Sunday, April 22, 2018

நலம் தரும் நான்கெழுத்து 30: பயணத்தை அனுபவிப்போம்!

Published : 14 Apr 2018 10:46 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்



வாழ்க்கை என்பது புல்லின் கூர்நுனியில் விழாமல் சமநிலையில் இருக்கும் பனித் துளியன்றி வேறில்லை

- புத்தர்

வாழ்க்கையில் மிக முக்கியமான வார்த்தை எது எனப் பிரபலங்களை ஓர் இதழில் பேட்டி கண்டிருந்தார்கள். ‘நம்பிக்கை’, ‘ஊக்கம்’, ‘மகிழ்ச்சி’ எனப் பலரும் பல்வேறு விதமாக பதிலளித்திருந்தனர். இதுபோல் என்னைக் கேட்டால் என்ன சொல்வது என எண்ணிப் பார்த்ததன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.

மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த குரங்கு, பரிணாம வளர்ச்சியில் முன்னோக்கிச் சென்று கவிதையெல்லாம் எழுதும் அளவுக்கு வளர்ந்ததற்கு, மனிதனின் மூளையிலும் மனத்திலும் தோன்றிய அளப்பரிய மாறுதல்களே காரணம். குறிப்பாகக் கடந்த கால அனுபவங்களை ஆராய்ந்து தற்கால நிலையை உணர்ந்து எதிர்காலத்துக்குத் திட்டமிடும் பண்பு. இதுவே அறிவின் சாராம்சம்.

இந்த அறிவின் மூலமாக மனித இனம் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. வாழ்க்கையை மட்டுமல்ல சூழ்நிலையையும். ஆக, மனித இனம் தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தன்னைத் தானே செதுக்கும் சிற்பியாக உள்ளது.

முக்காலமும் வருந்துவது ஏன்?

எல்லா விஷயங்களையும் போன்றே அறிவே மனித இனத்தின் சாதனைகளுக்கு மட்டுமன்றிச் சோதனைகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு, பாதை, அடையும் வேகம் என எல்லாவற்றுக்கும் மனித இனமே முழுப் பொறுப்பு. அதுவும் பொருள்மயமான வாழ்க்கையே வழியாகிவிட்ட இக்காலகட்டத்தில் கடந்த காலத் தவறுகளை நினைத்துக் குற்ற உணர்வு அடைவது, நிகழ்கால நிலையை நினைத்து வருந்துவது, எதிர்காலத்தை நினைத்துப் பதற்றப்படுவது என முக்காலத்துக்கும் சேர்த்து மனித இனம் வருந்துகிறது. மன அழுத்தம் கூடுகிறது. மனம் பாதிக்கப்பட்டால் உடலும் பாதிப்படைகிறது.

இந்தப் பயணத்தின் இலக்கு என்ன? அதாவது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதற்கு மதரீதியாக, ஆன்மிகரீதியாக, அறிவியல்பூர்வமாக, தத்துவார்த்தமாக என எப்படிப் பதில் சொன்னாலும் எல்லாவற்றுக்கும் பொதுவானது மகிழ்ச்சியாக இருப்பதுதானே. அதாவது பயணத்தை அனுபவிப்பது. அப்படி மன அழுத்தத்துக்கு ஆளாகாமல், கீழே விழுந்துவிடாமல் பயணிக்க நாம் கைக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், சமநிலை.

சமநிலை என்பது மனரீதியான, உடல்ரீதியான, சமூகரீதியான காரணிகளின் சரியான சேர்க்கையே. ஆங்கிலத்தில் ‘பயோ சைக்கோ சோஷியல் மாடல்’ என இதை அழைப்பார்கள். அது சார்ந்த பல அம்சங்களைப் பற்றி இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளில் கண்டோம். அவற்றின் சாரம்சத்தை பார்ப்போம்.

ஓட்டமும் ஓய்வும்

முதலில் நமது இலக்கு என்ன என்பதைப் பார்ப்போம். வீடு, வாகனம், பதவி, அங்கீகாரம் போன்ற பொருள்ரீதியான இலக்குகள் வாழ்வில் முக்கியம். அதைவிட முக்கியம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பது. அவற்றைத் தொலைத்துவிட்டு இலக்கை நோக்கி ஓடுவது கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போன்றதே. இலக்கு நோக்கிய ஓட்டத்துக்கும் ஓய்வுக்கும் இடையே ஒரு சமநிலை தேவை.

அதேபோல் அந்த இலக்கை நோக்கிச் செல்ல முன்கூட்டியே திட்டமிட்டுத் துல்லியத்தை எதிர்பாத்து, அதன்படியே செயல்படுவதும் அவசியம். அதேநேரம் அத்திட்டத்தில் இல்லாதபடி நிகழ்வுகள் நடக்கும்போது குறைகளைச் சமாளித்துப் பயணிப்பது அதைவிட முக்கியம்.

காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் புதுமையை விரும்பும் பண்பு அவசியம். ஆனால், அது அதீதமாக மாறிக்கொண்டே இருக்கும் பொறுமையின்மையாக மாறிவிடாத சமநிலையும் தேவை. அளவான வேகமும் சோம்பலாகி விடாத பொறுமையும் தேவை.

நம்பிக்கையுடன் அணுகுவோம்

விதிமுறைகளையும் ஒழுங்கையும் பின்பற்றுவதில் கண்டிப்பு அவசியம். ஆனால், அதுவே மழை பெய்யும்போது செடிகளுக்கு நீருற்றுவதுபோல் அர்த்தமற்றதாகாமல் வளைந்து கொடுப்பதும் அவசியம்.

நம்பிக்கையுடன் எதையும் அணுகுவது இன்றியமையாதது. அதேநேரம் எல்லோரையும் அப்படியே நம்பிவிடாமல் எதிர்மறையாக நடந்தால் என்னாவது என சில நேரம் குறைந்தபட்ச சந்தேகிப்பும் தேவைப்படுகிறது.

கோபம் நம்மைக் குப்புறத் தள்ளிக் குழிபறிக்கும் எதிரி என்பதை உணரும் அதேநேரம், தேவையான இடங்களில் ‘ரவுத்திரம் பழ’கவும் தெரிந்திருக்க வேண்டும். மிகையான அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம், தீயனவற்றைக் கண்டு தீயினும் மேலாக அஞ்சும் பண்பும் வேண்டும்.

