Wednesday, April 4, 2018

தலையங்கம்
இரட்டை ரெயில்பாதை





பயணிகள் ரெயில் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால் தென்னக ரெயில்வேயில், குறிப்பாக தமிழ்நாட்டில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. வருவாயும் அதிகம் ஈட்டுகிறது.

ஏப்ரல் 04 2018, 02:15 AM வடமாநிலங்களைப்போல, தமிழ்நாட்டில் டிக்கெட் எடுக்காமல் பயணிகள் பயணம் செய்வதில்லை. இதில், சென்னை–நெல்லை–நாகர்கோவில் வழித்தடத்திலும், சென்னை–தூத்துக்குடி வழித்தடத்திலும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் எடுப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். 120 நாட்களுக்கு முன்புவரை ரெயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்யலாம் என்ற விதியை முழுமையாக பயன்படுத்துபவர்கள் இந்த வழித்தடத்தில் பயணம்செய்யும் பயணிகள்.

வெகுகாலமாகவே இந்த வழித்தடங்களில் குறிப்பாக சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் ரெயில்களைக் கணக்கிட்டு எடுத்துக்கொண்டால், 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதுதவிர, பிறமாநிலங்களில் இருந்து எழும்பூர் வழியாக தென்மாவட்டங்களுக்கு 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்கின்றன. இந்த வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் விடவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. முழுமையாக ரெயில்களை ஓடவிட்டுவிட்டோம். இனி நிச்சயமாக இரட்டை ரெயில்பாதை நிறைவேறும்போதுதான் கூடுதலாக 10 ரெயில்கள்வரை விடுவதற்காக சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று கூறப்பட்டது. எனவே, இரட்டை ரெயில்பாதை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பயணிகள் மத்தியிலும், தமிழக அரசிடம் இருந்தும், ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கையாக விடப்பட்டது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் ஒரேசீராக இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முடிவடையாமல் ஆரம்பகாலத்தில் சென்னை–செங்கல்பட்டு வழித்தடத்திலும், இடையில் உள்ள தூரத்தை விட்டுவிட்டு, திண்டுக்கல்–மதுரை இடையேயும் இரட்டை ரெயில்பாதை பணி முடிவடைந்துவிட்டது. இதனால் அதிக பயனும் இல்லாமல் இருந்தது. பிறகு சிறிதுகாலத்திற்கு முன்பு செங்கல்பட்டு–விழுப்புரம் இடையே மட்டும் இரட்டை ரெயில்பாதை பணி நிறைவடைந்தது.

விழுப்புரத்தில் இருந்து திண்டுக்கல் வரையிலான ரெயில்பாதை பணிகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல் இருந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்து, ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு) மனோகரன் ஆய்வுநடத்தி, சோதனை ஓட்டத்தையும் முடித்தார். இந்த பாதையில் 140 கி.மீட்டர் வேகத்திற்கு ரெயில்கள் செல்லமுடியும் என்றாலும், இப்போதைக்கு 100 கி.மீட்டர் வேகம்வரை மட்டுமே செல்லலாம். இன்னும் சிலபணிகள் முடிக்கப்பட வேண்டியதிருக்கிறது. அந்த பணிகள் முடிவடைந்தால் மணிக்கு 140 கி.மீட்டர் வேகம்வரை செல்லமுடியும் என்று கூறப்படுகிறது. ஆக, கடந்த 30–ந்தேதி முதல் சென்னையில் இருந்து மதுரை வரை மின்மயமாக்கலுடன் இரட்டைபாதையில் ரெயில்கள் ஓடத்தொடங்கிவிட்டன. மதுரையில் இருந்து நாகர்கோவில், வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்காததால் பணிகள் மிகவும் மெதுவாகவே ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கும் மத்திய அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கி எவ்வளவு விரைவில் பணிகளை முடிக்கமுடியுமோ, அவ்வளவு விரைவில் பணிகளை முடித்தால் கூடுதலாக 10 ரெயில்களை விடமுடியும். பயணிகள் தேவையையும் பூர்த்தி செய்யமுடியும். தமிழக அரசும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் 2 ஆண்டுகளுக்குள்ளாவது முடிக்க வலியுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...