Tuesday, November 7, 2017


வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

'ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன. சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது. 
இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில், வரம்பு மீறி, வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்புவோர், ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதன்படி, புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
வரும் காலங்களில், ஒழுக்க கேடான புகார்கள் வந்தால், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், போலீசார் வழியாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

விமானத்தில் கொசு தொல்லை
லக்னோ: உ.பி., மாநிலம், லக்னோவில் இருந்து டில்லிக்கு சென்ற, 'ஜெட் ஏர்வேஸ்' விமானத்தில், கொசுக்கடியால் அவதிப்பட்டதாக, பயணியர் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில், உ.பி., மாநிலம், லக்னோவில் இருந்து, டில்லி செல்லும், 'ஜெட் ஏர்வேஸ்' விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திற்கு பின், அதிலிருந்த பயணியர், கொசுக்கடிக்கு ஆளாகினர்.

இது குறித்து, விமான பயணியர் கூறுகையில், 'விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், கொசுக்கடி துவங்கியது. விமான பணிப் பெண்களிடம் புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பயணம் முழுவதும் அவதிப்பட்டோம். இது குறித்து, விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளோம்' என்றனர். பயணியரின் புகாரை மறுத்த, விமான நிறுவனம், விமானம் புறப்படுவதற்கு முன், உட்பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டதாக கூறியுள்ளது.


தமிழகத்தில் 8ம் தேதி முதல் மழை குறையத் துவங்கும்'
'தமிழகம் முழுவதும், வரும், ௮ம் தேதி முதல், மழை குறையத் துவங்கும்' என, வானிலை ஆர்வலர், பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



குறையத் துவங்கும்

'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற, 'பேஸ்புக்' பக்கத்தில், அவர் நேற்று கூறியுள்ளதாவது:வங்க கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால், தமிழகத்தின் மேற்கு மற்றும் உட்புற மாவட்டங்களை நோக்கி மழை திரும்பும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில், மழை

பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில், தற்போது, ஓரளவு மழை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும், வரும், 8ம் தேதி முதல், மழை குறையத்துவங்கும்.

அதேநேரத்தில், தாய்லாந்து வளைகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம், தற்போது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. அது, வங்கக்கடலை நோக்கி நகரலாம். இல்லையெனில், மேலை காற்று என்ற வில்லன், திசை மாற்றி, தமிழக கடல் பகுதிக்கு வரவிடாமலும் தடுக்கலாம்.
எதையும், இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது. எது, எப்படி உருமாறுகிறது என்பதை வரும் நாட்களில் கூர்ந்து கவனிக்க வேண்டும். யாரும் வதந்திகளை நம்பவேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐந்து நாட்கள் ஓய்வு

இதற்கிடையில், நேற்று காலை, வானிலை தகவலை பதிவிட்ட, பிரதீப் ஜான் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து, இதுவே என் கடைசி பதிவு. ஒரு வாரமாக, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து, பல்வேறு வானிலை மாடல்களையும், ரேடாரையும் தொடர்ந்து கண்காணித்துள்ளேன். அதனால், எனக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. எனினும், தாய்லாந்தில் இருந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை குறித்த தகவலை, உரிய நேரத்தில் நிச்சயம் தருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

சித்தா படிப்பு இடங்கள் 'ஹவுஸ்புல்'


சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளில், காலியிடம் ஏதுமின்றி, 1,216 இடங்களும் நிரம்பின. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 1,216 இடங்கள் உள்ளன. இரண்டு கட்ட கவுன்சிலிங்கில், 1,083 இடங்கள் நிரம்பின; 133 இடங்கள் மீதமிருந்தன. நேற்று முன்தினம், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடந்தது. இதில், மீதமிருந்த இடங்கள் அனைத்தும் நிரம்பின. 'இடம் ஒதுக்கீடு பெற்றவர்கள், நாளைக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
படிப்புக்கு பணமின்றி தவிக்கும் மாணவி : நிதியுதவியை எதிர்பார்க்கும் எதிர்கால பல் டாக்டர்

