Tuesday, June 19, 2018

நெல்லை பல்கலையில் ஆண்டுக்கு15 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிப்பு : தமிழகத்தில் முன்னோடி திட்டம்

Added : ஜூன் 19, 2018 05:47



திருநெல்வேலி: தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கும் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கப்படுகின்றன.
பல்கலை வளாகத்தில் 5 ஏக்கரில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை நிதியுதவிடன் 5 கோடி ரூபாயில் ஒரு மெகாவாட் சூரியமின் சக்தி தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. 3,080 தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பணிகள் முடிந்து விரைவில் மின்உற்பத்தி துவங்க உள்ளது. இங்கு தினமும் 4,500 முதல் 5,000 யூனிட்கள் வரையில் மின்சாரம் உற்பத்தியாகும். பல்கலையின் ஒரு நாள் மின்சார தேவை 3,000 யூனிட். எனவே ஆண்டு முழுவதும் உற்பத்தியாகும் 15 லட்சம் யூனிட் மின்சாரத்தையும், தமிழக மின்தொகுப்பிற்கு அனுப்பவுள்ள பல்கலை, தன் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்திற்கான கட்டண தொகையை பெறும்.அதன்படி இந்த திட்டத்திற்கான 5 கோடி ரூபாய் செலவையும் 7 ஆண்டுகளில் பெறமுடியும். இத்திட்டம் 25 ஆண்டு களுக்கு குறையாமல் இயங்கும் என் திட்டத்தின் பொறுப்பாளர் பல்கலையின் மரபு சாரா எரிசக்தி துறை தலைவர் டி.ஆர்.ராஜசேகரன் தெரிவித்தார்.
தாம்பரம் பாதாள சாக்கடை பணிகள்... இழுபறி! 10 ஆண்டுகளாக திட்டம் இழுத்தடிப்பு

Added : ஜூன் 19, 2018 00:49



தாம்பரத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம், 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இழுபறியில் உள்ளதால், திட்டம் எப்போது முடிவடையும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடையே எழுந்து உள்ளது.

சென்னை புறநகரில், தாம்பரம் பெருநகராட்சியில், மொத்தம், 39 வார்டுகள் உள்ளன. கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நகரில், ஒரு லட்சத்து, 74 ஆயிரத்து, 787 பேர் வசித்து வருகின்றனர். மொத்தம், 20.72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள, நகரின் அனைத்து பகுதிகளுக்கும், 2008ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டது.

திட்டம் :

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம், 160.97 கோடி ரூபாய் மதிப்பில், திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது. திட்டத்தில், கழிவுநீர் குழாய்கள் பதித்தல், ஆள்நுழைவு வழி அமைத்தல், வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், கழிவுநீர் அகற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைத்தல் என, பல கட்டங்களாக பிரித்து, பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் நடக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் பணிகள் துவங்கப்பட்ட, இந்த பாதாள சாக்கடை திட்டம், 10 ஆண்டுகள் ஆகியும், இதுவரை முடிக்கப்படவில்லை.

கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் என, பணி இரண்டு பகுதியாக நடந்து வருவதாகவும், மொத்தமாக, 90 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளதாகவும், தாம்பரம் நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.இழுபறிக்கு காரணம் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள சில இடங்களில், பூமிக்கு அடியில் உள்ள பாறைகளால், பணிகள் செய்ய இயலவில்லை என, ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், முன்னர் பணிகளை நிறுத்தியது.

குறிப்பாக, 16, 17 ஆகிய வார்டுகளில், பூமிக்கு அடியில், 10 - 18 அடி வரையிலும், 21வது வார்டு பகுதிகளில், 5 - 6 அடி வரையிலும், பாறைகள் இருந்ததால், குழாய் அமைக்க இயலவில்லை.அதனால், 2014ம் ஆண்டு, பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீதமுள்ள பணிகளை, தாம்பரம் நகராட்சி செய்து கொள்ள, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பின்னர், கிழக்கு தாம்பரம் பகுதிகளில், எஞ்சிய பணிகளை முடிக்க, 38 கோடி ரூபாய்க்கு, திருத்திய விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டது.

