Saturday, June 23, 2018

  எட்டு வழி ,பசுமை சாலை,திட்டத்திற்கான ,எதிர்ப்பு,மழுங்கியது!
 dinamalar 23.06.2018

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, ஆரம்பத்தில் எழுந்த எதிர்ப்புகள், தற்போது மழுங்கி விட்டன. கையகப்படுத்தப்படும், 1 ஹெக்டேர் நிலம், அதாவது, 2.4 ஏக்கருக்கு, அதிகபட்சம், 9.04 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதால், நிலங்களை தர, விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், இது வெளியில் தெரிந்தால் அரசியல் செய்ய முடியாது என்று நினைக்கும் கட்சிகளின் ஆதரவு, 'டிவி'கள், செய்தியாளர்கள் சிலர்,திட்டமிட்டு எதிர்ப்பை துாண்டியது, அம்பலமாகி உள்ளது. குழப்பம் ஏற்படுத்த நினைத்த அவர்களது முயற்சி, தோல்வியில் முடிந்துள்ளது.

சென்னை - சேலம் இடையே, எட்டு வழி பசுமை சாலை, 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைய உள்ளது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனால், சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, திட்டத்துக்கு எதிராக, மக்களை துாண்டி விட்டன.நிலம் கையகப் படுத்தும் பணி துவங்கியதும், சில இடங்களில், மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அங்கு, போர்வையாளர்கள் ஊடுருவி, மக்களை வன்முறை பாதைக்கு துாண்டி விட்டனர்.

வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, மன்சூர் அலிகான் என்ற நடிகர், வட மாநில வாலிபர், பியுஷ் மனுஷ், மாவோயிஸ்ட் ஆதரவு மாணவி, வளர்மதி உள்ளிட்ட சிலரை, போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, நிலம் அளவீடு செய்யும் பணி, துரித வேகத்தில் நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், ஐந்தாவது நாளாக, நிலம் அளவீடு பணி நடந்தது.
முட்டுக்கல்

உடையாப்பட்டி, வாழையடித்தோப்பு, கந்தாஸ்ரமம் பின்புறமுள்ள வரகம்பாடி சாலை, சன்னியாசிகுண்டு பகுதியில் அளவீடு செய்து, முட்டுக்கல் நடப்பட்டது.அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'நிலத்தை கொடுக்க விருப்பம் தான். ஆனால், இழப்பீடு தொகையை கூடுதலாக வழங்க, அரசு கருணை காட்ட வேண்டும். நிலம் கொடுக்க, எங்களுக்கு
எந்தஆட்சேபனையும் இல்லை' என்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா,வேடகட்டமடுவில் துவங்கிய, நிலம் கையகப்படுத்துவதற்கான பணி, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பட்டுக்கோணாம்பட்டி, நொனங்கனுார், காளிப்பேட்டை ஆகிய கிராமங்களில் பணிகள் நடந்தன.
தர்மபுரி மாவட்டத்தில், தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக, 53 கி.மீ.,க்கு அமையவுள்ள சாலையில், 43 கி.மீ.,க்கு, விவசாய நிலம் அளவீடு செய்யப்பட்டு, முட்டுக்கல் நடப்பட்டது.
சேலம், தர்மபுரி மாவட்ட மக்கள், நில அளவீட்டு பணிக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.

சேலம் கலெக்டர், ரோகிணி அளித்த பேட்டி:

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டம், 277.3 கி.மீ.,க்கு செயல்படுத்தப் படுகிறது. தடுப்புச் சுவருடன், 70 மீ., அகலத்தில், எட்டு வழிச்சாலையாக அமைவதால், விபத்துகள் அறவே குறையும்.சேலம் மாவட்டத்தில், 20 கிராமங்களில்,460ஏக்கர் தனியார் நிலம், 114ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 39 ஏக்கர் வனம் மற்றும் காப்புக்காடு என, 613ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் படுகிறது.