மதுராந்தகம்: படிப்பை தொடர பணமின்றி தவிக்கும், பல் மருத்துவ மாணவி, கட்டணம் செலுத்தாததால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மதுராந்தகம், ஒன்பதாவது மண்டபத் தெருவில் வசிப்பவர், சரவணன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரு மகள்கள்.
இளைய மகள், மதுராந்தகம் பகுதியில், கல்லுாரி ஒன்றில் பட்டப்படிப்பு படிக்கிறார்.
மூத்த மகள் நந்தினி, பிளஸ் 2வில், 1,055 மதிப்பெண்கள் பெற்றவர். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அவருக்கு, பண வசதி இல்லை.
இதனால், படாளம் அருகே உள்ள ஒரு கல்லுாரியில் பல் மருத்துவம் படிக்க சேர்ந்தார். அதற்கான கட்டணத்தை செலுத்த, அவரின் குடும்பம் யோசித்த போது, ஒரு நபர் அறிமுகமானார்.
மாணவியின் படிப்புக்கு அறக்கட்டளை ஒன்றின் மூலம், நிதியுதவி ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளார். அதை நம்பி, அந்த பெண், கல்லுாரியில் சேர்ந்து விட்டார்.
ஆனால், நாட்கள் பல ஆகியும் நிதியுதவி கிடைக்கவில்லை. மகளின் படிப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, அந்த மாணவியின் பெற்றோர், தங்கள் வீட்டை அடமானம் வைத்து, முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை செலுத்தினர்.
கல்விக் கடன் கேட்டு, பல வங்கிகளுக்கு விண்ணப்பித்தும், எந்த வங்கியும் உதவவில்லை. வட்டிக்குக் கடன் பெற்று, இரண்டாம் ஆண்டு படிப்பை, அவர் முடித்தார்.
தற்போது மூன்றாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த, அந்த ஏழை குடும்பம் படாதபாடு படுகிறது; யாரும் உதவவில்லை.
இதற்கிடையே, மூன்றாம் ஆண்டு தொடர, கட்டணம் செலுத்துவதற்கான கெடு முடிந்ததால், அந்த மாணவியை, கல்லுாரி நிர்வாகம் வெளியேற்றி விட்டது.
கட்டணம் செலுத்தினால் மட்டுமே படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையில், கண்ணீரோடு நிற்கிறார் அந்த ஏழை மாணவி. அவரின் கல்விக்கு உதவ நினைப்போர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், 9994581552 - சரவணன்.

அஞ்சல் தலையில் திருப்பதி லட்டு


அஞ்சல் தலையில் திருப்பதி லட்டு
திருப்பதி: ஏழுமலையான் பிரசாதங்களான, லட்டு மற்றும் பொங்கல் படங்கள் அடங்கிய புதிய தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டுள்ளது. 

இந்திய தபால் துறை, தற்போது திருமலை ஏழுமலையான் லட்டு மற்றும் பொங்கல் பிரசாதங்களின் படங்கள் அடங்கிய புதிய தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. இதுவரை புகழ்பெற்ற அரசர்கள், ராணிகள், முக்கிய இடங்கள், வரலாற்று சின்னங்கள், மறைந்த முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட உருவங்களை அடங்கிய தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டு வந்தது.

தற்போது புதிய வரவாக, நாட்டில் பிரசித்தி பெற்று விளங்கும் உணவு பண்டகங்களின் படங்கள் அடங்கிய தபால் தலைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, திருமலை ஏழுமலையான் பிரசாதமான லட்டு, பொங்கல் படங்களை தாங்கிய, ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை, திருவாரூர், நாகையில் மழை




 சென்னை, திருவாரூர், நாகையில், மழை

சென்னை: னெ்னையில் அண்ணாநகர், அம்பத்துார் , கொளத்துார், கொரட்டூர், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்கிறது. இரவு மழை பெய்வதை பொறுத்து, பள்ளிகள் விடுமுறை குறித்து நாளை (நவ.7)காலை 5மணிக்கு அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம்
சேலம் மாவட்டத்தில், செலம்-ஏற்காடு அடிவாரம், செட்டிச்சாவடி,கோரிமேடு கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி,  அயோத்திபட்டினம்  உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.
நாகை
நாகை மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, கீளவேளூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் சுற்றுனட்டார பகுதிகளில் மழை பெய்தது.

NEWS TODAY 03.07.2026