Wednesday, May 3, 2017

உடனடி விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாய் அளித்த உற்சாக வரவேற்பு! 

அஷ்வினி சிவலிங்கம்

துபாயில் உடனடியாக விசா பெற்ற முதல் இந்தியருக்கு, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.


ஐக்கிய அரபு அமிரேட்ஸ் (UAE) அமைச்சகம் இந்தியாவுடனான உறவை பலப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதுமட்டுமன்றி இந்தியாவுடன் அரசியல், வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தியது துபாய் அரசு. அதன்படி அமெரிக்க விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியருக்கு துபாய் சென்றடைந்ததும் விசா வழங்கும் முறையை (Visa on arrival ) செயல்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர், ஆறு மாதகாலம் செல்லுபடி ஆகும் அமெரிக்க விசா அல்லது க்ரீன் கார்டு வைத்திருந்தால், அவருக்கு துபாய் விசா உடனடியாக வழங்கப்படும். இந்த உடனடி துபாய் விசா 14 நாள்களுக்குச் செல்லுபடி ஆகும். 14 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை நீட்டித்துக்கொள்ளலாம். ஆக 28 நாள்கள் துபாயில் தங்கிக்கொள்ளலாம். இந்த விசா கொள்கை துபாயில் மே 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. புதிய விசா கொள்கையின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாய் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரின் புகைப்படத்தை துபாய் வெளியுறவு அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
போயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’! - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள் #VikatanExclusive

ஆ.விஜயானந்த்




முன்குறிப்பு: இந்த செய்திக் கட்டுரை பல பரிசீலனைக்குப் பிறகே பதிவேற்றப்பட்டிருக்கிறது. செய்தியைப் படித்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் சந்தேகங்கள் எங்களுக்கும் தோன்றுகின்றன. இருப்பினும், நடந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திய பின்னரே, இந்தச் செய்தியைப் பதிகிறோம். இக்கட்டுரை தொடர்பான தங்கள் கருத்துகளை, கமெண்ட் பாக்ஸில் பதியலாம்!

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியும் அடுத்தடுத்து நடக்கும் உயிர்ப்பலிகளும் ஆளும்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கின்றன. ‘ஜெயலலிதா தொடர்பான விஷயங்களில் தலையிடுகின்றவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போயஸ் கார்டனில் நள்ளிரவு கேட்கும் அலறல்களால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்' என்கின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 150 நாள்கள் ஆகிவிட்டன. அவரது மரணம் தொடர்பான மர்மம் இன்னும் விலகவில்லை. அதற்குள் அண்ணா தி.மு.க மூன்று துண்டுகளாகச் சிதறிவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கிறார் சசிகலா. லஞ்சப் புகாரில் திகார் சிறையில் அடைபட்டிருக்கிறார் தினகரன். கூடவே, கொடநாடு எஸ்டேட் கொலை மர்மம் என தினம்தினம் திகில் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. 'தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது?' என்றே தெரியாமல் நாள்களைக் கடத்தி வருகின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். "ஜெயலலிதா சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையை நீட்டியவர்கள் யாரும் நல்லபடியாக வாழவில்லை. கார்டனைப் பொறுத்தவரையில், 'ஆண்களுக்கு ராசியில்லாத வீடு' என்று சொல்வார்கள். ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் யார் வந்து தங்கினாலும், அந்த இரவு அவர்கள் நிம்மதியாக இருந்ததில்லை. கடந்த சில நாள்களாக ஏதேதோ சத்தம் கேட்கிறது. அதுவும் அலறல் தொனியில் இருக்கிறது!" எனக் குழப்பத்தோடு விளக்க ஆரம்பித்தார் கார்டன் ஊழியர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், "ஜெயலலிதாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். 17 ஆதரவற்ற குழந்தைகள் கார்டனில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா சாப்பிட அமரும்போதெல்லாம், இதில் ஏதாவது ஒரு குழந்தை அருகில் இருக்க வேண்டும். சில நேரங்களில் அந்தக் குழந்தைக்கு அவர் ஊட்டிவிடுவார். உற்சாகமாக இருக்கும்போது, குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பார். இவர்களை கவனிக்க ராஜம்மாள் என்ற 75 வயது பணிப்பெண் இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர், சந்தியாவின் காலத்திலிருந்து வேலையில் இருக்கிறார்.



ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவும் சிறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு, துணைப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் டி.டி.வி.தினகரன். பதவிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ச்சியாக நான்கு நாள்கள் போயஸ் கார்டனில் தங்கியிருந்தார். அந்த நாள்களும் ஏதேதோ சத்தம் கேட்டிருக்கிறது. இந்த சத்தத்தால் பயந்துபோன அந்த 17 குழந்தைகளும், ஒரே அறைக்குள் வந்து சுருண்டு படுத்துவிட்டனர். தினகரனை நிம்மதியாகத் தூங்கவிடாமல் அலறல் சத்தம் அதிகமாகியுள்ளது. மறுநாள் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர் வெளியேறிவிட்டார். ஒருநாள் திவாகரன் சம்பந்தப்பட்டவர் வந்து இரண்டு நாள்கள் தங்கியிருக்கிறார். ஜெயலலிதா அறையில் அமர்ந்து அவர் பஞ்சாயத்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அன்று இரவு வழக்கத்துக்கு மாறாக அலறல் போல சத்தம் கேட்டுள்ளது. தற்போது கார்டனில் ஆண்கள் யாரும் இல்லை. குழந்தைகள் மிகவும் பயந்துபோய் உள்ளனர்.

ஐந்து நாள்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள இளவரசி மகன் விவேக் வீட்டுக்கு, கார்டனில் இருக்கும் நான்கு குழந்தைகளின் பாதுகாவலர்கள் வந்துள்ளனர். 'குழந்தைகள் ரொம்பவும் பயந்துபோய் உள்ளனர். சிறையில் இருக்கும் சின்னம்மாவுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். துணைக்கு யாரும் இல்லாததால், நாங்கள் கூட்டிச் செல்கிறோம்' எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனைக் கேட்டு கவலையடைந்த விவேக், அன்று இரவு கார்டனில் வந்து தங்கினார். அன்று எந்த சத்தமும் கேட்கவில்லை. மறுநாள் அவரிடம் பேசிய குடும்ப உறுப்பினர்கள், 'நீ கார்டனில் தங்கிவிடு' எனச் சொல்ல, அவரின் மனைவியோ, 'தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அங்கு தங்கியவர்களுக்கு சிக்கல் மேல் சிக்கல் வருகிறது. உங்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடப் போகிறது' எனச் சொல்ல, 'நான் நான்கு மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருக்கிறேன். ஒன்றும் பிரச்னை இல்லை. ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கார்டன் போகிறேன்' என சமாதானப்படுத்தியிருக்கிறார். விரைவில் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறவும் திட்டமிட்டிருக்கிறார் விவேக்" என்றார் விரிவாக.

"போயஸ் கார்டனில்தான் அலறல் சத்தம் கேட்கிறது என்றால், ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புக்கு நிற்கும் காவலர்களும் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். அந்த சமாதியின் அருகில் போலீஸ்காரர்களால் நிற்க முடியவில்லை. அந்தளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதுவரையில் 20 பேரை ஷிப்ட் முறையில் மாற்றிவிட்டார்கள். ஆவடி பட்டாலியனில் இருந்தும் பாதுகாப்புக்குப் போலீஸார் வருகின்றனர். தினமும் யாராவது ஒருவர் காய்ச்சலால் அவதிப்படுகிறார். இத்தனைக்கும் பீச்சுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். 'இந்தளவுக்கு ஏன் அனல் காற்று வீசுகிறது?' என சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் தனி மீட்டிங்கே போட்டுவிட்டார்கள். யாராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருளில் இருந்து அவர் தொடர்பான விஷயத்தில் தலையிடுகின்றவர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்!’’ என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

