Sunday, February 10, 2019


ஆங்கில​ம் அறிவோமே 250: அமைதியோ அமைதியான மருத்துவமனை!

Published : 29 Jan 2019 10:48 IST


ஜி.எஸ்.எஸ்.





கேட்டாரே ஒரு கேள்வி

Perfect என்ற சொல்லில்கூடத் தவறு செய்பவர்களை என்னவென்று கூறுவது?!

இப்படி எரிச்சலடைந்த ஒரு நண்பர் மேலும் விவரங்களைக் கேட்டபோது prefect என்ற சொல்லை ஒரு நாளிதழில் பார்த்ததாகக் கூறினார். அது அச்சுப்பிழையாக இருந்திருக்கக்கூடும்.

அதேநேரம் அந்தச் சொல் சரியாக வும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்!

Prefect என்பது ஒரு noun. இங்கிலாந்தில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சீனியர் மாணவரை prefectஆக நியமிப்பதுண்டு. இவர் வகுப்பு மாணவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வதை உறுதிசெய்வார். (சேட்டை செய்தவாறும், சத்தம் எழுப்பியவாறும் இருக்கும் மாணவர்களின் பெயர்க ளைக் கரும்பலகையில் எழுதி ஆசிரியரிடம் போட்டுக் கொடுப்பாரே, அவர்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்).

சில நாடுகளில் முக்கிய அதிகாரி, மாஜிஸ்ட்ரேட் போன்றவர்களைக்கூட prefect என்பதுண்டு. நீதிபதிக்கும் மாஜிஸ்ட்ரேட்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? மாஜிஸ்ட்ரேட் என்பவர் சிறு சிறு குற்றங்களைக் கவனித்துத் தீர்ப்பளிக்கக் கூடியவராக இருப்பார். போக்குவரத்து மீறல், பிக்பாக்கெட் போன்றவை.

“Skinny என்பது பாராட்டு தலுக்குரிய சொல்லா, வேறு மாதிரியா?” என்பது ஒரு வாசகரின் கேள்வி.

ஆரோக்கியமான உடல் வாகை விவரிக்கும் சொல் அல்ல skinny. அது மிகவும் ஒல்லியாக இருப்பதைக் குறிக்கிறது. அதாவது ‘எலும்பும் தோலுமாக’ என்போமே அதுபோல.

‘ஓர் இந்தித் திரைப்படத்தின் பெயரில் ‘THUGS’ என்ற சொல் இடம் பெறுகிறது. இது ஆங்கிலச் சொல்லா, இந்திச் சொல்லா?” என்ற ஐயம் எழுந்திருக்கிறது ஒரு வாசகருக்கு.

THUGS என்பது Thug என்பதன் பன்மை. இது ஆங்கிலச் சொல்தான். முரட்டுத்தனமான குற்றவாளியை இது குறிக்கிறது. முக்கியமாக வழிப்பறிக் கொள்ளையரை.


போட்டியில் கேட்டுவிட்டால்?

The hospital is in a __________ atmosphere and patients are cured fast

a) showy

b) agitated

c) serene

d) complicated

e) decorated

ஒரு குறிப்பிட்ட சூழலில் அந்த மருத்துவமனை அமைந்திருப்பதால் அதிலுள்ள நோயாளிகள் விரைவில் குணமடைகிறார்கள் என்கிறது வாக்கியம். அது எந்தச் சூழல் என் பதைக் குறிக்கும் சொல்தான் விடை.

சிக்கலான சூழலோ அலங்காரமான சூழலோ நோயைக் குணப்படுத்த வாய்ப்பு இல்லை. எனவே complicated, decorated, showy போன்ற சொற்கள் இங்குப் பொருந்தாது. Agitated என்றால் குழப்பமான என்று பொருள். குழப்பமான சூழலில் நோயாளி சீக்கிரம் குணமடைய மாட்டார்.

Serene என்றால் ‘அமைதியான’ என்று பொருள். இதற்கு நிகரான சொற்கள் cool, relaxed, unperturbed போன்றவை. எனவே, serene என்பது இங்குப் பொருந்துகிறது.

The hospital is in a serene atmosphere and patients are cured fast என்பதுதான் சரியான விடை.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி
தெலங்கானா ஓட்டலில் அசத்தல் திட்டம்: உணவை மீதம் வைத்தால் ரூ.50 அபராதம்

Published : 10 Feb 2019 08:32 IST

என்.மகேஷ்குமார்    வாரங்கல்





தங்களது ஓட்டலில் உணவை மீதம்வைத்தால், சம்பந்தப்பட்டவர்களிடம் ரூ.50 வசூல் செய்து, அதனை அநாதை ஆசிரமத்துக்கு வழங்குவதை ஒரு வாடிக்கையாக கொண்டுள்ளது தெலங்கான ஓட்டல் நிர்வாகம்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் ‘கேதாரி’ ஓட்டல் மிகவும் பிரபலமானது. இந்த ஓட்டலில் சிலர் தாங்கள் ஆர்டர் செய்யும் உணவை மீதம் வைத்துவிட்டு செல்வதை அந்த ஓட்டலின் உரிமையாளர் லிங்காலால் கேதாரி விரும்பவில்லை. இதனால், அவரது மூளையில் ஒரு திட்டம் தோன்றியது. யாராவது வாடிக்கையாளர்கள் உணவை பாதிக்கும்மேல் மீதம் வைத்தால், அவர்களுக்கு ரூ.50 அபராதம் வசூலிப்பது என முடிவு செய்தார். அப்படியாவது மக்கள் முழுமையாக வயிறு நிரம்ப சாப்பிட்டு செல்வார்கள் என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது.