வாழ்க்கையின் முக்கியமான சொல்

உடல்ரீதியான சமநிலை எனப் பார்த்தால் உடலைப் பேணுதல் இன்றியமையாதது . அதுவே உடலைப் பற்றிய மிகையான கற்பனையானால் அதுவே தனி நோயாக மாறிவிடுகிறது. உணவு, தூக்கம் என உடல்ரீதியான பல கூறுகள் மிகினும் குறையினும் நோய் செய்யும்.

சமூகத்தைப் பற்றி அக்கறை இன்றி இருப்பது, அளவுக்கு அதிகமாகச் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுவது என்ற இந்த இரண்டுமே இல்லாத சமநிலை தேவை. அது போன்றே பிறரைக் கண்டிப்பதற்கும் மன்னிப்பதற்கும் இடையேயான சமநிலையும் அவசியம்.

முக்கியமாகப் பல விஷயங்களில் மாற்ற முடிந்ததை எப்படியாவது மாற்ற முயற்சிப்பதும், முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளவும் ‘சமநிலை’ என்னும் மந்திரச் சொல்லே என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முக்கியமான சொல். அதுவே நலம்தரும் நான்கெழுத்து. ரொம்பவும் சுருக்கமாக இல்லாமலும் நீட்டிக்கொண்டே போகாமலும் சமநிலையோடு இக்கட்டுரைத் தொடரை முடிக்கிறேன்.

(நிறைந்தது)

கட்டுரையாளர்,

மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com
டிஜிட்டல் போதை 30: அந்த மாத்திரை வேண்டுமா?

Published : 14 Apr 2018 10:52 IST

வினோத் ஆறுமுகம்

 





சென்ற வாரம், செல்ஃபி குறித்துப் பார்த்தோம். அது ஏற்படுத்தும் மனச்சோர்வு பற்றித் தெரியுமா? பதின் வயதினர் தம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில், அவர்களைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பார்கள். அதேபோல் தன் உடல், தோற்றம் போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்துவார்கள். தம் தோற்றத்தை மேம்படுத்திக் காட்ட எந்த எல்லைக்கும் செல்வார்கள். சமூகத்தின் மத்தியில் தன் தோற்றம் எவ்வாறு எடுத்துக்கொள்ளபடுகிறது என்பதைப் பொறுத்து அவர்களின் மனநிலையில் மாற்றம் இருக்கும்.

பதின் வயதினரின் இந்த வளர்ச்சி நிலையில்தான் செல்ஃபி பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஒரு செல்ஃபி எடுத்து, அதைப் பகிர்ந்துவிட்டபின் அதற்கு வரும் கருத்துகள் நேரடியாக அவர்கள் மனநிலையில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தன் பதிவுக்குத் தொடர்ந்து நேர்மறையான கருத்துகள் வந்தால், அவர்கள் மெல்ல நார்ஸிஸத்தை நோக்கி நகர்வார்கள். ‘நார்ஸிஸம்’ என்பது தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு வித மனநோய். அதிகப்படியான எதிர்மறை கருத்துகள் வந்தால், தன் உடல் மீதும், தன் சுயத்தின் மீதும் வெறுப்புக்கொள்வது, மனச்சோர்வடைவது, மன உளச்சலுக்கு ஆளாவது என மீண்டும் மனநோயின் வசம் சிக்கிக்கொள்கிறார்கள். செல்ஃபி மோகம் ஏற்படுத்தும் உளவியல் பிரச்சினைகளைப் பற்றி நடந்த பல ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. ஆம், எப்படிப் பார்த்தாலும் செல்ஃபி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம்தான். ஆனால், எந்தப் பக்கத்தை நல்லபடியாகப் பயன்படுத்தினால், அது நல்ல ஆயுதமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

டிஜிட்டல் எனும் மாத்திரை

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ‘டிஜிட்டல் உலகம்’ என்பதுதான் எதிர்காலம். அதற்குப் பின்னால் பெரும் வணிகம் இருக்கிறது. அது தொடர்பான பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் சந்தையைக் கட்டுப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யும். அவர்களை எதிர்த்துப் போராட நமக்கு விழிப்புணர்வு தேவை. எனவே அதை முன்னிட்டு, கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் துறையைப் பற்றியும் அதனால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன்.

வீடியோ கேம்கள் முதல் ‘கூகுள் ஹோம்’ வரையிலான இதர டிஜிட்டல் சாதனங்கள் நம் வாழ்வை மேம்படுத்தவும் செய்கின்றன, கொஞ்சம் அசந்தால் நம் வாழ்க்கையைச் சூறையாடவும் செய்கின்றன. நாம்தான் அதன் சாதக பாதகங்களை நன்கு அறிந்து மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.

ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு ஒரு மாத்திரை கொடுக்கிறார்கள். அந்த மாத்திரயை உண்டால் உங்களுக்கு உற்சாகம் பொங்கும், நீங்கள் நினைத்த காரியத்தை எல்லாம் செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். ஆனால் ஒன்று, அந்த மாத்திரையின் பின்விளைவுகளை இதுவரை சோதித்துப் பார்க்கவில்லை என்கிறார்கள். அந்த மாத்திரையை உண்டால் அதன் உடனடிப் பலனை பட்டியலிடுபவர்கள், அதன் நீண்டகால பின்விளைவுகளைப் பற்றித் தெரியாதவர்கள். நீங்கள் அந்த மாத்திரையை உண்பீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கும் அந்த மாத்திரயைக் கொடுப்பீர்களா?அந்த மாத்திரைதான் டிஜிட்டல் கருவிகள்.

விவாதித்தபடி இருப்போம்

இன்றுவரை நடந்த எந்த ஆய்வுகளை எடுத்துக்கொண்டாலும், டிஜிட்டல் உலகம் மனிதர் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி ஆதரவாகவோ எதிராகவோ வாதாடப் போதுமான அறிவியல்பூர்வமான முடிவுகள் இல்லை. இருக்கும் அனைத்து ஆய்வுகளும் தொடக்க நிலையிலேயே உள்ளன. நாம் இப்போது கண்கூடாகப் பார்ப்பது இன்றைய நன்மை தீமைகள் மட்டும்தான். சில பத்து ஆண்டுகளில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடியாது.

