Sunday, January 6, 2019

குந்தையின் கண்முன்னே பெண் பயணியை தாக்கிய அரசுப்பேருந்து நடத்துனர்:வைரலான காணொளி, மகளிர் ஆணையம் விளக்கம் கேட்பு

Published : 05 Jan 2019 15:34 IST



நடத்துனர் குழந்தையின் முன்னே தாயை தாக்கும் காணொளி காட்சி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பேருந்து நிலையத்தில் 3 வயது குழந்தையின் கண்முன்னே அரசுப்பேருந்து நடத்துனர் பெண் பயணியை தாக்கும் காணொளி வைரலாகி வருகிறது.

இன்று காலைமுதல் ஒரு காணொளி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அதில் பேருந்து நிலையம் ஒன்றில் சுற்றிலும் பயணிகள் வேடிக்கைப்பார்க்க, பேருந்தைவிட்டு 3 வயது பெண் குழந்தையுடன் இறக்கப்பட்ட கிராமத்துப் பெண் பயணி ஒருவர் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பதிலுக்கு நடத்துனர் அவரை மிரட்டும் தொனியில் திட்டுகிறார்.

இதைப்பார்த்து பயந்துப்போன பெண் பயணியின் குழந்தை பயத்துடன் தாயின் கையைப்பிடித்து வாம்மா போகலாம் என இழுக்கிறது. பெண் பயணி நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நேரம் திடீரென நடத்துனர் அந்த பெண் பயணியை கன்னத்தில் அறைகிறார்.

இதில் அவர் கீழே விழ குழந்தை பயந்துபோய் வீரிட்டு அழுகிறது. பயணிகள் அதிர்ச்சியுடன் பார்க்க அதைப்பற்றி கவலைப்படாத நடத்துனர் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணைத்தாக்க இதைப்பார்த்து பொறுக்க முடியாத ஆண் பயணி ஒருவர் இடையில் புகுந்து நடத்துனரை தள்ளிவிட்டு அடிக்கப்போகிறார்.

ஆனால் இதைப்பற்றி கவலைப்படாத அந்த நடத்துனர் தனது வீரத்தை காட்டும் வகையில் அந்தப்பெண்ணை எட்டி உதைக்கிறார். இதைப்பார்த்து அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். யாரும் அவர்களை தடுக்க வரவில்லை. அடிவாங்கிய அந்தப்பெண் பயணி தனது குழந்தையை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர நடத்துனர் அவரை மிரட்டுகிறார்.

அப்போது அங்குள்ளவர்கள் நடத்துனரை திட்டுகின்றனர். பொம்பளையைபோய் அடிக்கிறாயே என ஒருவர் திட்ட அங்குள்ள பெண்கள் நீங்கள் இத்தனைபேர் ஆண்கள் இருக்கிறீர்கள் ஒருத்தன் பொம்பளையைப்போட்டு இந்த அடி அடிக்கிறான் கேட்கிறீர்களா என திட்டுகிறார். இவ்வளவுக்கும் பின்னணியில் அந்தப்பெண்ணின் குழந்தையின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

இதை அங்குள்ள ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். அது தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. சம்பவம் நடந்த இடம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அரசுப்பேருந்து நிலையம் என்பதும் அந்த பெண் பயணியின் பெயர் லட்சுமி என்பதும், அவரை தாக்கிய நடத்துனர் பெயர் பூமிநாதன் என்பதும் தெரியவந்துள்ளது. பேருந்தில் கும்பகோணம் பணிமனை என போட்டுள்ளது.