இதற்கான அறிவிப்பு பலகைகளை தனது ஓட்டலில் ஆங்காங்கே வைத்தார். ஆயினும் சிலர் உணவை மீதம் வைத்தனர். அவர்களிடம் கறாராக ரூ.50 அபராதம் வசூலித்தார் கேதாரி. அப்படி இதுவரை ரூ.14,000 வரை வசூலித்த அபராதத் தொகையை அவர் சமீபத்தில் ஒரு அநாதை ஆசிரமத்துக்கு வழங்கி உள்ளார்.

தொடர்ந்து இந்த ஓட்டலில் இப்போதும் இது அமலில் உள்ளது. சிலர் அபராதம் செலுத்தியும் வருகின்றனர். இதுகுறித்து உரிமையாளர் லிங்காலால் கேதாரி கூறுகையில், “என்னுடைய ஓட்டலுக்கு வருவோர் தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு வயிறார சாப்பிட வேண்டுமென்பதே எனது நோக்கம். ஆனால், இதில் சிலர் பேசுவதற்காக இடம் தேடி ஓட்டலுக்கு வந்து சாப்பாட்டை மீதம் வைத்து செல்கின்றனர். மேலும் சிலர், அலட்சியமாக சாப்பாட்டை மீதம் வைத்து விட்டு செல்கின்றனர். இவர்களுக்கு சாப்பாட்டின் அவசியத்தை உணர வைக்கவே நான் ரூ.50 அபராதம் வசூலிக்கிறேன். அதனை ஒரு நல்ல விஷயத்திற்காக செலவு செய்து வருகின்றேன்.

நான் இந்த அபராத திட்டத்தை அமல் படுத்தியபோது, எனக்கு சில எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றை நான் கண்டு கொள்ளவில்லை. அதன் பின்னர் எனது வாடிக்கையாளர்கள் என்னை புரிந்து கொண்டனர். தற்போது அபராதம் செலுத்துவதும் ஓரளவு குறைந்துள்ளது” என மகிழ்ச்சியாக கூறினார் கேதாரி.

மகள் திருமண வரவேற்புக்கு வந்தவர்களுக்கு ரஜினியின் பரிசு என்ன தெரியுமா?

By DIN | Published on : 08th February 2019 07:21 PM




சென்னை: சென்னையில் வெள்ளியன்று நடைபெற்ற தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்விற்கு வந்தவர்களுக்கு, நடிகர் ரஜினி வித்தியாச பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.


2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் 2016-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

இந்நிலையில் செளந்தர்யா மறுமணம் செய்யவுள்ளார். கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். இவர் 'வஞ்சகர் உலகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு அடுத்த வாரம் பிப்ரவரி 11 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. விசாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 8) செளந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பின் புகைப்படங்களும் விடியோவும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்விற்கு வந்தவர்களுக்கு, நடிகர் ரஜினி வித்தியாச பரிசு கொடுத்து அசத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு, விதைப்பந்தை அன்பளிப்பாக அளித்துள்ளனர் அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது.




பொதுவாக திருமணம் அல்லது வரவேற்பு நிகழ்வுக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பதே வழக்கம். இன்னும் சிலர் மரக்கன்றுகளைக் கூட கொடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ரஜினி தம்பதியினர் வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சலுகை மழை எனும் சாபக்கேடு!


By ஆசிரியர் | Published on : 08th February 2019 01:40 AM |


எதிர்பார்த்த அளவு பருவ மழை பெய்யாத குறையை நமது அரசியல் கட்சிகள் சலுகை மழை பொழிந்து ஈடுகட்டுவது என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கான நாள் நெருங்க நெருங்க போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளையும், மானியங்களையும், நல்வாழ்வுத் திட்டங்களையும் அறிவித்தவண்ணம் இருக்கின்றன. மத்திய அரசு எவ்வழி, மாநில அரசுகளும் அவ்வழி. ஒன்றன் பின் ஒன்றாக மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகள் சலுகைகளையும், மானியங்களையும் அறிவிக்கத் தொடங்கியிருக்கின்றன. 

