நாளை பஸ்கள் ஓடுமா? போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.
ஏப்ரல் 04, 2018, 04:45 AM
சென்னை,
இதனால் பஸ்கள் ஓடுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர் குலைக்கும் நடவடிக்கையாக தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தர மத்திய மோடி அரசாங்கம் மறுக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்பு குழு ஆகியவற்றை 6 வார காலத்திற்குள் அமைத்திட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் பின்னரும், காவிரியில் தமிழகத்திற்கு உரித்தான தண்ணீரை பெற்றுத்தரும் சட்டபூர்வமான அமைப்புகளை உருவாக்காமல் காலம் கடத்தி கெடு முடியும் கடைசி நாளில் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்டும், மூன்று மாதகால அவகாசம் கேட்டும் மத்திய அரசு மனு தாக்கல் செய்து உள்ளது.
தமிழகத்தை அரசியல் நோக்கங்களுக்காக வஞ்சிக் கும் மத்திய அரசையும், உரிய அழுத்தம் கொடுக்க தவறிய மாநில அரசையும் கண்டித்து தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி வருகின்றனர்.
தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசியல் இயக்கங்கள், விவசாயிகளின் அமைப்புகள் பொதுநல அமைப்புகள் என அனைத்தின் சார்பாக ஏப்ரல் 5-ந் தேதி(நாளை) முழு அடைப்பு நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினையில் பாதிப்பிற்குள்ளாவது விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் என்ற நிலையிலும், தமிழகத்தின் நலன்களை பேணி பாதுகாக்கும் நல்லுணர்வோடு முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் ஏப்ரல் 5-ந் தேதி(நாளை) போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு நமது உணர்வை வெளிப்படுத்த முன்வரவேண்டும் என கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்றுத்தராமல் டெல்டா பகுதியை பாலைவனமாக்கியதோடு, டெல்டா பகுதியில் எண்ணெய் வள ஆய்வு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்தும், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழகத்தை பாலைவனமாக மாற்ற முயற்சிக்கிறது. தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதன் மூலம் நீர், நிலம், காற்று என சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலையை தட்டிக்கேட்க மறுக்கும் மத்திய அரசையும், துணைபோகும் மாநில அரசையும் கண்டிப்பதோடு இதற்கு எதிரான அனைத்து போராட்டங்களையும் ஆதரிப்பதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பெரும்பாலான பஸ்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரம் ஆளும் கட்சியின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பஸ்களை இயக்குவார்கள் என தெரிகிறது.
மேலும், போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில், “5-ந் தேதி அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வர வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது. பஸ் போக்குவரத்து என்பது பொதுமக்கள் சேவை என்பதால் பஸ்களை இயக்க அனைவரும் பணிக்கு வர வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக போக்கு வரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். எனவே, நாளை பஸ்கள் ஓடுமா? ஓடாதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
No comments:
Post a Comment