Wednesday, April 4, 2018

மாட்டு தொழுவமாக மாறிய பெரம்பலூர் தாலுகா ஆபீஸ்

Added : ஏப் 03, 2018 23:18

பெரம்பலுார்: பெரம்பலுார் தாலுகா அலுவலகம், மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.பெரம்பலுார் நகரில், பெரம்பலுார் தாலுகாவுக்கான ஒருங்கிணைந்த வளாகம் உள்ளது. இந்த வளாகத்துக்குள், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஆதார் கார்டு சேவை மையம் என பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கவும், நிதியுதவி பெறவும் என, தினமும், 1,000த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை மிகவும் பரபரப்பாகவும், ஆட்கள் நடமாட்டத்துடன் இந்த வளாகம் இருப்பது வழக்கம்.சில நாட்களாக, பெரம்பலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி, மூன்று மாடுகள் மற்றும் கன்றுகளை, பெரம்பலுார் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் கட்டிப் போட்டு, தாலுகா அலுவலகத்தை மாட்டு தொழுவமாக மாற்றி உள்ளார். மாலை, 5:00 மணிக்கு இங்கு கட்டப்படும் மாடுகள், மறுநாள் மதியம், 12:00 மணி வரை, மேய்ச்சலுக்கு செல்லும் வரை, இங்கேயே உள்ளன.சில நேரங்களில், மாடுகளை கட்டாமலே, விவசாயி விட்டு செல்கிறார். இதனால், இஷ்டத்துக்கு உலா வரும் மாடுகள், அங்கு வரும் பொதுமக்களை முட்டுவது போல பயமுறுத்துகின்றன. இது குறித்து, பெரம்பலுார், தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் கேட்ட போது, ''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை; தவறான தகவல்,'' என்றார்.
இளையான்குடியில் மர்ம காய்ச்சல் : 16 கிராமத்தில் சுகாதாரக்குழு முகாம்

Added : ஏப் 03, 2018 23:15

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், 16 கிராமங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.இளையான்குடி அருகே கல்லடிதிடலில், 100 பேருக்கு சிக்குன்குனியா, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல் பரவியது. தொடர்ந்து, இரண்டு வாரம் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர். தற்போது கல்லடிதிடல் அருகே விசவனுார் கிராமத்திலும் காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை, ஏழு பேர் பாதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் சிகிச்சை அளிக்கின்றனர். அதே பகுதியில், 16 வயது இளைஞருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். காய்ச்சலால் பாதித்கப் பட்ட மக்களை கலெக்டர் லதா தலைமையில் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சுகாதார துணை இயக்குனர் கூறியதாவது:கல்லடி திடலில் காய்ச்சல் பாதிப்பு முற்றிலும் நின்றுவிட்டது. குடிநீரை சேமித்து வைத்து, சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்துவதால் காய்ச்சல் பரவியது. மேலும் கல்லடி திடலை சுற்றிலும், 16 கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல், 'பங்க்' நாளை செயல்படும்

Added : ஏப் 03, 2018 22:32

சென்னை: எதிர்க்கட்சிகள், நாளை, 'பந்த்' அறிவித்துள்ள நிலையில், 'பெட்ரோல், 'பங்க்'குகள், வழக்கம் போல செயல்படும்' என, அதன் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில், பல தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாளை பந்த் அறிவித்துள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர் சங்க தலைவர், முரளி அறிக்கை: மத்திய அரசை வலியுறுத்தி, பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், பல தேதிகளில் உண்ணாவிரதம், மறியல், கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகள் நலன் காத்திட, வேறுபாடுகளை மறந்து, அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து அறிவிக்கும் போராட்டங்களில் மட்டுமே, பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் பங்கேற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கு 10ம் இடம்  தேசிய தரவரிசை பட்டியலில் சாதனை

dinamalar 04.04.2018

பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.




மத்திய அரசு சார்பில், 2016 முதல், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், டில்லியில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், தேசிய அளவில் முதலிடத்தை, பெங்களூரில் உள்ள, இந்திய தேசிய அறிவியல் கல்வி நிறுவனம் பிடித்துள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., இரண்டாம் இடத்தையும், மும்பை, ஐ.ஐ.டி., மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான, அரசு பல்கலையான, அண்ணா பல்கலை, தேசிய அளவில், 10ம் இடம் பெற்று, சாதித்துள்ளது. கோவை அம்ரிதா பல்கலை, 15; பாரதியார் பல்கலை, 20; வி.ஐ.டி., - 24; சென்னை பல்கலை, 29 மற்றும் திருச்சி, என்.ஐ.டி., நிறுவனம், 31ம் இடத்தையும் பிடித்துள்ளன.