  இவற்றை முற்றாக ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே, இவற்றை நம்புவதா, வேண்டாமா என்ற குழப்பத்துடனே இப்படியான செய்திகளை கவனிக்க வேண்டியிருக்கிறது!
சதா சர்வகாலமும் கைப்பேசியும் கையுமாக இருப்பவர்கள் கவனத்துக்கு..! #HealthAlert
அகில் குமார்


ஒரு காலத்தில் மனிதனுக்கு தனிமையைக் கழிக்கவும் பொழுது போக்கவும் புத்தகங்கள் உதவின. பிறகு அந்த இடத்தை தொலைக்காட்சி பிடித்தது. இன்று அந்த இடத்தை செல்போன் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடிவதும், இரவு முடிவதும் செல்போன் திரையில்தான். எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை அறிந்தால் ஆடிப்போய்விடுவீர்கள். தெரிந்துகொள்வோமா?



புற்றுநோய் அபாயம்!

மொபைல்போன்கள் மின்காந்த கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. இந்தக் கதிர்வீச்சுகள் நம் உடல் திசுக்களால் ஈர்க்கப்படுகின்றன. புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் IARC ( International Agency for Research on Cancer) நிறுவனம், இந்தக் கதிர்வீச்சுகளால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகக் கண்டறிந்துள்ளது. குழந்தைகளின் நரம்பு மண்டலம் வளர்ச்சிநிலையில் இருப்பதால், பெரியவர்களைவிடக் குழந்தைகளைத்தான் இது அதிகம் பாதிக்கும். அதோடு, குழந்தைகளுக்கு மூளைப் புற்றுநோய் தாக்குவதற்கும் வாய்ப்பு உண்டு.

ஆனாலும் செல்போனால் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள், `கதிர்வீச்சுகளால் புற்றுநோய் ஏற்பட, இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு அலைபேசியைத் தொடர்ந்து பயன்படுத்தியிருக்க வேண்டும்’ என்கிறார்கள். செல்போனுக்கும் பயனருக்கும் உள்ள தூரம், பயனருக்கும் செல்போன் டவருக்கும் உள்ள தூரம், செல்போனின் வகை போன்றவற்றைப் பொறுத்து இதன் பாதிப்புகள் மாறுபடுகின்றன. இயர் போனைப் பயன்படுத்துவதன் மூலம் நமது தலைக்கும் செல்போனுக்கும் இடையேயான தூரத்தைக் குறைக்கலாம். இதனால் பாதிப்புகள் குறையும். குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டைக் கண்காணிப்பதும், முடிந்த அளவுக்கு அதைக் குறைப்பதும் அவசியம்.

கிருமிகளின் வீடு!

நாம் தொடர்ச்சியாக செல்போன் திரையைத் தொடுவதால், நமது கையிலுள்ள கிருமிகள் அதில் சேரும். ஒருகட்டத்தில், ஒரு கழிவறையில் இருப்பதைவிட அதிகக் கிருமிகள் அதில் சேர்ந்திருக்கும். இன்னொருவர் செல்போனைத் தொடும்போது மிக எளிதாக அவர்களையும் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து, நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

கண் பிரச்னைகள் உருவாகும்!

செல்போன் திரைகள் கணினித் திரைகளைவிட அளவில் சிறியவை. இவற்றில் உள்ள குறுந்தகவலைப் படிப்பதற்காக கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவேண்டியிருக்கும். இப்படி கண்களை சிரமத்துக்கு உள்ளாக்குவது, காலப்போக்கில் பார்வைக்குறைபாடுகளை ஏற்படுத்தும்.



விபத்துகள்... கவனம்!

