Saturday, June 23, 2018

  எட்டு வழி ,பசுமை சாலை,திட்டத்திற்கான ,எதிர்ப்பு,மழுங்கியது!
 dinamalar 23.06.2018

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, ஆரம்பத்தில் எழுந்த எதிர்ப்புகள், தற்போது மழுங்கி விட்டன. கையகப்படுத்தப்படும், 1 ஹெக்டேர் நிலம், அதாவது, 2.4 ஏக்கருக்கு, அதிகபட்சம், 9.04 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதால், நிலங்களை தர, விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், இது வெளியில் தெரிந்தால் அரசியல் செய்ய முடியாது என்று நினைக்கும் கட்சிகளின் ஆதரவு, 'டிவி'கள், செய்தியாளர்கள் சிலர்,திட்டமிட்டு எதிர்ப்பை துாண்டியது, அம்பலமாகி உள்ளது. குழப்பம் ஏற்படுத்த நினைத்த அவர்களது முயற்சி, தோல்வியில் முடிந்துள்ளது.

சென்னை - சேலம் இடையே, எட்டு வழி பசுமை சாலை, 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைய உள்ளது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனால், சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, திட்டத்துக்கு எதிராக, மக்களை துாண்டி விட்டன.நிலம் கையகப் படுத்தும் பணி துவங்கியதும், சில இடங்களில், மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அங்கு, போர்வையாளர்கள் ஊடுருவி, மக்களை வன்முறை பாதைக்கு துாண்டி விட்டனர்.

வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, மன்சூர் அலிகான் என்ற நடிகர், வட மாநில வாலிபர், பியுஷ் மனுஷ், மாவோயிஸ்ட் ஆதரவு மாணவி, வளர்மதி உள்ளிட்ட சிலரை, போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, நிலம் அளவீடு செய்யும் பணி, துரித வேகத்தில் நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், ஐந்தாவது நாளாக, நிலம் அளவீடு பணி நடந்தது.
முட்டுக்கல்

உடையாப்பட்டி, வாழையடித்தோப்பு, கந்தாஸ்ரமம் பின்புறமுள்ள வரகம்பாடி சாலை, சன்னியாசிகுண்டு பகுதியில் அளவீடு செய்து, முட்டுக்கல் நடப்பட்டது.அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'நிலத்தை கொடுக்க விருப்பம் தான். ஆனால், இழப்பீடு தொகையை கூடுதலாக வழங்க, அரசு கருணை காட்ட வேண்டும். நிலம் கொடுக்க, எங்களுக்கு
எந்தஆட்சேபனையும் இல்லை' என்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா,வேடகட்டமடுவில் துவங்கிய, நிலம் கையகப்படுத்துவதற்கான பணி, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பட்டுக்கோணாம்பட்டி, நொனங்கனுார், காளிப்பேட்டை ஆகிய கிராமங்களில் பணிகள் நடந்தன.
தர்மபுரி மாவட்டத்தில், தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக, 53 கி.மீ.,க்கு அமையவுள்ள சாலையில், 43 கி.மீ.,க்கு, விவசாய நிலம் அளவீடு செய்யப்பட்டு, முட்டுக்கல் நடப்பட்டது.
சேலம், தர்மபுரி மாவட்ட மக்கள், நில அளவீட்டு பணிக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.

சேலம் கலெக்டர், ரோகிணி அளித்த பேட்டி:

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டம், 277.3 கி.மீ.,க்கு செயல்படுத்தப் படுகிறது. தடுப்புச் சுவருடன், 70 மீ., அகலத்தில், எட்டு வழிச்சாலையாக அமைவதால், விபத்துகள் அறவே குறையும்.சேலம் மாவட்டத்தில், 20 கிராமங்களில்,460ஏக்கர் தனியார் நிலம், 114ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 39 ஏக்கர் வனம் மற்றும் காப்புக்காடு என, 613ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் படுகிறது.