நம்மிடம் இருப்பது பரிசோதனைகளுக்கு உட்படாத மாத்திரை. உடனடி பலன்களைக் கருத்தில் கொள்ளாமல், நீண்டகால நோக்கில் விழிப்புடன் இதை அணுகுவதே நலம்.

இந்தத் தொடர் முடிவுற்றதாக நான் கருதவில்லை. ஒரு விவாதத்தின் தொடக்கமாகக் கருதுகிறேன். வருங்காலத்தில் டிஜிட்டல் உலகத்தைப் பற்றிய விவாதங்கள் தொடரவே செய்யும். விவாதித்தபடி இருப்போம். தற்காலிகமாக ஒரு சிறு இடைவெளி.

(நிறைந்தது)

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com
படிப்போம் பகிர்வோம்: புத்தக வடிவில் குடும்ப மருத்துவர்!

Published : 21 Apr 2018 10:20 IST

வா. ரவிக்குமார்




நோய் குறித்த விழிப்புணர்வு, நோய் குறித்த உண்மை நிலவரம், நோய் வரும்முன் காக்கும் வழி – இந்த மூன்று புள்ளிகளையும் இணைக்கும் டாக்டர் கு. கணேசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘செகண்ட் ஒப்பினியன்’ புத்தகம்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராகத் தினம் தினம் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகள், தண்ணீருக்கான தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என எந்த விஷயத்தையும் ஒரு செய்தியாகக் கடந்துசென்றுவிடுபவர்கூட, தனக்கு வரும் ஒற்றைத் தலைவலிக்கு வீட்டையே இரண்டுபடுத்திவிடுவார். நரம்பு சம்பந்தமான பிரச்சினையாக இருக்குமா, ‘பிரைன் ட்யூமராக’ இருக்குமா என்றெல்லாம் பல சோதனைகளில் இறங்கிவிடுவார்.

இப்படிப்பட்டவர்களுக்கு நேர் எதிரானவர்களும் இருக்கிறார்கள். நாற்பது, ஐம்பது வயதுவரை சாதாரண கண் பரிசோதனையைக் கூடச் செய்துகொள்ளாமல் இருப்பார்கள். தொடக்கத்தில் எளிமையான சிகிச்சையில் சரியாகிவிடும் கண் பிரச்சினையைக் கவனிக்காமல், கண் பார்வையையே போக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடுவார்கள்.

புத்தக மருத்துவர்

மேற்சொன்ன இரண்டு நிலையில் இருப்பவர்களுக்கு இடைப்பட்ட சிலர் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ச்சியாகத் தங்களின் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறுபவர்கள். ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் குடும்ப மருத்துவர், அந்தக் குடும்பத்தினருக்கு இருக்கும் பிரச்சினைகளைத் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்ற சிறப்பு மருத்துவர்களை அணுகுவதற்கு வழி ஏற்படுத்தித் தருவார்.

இந்த அணுகுமுறையால், குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறும் நோயாளிக்கு நோய் குறித்த தெளிவான புரிதலும், அதற்கான சிகிச்சை முறைகளும், சிகிச்சை அளிக்கும் நிபுணர் குறித்த விவரங்களும் தெரியவரும். குடும்ப மருத்துவர் என்னும் முறையே தேய்ந்துவிட்ட இன்றைய சூழலில், நோயாளிகளின் தடுமாற்றத்தைப் போக்குவதற்கு இந்த ‘செகண்ட் ஒப்பினியன்’ நூல் பெரிதும் உதவும். ஆம், இதை புத்தக வடிவில் உள்ள குடும்ப மருத்துவர் என்று சொல்லலாம்.

நோய்களைப் புரிந்துகொள்ள

இன்றைக்குப் பெரிதும் ஆபத்தான நோயாகக் கருதப்படும் இதய நோய் குறித்த பல தகவல்களும் அதற்கான சிகிச்சை முறைகளையும் பற்றி இந்நூலின் பல கட்டுரைகளில் விரிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. உயர் ரத்தஅழுத்தத்தை எளிதாக எப்படிச் சமாளிக்கலாம், கணையத்தைக் காப்பதன் மூலம் முழு உடல் ஆரோக்கியத்தையும் எப்படிப் பெறலாம், நெஞ்சுவலி வருவதற்கு நிமோனியாவும் எப்படிக் காரணமாகிறது, அலட்சியமாகக் கருதப்படும் சிறுநீர்த் தொற்று சிறுநீரகத்தை எப்படிப் பாதிக்கும் என்பது போன்ற கட்டுரைகளைப் படித்தால் நிச்சயம் நோய் குறித்த சரியான புரிதலும், சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பதன்மூலம் நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் தைரியமும் வரும். புற்று நோய், நீரிழிவு நோய், ஹெர்னியா, மூல நோய் உள்ளிட்ட பல நோய்களின் தன்மைகளை விளக்கும் 42 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

தனக்குத் தெரிந்ததை எல்லாம் எழுதிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இடையில், வாசகருக்கு எது தேவையோ அதை எழுதுபவர் டாக்டர் கு. கணேசன். மருத்துவத் துறையோடு எழுத்துத் துறையிலும் தனக்கிருக்கும் நெடிய அனுபவத்தால் ஒவ்வொரு கட்டுரையையும் படிப்பவருக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டு சேர்த்து, இந்த நூலிலும் தமது நோக்கத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். வாசிப்பு அனுபவத்தில் இந்த ‘செகண்ட் ஒபினியன்’ நோயைக் குறித்த ‘ஃபர்ஸ்ட் ஒபினியனை’ தெளிவாக அளித்துவிடுகிறது என்பது நூலின் சிறப்பு.

செகண்ட் ஒப்பினியன்

டாக்டர் கு. கணேசன்

சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை – 600 004. தொடர்புக்கு: 044-42209191

ஆங்கில​ம் அறிவோமே 208: நான் ‘பாஸ்’ ஆயிட்டேன்!

Published : 10 Apr 2018 11:41 IST


ஜி.எஸ்.எஸ்.




