Tuesday, June 19, 2018

சென்னையில் 50 மாணவர்கள் கத்தியுடன் ரவுடித்தனம்

Added : ஜூன் 19, 2018 00:16



சென்னை: சென்னையில், கல்லுாரி மாணவர்கள், பட்டா கத்தியை சுழற்றியவாறு, ரவுடித்தனத்தில் ஈடுபட்டது, போலீசாரை அதிர்ச்சிஅடைய செய்துள்ளது.

தமிழகத்தில், நேற்று அரசு கல்லுாரிகள் திறக்கப்பட்டன. சென்னையில் உள்ள, நந்தனம், மாநிலக்கல்லுாரி மற்றும் பச்சையப்பன் கல்லுாரிகளுக்கு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, மாணவ - மாணவியர், ரயில் மற்றும் பஸ்களில் வந்து செல்கின்றனர்.

'ரூட் தல'கெத்துக்காகவும், மாணவியரின் கவனத்தை ஈர்க்கவும், மாணவர்கள், பஸ் மற்றும் ரயில்களில் பாட்டு பாடி, ஆட்டம்போட்டு ரகளையில் ஈடுபடுவர். இவர்களுக்கு தலைமை தாங்கும் மாணவரை, 'ரூட் தல' என, அழைக்கின்றனர்.இந்த, 'ரூட் தல' பதவியை பிடிப்பதில், கல்லுாரி மாணர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், யார் பெரியவர்கள் என்பதை காட்ட, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களில் வெட்டிக் கொள்வர்; வெடிகுண்டு வீச்சிலும் ஈடுபடுவர்.கல்லுாரிகள் திறந்த முதல் நாளான நேற்று, திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு - உயர் நீதிமன்றம் வழித்தடத்தில் செல்லும், 54 'எல்' பஸ்சில், நந்தனம் கல்லுாரிக்கு வந்த மாணவர்கள், 38 பேர், சைதாப்பேட்டை அருகே மாலையுடன் காத்திருந்தனர். அவர்களை, சைதாப்பேட்டை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது, முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க, மாலையுடன் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பின், போலீசார், அந்த மாணவர்களை, கல்லுாரி முதல்வர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர். அதேபோல், கிண்டி தொழிற்பேட்டை - அண்ணா சதுக்கம் வழித்தடத்தில் செல்லும், 45 'பி' பஸ்சில் வந்த, நந்தனம் கல்லுாரி மாணவர்கள், 31 பேர், சைதாப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே, தாரை தப்பட்டையுடன் ஆட்டம் போட்டு ரகளையில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் சுற்றிவளைத்தனர். விசாரணையில், அவர்கள், 'பஸ் டே' கொண்டாட இருந்தது தெரியவந்தது. அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார், பெற்றோர் முன்னிலையில் எச்சரித்து அனுப்பினர்.

ரணகளம் : திருவள்ளூர் மாவட்டம், காரனோடை - பாரிமுனை வழித்தடத்தில் செல்லும், 57 'எப்' பஸ்சில், நேற்று காலை, 9:00 மணிக்கு, பாரிமுனைக்கு வந்த, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், 17க்கும் மேற்பட்டோர், அந்த பகுதியையே ரணகளப்படுத்தினர்.அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர்களும், ரவுடிகளை போல், கத்தியை சுழற்றியவாறு, அந்த பகுதியில் இருந்தோரை மிரட்டினர். மாணவர்களை, பூக்கடை போலீசார் பிடிக்க முயன்றனர்.அப்போது, மாணவர்கள், பச்சையப்பன் கல்லுாரி உள்ள, பூந்தமல்லி நெடுஞ்சாலை நோக்கி ஓடினர்.அவர்களை, சினிமா பாணியில் துரத்திய போலீசார், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மடக்கிப் பிடித்தனர்.சில மணவர்கள், இரு சக்கர வாகனத்தில் மாயமாகிவிட்டனர். சிக்கியவர்களின் பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், 'பச்சையப்பன் கல்லுாரி' என, எழுதப்பட்டு இருந்த பேனர் மற்றும், 3 அடி நீளமுள்ள, பளபளக்கும், 10 கத்திகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கத்திகளை வைத்திருந்த, பச்சையப்பன் கல்லுாரி முன்னாள் மாணவர்கள், மணலி ஜெகன், 21, மணிகண்டன், 20, மற்றும் ஐ.டி.ஐ., படித்துள்ள, திருவள்ளூர் மாவட்டம், வெங்கலைச் சேர்ந்த, பிரபாகரன், 19, ஆகியோரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

அதிர்ச்சி : அதேபோல், வெங்கலைச் சேர்ந்த, 16 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டு, சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுஉள்ளான்.தாம்பரம் - பாரிமுனை வழித்தடத்தில் செல்லும், 21 'ஜி' பஸ்சில், கத்தியுடன், காமராஜர் சாலையில் இறங்கிய மாநிலக்கல்லுாரி மாணவர்கள் அஜித்குமார், 19, சுமன்ராஜ், 20, ஆகியோரை, அண்ணா சதுக்கம் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.இருவரிடமும், கத்தி மற்றும் கோடாரியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.கிண்டி பஸ் நிலையம் அருகே, ஏழு மாணவர்கள் சிக்கினர். அவர்களும் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.கல்லுாரி திறந்த முதல் நாளே, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகளை போல் அட்டூழியம் செய்தது, போலீசாரை அதிர்ச்சி

அடைய செய்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024