ஒரு கையில் வண்டியை பேலன்ஸ் செய்துகொண்டு, மறுகையில் செல்போனைப் பிடித்துப் பேசியபடி போகிறவர்களை நாம் தினமும் பார்க்கிறோம். இதுபோன்ற செய்கையால் விபத்துகள் நிகழ அதிகம் வாய்ப்பு உண்டு. இயர் போன் போட்டுப் பேசினாலும் சில நேரங்களில் பேச்சு சுவாரஸ்யத்தில் கவனம் சிதறிவிடக்கூடும். வண்டி ஓட்டுவதே மறந்துபோய் விபத்துகள் நிகழ்ந்துவிடும் அபாயம் உண்டு. எனவே வாகனங்களை ஓட்டும்போது அலைபேசியில் பேசவே கூடாது. அதேபோல் சாலையைக் கடக்கும்போது, சாலையில் நடந்துபோகும்போது கூட சிலர் அலைபேசியில் பேசிக்கொண்டோ, குறுந்தகவல் அனுப்பிக்கொண்டோ இருப்பார்கள். இதனாலும் விபத்துகள் நிகழும்.

உடல்வலி ஏற்படும்

கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் செல்போனை வைத்துப் பேசும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இப்படி தொடரும் பழக்கம் முதுகுவலியை நோக்கிக் கொண்டு சென்றுவிடும். தொடர்ச்சியாக வாட்ஸ்அப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ வேகமாக குறுந்தகவல் அனுப்பிக்கொண்டே இருந்தால், அது கை மூட்டு இணைப்புகளில் வலியாக மாறும்.

மனஅழுத்தம் அதிகமாகும்

தொடர்ச்சியான அழைப்புகள், வைப்ரேஷன்கள், நினைவூட்டல்கள் போன்றவை நாம் எப்போதும் மொபைல்போனுடன் வாழ்வது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றன. அது நம் உடல் உறுப்புகளில் ஒன்றாகவே மாறிவிட்டதாக உணர்கிறோம். அதைப் பிரிந்திருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மனஅழுத்தம் உண்டாகிறது. தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது.



காது கேளாமை

காதுக்கு மிக அருகில் வைத்து தொடர்ச்சியாகப் பேசுவதால், மின்காந்த அலைகள் செவிப்பறையைத் தாக்குகின்றன. இதனால் நாளடைவில் காது கேளாமை பிரச்னை ஏற்படும்.

தோலில் அலர்ஜி ஏற்படும்

செல்போனை கண்ணைக் கவரும்விதத்தில் வடிவமைக்க நிக்கல், குரோமியம், கோபால்ட் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை அலர்ஜியை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அடிமையாக மாற்றும்

கழிவறை, குளியலறை போன்றவற்றுக்கு போனை எடுத்துச் செல்லுதல், வீட்டில் வைத்துவிட்டு அலுவலகம் வந்தால் வெறுமையாக உணர்தல், புதிதாக நோட்டிஃபிகேஷன்கள் வராமல் இருந்தால் மனவருத்தம் அடைதல் போன்றவை நாம் செல்போனுக்கு அடிமையாகி வருகிறோம் என்பதற்கான அறிகுறிகள்.



என்ன செய்ய வேண்டும்?

* தலை மற்றும் உடல் பகுதிகளில் இருந்து மொபைல்போனைத் தள்ளிவைத்துப் பேச வேண்டும். இயர் போன், புளூடூத் போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம்.

* படுத்துக்கொண்டே பேசும்போது போனை உடல் மீது வைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

* மொபைல்போனுக்கு பதிலாக லேண்ட்லைன் தொலைபேசிகளைப் பயன்படுத்தலாம்.

* பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் பேசுவதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக குறுந்தகவல்களில் உரையாடல்களை முடித்துக்கொள்ளலாம்.

  * அலைபேசிக்கு அடிமையானதற்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அகரம் ஃபவுண்டேஷனுக்கு வீடு.. என்ன சொல்கிறார் சிவகுமார்?
ம.கா.செந்தில்குமார்




அகரம் ஃபவுண்டேஷன், 2006-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவால் தொடங்கப்பட்ட அமைப்பு. சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரின் பிள்ளைகளும் உயர்கல்வி படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம். அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்த அமைப்பு 1,500-க்கும் மேற்பட்டோரை மருத்துவர்களாகவும் வழக்குரைஞர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற்றி, அவர்களின் வேலைவாய்ப்புக்கும் வழிசெய்துள்ளது.