ஆனால், பணிகளை செய்ய எந்த நிறுவனமும் முன்வரவில்லை. 2014ம் ஆண்டு மத்தியில் தொடங்கி, 2015ம் ஆண்டு முடிய, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக, பணிகள் நடைபெறாமல் திட்டம் முடங்கியது.இறுதியாக, 2016ம் ஆண்டு, மார்ச் மாதம், பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையில் பணிகள் நடைபெறுவதால், சீரான போக்குவரத்து இன்றி, வாகன ஓட்டிகள் அவதியுறுவது, தினசரி நிகழ்வாக உள்ளது.

ஜூலையில் முடியும் :

கிழக்கு தாம்பரம் பகுதிகளில், கழிவுநீரேற்று நிலையம் உள்ளிட்ட, திட்டத்தின் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து, மின் இணைப்பு வழங்கும் பணிகள், தற்போது நடந்து வருகின்றன.நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை ஆகிய தரப்பில் இருந்து, அனுமதி பெறுவதில் சிக்கல் இருப்பதால், பணிகள் முழுமை அடைவதில் சிக்கல் உள்ளது. கிழக்கு தாம்பரம் பகுதிகளில், வேளச்சேரி பிரதான சாலையில் பணிகள் நடைபெறுவதில், சிக்கல் இருந்து வருகிறது. 10 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள இந்த திட்டம், விரைவில் முடிந்து விடும் என, தாம்பரம் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம், ஒவ்வொரு மண்டலமாக பிரித்து, அடுத்த மாதம் இறுதியில், சோதனை வெள்ளோட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி பொறியாளர், ரவிச்சந்திரன் கூறியதாவது: திட்டத்தில் தற்போது மொத்தம், 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. கிழக்கு பகுதியில் பாறைகள் இருந்ததால், சென்னை குடிநீர் வாரியம் பணிகளை கைவிட்டது. தாம்பரம் நகராட்சி, அந்த பணிகளை தற்போது முடித்துள்ளது. அடுத்த மாதம் இறுதியில், முதற்கட்ட சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். வீட்டு இணைப்புகளை நகராட்சியே கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான தொகை, பொதுமக்களிடம் இருந்து தவணை முறையில் வசூலிக்க உள்ளோம்.

எஞ்சியுள்ள பணிகளை முடிப்பதற்கு, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை என பல துறையினரிடம் அனுமதி பெறுவதில், பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், விரைவில் திட்டம் முடிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
சரி செய்யலாமே: உயிர் பலிக்காக காத்திருக்கிறது ரோடுகள்: விரிசல்,பள்ளங்களால் தொடரும் விபத்து

Added : ஜூன் 18, 2018 22:03

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் நகரம், கிராமம் என பேதமின்றி ரோடுகள் அனைத்தும் உயிர்கள் பலி வாங்க காத்திருப்பது போல் படுமோசமாக உள்ளது.
மாவட்டத்தில் ரோடுகள் பல குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. நான்கு வழிச்சாலையிலும் பள்ளங்கள் உள்ளன. இதன் மீது வாகனங்கள் செல்லும் போது நிலைதடுமாறி ஸ்டீரிங் தானாக திரும்பும் நிலை உள்ளது. இருசக்கர வாகன ஒட்டிகள் தடுமாறி விழுகின்றனர். வேகமாக வரும் கார்கள் டிவைடரில் மோதி விபத்திற்குள்ளாகின்றன.
சாத்துார் மெயின்ரோடு, தாயில்பட்டி ரோடு, வன்னிமடை ரோடு,நென்மேனி ரோடு, அருப்புக்கோட்டை ரோடுகள் மிக மோசமான நிலையில் உள்ளது. சாத்துாரில் இருந்து கோவில்பட்டி மற்றும் விருதுநகர் செல்லும் நான்கு வழிச்சாலை ரோட்டிலும் விரிசல்கள் அதிகம் உள்ளது. ரோடுகள் மட்டுமின்றி ஒரத்திலும் மழைநீரால் அரிப்பு ஏற்பட்டு இரண்டு அடி உயரம் பள்ளம் உள்ளதால் பலர் விபத்திற்குள்ளாகின்றனர். இருசக்கர வாகன ஒட்டிகள் வழுக்கி விழுகின்றனர். சேதமடைந்த ரோட்டை சீரமைக்க துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.
மதுரை காமராஜ் பல்கலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

