Wednesday, May 3, 2017

அகரம் ஃபவுண்டேஷனுக்கு வீடு.. என்ன சொல்கிறார் சிவகுமார்?
ம.கா.செந்தில்குமார்




அகரம் ஃபவுண்டேஷன், 2006-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவால் தொடங்கப்பட்ட அமைப்பு. சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரின் பிள்ளைகளும் உயர்கல்வி படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம். அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்த அமைப்பு 1,500-க்கும் மேற்பட்டோரை மருத்துவர்களாகவும் வழக்குரைஞர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற்றி, அவர்களின் வேலைவாய்ப்புக்கும் வழிசெய்துள்ளது.

கல்வி உதவி வேண்டி அகரத்துக்கு வரும் விண்ணப்பங்கள், தன்னார்வலர்கள் மூலம் பரிசீலிக்கப்படுகின்றன. இந்தத் தன்னார்வலர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள். இவர்கள், ஆர்வத்தின் பேரில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவருகிறார்கள். இதற்காக இவர்கள் அகரத்திடம் எந்தச் சம்பளமும் பெறுவதில்லை. பயனாளிகளைத் தேடி அவர்களின் இடங்களுக்கே சென்று அவர்களின் குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை, கல்வி மீதான அவர்களின் ஈடுபாடு... என, இவர்கள் சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் தன்னார்வலர்கள் ஒன்றுகூடி விவாதிக்க, அகரத்துக்கு சென்னை வளசரவாக்கத்தில் ஓர் அலுவலகம் இருந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசலில் வளசரவாக்கம் வரை போய் வருவது தன்னார்வலர்களுக்குச் சிரமமாக இருந்தது. அகரம் ஃபவுண்டேஷனுக்கான அலுவலகம் சென்னையின் மையப் பகுதியில் இருந்தால், போய் வர வசதியாக இருக்கும் என்று நினைத்து, அதற்காக இடம் பார்த்துவந்தனர். அந்த அலுவலகத்துக்கு மாத வாடகையே குறைந்தது 50,000 ரூபாய் வரை ஆகும் என தெரியவந்தது.



முன்னதாக, சிவகுமார் தன் மகன் கார்த்தியுடன் சென்னை கிருஷ்ணா தெருவில் உள்ள வீட்டிலும், சூர்யா பெசன்ட் நகர் வீட்டில் தன் குடும்பத்துடனும் வசித்து வந்தனர். கிருஷ்ணா தெரு வீடு, கூட்டுக்குடும்பமாக வசிக்கப் போதுமானதாக இல்லை என்பதே காரணம். ஆனால் ‘அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டும்’ என்பது சிவகுமாரின் மூத்த மருமகள் ஜோதிகாவின் விருப்பம். அதற்காக கிருஷ்ணா தெருவுக்கு நேர் பின்னால் உள்ள ஆற்காடு தெருவில் இடம் வாங்கி கூட்டுக்குடும்பமாக வசிப்பதற்கு ஏற்ற மாதிரியான ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு, சிவகுமார் குடும்பத்தினர் அனைவரும் சமீபத்தில் அதில் குடியேறினர். கிருஷ்ணா தெருவில் உள்ள பழைய வீட்டை, சிவகுமாரின் ஓவியங்களை வைத்து ஆர்ட் கேலரியாக மாற்ற வேண்டும் என்பது சூர்யா, கார்த்தி இருவரின் விருப்பம். இந்த நிலையில் அந்த வீடு அகரம் ஃபவுண்டேஷனுக்குக் கொடுத்துவிட்டதாகச் செய்திகள் வந்தன. இதுகுறித்து சிவகுமாரைத் தொடர்புகொண்டேன்.

``சூர்யாவும் கார்த்தியும் ஆர்ட் கேலரியாக வீட்டை மாற்ற ஐடியா வைத்திருப்பது உண்மைதான். ஆனால் ஆர்ட் கேலரியைவிட, இப்போது அகரத்துக்கு அலுவலகம்தான் அத்தியாவசியம். எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் இந்த அமைப்புக்கு, 50,000 ரூபாய் வாடகையில் அலுவலகம் பார்ப்பது என்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம். அந்த 50,000 ரூபாய் இருந்தால், மேலும் சில பிள்ளைகளைப் படிக்கவைக்கலாமே. அதனால் `அகரம் ஃபவுண்டேஷனுக்குச் சொந்தமாக அலுவலகம் கட்டும் வரை, கிருஷ்ணா தெருவில் உள்ள நம் பழைய வீட்டையே அலுவலகமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அகரத்துக்குச் சொந்த அலுவலகம் கட்டிய பிறகு, ஆர்ட் கேலரி பற்றி யோசிக்கலாம்' என்று சொல்லி, அகரம் ஃபவுண்டேஷன் பயன்பாட்டுக்குக் கொடுத்துவிட்டேன்” என்றார் சிவகுமார்.
இந்தச் செய்தி பற்றி கேள்விப்பட்டவர்கள், சிவகுமாரை வெகுவாகப் பாராட்டிவருகிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024