கேட்டாரே ஒரு கேள்வி

Kaarma என்றால் என்ன? அது ஏதாவது லத்தீன் வார்த்தையா?

எனக்குத் தெரிந்து kaarma என்று ஒரு வார்த்தை கிடையாது. ஒருவேளை அது karma-வாக இருக்கலாம். அதாவது கர்மா. சம்ஸ்கிருத மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற வார்த்தை இது. “முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்”. அந்த முன்வினைதான் கர்மா.

“Bottom என்பதற்குக் கீழே என்பதைத் தவிர வேறு அர்த்தம் இருக்கிறதா?” என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

Bottom என்பது ஒன்றின் மிகக் கீழ்ப்பகுதி.

முதுகுக்குக் கீழ் உள்ள பகுதியையும் ​bottom என்று அழைப்பார்கள்.

Bottom என்பது verb ஆகவும் பயன்படும். Those submarines cannot bottom என்றால் அவற்றால் கடலின் தரைப் பகுதியைத் தொட முடியாது என்று பொருள்.

Always Eat An Apple Says A Nurse என்பது எதற்கான Mnemonics என்பது தெரியுமா?

ஏழு கண்டங்களுக்கான முதல் எழுத்துகளை இவை நினைவுபடுத்துகின்றன. அதாவது Asia, Europe, Australia, Africa, South America, Antartica, North America.

Latitude, Longtitude ஆகிய இரண்டு வார்த்தைகளில் எது அட்சரேகை, எது தீர்க்கரேகை என்பதில் சில மாணவர்களுக்குக் குழப்பம் ஏற்படலாம் (இரண்டுமே கற்பனைக் கோடுகள்). Latitude என்பது கிழக்கு மேற்காகச் செல்வது. அதாவது அட்சரேகை. Longtitude என்பது வடக்கு, தெற்காகச் செல்வது அதாவது தீர்க்க ரேகை.

Latitude is Flatitude என்ற ஒரு வாக்கியத்தை நினைவில் கொள்ளுங்கள். Flat என்றால் நெடுஞ்சாண்கிடையாக என்பது உங்களுக்குத் தெரியும். அதாவது படுத்த வாக்கில். இப்போது கிழக்கு மேற்காகச் செல்வதுதான் Latitude என்பது மனதில் பதிந்து விடும். இன்னொன்றுதான் (மேல் கீழாக அதாவது வடக்கு தெற்காகச் செல்லும்) Longtitude.

இப்படித் தொடர்புடைய பல்வேறு வார்த்தைகளை நினைவுகொள்வதற்கான உத்திதான் Mnemonics.

Life Insurance, Life Assurance இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

ஆயுள் காப்பீடு எனப்படும் Life Insurance குறித்து அறிந்திருப்பீர்கள். நீங்கள் மாதா மாதம் அளிக்கும் தொகை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உங்கள் கைக்கு வந்து சேரும். இடையில் இறப்பு நேர்ந்தால் இறுதியில் கிடைக்கும் தொகை அப்போதே உங்கள் வாரிசுதாரருக்கு அளிக்கப்படும்.

Life Assurance என்றால் உங்கள் வாழ்க்கைக்கோ ஆயுளுக்கோ உறுதிமொழி அளிக்கப்படுகிறது என்பதல்ல. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உங்களுக்கு முதிர்வுத் தொகை வந்து சேரும். இதற்குத்தான் Assurance. மிகப் பெரும்பாலும் Life Assurance Policy-க்களில் இறந்துவிட்டால் எந்த அதிகப்படி தொகையையும் கொடுக்க மாட்டார்கள்.

Pass on, pass out, pass up ஆகிய மூன்றுக்கும் என்ன வேறுபாடு?

pass on என்பதற்கு இருவித அர்த்தங்கள் உண்டு. இறந்துபோவ​தை அப்படிக் குறிப்பிடுவார்கள். His wife passed on three years ago. ஒன்றை மற்றவருக்கு அனுப்புவதையும் அப்படிக் குறிப்பிடுவார்கள். Please pass the message on to all.

Pass out என்றால் நினைவிழத்தலைக் குறிப்பிடுவார்கள். My brother has made a complete recovery and remembers everything that happened before he passed out.

Pass up என்றால் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறுதல். I shall never forgive myself if I passed up an opportunity like this.

Earth எனும் வார்த்தைக்கு எதிர்ச்சொல் unearth என்பதா?

நண்பரே, earth என்பது noun ஆகப் பயன்படுத்தப்படும்போது அது பூமியைக் குறிக்கிறது.

Unearth என்றால் புதைக்கப்பட்டிருந்த ஒன்றை வெளியில் எடுப்பது. ஆனால் (மீண்டும்) புதைப்பதை ‘earth’ என்ற வார்த்தையின் மூலம் பயன்படுத்தமாட்டார்கள். எனவே earth என்பதை இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.

“Either என்றால் இரண்டில் ஒன்று என்றுதானே பொருள்? I want either coffee or tea என்றால் அப்படித்தான் அர்த்தமாகிறது. ஆனால், They planted roses on either side of the road என்று ஒரு நாளிதழில் படித்தேன். ஆனால், அந்தச் சாலையில் இருபுறங்களிலும் ரோஜாச் செடிகளை வைத்திருந்தார்கள். நாளிதழில் தவறாகக் குறிப்பிட்டார்களா?’’.

இந்த இடத்தில் either என்பது each என்ற வார்த்தைபோலப் பயன்படுகிறது. Each side எனும்போது இரு பக்கங்களிலும் என்ற அர்த்தமாகிறது.

இப்படி either என்ற வார்த்தை இரண்டில் ஒன்று என்பதற்குப் பதிலாக இரண்டும் என்ற பொருளில் சில நேரம் பயன்படுத்தப்படும். பெரும்பாலும் side, end, extreme போன்ற வார்த்தைகளுக்கு முன்பு either இடம்பெறும்போது இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

Domain என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறேன். இதன் அர்த்தம்தான் என்ன?

நண்பரே domain என்பது ஒருவர் தன் பிடிக்குள் அல்லது கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு பகுதி. The French domains என்றால் பிரெஞ்சுக்காரர்களின் வசமுள்ள பகுதி என்று பொருள். He treated the business as his private domain என்றால் அந்த வியாபாரத்தை அவர் தனது கைப்பிடிக்குள் வைத்திருப்பதாகக் கருதுகிறார் என்று பொருள்.