கடந்த, நான்கு நாட்களில், 11 கிராமங்களில், 853 பட்டாதாரர் நிலங்கள் உட்பட,311 ஏக்கர் நிலம், 18 கி.மீ.,க்கு அளவீடு செய்து முடிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத பட்டாதாரர்கள், முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். மற்றவர்கள், கூடுதல்இழப்பீடு கேட்டு முறையிட்டு உள்ளனர். சந்தை மதிப்பில், நகர்ப் புறங்களில், குறைந்த பட்சம், இரு மடங்கு, கிராமப்புறங்களில், இரண்டரை முதல் நான்கு மடங்கு வரை, இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
பிழைப்பூதியம்

குறிப்பாக, 500, ச.மீ., அளவில் நிலம், கான்கிரீட் வீடு, மரங்கள் இருந்தால், அதிகபட்சம், 27.5 லட்சம் ரூபாய்; மாட்டு கொட்டகை பாதிக்கப்பட்டால், 25 ஆயிரம் ரூபாய்; வீடுகள் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்வோருக்கு, மாதம், 3,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 36 ஆயிரம் ரூபாய் பிழைப்பூதியம் பெறலாம்.அத்துடன், அக்குடும்பத்துக்கு, குடியேற்றம் செய்ய, 50 ஆயிரம் ரூபாய் ஒரே தவணை, இடம் பெயர உதவித்தொகை, 50 ஆயிரம் ரூபாய்; சுயதொழில் புரிவோர், கைவினைஞர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தென்னை மரம் ஒன்றுக்கு, அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய், ஒட்டு மாமரத்துக்கு, 30 ஆயிரம் ரூபாய், உள்ளூர் மரம், 13 ஆயிரம், கொய்யாவுக்கு அதிகபட்சம், 4,200, பலா, 9,600, புளி, 9,375 ரூபாய் வீதம் இழப்பீடு கிடைக்கும்.பாக்கு மரத்துக்கு, 8,477 ரூபாய், பனை மரத்துக்கு, 5,000 ரூபாய் பெறலாம்.அதோடு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

குறிப்பாக, படித்த, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சிஅளித்து, சுயதொழில் துவங்க, மானியத்துடன்கூடிய, வங்கி கடனுதவி பெற்று தரப்படும்.இலவச வீட்டுமனைப் பட்டா, சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்ற பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படும். நிலம் வழங்கும் உரிமைதாரர் களுக்கு, 1 ஹெக்டேர், அதாவது,2.4 ஏக்கருக்கு, அதிகபட்சம், 9.04 கோடி ரூபாய், குறைந்தபட்சம், 21.52 லட்சம் ரூபாய் இழப்பீடு பெறலாம். இதனால், உண்மைக்கு புறம்பான, தவறான செய்திகளை, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயி ஒருவர் கூறியதாவது:

கூடுதல் இழப்பீடு வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், எதிர்காலத்தில் இத்திட்டம் பல தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதாலும், நாங்கள் இத்திட்டத்தை இனி எதிர்க்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்த ஒரு சிலரும், தங்கள் முடிவை மாற்றி கொண்டுள்ளனர். சில நாட்களாக, அரசியல் கட்சி ஆதரவு, 'டிவி' நிருபர்கள், மைக்கை நீட்டி, திட்டத்துக்கு எதிராக கேள்வி கேட்ட போது மட்டுமே, மக்கள், கூட்டமாக வந்து, அதற்கேற்ப பதில் கூறினர்.

அரசுக்கு எதிராக, போராட்டத்தை துாண்டிவிட்டு, குளிர் காய நினைத்த அவர்களது சுயரூபத்தை புரிந்து கொண்ட மக்கள், தற்போது தெளிவாகி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

3 பேருக்கு இலவச பட்டா

எட்டு வழிச்சாலைக்கு நிலம் வழங்கிய, அரமனுார் கிராமத்தைச் சேர்ந்த, ஷோபனா, பூங்கொடி, மணிமேகலை ஆகியோருக்கு, ஆச்சாங்குட்டப்பட்டி, புதுாரில், இலவச வீட்டுமனைப் பட்டாவை, கலெக்டர் ரோகிணி நேற்று வழங்கினார்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...