Added : ஜூன் 19, 2018 05:49

புதுடில்லி: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவியிலிருந்து, தான் நீக்கப்பட்டதை எதிர்த்து, செல்லத்துரை தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த மனு, நாளை விசாரிக்கப்படவுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மதுரை மாவட்டச் செயலர் லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த மனுவில், 'மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரைக்கு, பேராசிரியராக 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் இல்லை. அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்திருந்தார். இதுபோல், 'டிராபிக்' ராமசாமியும் மனு செய்தார்.இந்த மனுக்களை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், செல்லத்துரையை துணைவேந்தராக நியமித்த உத்தரவை, ரத்து செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர், மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அப்துல் நசீர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னையில் 50 மாணவர்கள் கத்தியுடன் ரவுடித்தனம்

Added : ஜூன் 19, 2018 00:16



சென்னை: சென்னையில், கல்லுாரி மாணவர்கள், பட்டா கத்தியை சுழற்றியவாறு, ரவுடித்தனத்தில் ஈடுபட்டது, போலீசாரை அதிர்ச்சிஅடைய செய்துள்ளது.

தமிழகத்தில், நேற்று அரசு கல்லுாரிகள் திறக்கப்பட்டன. சென்னையில் உள்ள, நந்தனம், மாநிலக்கல்லுாரி மற்றும் பச்சையப்பன் கல்லுாரிகளுக்கு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, மாணவ - மாணவியர், ரயில் மற்றும் பஸ்களில் வந்து செல்கின்றனர்.

'ரூட் தல'கெத்துக்காகவும், மாணவியரின் கவனத்தை ஈர்க்கவும், மாணவர்கள், பஸ் மற்றும் ரயில்களில் பாட்டு பாடி, ஆட்டம்போட்டு ரகளையில் ஈடுபடுவர். இவர்களுக்கு தலைமை தாங்கும் மாணவரை, 'ரூட் தல' என, அழைக்கின்றனர்.இந்த, 'ரூட் தல' பதவியை பிடிப்பதில், கல்லுாரி மாணர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், யார் பெரியவர்கள் என்பதை காட்ட, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களில் வெட்டிக் கொள்வர்; வெடிகுண்டு வீச்சிலும் ஈடுபடுவர்.கல்லுாரிகள் திறந்த முதல் நாளான நேற்று, திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு - உயர் நீதிமன்றம் வழித்தடத்தில் செல்லும், 54 'எல்' பஸ்சில், நந்தனம் கல்லுாரிக்கு வந்த மாணவர்கள், 38 பேர், சைதாப்பேட்டை அருகே மாலையுடன் காத்திருந்தனர். அவர்களை, சைதாப்பேட்டை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது, முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க, மாலையுடன் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பின், போலீசார், அந்த மாணவர்களை, கல்லுாரி முதல்வர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர். அதேபோல், கிண்டி தொழிற்பேட்டை - அண்ணா சதுக்கம் வழித்தடத்தில் செல்லும், 45 'பி' பஸ்சில் வந்த, நந்தனம் கல்லுாரி மாணவர்கள், 31 பேர், சைதாப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே, தாரை தப்பட்டையுடன் ஆட்டம் போட்டு ரகளையில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் சுற்றிவளைத்தனர். விசாரணையில், அவர்கள், 'பஸ் டே' கொண்டாட இருந்தது தெரியவந்தது. அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார், பெற்றோர் முன்னிலையில் எச்சரித்து அனுப்பினர்.