Public domain என்றால் அதிலுள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும் தாராளமாகப் பார்க்கலாம் என்று அர்த்தம்.

கணினிப் பயன்பா​ட்டில் ஒரே மாதிரியான பிற்சேர்க்கை உள்ள வலைத்தளங்களின் தொகுப்பை இப்படிக் குறிப்பிடுவார்கள்.

.com, .in, .org போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.


போட்டியில் கேட்டுவிட்டால்?

If you are________, you will be deported to the island; that is the rule of this land.

a) Upset

b) Stupid

c) Innocent

d) Troublesome

e) Charming

எப்படி இருந்தால் ஒருவரை ஒரு தீவுக்குக் கடத்துவார்கள்? சோக வயப்பட்டவரையா? முட்டாளையா? அப்பாவியையா? இடையூறு விளைவித்துக்கொண்டிருப்பவரையா? அழகானவரையா?

முட்டாளான ஒரு சர்வாதிகாரி இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் அப்படி ஒரு தண்டனையைக் கொடுக்கக் கூடும். ஆனால், அப்படியில்லாத ஒரு ஆட்சியாளர் இடையூறு விளைவிப்பவருக்குத்தான் தண்டனை கொடுப்பார். எனவே troublesome என்ற வார்த்தையே இங்குப் பொருந்துகிறது.

If you are troublesome, you will be deported to the island; that is the rule of this land.

சிப்ஸ்

​திசை திருப்புவது என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

Digress

Cook யார்? Chef யார்?

சமையல்காரர் cook. ஒரு ஹோட்டல் அல்லது ரெஸ்டாரெண்ட்டில் பணிபுரியும் தொழிற் முறை சமையல் கலைஞர் Chef.

​Famine என்பதற்கும், drought என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Famine என்பது உணவுப் பஞ்சம், மழையின்மையால் ஏற்படும் தண்ணீர் பஞ்சம், drought.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com
பயனுள்ள விடுமுறை: கணினி கற்க எங்கே போகலாம்?

Published : 17 Apr 2018 10:51 IST

எஸ்.எஸ்.லெனின்



இன்று வீட்டுக்கொரு மரம் இருக்கிறதோ, இல்லையோ வீட்டுக்கொரு கணினி வந்துவிட்டது. அதிலும் இணைய வசதி இருந்தால் பலவற்றை இருந்த இடத்திலேயே கற்றுக்கொள்ளலாம். ஆனாலும், சிலவற்றை முறையாக கற்றுக்கொள்ள பயிலரங்குகளுக்கோ, கணினி மையங்களுக்கோ செல்ல வேண்டும்.

‘ஆப்’ டெவலப்பர் ஆகலாம்

ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் அடிப்படையிலான செயலிகளை உருவாக்குவது தற்போது வளர்ந்து வரும் துறையாகவும், இளைஞர்களுக்கு ஆர்வமூட்டக் கூடியதாகவும் உள்ளது. ஜாவா புரோகிராமிங், அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் தொடர்பான தகுதிப் படிப்புகளை முடித்தவர்கள், ஆண்ட்ராய்டு செயலிகள் உருவாக்கத்தைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இந்த வரிசையில் ஐஃபோன், பிளாக்பெர்ரி, விண்டோஸ் என இயங்கு தளங்களுக்கு ஏற்றவாறு கூடுதல் செயலிகள் உருவாக்கத்தையும் கற்றுக்கொள்ளலாம். ஓரிரு மாதங்களுக்கு அடிப்படைகளை மட்டும் பயிற்சி மையத்தில் கற்றுக்கொண்டால், கூடுதல் திறன்களை அவற்றுக்கென இருக்கும் இலவச இணையதளங்கள் மூலமாகவே பெற முடியும்.

இணையான இன்னொரு படிப்பு

பிளஸ் டூ தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள் அடுத்து மேற்கொள்ளவிருக்கும் உயர்கல்விக்கு உதவும் வகையில் பட்டயப் படிப்புகளில் சேரலாம். உதாரணத்துக்கு, பொறியியல், கணினி அறிவியல் பட்டப் படிப்புகள் சேர விரும்பும் மாணவர்கள் அந்தப் பாடங்களுக்கு உதவும் இணையான மென்பொருள் திறன்களை உள்ளடக்கிய பட்டயப் படிப்பில் சேரலாம். கல்லூரியில் பயிலும் பாடங்கள் தொடர்பான கூடுதல் செய்முறை அனுபவத்தை இந்த பட்டயப் படிப்புகள் வழங்குவதாக அமைவது அவசியம். இவை ஓராண்டு முதல் 3 ஆண்டுகள்வரை வழங்கப்படுகின்றன. சில கல்லூரிகள் தமது வளாகத்திலேயே மாணவர்கள் மேற்கொள்ளும் பட்டப்படிப்புக்கு இணையான மற்றுமொரு பட்டயம் அல்லது பட்டப் படிப்பை வழங்குகின்றன. எனவே அவை குறித்தும் தெளிவாக விசாரித்துச் சேரலாம்.

வெப் டிசைனிங், கம்ப்யூட்டர் எய்டட் டிசைன் அண்ட் டிராயிங், பல்வேறு புரோகிராமிங் லாங்குவேஜ் படிப்புகள் போன்றவற்றில் பொறியியல், அறிவியல் மேற்படிப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் சேரலாம். மேலும் தற்போது வரவேற்பைப் பெற்று வரும் Data Mining and Analysis, Cyber Security and Ethical Hacking, RDBMS, Digital Marketing தொடர்பான சான்றிதழ் அல்லது டிப்ளமா பயிற்சிகளில் சேரலாம்.

இன்றைய தேதியில் ‘கம்ப்யூட்டர் கோர்ஸ்’ என்று சொன்னாலே அனிமேஷன், மல்டிமீடியா, கிராஃபிக்ஸ் டிசைனிங் தொடர்பான படிப்புகளே மாணவர்களின் உடனடி தேர்வாக இருக்கின்றன. கணினி விளையாட்டுகளும் திரைப்படங்களும் இந்த ஆர்வத்தை மாணவர்களிடம் விதைத்திருக்கின்றன.