கல்வி உதவி வேண்டி அகரத்துக்கு வரும் விண்ணப்பங்கள், தன்னார்வலர்கள் மூலம் பரிசீலிக்கப்படுகின்றன. இந்தத் தன்னார்வலர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள். இவர்கள், ஆர்வத்தின் பேரில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவருகிறார்கள். இதற்காக இவர்கள் அகரத்திடம் எந்தச் சம்பளமும் பெறுவதில்லை. பயனாளிகளைத் தேடி அவர்களின் இடங்களுக்கே சென்று அவர்களின் குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை, கல்வி மீதான அவர்களின் ஈடுபாடு... என, இவர்கள் சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் தன்னார்வலர்கள் ஒன்றுகூடி விவாதிக்க, அகரத்துக்கு சென்னை வளசரவாக்கத்தில் ஓர் அலுவலகம் இருந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசலில் வளசரவாக்கம் வரை போய் வருவது தன்னார்வலர்களுக்குச் சிரமமாக இருந்தது. அகரம் ஃபவுண்டேஷனுக்கான அலுவலகம் சென்னையின் மையப் பகுதியில் இருந்தால், போய் வர வசதியாக இருக்கும் என்று நினைத்து, அதற்காக இடம் பார்த்துவந்தனர். அந்த அலுவலகத்துக்கு மாத வாடகையே குறைந்தது 50,000 ரூபாய் வரை ஆகும் என தெரியவந்தது.



முன்னதாக, சிவகுமார் தன் மகன் கார்த்தியுடன் சென்னை கிருஷ்ணா தெருவில் உள்ள வீட்டிலும், சூர்யா பெசன்ட் நகர் வீட்டில் தன் குடும்பத்துடனும் வசித்து வந்தனர். கிருஷ்ணா தெரு வீடு, கூட்டுக்குடும்பமாக வசிக்கப் போதுமானதாக இல்லை என்பதே காரணம். ஆனால் ‘அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டும்’ என்பது சிவகுமாரின் மூத்த மருமகள் ஜோதிகாவின் விருப்பம். அதற்காக கிருஷ்ணா தெருவுக்கு நேர் பின்னால் உள்ள ஆற்காடு தெருவில் இடம் வாங்கி கூட்டுக்குடும்பமாக வசிப்பதற்கு ஏற்ற மாதிரியான ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு, சிவகுமார் குடும்பத்தினர் அனைவரும் சமீபத்தில் அதில் குடியேறினர். கிருஷ்ணா தெருவில் உள்ள பழைய வீட்டை, சிவகுமாரின் ஓவியங்களை வைத்து ஆர்ட் கேலரியாக மாற்ற வேண்டும் என்பது சூர்யா, கார்த்தி இருவரின் விருப்பம். இந்த நிலையில் அந்த வீடு அகரம் ஃபவுண்டேஷனுக்குக் கொடுத்துவிட்டதாகச் செய்திகள் வந்தன. இதுகுறித்து சிவகுமாரைத் தொடர்புகொண்டேன்.

``சூர்யாவும் கார்த்தியும் ஆர்ட் கேலரியாக வீட்டை மாற்ற ஐடியா வைத்திருப்பது உண்மைதான். ஆனால் ஆர்ட் கேலரியைவிட, இப்போது அகரத்துக்கு அலுவலகம்தான் அத்தியாவசியம். எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் இந்த அமைப்புக்கு, 50,000 ரூபாய் வாடகையில் அலுவலகம் பார்ப்பது என்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம். அந்த 50,000 ரூபாய் இருந்தால், மேலும் சில பிள்ளைகளைப் படிக்கவைக்கலாமே. அதனால் `அகரம் ஃபவுண்டேஷனுக்குச் சொந்தமாக அலுவலகம் கட்டும் வரை, கிருஷ்ணா தெருவில் உள்ள நம் பழைய வீட்டையே அலுவலகமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அகரத்துக்குச் சொந்த அலுவலகம் கட்டிய பிறகு, ஆர்ட் கேலரி பற்றி யோசிக்கலாம்' என்று சொல்லி, அகரம் ஃபவுண்டேஷன் பயன்பாட்டுக்குக் கொடுத்துவிட்டேன்” என்றார் சிவகுமார்.
இந்தச் செய்தி பற்றி கேள்விப்பட்டவர்கள், சிவகுமாரை வெகுவாகப் பாராட்டிவருகிறார்கள்.
மதிப்புமிக்க ‘ஏ+’ கிரேடு வாங்கி அசத்திய அழகப்பா பல்கலைக்கழகம்! 