கடந்த, நான்கு நாட்களில், 11 கிராமங்களில், 853 பட்டாதாரர் நிலங்கள் உட்பட,311 ஏக்கர் நிலம், 18 கி.மீ.,க்கு அளவீடு செய்து முடிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத பட்டாதாரர்கள், முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். மற்றவர்கள், கூடுதல்இழப்பீடு கேட்டு முறையிட்டு உள்ளனர். சந்தை மதிப்பில், நகர்ப் புறங்களில், குறைந்த பட்சம், இரு மடங்கு, கிராமப்புறங்களில், இரண்டரை முதல் நான்கு மடங்கு வரை, இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
பிழைப்பூதியம்

குறிப்பாக, 500, ச.மீ., அளவில் நிலம், கான்கிரீட் வீடு, மரங்கள் இருந்தால், அதிகபட்சம், 27.5 லட்சம் ரூபாய்; மாட்டு கொட்டகை பாதிக்கப்பட்டால், 25 ஆயிரம் ரூபாய்; வீடுகள் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்வோருக்கு, மாதம், 3,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 36 ஆயிரம் ரூபாய் பிழைப்பூதியம் பெறலாம்.அத்துடன், அக்குடும்பத்துக்கு, குடியேற்றம் செய்ய, 50 ஆயிரம் ரூபாய் ஒரே தவணை, இடம் பெயர உதவித்தொகை, 50 ஆயிரம் ரூபாய்; சுயதொழில் புரிவோர், கைவினைஞர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தென்னை மரம் ஒன்றுக்கு, அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய், ஒட்டு மாமரத்துக்கு, 30 ஆயிரம் ரூபாய், உள்ளூர் மரம், 13 ஆயிரம், கொய்யாவுக்கு அதிகபட்சம், 4,200, பலா, 9,600, புளி, 9,375 ரூபாய் வீதம் இழப்பீடு கிடைக்கும்.பாக்கு மரத்துக்கு, 8,477 ரூபாய், பனை மரத்துக்கு, 5,000 ரூபாய் பெறலாம்.அதோடு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

குறிப்பாக, படித்த, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சிஅளித்து, சுயதொழில் துவங்க, மானியத்துடன்கூடிய, வங்கி கடனுதவி பெற்று தரப்படும்.இலவச வீட்டுமனைப் பட்டா, சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்ற பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படும். நிலம் வழங்கும் உரிமைதாரர் களுக்கு, 1 ஹெக்டேர், அதாவது,2.4 ஏக்கருக்கு, அதிகபட்சம், 9.04 கோடி ரூபாய், குறைந்தபட்சம், 21.52 லட்சம் ரூபாய் இழப்பீடு பெறலாம். இதனால், உண்மைக்கு புறம்பான, தவறான செய்திகளை, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயி ஒருவர் கூறியதாவது:

கூடுதல் இழப்பீடு வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், எதிர்காலத்தில் இத்திட்டம் பல தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதாலும், நாங்கள் இத்திட்டத்தை இனி எதிர்க்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்த ஒரு சிலரும், தங்கள் முடிவை மாற்றி கொண்டுள்ளனர். சில நாட்களாக, அரசியல் கட்சி ஆதரவு, 'டிவி' நிருபர்கள், மைக்கை நீட்டி, திட்டத்துக்கு எதிராக கேள்வி கேட்ட போது மட்டுமே, மக்கள், கூட்டமாக வந்து, அதற்கேற்ப பதில் கூறினர்.

அரசுக்கு எதிராக, போராட்டத்தை துாண்டிவிட்டு, குளிர் காய நினைத்த அவர்களது சுயரூபத்தை புரிந்து கொண்ட மக்கள், தற்போது தெளிவாகி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

3 பேருக்கு இலவச பட்டா

எட்டு வழிச்சாலைக்கு நிலம் வழங்கிய, அரமனுார் கிராமத்தைச் சேர்ந்த, ஷோபனா, பூங்கொடி, மணிமேகலை ஆகியோருக்கு, ஆச்சாங்குட்டப்பட்டி, புதுாரில், இலவச வீட்டுமனைப் பட்டாவை, கலெக்டர் ரோகிணி நேற்று வழங்கினார்.

தமிழகத்தில் கூடுதல், 'நீட்' தேர்வு மையங்கள்  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உறுதி 

dinamalar 23.06.2018

சென்னை, ''தமிழகத்தில், 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.