இவை தவிர அக்கவுண்டிங் சார்ந்த கணினிப் பயிற்சிகள் மேல்நிலை வகுப்பில் வணிகவியல், கணக்கு பதிவியல் படித்த மாணவர்களுக்குத் தொலைநோக்கில் உதவிகரமாக அமையும்.

எங்கே சேரலாம்?

தனியார் பயிற்சி மையங்கள் பல்வேறு வகையிலான கணினி படிப்புகளைக் கட்டண அடிப்படையில் வழங்குகின்றன. இவற்றில் மாணவரின் உயர்கல்வி ஆர்வம், நிதி ஒதுக்கீடு, பயிற்சிக்கான கால அளவு, பயிற்சி மையத்தின் கட்டணம் ஆகியவற்றைப் பொறுத்துப் பெற்றோர் உதவியுடன் கலந்தாலோசித்து ஒரு தீர்மானத்துக்கு வரலாம்.

கணினி வசதிகள், நூல்கள், திறமையான பயிற்றுநர் ஆகியவற்றைப் பற்றி விசாரித்தபின் மையத்தில் இணைவது நல்லது. கோடை வெயிலில் அதிகத் தொலைவுக்கு அலைவதும், பயணங்கள் மேற்கொள்வதும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு உகந்ததல்ல என்பதால், உங்கள் பகுதியில் இருக்கும் பல்வேறு பயிற்சி நிலையங்களை அணுகி பாடத் திட்டங்கள், கட்டண விகிதங்களை ஒப்பிட்டு முடிவுக்கு வரலாம். சில பயிற்சி மையங்கள் பெயருக்கு நுழைவுத் தேர்வுகளை நடத்தியும், மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சமூக அடிப்படையிலும் சலுகைகள் அளிப்பார்கள். பெரும்பாலும் சேர்க்கையை அதிகரிப்பதற்கான அறிவிப்புகள் என்றபோதும், அவை பயனுள்ளதாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சில கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அரசின் நிதி உதவியுடன் பயிற்சி மையங்களை நடத்திவருகின்றன. அவற்றின் சார்பில் வழங்கப்படும் கணினி சார்ந்த இலவசப் பயிற்சிகளையும் விசாரித்து சேர்ந்து பயனடையலாம்.

ஆங்கிலம் அறிவோமே 209: தொட்டதெல்லாம் பொன் ஆனால் மகிழ்ச்சியா?

Published : 17 Apr 2018 11:02 IST


ஜி.எஸ்.எஸ்.






கேட்டாரே ஒரு கேள்வி

நிறைய மதிப்பெண் எடுத்தால் ‘good marks’ என்கிறோம். குறைவான மதிப்பெண் எடுத்தால் ‘bad marks’ என்று கூறுவதில்லையே. ‘Poor marks’ என்றுதானே கூறுகிறோம். இதற்கு ஏதாவது பின்னணி உண்டா?

வீட்டிலுள்ளவர்கள் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டார்கள் என்றால் அதை எப்படிக் குறிப்பிடலாம்?

They are going out என்றா அல்லது They have gone out என்றா?

இப்போது அவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் They are going out. இது present continuous tense.

இப்போதுதான் கிளம்பிச் சென்றார்கள் என்றால் They have gone out. அதாவது அவர்கள் வீட்டில் இப்போது இல்லை. இது present perfect tense.

Present Perfect Tense பயன்பாடு குறித்து இன்னும் கொஞ்சம் பார்ப்போம். கடந்த காலத்தில் நடைபெற்ற ஒரு செயல்பாட்டின் விளைவு இன்னமும் தொடர்கிறது என்றால் Present Perfect Tense-ஐப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

I have lost my purse என்றால் என் பர்ஸ் தொலைந்துவிட்டது என்பதுடன் இப்போதுவரை அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அர்த்தமாகிறது.

We bought a new car என்றால் நாங்கள் ஒரு காரை வாங்கினோம், அவ்வளவுதான்.

We have bought a new car என்றால் நாங்கள் ஒரு காரை வாங்கினோம் என்பதுடன் அந்த கார் இப்போது எங்களிடம் இருக்கிறது என்பதையும் அது குறிக்கிறது.

“Midas touch என்கிறார்களே, சிறுவயதில் நான் படித்த ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ மைதாஸ்தான் இவரா என்பதைத் தெளிவு படுத்துங்கள்”.

ஆமாம். கதையில் வரும் மைதாஸ் மத்தியத் துருக்கியைச் சேர்ந்வர் கடவுளிடம் பெற்ற வரத்தின்படி அவர் எதைத் தொட்டாலும் பொன்னாகும். ஏதோ நினைவில் தன் மகளையும் அவர் தொட்டுவிடுகிறார். மகளும் (உண்மையாகவே) தங்கச் சிலையாகிவிட, மைதாஸ் தன் முட்டாள்தனத்தை எண்ணி வருந்துகிறார். ஆகக் கதையின்படி Midas Touch என்பது பேராசைக்கு அடையாளம். துயரமான விளைவுக்கான குறியீடு.

ஆனால், ஆங்கில மொழியில் Midas Touch என்பது ‘தொட்டதெல்லாம் துலங்கும்’ என்கிற அர்த்தத்தை மட்டுமே அளிக்கும்.

முக்கியமாக வியாபாரத்தில் எதைத் தொட்டாலும் மிகச் சிறப்பான விளைவுகளை ஒருவரால் கொண்டுவர முடிந்தால் அவருக்கு Midas Touch இருப்பதாகக் கூறுவார்கள்.

“I am on the side of the angels என்பதன் சரியான அர்த்தம் என்ன?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

“நான் நியாயத்தின் பக்கம் இருக்கிறேன்” என்று இதற்குப் பொருள். அதாவது தேவதைகள் நியாயத்தையும், சாத்தான்கள் அநியாயத்தையும் குறிக்கின்றன.

இந்த இடத்தில் பிரிட்டனைச் சேர்ந்த அறிஞர் பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் கூறிய வாக்கியங்கள் நினைவுக்கு வருகின்றன. சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டை வெளியிட்ட நேரம் அது. குரங்குகளிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது உட்பட. இது குறித்து டிஸ்ரேலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘Is man an ape or an angel? Now I am on the side of the angels” என்றார்.

