Saturday, May 26, 2018

தூத்துக்குடி,ஓய்ந்தது,போராட்டம்,நிம்மதி!

துாத்துக்குடி:துாத்துக்குடியில், மூன்று நாட்களாக நடந்த போராட்டங்கள் ஓய்ந்து, நேற்று இயல்பு நிலை திரும்பியது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர். 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு' என்ற போர்வையில், 'பந்த்'துக்கு எதிர்க்கட்சியினர் விடுத்த அழைப்பை,
மக்கள் சட்டை செய்யவில்லை. மாவட்டத்தில், ஐ.ஏ.எஸ்., மற்றும் போலீஸ் அதிகாரிகள் முகாமிட்டு, இயல்பு நிலை திரும்ப, நடவடிக்கைகள் எடுத்தனர். இதனால், நேற்று முதல், வெளியூர் பஸ்கள் இயக்கம் துவங்கியது.




துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, மே, 22ல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில், சமூக விரோதிகள் புகுந்து, கலவரத்தை ஏற்படுத்தினர். கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிக்கப்பட்டன. போலீசார் துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர்; 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பிசுபிசுத்த, 'பந்த்'

துாத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத் தில், ஆரம்பத்தில் இருந்தே, தி.மு.க., - காங்., - கம்யூ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது, மக்கள் நம்பிக்கை இழந்தனர். கடந்த, 23ம் தேதி துாத்துக்குடி வந்த, தி.மு.க., செயல் தலைவர்

ஸ்டாலின், அரசு மருத்துவமனைக்குள் செல்ல முயன்ற போது, காயம் அடைந்தவர்களின் உறவினர்கள், அவரை முற்றுகையிட்டனர். 'இதுவரை போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல், தற்போது வந்தது ஏன்?' எனக் கேட்டு, வாக்குவாதம் செய்தனர். அவருடன் வந்த கமாண்டோ படையினர், ஸ்டாலினை மீட்டு சென்றனர். அப்போது ஸ்டாலினுடன் வந்த, எட்டு கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

துப்பாக்கிச் சூட்டுக்கு பின், கடைகள் திறக்கப் படாமல் இருந்ததால், அடிப்படை தேவை களுக்காக மக்கள், மூன்று நாட்களாக மிகுந்த சிரமப்பட்டனர். இதனால்,எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த, 'பந்த்' போராட்டத்தை புறக்கணித்தனர்.நான்காவது நாளான நேற்று, துாத்துக்குடியில் சிறிய கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டிருந்தன.

இலவச உணவு

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து துவங்கியது. பழைய பஸ் ஸ்டாண்ட், காமராஜ் காய்கறி மார்க்கெட், துறைமுக சாலை அருகே உள்ள, வ.உ.சி., மார்க்கெட் ஆகிய இடங்களில், காய்கறி விற்பனை நடந்தது. துாத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளின் உறவினர்களின் தேவைக்காக, 'அம்மா' உணவகம் நேற்று திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்பட உள்ள உணவகத்தில், மூன்று நாட்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்படும்.

நேற்று அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், கலெக்டர் சந்தீப் நந்துாரி ஆய்வு

செய்தார். காயம் அடைந்தவர்களுக்கு உதவியாக, உடன் இருக்கும் உறவினர்களுக்கு குடிநீர், உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க உத்தரவிட்டார்.அரசின் சிறப்பு பார்வையாளராக வந்துள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் டேவிதார், ககன்தீப்சிங் பேடி ஆகியோரும், நகரில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முகூர்த்த தினம் என்பதால், மண்டபங்களில் வழக்கம் போல, திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால், உறவினர்கள் கூட்டம் இல்லை.

கூடுதல், டி.ஜி.பி., விஜயகுமார், ஐ.ஜி.,க்கள் சைலேஷ்குமார் யாதவ், வரதராஜ், சண்முக ராஜேஸ்வரன், கபில்குமார் சரத்கர், எஸ்.பி.,க்கள் முரளிரம்பா, அருண் சக்திகுமார் உள்ளிட்டோர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அண்ணா நகர், முத்தம்மாள் காலனி, பிரையன்ட் நகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகரில் தான் மே, 23ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்பவர் பலியானார். அந்த பகுதி, ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிக் கப்படுகிறது. 20 கம்பெனி கமாண்டோ படையினர், அதிரடிப் படையினர் ரோந்துப் பணியில் உள்ளனர்.

