Sunday, January 6, 2019


வெற்றிகரமாக நடத்தப்பட்ட "தேஜஸ்' அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

By DIN | Published on : 06th January 2019 02:09 AM |




அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய "தேஜஸ்' ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின்போது, இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது.
அதிவேகத்தில் செல்லக்கூடிய மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரயிலான "தேஜஸ்' ரயிலை ஐ.சி.எஃப் தயாரித்தது. இதைத்தொடர்ந்து, இந்த ரயில் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இந்த 23 பெட்டிகளில், இருக்கை வசதி கொண்ட 14 குளிர்சாதன வசதி பெட்டிகளும், இரண்டு முதல் தர இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரண்டு உணவு தயாரிக்கும் பெட்டிகளும் அடங்கும்.
இந்த ரயிலில், ஜி.பி.எஸ். அடிப்படையிலான பயணிகள் தகவல் அறியும் வசதி, எல்.ஈ.டி. விளக்குகள், ரயில் பெட்டியின் உள்புறமும் வெளிப்புறமும் தானியங்கிக் கதவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, செல்லிடப்பேசியை சார்ஜ் செய்யும் வசதி, ரயில் பெட்டிகளின் உள்புறம் மற்றும் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா, பயோ கழிப்பறைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த "தேஜஸ்' ரயில் சென்னை-மதுரை இடையே பகல் நேர ரயிலாக விரைவில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், "தேஜஸ்' ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை காலை 10 மணிக்கு புறப்பட்டு பேசின்பாலம், ராயபுரம், கடற்கரை, எழும்பூர் வழியாக விழுப்புரத்தை மதியம் ஒரு மணிக்கு சென்றடைந்தது. பின்னர் விழுப்புரத்தில் இருந்து 1.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை மாலை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. சோதனை ஓட்டத்தின்போது, இந்த ரயில் 110 கி.மீ. வேகம் வரை இயக்கி பார்க்கப்பட்டது. ரயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளும் சோதித்து பார்க்கப்பட்டது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: தேஜஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே ரயில் நிற்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதை சோதித்து பார்த்தபோது, 25 நொடியில் ரயில் நின்றது. இதுபோல, அவசர காலத்தில், ஓட்டுநரைத் தொடர்பு கொண்டு பேசும் ஸ்பீக்கர் வசதியும் பரிசோதிக்கப்பட்டது. இதுதவிர, பல்வேறு வசதிகளும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன என்றனர். "தேஜஸ்' ரயிலை பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஜனவரி 27-ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024