தற்போது இந்த காணொளி வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதுகுறித்து செய்தி அறிந்த மாநில மகளிர் ஆணையம் இதுகுறித்து மாவட்டத்திலுள்ள மகளிர் ஆணையத்திடம் தகவல் கேட்டுள்ளது.
கிரெடிட் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறீர்களா?- எச்சரிக்கை, உங்கள் விபரம் இப்படியும் நூதனமாக திருடப்படலாம்

Published : 05 Jan 2019 21:30 IST



காட்சிப்படம்

சென்னையில் ஜூஸ் கடை ஊழியர்கள் போல் பணியாற்றி வாடிக்கையாளர்களிடம் கிரெடிட், டெபிட் கார்டு விபரங்களை திருடி பணத்தை திருடிய 9 வட மாநில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கிவரும் வங்கி மோசடி குற்றங்களை விசாரிக்கும் பிரிவில் கடந்த சில நாட்களாக பெறப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொடர்பான புகார்களை ஆய்வு செய்ததில் பெரும்பான்மையான புகார்தாரர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பெருங்குடியில் உள்ள Sp InfoTech (Global Infocity Park) என்ற ஐடி கம்பெனி இயங்கிவரும் இடத்தில் உள்ள ஜூஸ் ஐடி என்ற கடையில் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதை நீண்ட ஆய்வுக்குப் பின் போலீஸார் கண்டுபிடித்தனர்.

மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டதன்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. அதன் அடிப்படையில் கூடுதல் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து குற்றம் நடக்கும் இடமான பெருங்குடியிலுள்ள எஸ்.பி.இன்போடெக் வளாகத்தில் கண்காணித்து வந்தனர்.

அங்குள்ள ஜூஸ் ஐடி என்ற கடையில் விசாரண நடத்தியபோது அங்கு வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவதில்லை என்றும், வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் மு்லம் மட்டுமே பணம் செலுத்தமுடியும் என்று அந்தக் கடையில் வேலை செய்யும் வட இந்தியர்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியுள்ளனர்.

இதைப்பயன்படுத்தி அவ்வாறு கார்டு முலம் பணம் செலுத்துபவர்களின் கார்டுகளை தாங்கள் பிரத்தியோகமாக வாங்கி வைத்திருக்கும் ஸ்கிம்மர் என்ற கருவி மூலம் கார்டுகளின் அனைத்து டேட்டாக்களையும் திருடி உள்ளனர். கார்டுகளை வாடிக்கையாளர் தரும்போதே அவர்கள் பதிவு செய்யும் ரகசிய பின் நம்பரையும் அவர்கள் அறியாமல் சேகரித்துள்ளனர்.

அவ்வாறு சேகரிக்கும் விபரங்களை செல்போன் மற்றும் லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது,

உடனடியாக தனிப்படை புலன் விசாரணை அதிகாரிகள் ஆய்வாளர்கள் மீனாப்பிரியா, பிரியா உதவி ஆய்வாளர்கள் மோகன் வின்சென்ட் துரைராஜ், மற்றும் காவலர்கள் உதவியுடன் மேற்கண்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பெயர், 1.ராகுல் சி 2.குந்தன் சி, 3.சுரேஷ்குமார், 4.ராகுல் குமார், 5.சுதிர், 6. பிரகாஷ்குமார், 7. குந்தன் குமார், 8.ராம்பீர் குமார், 9.விபின் குமார் ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து லேப்டாப், ஸ்கிம்மர் கருவி, மொபைல் போன், டெபிட் கார்டுகள், இடிசி கருவிகள் மற்றும் ரூ.1.48 லட்சம் ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். விசாரணைக்குப்பின் குற்றவாளிகளை ஆலந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் பொதுமக்கள் அவ்வாறு நடக்கும் பரிவர்த்தனையை மற்ற கருவிகளில் மேற்படி கார்டுகளை பொருத்துகிறார்களா? என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தங்கள் கண்முன்னர் கார்டுகளை ஸ்வைப் செய்ய அனுமதிக்க வேண்டும்.

