Wednesday, May 3, 2017

போயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’! - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள் #VikatanExclusive

ஆ.விஜயானந்த்




முன்குறிப்பு: இந்த செய்திக் கட்டுரை பல பரிசீலனைக்குப் பிறகே பதிவேற்றப்பட்டிருக்கிறது. செய்தியைப் படித்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் சந்தேகங்கள் எங்களுக்கும் தோன்றுகின்றன. இருப்பினும், நடந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திய பின்னரே, இந்தச் செய்தியைப் பதிகிறோம். இக்கட்டுரை தொடர்பான தங்கள் கருத்துகளை, கமெண்ட் பாக்ஸில் பதியலாம்!

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியும் அடுத்தடுத்து நடக்கும் உயிர்ப்பலிகளும் ஆளும்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கின்றன. ‘ஜெயலலிதா தொடர்பான விஷயங்களில் தலையிடுகின்றவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போயஸ் கார்டனில் நள்ளிரவு கேட்கும் அலறல்களால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்' என்கின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 150 நாள்கள் ஆகிவிட்டன. அவரது மரணம் தொடர்பான மர்மம் இன்னும் விலகவில்லை. அதற்குள் அண்ணா தி.மு.க மூன்று துண்டுகளாகச் சிதறிவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கிறார் சசிகலா. லஞ்சப் புகாரில் திகார் சிறையில் அடைபட்டிருக்கிறார் தினகரன். கூடவே, கொடநாடு எஸ்டேட் கொலை மர்மம் என தினம்தினம் திகில் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. 'தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது?' என்றே தெரியாமல் நாள்களைக் கடத்தி வருகின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். "ஜெயலலிதா சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையை நீட்டியவர்கள் யாரும் நல்லபடியாக வாழவில்லை. கார்டனைப் பொறுத்தவரையில், 'ஆண்களுக்கு ராசியில்லாத வீடு' என்று சொல்வார்கள். ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் யார் வந்து தங்கினாலும், அந்த இரவு அவர்கள் நிம்மதியாக இருந்ததில்லை. கடந்த சில நாள்களாக ஏதேதோ சத்தம் கேட்கிறது. அதுவும் அலறல் தொனியில் இருக்கிறது!" எனக் குழப்பத்தோடு விளக்க ஆரம்பித்தார் கார்டன் ஊழியர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், "ஜெயலலிதாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். 17 ஆதரவற்ற குழந்தைகள் கார்டனில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா சாப்பிட அமரும்போதெல்லாம், இதில் ஏதாவது ஒரு குழந்தை அருகில் இருக்க வேண்டும். சில நேரங்களில் அந்தக் குழந்தைக்கு அவர் ஊட்டிவிடுவார். உற்சாகமாக இருக்கும்போது, குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பார். இவர்களை கவனிக்க ராஜம்மாள் என்ற 75 வயது பணிப்பெண் இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர், சந்தியாவின் காலத்திலிருந்து வேலையில் இருக்கிறார்.



ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவும் சிறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு, துணைப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் டி.டி.வி.தினகரன். பதவிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ச்சியாக நான்கு நாள்கள் போயஸ் கார்டனில் தங்கியிருந்தார். அந்த நாள்களும் ஏதேதோ சத்தம் கேட்டிருக்கிறது. இந்த சத்தத்தால் பயந்துபோன அந்த 17 குழந்தைகளும், ஒரே அறைக்குள் வந்து சுருண்டு படுத்துவிட்டனர். தினகரனை நிம்மதியாகத் தூங்கவிடாமல் அலறல் சத்தம் அதிகமாகியுள்ளது. மறுநாள் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர் வெளியேறிவிட்டார். ஒருநாள் திவாகரன் சம்பந்தப்பட்டவர் வந்து இரண்டு நாள்கள் தங்கியிருக்கிறார். ஜெயலலிதா அறையில் அமர்ந்து அவர் பஞ்சாயத்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அன்று இரவு வழக்கத்துக்கு மாறாக அலறல் போல சத்தம் கேட்டுள்ளது. தற்போது கார்டனில் ஆண்கள் யாரும் இல்லை. குழந்தைகள் மிகவும் பயந்துபோய் உள்ளனர்.

ஐந்து நாள்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள இளவரசி மகன் விவேக் வீட்டுக்கு, கார்டனில் இருக்கும் நான்கு குழந்தைகளின் பாதுகாவலர்கள் வந்துள்ளனர். 'குழந்தைகள் ரொம்பவும் பயந்துபோய் உள்ளனர். சிறையில் இருக்கும் சின்னம்மாவுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். துணைக்கு யாரும் இல்லாததால், நாங்கள் கூட்டிச் செல்கிறோம்' எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனைக் கேட்டு கவலையடைந்த விவேக், அன்று இரவு கார்டனில் வந்து தங்கினார். அன்று எந்த சத்தமும் கேட்கவில்லை. மறுநாள் அவரிடம் பேசிய குடும்ப உறுப்பினர்கள், 'நீ கார்டனில் தங்கிவிடு' எனச் சொல்ல, அவரின் மனைவியோ, 'தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அங்கு தங்கியவர்களுக்கு சிக்கல் மேல் சிக்கல் வருகிறது. உங்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடப் போகிறது' எனச் சொல்ல, 'நான் நான்கு மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருக்கிறேன். ஒன்றும் பிரச்னை இல்லை. ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கார்டன் போகிறேன்' என சமாதானப்படுத்தியிருக்கிறார். விரைவில் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறவும் திட்டமிட்டிருக்கிறார் விவேக்" என்றார் விரிவாக.

"போயஸ் கார்டனில்தான் அலறல் சத்தம் கேட்கிறது என்றால், ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புக்கு நிற்கும் காவலர்களும் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். அந்த சமாதியின் அருகில் போலீஸ்காரர்களால் நிற்க முடியவில்லை. அந்தளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதுவரையில் 20 பேரை ஷிப்ட் முறையில் மாற்றிவிட்டார்கள். ஆவடி பட்டாலியனில் இருந்தும் பாதுகாப்புக்குப் போலீஸார் வருகின்றனர். தினமும் யாராவது ஒருவர் காய்ச்சலால் அவதிப்படுகிறார். இத்தனைக்கும் பீச்சுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். 'இந்தளவுக்கு ஏன் அனல் காற்று வீசுகிறது?' என சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் தனி மீட்டிங்கே போட்டுவிட்டார்கள். யாராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருளில் இருந்து அவர் தொடர்பான விஷயத்தில் தலையிடுகின்றவர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்!’’ என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

  இவற்றை முற்றாக ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே, இவற்றை நம்புவதா, வேண்டாமா என்ற குழப்பத்துடனே இப்படியான செய்திகளை கவனிக்க வேண்டியிருக்கிறது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024