பாரத் கல்வி நிறுவனம், 35; தமிழ்நாடு வேளாண் பல்கலை, 40; காரைக்குடி அழகப்பா பல்கலை, 43; சாஸ்த்ரா கல்வி நிறுவனம், 54; ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 62ம் இடங்களை பெற்றுள்ளன. எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம், 63; கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, 64; சத்யபாமா கல்வி நிறுவனம், 68; சவிதா கல்வி நிறுவனம், 70ம் இடங்களை பெற்றுள்ளன.

சென்னை, எஸ்.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லுாரி, 73; கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்வி நிறுவனம், 75; மதுரை காமராஜர் பல்கலை, 81; தமிழ்நாடு கால்நடை பல்கலை, 92ம் இடங்களை பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலை, 94; மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி, 95 மற்றும் புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, 97ம் இடத்தை பெற்று, முதல், 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


பல்கலை அளவிலும் மகுடம்:

பல்கலை அளவிலான தேசிய தரவரிசை பட்டியலிலும், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனமே, முதலிடம் பெற்றுள்ளது. டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை, 2; வாரணாசி பனாரஸ் பல்கலை, 3; சென்னை அண்ணா பல்கலை, 4ம் இடம் பிடித்துள்ளன. கோவை அம்ரிதா பல்கலை, 8; பாரதியார் பல்கலை, 13; வி.ஐ.டி., 16; சென்னை பல்கலை, 18; பாரத் கல்வி நிறுவனம், 21; சாஸ்த்ரா, 36, ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 40ம் இடங்களை பெற்றுள்ளன.

சென்னை, ஐ.ஐ.டி., அசத்தல்:

* மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தரவரிசை பட்டியல், நேற்று வெளியானது. இதில், இன்ஜி., கல்லுாரிகள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி., மூன்றாவது ஆண்டாக, தொடர்ந்து முதல் இடம் பெற்று சாதித்துள்ளது. அண்ணா பல்கலை, 8; திருச்சி, என்.ஐ.டி., 11; வி.ஐ.டி., 16; பிட்ஸ் பிலானி பல்கலை, 17ம் இடங்களை பெற்றுள்ளன.


* கல்லுாரிகள் பிரிவில், திருச்சி பிஷப் ஹீபர், 3; சென்னை மாநில கல்லுாரி, 5; லயோலா கல்லுாரி, 6; சென்னை, எம்.சி.சி. கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 11; சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லுாரி, 22ம் இடங்களை பெற்றன

* மேலாண்மை, எம்.பி.ஏ., கல்லுாரிகள் பட்டியலில், திருச்சி, என்.ஐ.டி., 15; சென்னை கிரேட் லேக்ஸ் மேலாண் கல்வி நிறுவனம், 16; அண்ணா பல்கலை, 28; வி.ஐ.டி., 29; லயோலா கல்லுாரி, 32ம் இடங்களை பிடித்துள்ளன

* மருந்தியல் பிரிவில், நீலகிரி, ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி, 15; அண்ணாமலை பல்கலை, 20, ராமச்சந்திரா கல்வி நிறுவனம், 21ம் இடங்களை பெற்றுள்ளன

* மருத்துவ கல்வி பிரிவில், வேலுார் கிறிஸ்தவ கல்லுாரி, தேசிய அளவில், 3ம் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி, ஜிப்மர், 6ம் இடம்; சென்னை ராமச்சந்திரா கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 21; எஸ்.ஆர்.எம்., 22ம் இடத்தை பெற்றுள்ளன.

* கட்டடவியல் கல்லுாரிகள் பிரிவில், அண்ணா பல்கலை, 6ம் இடம் பெற்றுள்ளது. வேளாண் பிரிவில், தமிழக கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

- நமது நிருபர் -

நாளை பஸ்கள் ஓடுமா? போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு





காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.