ரணகளம் : திருவள்ளூர் மாவட்டம், காரனோடை - பாரிமுனை வழித்தடத்தில் செல்லும், 57 'எப்' பஸ்சில், நேற்று காலை, 9:00 மணிக்கு, பாரிமுனைக்கு வந்த, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், 17க்கும் மேற்பட்டோர், அந்த பகுதியையே ரணகளப்படுத்தினர்.அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர்களும், ரவுடிகளை போல், கத்தியை சுழற்றியவாறு, அந்த பகுதியில் இருந்தோரை மிரட்டினர். மாணவர்களை, பூக்கடை போலீசார் பிடிக்க முயன்றனர்.அப்போது, மாணவர்கள், பச்சையப்பன் கல்லுாரி உள்ள, பூந்தமல்லி நெடுஞ்சாலை நோக்கி ஓடினர்.அவர்களை, சினிமா பாணியில் துரத்திய போலீசார், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மடக்கிப் பிடித்தனர்.சில மணவர்கள், இரு சக்கர வாகனத்தில் மாயமாகிவிட்டனர். சிக்கியவர்களின் பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், 'பச்சையப்பன் கல்லுாரி' என, எழுதப்பட்டு இருந்த பேனர் மற்றும், 3 அடி நீளமுள்ள, பளபளக்கும், 10 கத்திகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கத்திகளை வைத்திருந்த, பச்சையப்பன் கல்லுாரி முன்னாள் மாணவர்கள், மணலி ஜெகன், 21, மணிகண்டன், 20, மற்றும் ஐ.டி.ஐ., படித்துள்ள, திருவள்ளூர் மாவட்டம், வெங்கலைச் சேர்ந்த, பிரபாகரன், 19, ஆகியோரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

அதிர்ச்சி : அதேபோல், வெங்கலைச் சேர்ந்த, 16 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டு, சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுஉள்ளான்.தாம்பரம் - பாரிமுனை வழித்தடத்தில் செல்லும், 21 'ஜி' பஸ்சில், கத்தியுடன், காமராஜர் சாலையில் இறங்கிய மாநிலக்கல்லுாரி மாணவர்கள் அஜித்குமார், 19, சுமன்ராஜ், 20, ஆகியோரை, அண்ணா சதுக்கம் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.இருவரிடமும், கத்தி மற்றும் கோடாரியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.கிண்டி பஸ் நிலையம் அருகே, ஏழு மாணவர்கள் சிக்கினர். அவர்களும் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.கல்லுாரி திறந்த முதல் நாளே, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகளை போல் அட்டூழியம் செய்தது, போலீசாரை அதிர்ச்சி

அடைய செய்துள்ளது.
இளம் பெண் வயிற்றில் பஞ்சை வைத்த டாக்டர்கள்

Added : ஜூன் 19, 2018 01:48

ஐதராபாத்: தெலுங்கானா மாநில தனியார் மருத்துவமனையில், இளம் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், ரெங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த, ஹரிதா, 25, என்ற பெண், பிரசவத்திற்காக, அப்பகுதியில் உள்ள, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின், ஹரிதாவுக்கு வயிற்று வலியும், வாந்தியும் தொடர்ந்ததால், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஏழு மாதங்களாகியும், வயிற்று வலி தீராமல், உடல் நிலை மோசமான நிலையில், ஹரிதாவை, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு, ஹரிதாவை சோதித்த டாக்டர்கள், 'ஸ்கேன்' செய்து பார்த்ததில், ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், கவனக்குறைவாக, அவரது வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்தது தெரியவந்தது. உடனே, அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், ஹரிதாவின் வயிற்றில் இருந்த பஞ்சை அகற்றினர். ஆனால், சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மீது, ஹரிதாவின் சகோதரர் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த்யோதயா கடம்பூரில் நிற்கும்

Added : ஜூன் 19, 2018

மதுரை: தாம்பரம்--திருநெல்வேலி அந்த்யோதயா ரயில் (16191) கடம்பூர்--வாஞ்சி மணியாச்சி இடையே பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜூன் 19) முதல் ஜூன் 30 வரை கடம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 47 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு திருநெல்வேலிக்கு மாலை 4:20 மணிக்கு செல்லும்.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...