“Hysterectomy என்றால் என்ன?”

- ectomy (அதாவது எக்டொமி) என்றால் அறுவைச் சிகிச்சையின் மூலம் ஏதோ ஒரு உடல் பகுதியை நீக்குவது.

Hysterectomy என்றால் கருவை நீக்குதல். Mastectomy என்றால் மார்பகத்தை நீக்குதல்.

Tonsillectomy என்றால் தொண்டைப் பகுதியில் உள்ள டான்சில்ஸ் சதையை நீக்குவது என்று பொருள்.

கேட்டாரே ஒரு கேள்வி நியாயமான சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. Poor marks என்று குறிப்பிடும் நாம் rich marks என்று குறிப்பிடுவதில்லைதான். அதேபோல good marks பயன்பாடு வெகு சகஜம். Bad marks அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.

பேசாமல் high marks, low marks என்று மட்டுமே கூறிவிடலாமே.

“விளம்பரங்களில் ‘Classified advertisements’ என்கிறார்களே அதற்கு என்ன பொருள்?”

நாளிதழ்களில் சிறிய எழுத்துகளில் பொதுவான தலைப்புகளின்கீழ் இத்தகைய விளம்பரங்கள் இடம்பெறுகின்றன. பிற பெரிய அளவிலான விளம்பரங்களைவிட இவற்றுக்கான கட்டணங்கள் குறைவாக இருக்கும். Matrimonial, Rental, Obituary போன்ற தலைப்புகளில் இவற்றைப் பார்க்கலாம்.

இந்த இடத்தில் ‘Classified advertisements’-களில் நாம் பார்க்கக்கூடிய சில abbreviations குறித்து அறிந்துகொள்வோம். அப்படி இடம்பெறும் கீழே உள்ள abbreviation-களின் விரிவாக்கங்கள் என்ன என்பதைச் சொல்ல முயலுங்கள்.

1.Vgc

2. Ff

3. Grad

4. K+b

5. Info

6. Pcm

மேலே கொடுக்கப்பட்டுள்ள classified advertisements abbreviations-களுக்கான விரிவாக்கங்கள் இதோ:

1.Vgc = very good condition

2. Ff = factory fitted (car)

3. Grad = graduate

4. K+b = kitchen and bathroom

5. Info = information

6. Pcm = per calendar month


தொடக்கம் இப்படித்தான்

பெருமழை பெய்யும்போது It is raining cats and dogs என்கிறார்களே. இதற்கு ஏதாவது பின்னணி உண்டா?

அந்தக் காலத்தில் இருந்த கூரை வீடுகளின் மேற்பகுதியில் பூனை, நாய் போன்ற வீட்டு விலங்குகள் மறைந்துகொள்ளும். பெருமழை பெய்யும்போது மேலிருந்து இவையும் கீழே விழுந்துவிடும். எனவே மிக அதிக அளவில் மழை பெய்யும்போது அதை It is raining cats and dogs என்றார்களாம்.

இது ஒரு செவிவழித் தகவல்தான். ஆனால், அறிவியல் வேறொன்றை ஏற்றுக்கொள்கிறது. அதன்படி ‘It is raining frogs’ எனலாம். தவளைகள் ஏரியில் உறவு கொள்ளும்போது அந்த ஏரியைச் சுழற்காற்று கடந்து சென்றால் அது தவளையின் கருவுற்ற முட்டைகளையும் அள்ளிச் செல்லும். காற்றுவெளியில் அந்த முட்டைகள் பொறிக்கப்படுகின்றன. காற்று தணிந்தவுடன் காற்றிலுள்ள எல்லா கனமான பொருள்களும் தரையை நோக்கி விழுகின்றன. தலைப்பிரட்டைகளும்தான்.

Lest என்றால்?

Otherwise.

Condiment என்றால் ஏலக்காயா?

இல்லை. Condiment-களில் ஏலக்காயும் ஒன்று. Condiment என்றால் உணவுக்குச் சுவையூட்டும் பொருள். ஏலக்காய் என்பது cardamom.

பாத்திரங்களில் ஏற்படும் அதுங்கலை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

Dent

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com
அனுபவம் புதுமை: இதுதான் காதல் என்பதா?

Published : 20 Apr 2018 09:59 IST

கா. கார்த்திகேயன்



ஓர் இளைஞனும் யுவதியும் சாதாரணமாகப் பார்த்துப் பேசிக்கொள்வதைக்கூடக் காதல் என்று நினைக்கக்கூடிய காலம் இது. இந்த விஷயத்தில் பதின் பருவத்தினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இரு பாலர் படிக்கும் கல்லூரி என்றால், வகுப்புத் தோழி யதார்த்தமாகப் பழகினால்கூட, மாணவர்கள் ‘மிஸ்டர் ரோமியோ’க்களாக மாறி கனவு காண ஆரம்பித்துவிடுவார்கள்.

இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத பருவம் என்பதால், அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. உடன்படிப்பவர்களும் அதே வயதுடையவர்கள் என்பதால், அவர்களுடைய வழிகாட்டலும் எதிர் மறையாக இருக்கும். ‘டேய், உன் ஆள் வருதுடா’ என்று தூபம் போட்டு காதல் நெருப்பை மூட்டிக்கொண்டே இருப்பார்கள்.

சம்பந்தப்பட்ட பெண் காதலிக்கிறாரா, இல்லையா; நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்ற நினைப்பெல்லாம் இனக்கவர்ச்சிக் காதலில் அடங்காது. சாதாரணமான பழக்கத்துக்கும் காதலுக்கும் வித்தியாசமும் தெரியாது. என்றாவது ஒரு நாள், ‘எல்லோரிடமும் பழகுவது மாதிரிதானே உன்னிடமும் பழகினேன். நீ தப்பா புரிஞ்சுக்கிட்டா என்ன பண்ண முடியும்’ என்று தோழி சொல்லும்போது சப்த நாடியும் அடங்கி, படிப்பு மறந்து, தூக்கம் துறந்து, அதிலிருந்து மீள கஷ்டப்படுபவர்கள் அனேகம். குறிப்பிட்ட யுவதி மீது இரு இளைஞர்களுக்கு இனக் கவர்ச்சியின் நீட்சி இருந்தால், ரணகளமாகிவிடும்.