மேலும் யாரிடமும் ஆதார் எண், ஒன் டைம் பாஸ்வர்ட் (ஓடிபி), கிரெடிட் டெபிட் கார்டிலுள்ள 16 இலக்க சிவிவி எண், கார்டுகளில் முடிவு காலம் போன்றவற்றை எக்காரணத்தைக் கொண்டும் பகிரக்கூடாது என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

tirupathi news


புதிய சர்ச்சை: மகளிர் கல்லூரியில் அப்படி என்னதான் பேசினார் இளையராஜா?
By எழில் | Published on : 05th January 2019 12:45 PM |




இன்று இசையமைப்பாளர்களே கிடையாது என்று இளையராஜா பேசியது தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.


சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவொன்றில் இளையராஜா கலந்துகொண்டார். அப்போது அவர், இன்று கம்போஸர்களே கிடையாது என்று பேசியது தொடர்பாக சர்ச்சையும் குழப்பமும் எழுந்துள்ளன. மற்ற இசையமைப்பாளர்கள் குறித்து இளையராஜா இப்படிப் பேசலாமா என்று ஒருதரப்பும் இளையராஜா அதுபோல பேசவில்லை. திரித்துக் கூறுகிறார்கள் என்று இன்னொரு தரப்பும் இளையராஜா பேசியது குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதித்துவருகிறார்கள். இளையராஜாவின் இந்தப் பேச்சுக்கு அவரது சகோதரர் கங்கை அமரன் ட்விட்டரில் கூறியதாவது: மன்னிக்கவும். நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வரமுடியாது என்று கிண்டலுடன் பதில் அளித்துள்ளார்.


சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரி விழாவில் இளையராஜா பேசியது இதுதான்:

அப்போதெல்லாம் எப்படி கம்போஸிங் நடக்கும் என்றால் இப்போது போல இல்லை. மாணவிகளே, இப்போது வருகின்ற கம்போஸர்கள் எல்லாம் கம்போஸர்கள் இல்லை. இன்னைக்கு கம்போஸர்களே கிடையாதுங்கிறதை ஞாபகம் வைச்சுக்குங்க. இப்போது எல்லாம் சிடியோடு வருவாங்க. அங்க இருந்து இங்க இருந்து ஒண்ணை எடுத்து, இயக்குநருக்குப் போட்டு காட்டி, சார் இதுமாதிரி இருக்கலாமா எனக் கேட்பார்கள். இது மாதிரி இருக்கலாம். இது மாதிரி போடறேன்னு சொல்லிட்டு அதையே போட்டுருவாங்க. ஆனால் அந்தக் காலத்தில் நாங்கள் கம்போஸ் செய்யவேண்டும். பெர்பார்ம் பண்ணனும். நாங்க வாசிக்கணும். ஒவ்வொரு ஸ்வரமும் அமைச்சு அதை இயக்குநர் ஓகே செய்து அதற்குப் பிறகுதான் கவிஞரைக் கூப்பிட்டுப் பாட்டு எழுதவைப்போம் என்று கூறியுள்ளார்.
மனித உடலில் எத்தனை எலும்புகள்? 256 என்று பதில் சொன்ன ஆசிரியர் கைது

By DIN | Published on : 05th January 2019 03:13 PM |


ஆக்ரா: மனித உடலில் எத்தனை எலும்புகள் என்ற கேள்விக்கு 256 என்று தவறாக பதில் சொல்லிக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ஒரு ஆசிரியர்.

தவறாக பதில் சொன்னதற்காக கைது செய்வதா என்று கேட்காதீர்கள். இது வேறு கதை.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2015ம் ஆண்டு துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் முதல் இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றவர்தான் மேற்கண்ட அந்த மகத்தான ஆசிரியர்.