ர.பரத் ராஜ்



சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு என்.ஏ.சி.சி (NACC) 'ஏ+' அங்கீகாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஏ.சி.சி.யின் தேசிய தர நிர்ணய குழுக் கூட்டத்தில் ஏ+ அந்தஸ்து தர முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஏ+ கிரேடு அந்தஸ்து, அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ஏழு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நிர்ணயக் குழு அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு 4-க்கு 3.64 புள்ளிகள் அளித்துள்ளது.

என்.ஏ.சி.சி கமிட்டி, உத்தரகாண்ட் திறந்த நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ் தலைமையில் அமைக்கப்பட்டது. இவர்கள் பங்கேற்ற தேசிய தர நிர்ணயக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஏ+ கிரேடு பெற்றதாக அறிவித்திருக்கிறது.

'இந்த விருது கிடைத்திருப்பது பல்கலைக்கழகத்துக்கு மட்டும் பெருமையல்ல. மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் என அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறது' என்றார் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்பையா.
தயிர் விலை தட்டச்சுத் தவறு என்கிறது ரயில்வே நிர்வாகம்!

கே.பாலசுப்பிரமணி




100 கிராம் தயிர் 972 ரூபாய்; ரயில்வே கேன்டீன் கொள்முதல் ஆச்சர்யம் என்ற தலைப்பில் கடந்த 2-ம் தேதி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். பல்வேறு ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, அஜய் போஸ் என்பவருக்கு அனுப்பப்பட்ட ஆர்.டி.ஐ ஆவணத்தில் தட்டச்சு செய்யும்போது தவறான புள்ளி விவரங்கள் இடம்பெற்றதாம். இப்போது மத்திய ரயில்வே தரப்பில் கேன்டீனுக்கு வாங்கப்பட்ட பொருட்களின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளனர். இது முறைகேடு இல்லை. சரியான விலையில்தான் கொள்முதல் செய்யப்பட்டது என்றும் ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.
ஆர்.டி.ஐ தகவலும், ரயில்வே அளித்த விளக்கமும்...

1.சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு 1241 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
விளக்கம்: 15 லிட்டர் சமையல் எண்ணெய் கொண்ட 58 டின்கள் கொள்முதல் செய்யப்பட்டது. லிட்டர் 82.79 ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்று சொல்லியிருக்கின்றனர்.

2. பாசிப்பருப்பு அதிக விலைக்கு வாங்கியதாக ஆர்.டி.ஐ தகவல்
விளக்கம்: கொள்முதல் செய்யப்பட்டபோது நிலவிய சந்தை விலையில் கிலோ ஒன்றுக்கு 117 ரூபாய்க்கு பாசிப்பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது.

3. அமுல் தயிர் 100 கிராம் பாக்கெட் 972.87 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டது.

விளக்கம்: இது தட்டச்சுத் தவறு. தலா 100 கிராம் எடையுள்ள 108 தயிர் கப் கொண்ட ஒரு பெட்டி 972.87-க்கு வாங்கப்பட்டதாம்.

விஜயபாஸ்கர் மனைவிக்கு வருமானவரித்துறை சம்மன் - தொடரும் நெருக்கடி

அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  இன்று மதியம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
விஜயபாஸ்கர்

ஏப்ரல் 7-ம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கரின் வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆவணங்கள் குறித்து விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் விளக்கம் அளித்தார். அவர் மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை. இந்த நிலையில், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு, வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், இன்று மதியம் 2.30 மணிக்கு வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

NEWS TODAY 04.06.2026