நெல்லை, மதுரை, திருச்செந்துார் உள்ளிட்ட இடங்களுக்கு, அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், உள்ளூர் பஸ்கள் இயக்கப்பட வில்லை. துாத்துக்குடி, மெல்ல மெல்ல, இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

பாதிப்பில்லை

துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நேற்று, தமிழகம் முழுதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. சென்னையில்,
ஆங்காங்கே, கடைகள் அடைக்கப் பட்டிருந் தன.காலை நேரத்தில், அரசியல் கட்சியினரின் மறியல் காரணமாக, சென்னை, திருப்பூர், கோவை, கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட சில இடங்களில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

ஆட்டோக்களின் சேவை, 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. அதே நேரம், பஸ் போக்குவரத் தில் எந்த பாதிப்பும் இல்லை. ரயில்களும் வழக்கம் போல் இயங்கின. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை.
துணைவேந்தர் தேடல் குழு சர்ச்சை

Added : மே 25, 2018 23:44

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தரை, தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள தேடல் குழு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை, துணைவேந்தர் பதவி, ஓராண்டாக காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேடல்குழு தலைவராக, கவர்னர் சார்பில், குஜராத் விளையாட்டு பல்கலை துணைவேந்தர், ஜதின்சோனி நியமிக்கப் பட்டுள்ளார்.அரசு தரப்பில், குழுவின் உறுப்பினராக, கால்நடை பல்கலை முன்னாள் துணைவேந்தர், தங்கராஜும், சிண்டிகேட் சார்பில் உறுப்பினராக, பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர், தங்கமுத்துவும் நியமிக்கப் பட்டுள்ளனர். துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, ஓராண்டுக்குப் பின் அமைக்கப்பட்டுள்ள, இந்த தேடல்குழு, முறையாக அமைக்கப்படவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, விளையாட்டு பல்கலை நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கவர்னர் நியமித்துள்ள நபர் மட்டுமே, விளையாட்டு பல்கலையுடன் தொடர்புடையவர்; மற்ற இருவருக்கும், விளையாட்டு பல்கலையுடன் தொடர்பில்லை. நீதிபதி யாரும் நியமிக்கப்படவில்லை. விளையாட்டு வீரர்கள் யாரையாவது நியமித்திருக்கலாம்; அதையும் செய்யவில்லை.சமீபத்தில், அண்ணா பல்கலை துணைவேந்தராக, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை தேர்வு செய்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது விளையாட்டு பல்கலையின், தேடல் குழு தலைவராக, குஜராத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
முதுநிலை மருத்துவ படிப்பு: இன்று மீண்டும் கவுன்சிலிங்

Added : மே 25, 2018 23:44

சென்னை, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், இன்று நடைபெறுகிறது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், மே, 19 முதல் நடந்து வருகிறது. இதில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று நடைபெற இருந்தது.எதிர்க்கட்சிகள், நேற்று நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால், மாணவர்கள் பாதிக்கலாம் என்பதால், கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று கவுன்சிலிங் நடைபெறும் என, மருத்துவ கல்விக்கான தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
'நீட்' விடைக்குறிப்பு வெளியீடு மாணவர்களே மார்க்கை கணக்கிடலாம்

Added : மே 25, 2018 22:32



சென்னை 'நீட்' தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அலோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வு தரவரிசையின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 6ல் நடந்தது. இதில் 13 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் நேற்று சி.பி.எஸ்.இ.,யின் நீட் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்கள் வினாத்தாள் வகைக்கான விடைக்குறிப்பு மற்றும் விடைத்தாள்களில் அளித்த பதில்களின் நகலை https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த விடைக்குறிப்பை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை தாங்களே கணக்கிட்டு கொள்ளலாம். விடைகள் தவறாக இருந்தால் சரியான பதிலுக்கான ஆதாரங்களுடன் சி.பி.எஸ்.இ.,க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விடைக்குறிப்புகளையும், விடைத்தாள்களையும் நாளை மாலை 5:00 மணி வரை மட்டுமே ஆன்லைனில் பார்க்க முடியும்; அதன்பின் தேர்வர்களால் பார்க்க முடியாது என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.