தேசிய அளவில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற, 'ஹேக்கத்தான்' என்ற, புதிய கண்டுபிடிப்புகளுக்கான இறுதி போட்டிகள், சென்னை, ஐ.ஐ.டி.,யில், நேற்று துவங்கின. இதில், அமைச்சர், பிரகாஷ்ஜாவடேகர் பேசியதாவது:நாட்டில், புதிய கண்டுபிடிப்பு களுக்கான விகிதம் குறைவாக உள்ளது. இதனால் தான், 'ஸ்டெதெஸ்கோப், கேமரா' உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

ஹேக்கத்தான் போட்டிக்காக, 50 ஆயிரம் மாணவர்கள், பல்வேறு துறைகளில், தீர்வுகளை கண்டறிந்து, புதிய கண்டுபிடிப்புகளை அளித்துள்ளனர். இவற்றின் வாயிலாக, கரும்பு வெட்டுவதற்கு கூட, புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்கலாம்.தேசிய அளவில், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப

வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்ட, 200 கண்டு பிடிப்பு திட்டங்களுக்கு, 600 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த ஆண்டு கூடுதலாக, 200 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.மேலும், மாணவர்களிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கும் பொருட்டு, ஆய்வு களுக்கான கட்டமைப்பு, ஆய்வு மேற் கொள்வோருக்கு உதவி தொகை போன்றவை வழங்கப்படுகின்றன. அதேபோல், புதியகண்டு பிடிப்புகளுக்கான, காப்பீட்டு உரிமங் களை பெற, கால அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு வினாத்தாள்களில், தவறுகள் ஏற்படு வதை தடுக்க, தமிழக அரசிடம், நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் கேட்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து, தமிழகத்தில், நீட் தேர்விற்கு கூடுதலாக, தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இதனால், தமிழக மாணவர்கள், வேறு மாநிலங்களுக்கு சென்று, தேர்வு எழுதும் நிலை தவிர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வகுப்பறைகளில், 'டிஜிட்டல் போர்டு'

''ஐந்து ஆண்டுகளில், நாடு முழுவதும், ஒன்பதாம் வகுப்பு முதல், கல்லுாரி படிப்பு வரை, 15 லட்சம் வகுப்பறைகளில், 'டிஜிட்டல் போர்டு' பயன்படுத்தி, வகுப்புகள் எடுக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர்அளித்த பேட்டி;-போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், தரமான

ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவக் கல்லுாரி களை கண்டறிந்து, நடவடிக்கைஎடுக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், தீவிரம் காட்டி வருகிறது. இதனால், குறிப்பாக மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, போதுமான நடவடிக்கைகளை, இந்திய மருத்துவ கவுன்சில் வாயிலாக, மத்திய அரசு எடுத்து வருகிறது.

இனி வரும் காலங்களில், டிஜிட்டல்போர்டு வழியாகவே, வகுப்புகள் எடுக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாடுமுழுவதும், ஒன்பதாம் வகுப்பு முதல், கல்லுாரி படிப்பு வரை, 15 லட்சம் வகுப்பறைகளில், 'ஆப்பரேஷன் டிஜிட்டல் போர்டு' என்ற, திட்டம் செயல்படுத்தப்படும். வகுப்பறைகளில், டிஜிட்டல் போர்டுவழியாக பாடம் நடத்தப்படும். இதன்மூலம், லட்சக்கணக்கான மாணவர்கள், நவீனமுறையில் கல்வி கற்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மகப்பேறு விடுப்பு அரசு புது உத்தரவு

Added : ஜூன் 22, 2018 19:47


சென்னை,:'இரட்டைக் குழந்தை பெற்ற, அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கும் விடுமுறை வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான அரசாணை, 2016 நவம்பரில் வெளியானது. அதில், திருமணமான அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பாக, தலா, 270 நாட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.ஆனால், முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகள் பெற்றால், அவர்களுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கு விடுப்பு அளிக்க அதிகாரிகள் மறுத்தனர்.இந்நிலையில், முதலாவது மகப்பேறில் எத்தனை குழந்தைகள் பெற்றாலும், அவர்களுக்கு இரண்டாவது மகப்பேறுக்கும், 270 நாட்கள் விடுமுறை அனுமதிக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, பணியாளர் நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணையை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது.
கும்பமேளா வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு

Added : ஜூன் 22, 2018 19:32

புதுடில்லி,:உத்தர பிரதேச மாநிலத்தில், கும்பமேளாவையொட்டி, மூன்று மாதங்களுக்கு, அலகாபாத் வரும் அனைத்து வாகனங்களுக்கும், சுங்கக் கட்டண விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆலோசனைஉத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அலகாபாதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பூரண கும்பமேளா நடப்பது வழக்கம்.கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடும், திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்ப மேளாவில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர். அடுத்தாண்டு, ஜனவரி, மகர சங்கராந்தி முதல், மார்ச், 4ம் தேதி மகா சிவராத்திரி வரை, பக்தர்கள் புனித நீராடலாம்.நேற்று, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், லக்னோவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'மூன்று மாதங்கள் நடக்கும், கும்பமேளாவில் பங்கேற்க, அலகாபாத் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, சாதுக்கள் கோரினர்.கோரிக்கைஅவர்களின் கோரிக்கையை ஏற்ற, முதல்வர் ஆதித்யநாத், கும்ப மேளாவையொட்டி, மூன்று மாதங்களுக்கு, அலகாபாத் வரும் அனைத்து வாகனங்களுக்கும், சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார்.
'லீவு' கேட்கும் போலீசாருக்கு உ.பி.,யில் தடாலடி நிபந்தனை

Added : ஜூன் 22, 2018 19:31

மொராதாபாத்,:'உத்தர பிரதேச மாநிலத்தில், குடும்ப விழாக்களில் பங்கேற்பதற்காக விடுமுறை எடுக்கும் போலீசார், அதற்கு ஆதாரமாக புகைப்படம் எடுத்து, மேலதிகாரிக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்ப வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மொராதாபாத் மாவட்ட, எஸ்.பி., ரவீந்தர கவுர் பிறப்பித்துள்ள உத்தரவு:பிறந்த நாள், திருமண நாள், திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் பங்கேற்பதாக கூறி, விடுமுறை எடுக்கும் போலீசார், அதற்கு ஆதாரமாக, விழாவில், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து, மேலதிகாரிக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்ப வேண்டும்.ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும், விடுமுறை எடுக்கும் போலீசாரின் பட்டியல் தயாரித்து, புகைப்படம் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், குடும்ப விழா என பொய்யாக கூறி, விடுமுறை எடுப்பதை தடுக்கலாம்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கமல் கட்சிக்கு அங்கீகாரம்

Updated : ஜூன் 23, 2018 04:36 | Added : ஜூன் 23, 2018 04:33 |





  புதுடில்லி: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியை, தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சியாக பதிவு செய்து, அங்கீகாரம் அளித்துள்ளது. நடிகர் கமல், பிப்ரவரியில், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவக்கினார். சமீபத்தில் டில்லி சென்ற கமல், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்தித்தார். தன் கட்சியை, அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி, அதற்கான மனு மற்றும் ஆவணங்களை கொடுத்தார். ஆவணங்களை பரிசீலித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், மக்கள் நீதி மையம் கட்சி, அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, நேற்று தெரிவித்ததனர். இது தொடர்பான சான்றிதழ், கமலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
வைகை,பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்

Added : ஜூன் 23, 2018 01:51

சென்னை: வண்டலுாரில், ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், வைகை, பாண்டியன், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாளை நேரம் மாற்றி இயக்கப்படுகின்றன.• சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு, மதியம், 1:40க்கு இயக்கப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், 2:00 மணிக்கும், காரைக்குடிக்கு மாலை, 3:45க்கு இயக்கப்பட வேண்டிய பல்லவன் எக்ஸ்பிரஸ், 4:00 மணிக்கும் இயக்கப்படும்• சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு, இரவு, 9:40க்கு இயக்கப்பட வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்• செங்கல்பட்டில் இருந்து, ஆந்திரா மாநிலம், காச்சிகுடாவுக்கு மாலை, 3:35க்கு இயக்க வேண்டிய காச்சிகுடா எக்ஸ்பிரசும்; காக்கிநாடா துறைமுகத்திற்கு, மாலை, 4:00க்கு இயக்கப்பட வேண்டிய சர்க்கார் எக்ஸ்பிரசும், மூன்று மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்• திருச்சியில் இருந்து இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ், எழும்பூருக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தடையும். மும்பை லோக்மான்ய திலக் - காரைக்கால் எக்ஸ்பிரஸ், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 30 நிமிடங்கள் தாமதமாகும்• திருச்செந்துார், காரைக்கால் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை எழும்பூருக்கு, ஒரு மணி, 10 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

NEWS TODAY 25.07.2026