இவர் தேர்வில் முறைகேடு செய்து, போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஷிஷ் குமார் (28) என்ற ஆசிரியர் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மதிப்பெண் சான்றிதழை பரிசோதித்ததில் அது போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையில் அவர் கல்லூரி பக்கமே போகவில்லை என்பதும், ஆசிரியர் பயிற்சி முடித்ததாக போலி சான்றிதழ் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. கைது செய்வதற்கு முன்பு அவரிடம் மனித உடலில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன என்ற கேள்விக்கு 256 என்றும், 4வது வகுப்பு கணிதத்தையும் போடத் தெரியாமல் இருந்ததையும் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாநில அளவில் முதல் இடத்தை விட்டுவிடுங்கள். அவர் எழுதப் படிக்கத் தெரிந்தவரா என்பதே சந்தேகமாக இருப்பதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.

மனித உடலில் 206 எலும்புகள் இருக்கும். குழந்தையாக பிறக்கும் போது 270 எலும்புகள் இருந்து, குழந்தை வளரும் போது எலும்புகள் ஒன்றிணைந்து 206க் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட "தேஜஸ்' அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

By DIN | Published on : 06th January 2019 02:09 AM |




அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய "தேஜஸ்' ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின்போது, இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது.
அதிவேகத்தில் செல்லக்கூடிய மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரயிலான "தேஜஸ்' ரயிலை ஐ.சி.எஃப் தயாரித்தது. இதைத்தொடர்ந்து, இந்த ரயில் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இந்த 23 பெட்டிகளில், இருக்கை வசதி கொண்ட 14 குளிர்சாதன வசதி பெட்டிகளும், இரண்டு முதல் தர இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரண்டு உணவு தயாரிக்கும் பெட்டிகளும் அடங்கும்.
இந்த ரயிலில், ஜி.பி.எஸ். அடிப்படையிலான பயணிகள் தகவல் அறியும் வசதி, எல்.ஈ.டி. விளக்குகள், ரயில் பெட்டியின் உள்புறமும் வெளிப்புறமும் தானியங்கிக் கதவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, செல்லிடப்பேசியை சார்ஜ் செய்யும் வசதி, ரயில் பெட்டிகளின் உள்புறம் மற்றும் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா, பயோ கழிப்பறைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த "தேஜஸ்' ரயில் சென்னை-மதுரை இடையே பகல் நேர ரயிலாக விரைவில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், "தேஜஸ்' ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை காலை 10 மணிக்கு புறப்பட்டு பேசின்பாலம், ராயபுரம், கடற்கரை, எழும்பூர் வழியாக விழுப்புரத்தை மதியம் ஒரு மணிக்கு சென்றடைந்தது. பின்னர் விழுப்புரத்தில் இருந்து 1.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை மாலை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. சோதனை ஓட்டத்தின்போது, இந்த ரயில் 110 கி.மீ. வேகம் வரை இயக்கி பார்க்கப்பட்டது. ரயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளும் சோதித்து பார்க்கப்பட்டது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: தேஜஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே ரயில் நிற்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதை சோதித்து பார்த்தபோது, 25 நொடியில் ரயில் நின்றது. இதுபோல, அவசர காலத்தில், ஓட்டுநரைத் தொடர்பு கொண்டு பேசும் ஸ்பீக்கர் வசதியும் பரிசோதிக்கப்பட்டது. இதுதவிர, பல்வேறு வசதிகளும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன என்றனர். "தேஜஸ்' ரயிலை பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஜனவரி 27-ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் ரூ.18 ஆயிரம் பறிமுதல்

Updated : ஜன 06, 2019 03:30 |

வேலுார்:வேலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது, சுகாதார ஆய்வாளர் தயாளன், 50, அறையில் இருந்து, கணக்கில் வராத, 18 ஆயிரத்து, 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற, அரசு கணக்கில், வங்கியில், 200 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால், ஒரு சான்றிதழுக்கு, 1,000 ரூபாய் வாங்கி, அரசு கணக்கில் செலுத்தியது போக, மீதித் தொகையை, இவரே வைத்துக் கொள்வது தெரிந்தது.தயாளன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், துறை ரீதியான விசாரணை நடத்த, அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

NEWS TODAY 14.05..2026