Advertisement
இணையதள வழிமின் கட்டணம் நிறுத்தம்

Added : மே 25, 2018 22:24

சென்னை, பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி, கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், நாளை வரை, இணையதள மின் கட்டண சேவையை, மின் வாரியம் நிறுத்தியுள்ளது.மின் வாரியத்தின், மின் கட்டண மையங்களில் மட்டுமின்றி, இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' என்ற செயலி வாயிலாகவும், மின் கட்டணத்தை செலுத்தலாம். சென்னை, கோவை, திருச்சி உட்பட, ஒன்பது மண்டலங்களாக, மின் வாரியம் செயல்படுகிறது.திருச்சி மண்டலத்தின் மின் கட்டண, 'சர்வரில்' பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால், கரூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலுார், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த நுகர்வோர், நேற்று முதல், நாளை மாலை, 5:00 மணி வரை, இணையதளம் வாயிலாக, மின் கட்டணத்தை செலுத்த முடியாது என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
நம்பிக்கை, ஓட்டெடுப்பில்,குமாரசாமி ,அரசு, வெற்றி

dinamalar 26.05.2018

பெங்களூரு, கர்நாடக சட்டசபையில், நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, நம்பிக்கை ஓட்டெடுப்பில் சுலபமாக வெற்றி பெற்றது.




சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்த லில், பா.ஜ., தனிப் பெரும் கட்சியாக உருவெடுத் தது. அந்த கட்சியின்எடியூரப்பா, முதல்வராக பதவி ஏற்றார். ஆனால், பெரும்பான்மை நிரூபிப்பதற்கு முன், தன் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ம.ஜ.த.,- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. ம.ஜ.த.,வின் குமாரசாமி, முதல்வராக பதவி ஏற்றார். பெரும் பான்மையை நிரூபிக்க, 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.இதற்காக, நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப் பட்டிருந்த, காங்கிரஸ், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க் களும், தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்திய, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும், சொகுசு பஸ்களில் சட்டசபைக்கு வந்தனர்.

முதல்வர்குமாரசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரினார். அப்போது அவர் பேசுகையில்,''கடந்த, 2006ல், ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்ததால் தான், கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி அமைக்க முடிந்தது. நானோ, என் தந்தை தேவகவுடாவோ, ஒரு போதும் அதிகாரத்துக்காக ஆசைப்படவில்லை,'' என்றார்.

இதன் பின், எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பேசிய தாவது:தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், முதல்வர் பதவியை கேட்காமல்,ம.ஜ.த.,வுக்கு விட்டுக் கொடுத்தது ஏன். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், உடனடியாக, விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; இல்லையெனில், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, சட்டசபையிலிருந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் நடத்தப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில், ம.ஜ.த., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சுயேச்சைஎம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருந்தனர். அனைவரும் அரசுக்குஆதரவு தெரிவித்ததால், நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி

சபாநாயகர் பதவிக்கு, ஆளுங் கூட்டணி சார்பில், காங்கிரசின் ரமேஷ் குமார், பா.ஜ., சார்பில், முன்னாள் அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். ஆனால், , பா.ஜ., வேட்பாளர், தன் மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, காங்கிரசின் ரமேஷ் குமார், சபாநாயகராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.


பல்கலை பட்டமளிப்பு விழாமம்தாவுடன் பங்கேற்ற மோடி

dinamalar 26.05.2018

கோல்கட்டா:மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜியுடன், பிரதமர் நரேந்திர மோடி, விஸ்வ பாரதிபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.




மேற்கு வங்கத்தில்,திரிணமுல், காங்., தலைவர்,மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர், கோல்கட்டாவில், நோபல் பரிசு பெற்ற, மறைந்த கவிஞர், ரவீந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்ட,

விஸ்வபாரதி பல்கலை பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.இந்த விழாவில், பல்கலை வேந்தரான, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி, அண்டை நாடான, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேசுகையில், ''மறைந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், இந்திய மாணவர்கள், உலகளாவிய கண்ணோட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினார். இந்திய அடையாளத்துக்கு எப்போதும் முன்னுரிமை அளித்தவர்,'' என்றார்.மேலும், மாணவர்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்யப்படாததற்கு, மோடி மன்னிப்புகேட்டார்.

இதற்கு முன், 2008ல், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, விஸ்வ பாரதி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.அதேபோல், இந்த பல்கலை பட்டமளிப்பு விழாவில், மாநில

முதல்வர் பங்கேற்பது அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது.இதற்கு முன், 1972 - 77ல், மேற்கு வங்க முதல்வராக இருந்த, காங்.,கை சேர்ந்த சித்தார்த்த சங்கர் ரே, விஸ்வ பாரதி பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உள்ளார்.பிரதமர் மோடியை, மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த விழாவில், இருவரும்பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEWS TODAY 29.07.2026