.ஏ.,க்கள், 418 எம்.பி.,க்கள் உள்ளனர். ஓட்டு மதிப்புபடி பார்த்தால், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுமதிப்பு, 2,41,757 ; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு,2,95,944 என, மொத்தம், 5,37,683 ஓட்டு மதிப்பு உள்ளது. ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இது, 48.64 சதவீதமாகும்.

5. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், 23 கட்சிகள் உள்ளன. இவர்களிடம், 1,710 எம்.எல்.ஏ.,க்கள், 244 எம்.பி.,க்கள் உள்ளனர். மொத்த எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு மதிப்பு, 2,18,987; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு, 1,73, 460 என மொத்தம், 3,91,739 ஓட்டு மதிப்பு உள்ளது. ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இது, 35.47 சதவீதம்.

6. இரண்டு கூட்டணிகளிலும் சேராத தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தளம், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஆந்திராவை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி, அரியானாவை சேர்ந்த இந்திய தேசிய லோக் தளம் கட்சி ஆகியவை தனியாக உள்ளன. இவர்களிடம், 510 எம்.எல்.ஏ.,க்கள், 109 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த தரப்பின், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, 71,495; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு, 72,924 என மொத்த ஓட்டுக்களின் மதிப்பு, 1,44,302. இது ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பில், 13.06 சதவீதமாகும்.

7. இந்த கணக்குபடி பார்த்தால், காங்., கூட்டணியை விட, பா.ஜ., கூட்டணிக்கு, 13 சதவீத ஓட்டு மதிப்பு அதிகமாக உள்ளது.

சமீபத்தில் நடந்த உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல்களில் பா.ஜ., கூடுதல் எம்.எல்.ஏ.,க்களை பெற்றது அந்த கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு மதிப்பை, 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

8. காங்., கூட்டணியுடன், எந்த கூட்டணியிலும் சேராத ஆறு கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு மதிப்பை சேர்த்தால் கூட, பா.ஜ., சற்று முன்னிலையில் தான் உள்ளது. பா.ஜ., கூட்டணி ஓட்டு மதிப்பு, 48.64 சதவீதம்; காங்., கூட்டணியின் ஓட்டு மதிப்பான, 35.47 சதவீதத்துடன், ஆறு கட்சிகளின் ஓட்டு மதிப்பான, 13.06 சதவீதத்தை சேர்த்தால் கூட, 48.53 சதவீதம் தான் வரும். இது பா.ஜ.,வை விட சிறிதளவு குறைவு தான்.

9. ஜனாதிபதி தேர்தலில் மெஜாரிட்டி ஓட்டுக்களை பெற, ஆறு கட்சிகளில் ஒன்று அல்லது இரண்டு கட்சிகளை இழுத்தால் கூட, பா.ஜ., சாதித்து விடும். ஆனால், இந்த ஆறு கட்சிகளை தங்கள் வசம் இழுத்தால் கூட காங்., கூட்டணியால் சாதிக்க முடியுமா என்பது சந்தேகமே.

10 பா.ஜ., கூட்டணி, காங்., கூட்டணி, ஆறு கட்சிகள் தரப்பு என மூன்று தரப்பையும் சேராத சிறு கட்சிகளும் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு போட உள்ளன. இந்த கட்சிகளிடம், ஓட்டு மதிப்பில், 3 சதவீதம் உள்ளது. வழக்கமாக இதுபோன்ற சிறிய கட்சிகள், ஆளும் கட்சிக்கே சாதகமாக ஓட்டு அளிக்கும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
'பந்த்'துவக்கம்; தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

பதிவு செய்த நாள்25ஏப்
2017
06:11




சென்னை: தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இன்று நடத்தும், 'பந்த்' காரணமாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பந்த்:

தமிழகத்தில் இன்று(ஏப்.,25) முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், போலீசார், அதிகாலையிலேயே பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க, மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு:

சென்னையில், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை:

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கணிசமான முறையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது,. கடைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகி்ன்றன.

NEWS TODAY 02.01.2026