ஏப்ரல் 04, 2018, 04:45 AM
சென்னை,

இதனால் பஸ்கள் ஓடுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர் குலைக்கும் நடவடிக்கையாக தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தர மத்திய மோடி அரசாங்கம் மறுக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்பு குழு ஆகியவற்றை 6 வார காலத்திற்குள் அமைத்திட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் பின்னரும், காவிரியில் தமிழகத்திற்கு உரித்தான தண்ணீரை பெற்றுத்தரும் சட்டபூர்வமான அமைப்புகளை உருவாக்காமல் காலம் கடத்தி கெடு முடியும் கடைசி நாளில் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்டும், மூன்று மாதகால அவகாசம் கேட்டும் மத்திய அரசு மனு தாக்கல் செய்து உள்ளது.

தமிழகத்தை அரசியல் நோக்கங்களுக்காக வஞ்சிக் கும் மத்திய அரசையும், உரிய அழுத்தம் கொடுக்க தவறிய மாநில அரசையும் கண்டித்து தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி வருகின்றனர்.

தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசியல் இயக்கங்கள், விவசாயிகளின் அமைப்புகள் பொதுநல அமைப்புகள் என அனைத்தின் சார்பாக ஏப்ரல் 5-ந் தேதி(நாளை) முழு அடைப்பு நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினையில் பாதிப்பிற்குள்ளாவது விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் என்ற நிலையிலும், தமிழகத்தின் நலன்களை பேணி பாதுகாக்கும் நல்லுணர்வோடு முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் ஏப்ரல் 5-ந் தேதி(நாளை) போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு நமது உணர்வை வெளிப்படுத்த முன்வரவேண்டும் என கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்றுத்தராமல் டெல்டா பகுதியை பாலைவனமாக்கியதோடு, டெல்டா பகுதியில் எண்ணெய் வள ஆய்வு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்தும், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழகத்தை பாலைவனமாக மாற்ற முயற்சிக்கிறது. தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதன் மூலம் நீர், நிலம், காற்று என சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலையை தட்டிக்கேட்க மறுக்கும் மத்திய அரசையும், துணைபோகும் மாநில அரசையும் கண்டிப்பதோடு இதற்கு எதிரான அனைத்து போராட்டங்களையும் ஆதரிப்பதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பெரும்பாலான பஸ்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரம் ஆளும் கட்சியின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பஸ்களை இயக்குவார்கள் என தெரிகிறது.

மேலும், போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில், “5-ந் தேதி அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வர வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது. பஸ் போக்குவரத்து என்பது பொதுமக்கள் சேவை என்பதால் பஸ்களை இயக்க அனைவரும் பணிக்கு வர வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக போக்கு வரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். எனவே, நாளை பஸ்கள் ஓடுமா? ஓடாதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு, திருமண நாளில் விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 04, 2018, 05:08 AM

சேலம்,

காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு பணி நேரம் என்பது கிடையாது. எப்போது அழைத்தாலும் பணிக்கு வரவேண்டிய கட்டாயம் உள்ளது. அதில் முக்கிய பிரமுகர் வருகை, பண்டிகை மற்றும் திருவிழா நாட்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பொறுப்பும் கடமையும் போலீசாருக்கு உள்ளது.

இதனால், போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை கழிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. போலீசார் பலர், மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவமும் தற்போது அதிகரித்து வருகிறது. மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அளித்தாலும் விடுமுறை இல்லாவிட்டால் மன அழுத்தத்தை எப்படி போக்க முடியும்?. மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளின் தொந்தரவும் காவலர்கள் சிலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது. ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் சிலரும், அவர்களுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டு கடமையை சரிவர செய்யவும் தவறி விடுகிறார்கள்.

இந்த நிலையில் சேலம் மாநகர காவல்துறை, மாநகர ஆயுதப்படை, மாநகர போலீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் அமெச்சுப்பணியாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களது மன அழுத்தத்தை போக்கிட சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் திட்டம் ஒன்றை ஆலோசித்து அதை நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளார். அத்திட்டம், மாநகர போலீசில் பணியாற்றும் போலீஸ்காரர்கள், ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும், அவர்களது திருமண நாளன்று விடுமுறை அளித்து குடும்பத்துடன் ஆனந்தமாக பொழுதை கழிக்க அனுமதிப்பதாகும். போலீஸ் கமிஷனர் சங்கரின் இத்திட்டமானது காவல்துறையினரிடையே உற்சாகத்தையும், மகிழ்ச்சியும் அளித்துள்ளது.