ஓவியம்: பாலு

அப்படியொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஆளுமைத் திறன் தொடர்பான வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் எடுப்பது எனது வழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு நாள் மையத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். வழியில் கும்பலாக ஆட்கள் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அங்கே நான் பார்த்த காட்சி சினிமாவை நினைவுபடுத்தியது. சாலையின் இரு பக்கங்களிலும் ஆட்கள் குவிந்திருக்க, என்னுடைய மாணவர்கள் சரவணனும் பாபுவும் அருகே நின்றுகொண்டு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்கள். அருகே நின்றவர்கள் ரவுடிகளைப் போலத் தெரிந்தார்கள். அடிதடி நடப்பதற்கான சூழல் தென்பட்டது.

அங்கே என்னைப் பார்த்தவுடன் இருவரும் பம்மினார்கள். சூழலைக் கருத்தில்கொண்டு, ‘எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று கூறி அவர்களை அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். உடன் இருந்த சிலரிடம் விசாரித்த போதுதான் காதல் விவகாரத்தால் மோதிக்கொண்டது தெரிய வந்தது. அவர்களை என் வீட்டுக்கு வரவழைத்தேன். “என்னை ஒரு சகோதரனா நினைச்சு பிரச்சினையைச் சொல்லு” என்று சொன்னவுடன் கிளிசரின் இல்லாமலேயே சரவணனின் கண்கள் கலங்கின. “சார், நான் லவ் பண்ற பொண்னோட மனசை பாபு மாத்திட்டான். நானும் அவளும் ஆறு மாசமா நல்லாத்தான் பழகிட்டு இருந்தோம். இப்போ பாபுவோடத்தான் அதிகமா பழகுறா” என்றவனைக் குறுக்கிட்டேன்.

“நீ அந்தப் பொண்ண லவ் பண்றதை அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டியா?".

“இல்ல சார்”

“அந்தப் பொண்ணாவது உன்கிட்ட சொல்லுச்சா?”

“இல்ல சார். ஆனால் லவ் பன்றோம் சார்”.

சரவணனும் குழம்பி என்னையும் குழப்பமாகப் பார்த்தான். அவனை அனுப்பிவிட்டு பாபுவிடம் பேசிய போது அவனுடைய புலம்பல் வேறு மாதிரி இருந்தது. “என்னோட சாப்பாட்டை எடுத்து சாப்புடுவா, எனக்கு பர்த்டே கிப்ட் தந்தா, தினமும் மொபைல் போனில் பேசுவா” எனச் சொல்லிக்கொண்டே போனான். அவனையும் அனுப்பிவிட்டு, இரண்டு நாட்கள் கழித்து மையத்தில் படிக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்துப் பேசினேன்.

“லவ்வா, இல்லவே இல்ல” என்று மறுத்தார் அந்த பெண். “கிப்ட் தர்றது, சாப்பாட்டை எடுத்து சாப்புடுறது, அவுங்களுடன் சகஜமாகப் பேசுவதையெல்லாம் லவ்வுன்னு எடுத்துக்கிட்டா, நான் என்ன பண்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் உடன் படிக்கிற எல்லோருமே என் நண்பர்கள். அவ்வளவுதான், இதுக்கு மேல ஒன்றும் இல்லை” எனத் தெளிவாகக் கூறினார்.


பிறகு சரவணன், பாபு இருவரையும் ஒன்றாக உட்கார வைத்துப் பேசினேன்.

“சரவணா, அந்தப் பொண்ணு உன்னை லவ் பண்ணல”.

உடனே சரவணன், “சார் பாபுவ..” என்று இழுத்தவனை குறுக்கிட்டு “அட, அந்தப் பொண்ணு யாரையும் லவ் பண்ணலப்பா” என்றேன். உடனே ஆயிரம் வாட்ஸ் பல்பு அவர்கள் முகத்தில் ஒளிர்ந்தது. தனக்குக் கிடைக்கலே என்ற வருத்தத்தைவிட எதிராளிக்குக் கிடைக்கலே என்ற சந்தோஷம். பாடத்தைச் சொல்லி புரியவைப்பதைவிட இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லி புரியவைப்பதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது. நீண்ட நேரத்துக்குப் பிறகு அதைப் புரிந்துகொண்டார்கள். பிறகுதான் நிம்மதி அடைந்தேன்.

சமீபத்தில் ஒரு முன்னாள் மாணவரின் திருமணத்தில் அந்த மூவரையும் சந்திக்க நேர்ந்தது. தொழில், வேலை, குடும்பம் காரணமாக வெவ்வேறு இடத்தில இருந்தாலும் அவர்கள் மூவரும் இன்றும் நல்ல நட்பைத் தொடர்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே தெரிந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இன்றைய இளம் தலைமுறையினர் தான் ‘தனியாள்’ என்று சொல்லிக்கொள்வதைக் கவுரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். படிக்கும் காலமாக இருந்தாலும்கூட, தங்களுக்குத் துணை அவசியம் என்றும் நினைக்கிறார்கள். பதின் பருவத்தில் இனக்கவர்ச்சியால் உண்டாகும் இந்த உணர்வு, சிக்கலானதுதான். அது ஒரு ஆனந்த அனுபவமாக இருப்பதைப் போலத் தெரியலாம். ஆனால், மூழ்கடிக்கவும் செய்துவிடலாம். படிக்கும் பருவத்தில் எதிர் பாலினத்தினரிடம் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையே. அதைக் காதல் என்று கற்பனைக் கோட்டை கட்டுவது யாருடைய தவறு?

(அனுபவம் பேசும்)

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறைத் தலைவரான கா. கார்த்திகேயன், ஆளுமைத் திறன் தொடர்பாக எழுதிவருகிறார். இந்தத் துறை சார்ந்து மாணவர்களுக்காகவும் தொழில்முனைவோருக்காகவும் மூன்று நூல்களை எழுதியுள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நிகழ்ச்சி நடத்திவரும் இவர், கல்லூரிகளில் மென்திறன் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

NEWS TODAY 30.06.2026