இத்திட்டம் இன்று(புதன்கிழமை) முதல் அமல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் யார் யாருக்கெல்லாம் எந்தெந்த தேதியில் திருமணநாள் என்ற பெயர் பட்டியல் சேகரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
தலையங்கம்
இரட்டை ரெயில்பாதை





பயணிகள் ரெயில் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால் தென்னக ரெயில்வேயில், குறிப்பாக தமிழ்நாட்டில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. வருவாயும் அதிகம் ஈட்டுகிறது.

ஏப்ரல் 04 2018, 02:15 AM வடமாநிலங்களைப்போல, தமிழ்நாட்டில் டிக்கெட் எடுக்காமல் பயணிகள் பயணம் செய்வதில்லை. இதில், சென்னை–நெல்லை–நாகர்கோவில் வழித்தடத்திலும், சென்னை–தூத்துக்குடி வழித்தடத்திலும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் எடுப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். 120 நாட்களுக்கு முன்புவரை ரெயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்யலாம் என்ற விதியை முழுமையாக பயன்படுத்துபவர்கள் இந்த வழித்தடத்தில் பயணம்செய்யும் பயணிகள்.

வெகுகாலமாகவே இந்த வழித்தடங்களில் குறிப்பாக சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் ரெயில்களைக் கணக்கிட்டு எடுத்துக்கொண்டால், 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதுதவிர, பிறமாநிலங்களில் இருந்து எழும்பூர் வழியாக தென்மாவட்டங்களுக்கு 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்கின்றன. இந்த வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் விடவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. முழுமையாக ரெயில்களை ஓடவிட்டுவிட்டோம். இனி நிச்சயமாக இரட்டை ரெயில்பாதை நிறைவேறும்போதுதான் கூடுதலாக 10 ரெயில்கள்வரை விடுவதற்காக சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று கூறப்பட்டது. எனவே, இரட்டை ரெயில்பாதை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பயணிகள் மத்தியிலும், தமிழக அரசிடம் இருந்தும், ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கையாக விடப்பட்டது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் ஒரேசீராக இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முடிவடையாமல் ஆரம்பகாலத்தில் சென்னை–செங்கல்பட்டு வழித்தடத்திலும், இடையில் உள்ள தூரத்தை விட்டுவிட்டு, திண்டுக்கல்–மதுரை இடையேயும் இரட்டை ரெயில்பாதை பணி முடிவடைந்துவிட்டது. இதனால் அதிக பயனும் இல்லாமல் இருந்தது. பிறகு சிறிதுகாலத்திற்கு முன்பு செங்கல்பட்டு–விழுப்புரம் இடையே மட்டும் இரட்டை ரெயில்பாதை பணி நிறைவடைந்தது.

விழுப்புரத்தில் இருந்து திண்டுக்கல் வரையிலான ரெயில்பாதை பணிகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல் இருந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்து, ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு) மனோகரன் ஆய்வுநடத்தி, சோதனை ஓட்டத்தையும் முடித்தார். இந்த பாதையில் 140 கி.மீட்டர் வேகத்திற்கு ரெயில்கள் செல்லமுடியும் என்றாலும், இப்போதைக்கு 100 கி.மீட்டர் வேகம்வரை மட்டுமே செல்லலாம். இன்னும் சிலபணிகள் முடிக்கப்பட வேண்டியதிருக்கிறது. அந்த பணிகள் முடிவடைந்தால் மணிக்கு 140 கி.மீட்டர் வேகம்வரை செல்லமுடியும் என்று கூறப்படுகிறது. ஆக, கடந்த 30–ந்தேதி முதல் சென்னையில் இருந்து மதுரை வரை மின்மயமாக்கலுடன் இரட்டைபாதையில் ரெயில்கள் ஓடத்தொடங்கிவிட்டன. மதுரையில் இருந்து நாகர்கோவில், வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்காததால் பணிகள் மிகவும் மெதுவாகவே ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கும் மத்திய அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கி எவ்வளவு விரைவில் பணிகளை முடிக்கமுடியுமோ, அவ்வளவு விரைவில் பணிகளை முடித்தால் கூடுதலாக 10 ரெயில்களை விடமுடியும். பயணிகள் தேவையையும் பூர்த்தி செய்யமுடியும். தமிழக அரசும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் 2 ஆண்டுகளுக்குள்ளாவது முடிக்க வலியுறுத்த வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...