பாஜக ஆளும் மாநிலமான அஸ்ஸாமில் நிதியமைச்சர் ஹிமந்தா விஸ்வ சர்மா ரூ.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமான முடைய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்துக்கு 12 கிராம் தங்கம் வழங்கப்போவதாக புதன்கிழமை அறிவித்திருக்கிறார். 12-ஆவது வகுப்பில் 60% அதிகமான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இ-பைக் வழங்குவது, 45 வயதுக்கும் குறைவான கணவனை இழந்த மகளிருக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை, கலைஞர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ரூ.50,000 ரொக்க மானியம் என்று ஒரு சலுகைப் பட்டியலையே அறிவித்திருக்கிறார்.
அஸ்ஸாமைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசமும், ராஜஸ்தானும் பாஜகவுக்குக் காங்கிரஸ் எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கின்றன. வேலையில்லாத இளைஞர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.4,000 வழங்குவது என்று மத்தியப் பிரதேச அரசு கடந்த வியாழக்கிழமை தீர்மானித்திருக்கிறது. ரூ.3,000-ம் வழங்குவதாக ராஜஸ்தான் அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. பொதுத்தேர்தலுக்கு முன்னால் இதுபோன்ற அறிவிப்புகளை ஏனைய மாநிலங்களும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது அறிவிக்க இருக்கின்றன. 

பொருளாதார நிபுணர்கள் இந்த அறிவிப்புகளைப் பார்த்து திகைத்துப் போய் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே கடுமையான நிதிப் பற்றாக்குறையை எல்லா மாநிலங்களும் எதிர்கொள்ளும் நிலையில், அறிவிக்கப்படும் சலுகைகளையும், மானியங்களையும் நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் குறித்துப் பொருளாதார நிபுணர்கள் அச்சமடைவதில் வியப்பென்ன இருக்கிறது? 

எல்லாத் துறைகளிலும் சலுகை அரசியல் அல்லது தற்காலிகத் தீர்வுகள் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன. பிரச்னைகளை அறிவியல்பூர்வமாக எதிர்கொண்டு ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு காணும் எண்ணம் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சியினரிடத்திலும் இல்லை என்பதுதான் வேதனைக்குரிய போக்கு. இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம்தான் இருக்கிறது. ஏறத்தாழ 60% இந்தியர்கள் விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், மொத்த தேசிய வருமானத்தில் 15% மட்டும்தான் அவர்களுக்கானது என்கிற நிலையில், எந்தவோர் அரசும் வேளாண் பிரச்னை குறித்து ஆக்கப்பூர்வமான பார்வையில் சிந்திப்பதாக இல்லை. 

வேலைவாய்ப்பு என்று எடுத்துக்கொண்டால், ஜாதி ரீதியாக இட ஒதுக்கீடு என்ற பயனளிக்காத தீர்வு மட்டுமே முன்வைக்கப்படுகிறது. அரசின் கொள்கைகளால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் தேக்கம் நிலவுகிறது. வேலைவாய்ப்புக்கு அடிப்படையான நிலம், தொழிலாளர்கள், முதலீடு, தொழில்நுட்பம் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிடப்படாத காரணத்தால், வேலைவாய்ப்பு உருவாவதற்கான வாய்ப்பு தொழில் துறையில் காணப்படவில்லை. கடந்த நிதியாண்டில் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு, ரூ.55,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் விளைவாக எந்தவிதப் புதிய வேலைவாய்ப்பும் உருவானதாகத் தெரியவில்லை. 

எல்லா அரசியல் கட்சிகளும் கல்வி குறித்தும், பெண் குழந்தைகள் குறித்தும் கவலை தெரிவிக்கின்றன. ஆனால், தண்ணீரும், மின்சாரமும் இல்லாத பள்ளிக்கூடங்கள், போதுமான ஆசிரியர்கள் இல்லாமை, தரமான கல்வி, கல்வி முறையில் மாற்றம் இவை குறித்தெல்லாம் விவாதமும் இல்லை, கவலைப்படவும் இல்லை. சுகாதாரம் எனும்போது ஆரம்ப சுகாதாரத்தையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளிலும் எந்தவித முதலீடும் செய்யாமல், மருத்துவக் காப்பீடு மட்டுமே விடை என்கிற போக்குதான் காணப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் மானியங்களின் அளவு ரூ.1.29 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.29 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதனால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட வாங்கிய கடன் ரூ.2.33 லட்சம் கோடியிலிருந்து ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் அரசு வாங்கிய கடனுக்குத் தரப்பட்ட வட்டியின் அளவு ஆண்டொன்றுக்கு ரூ.1.92 லட்சம் கோடியிலிருந்து, ரூ.5.30 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இப்படியே போனால் எங்கே போய் முடியப் போகிறது என்கிற அச்சம், தேசம் பற்றிய அக்கறை உள்ளவர்களைக் கவலை கொள்ளச் செய்கிறது. 

பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் சலுகைகளையும், மானியங்களையும் வழங்குவது கடலில் பெருங்காயத்தைக் கரைப்பது போல, விரயத்துக்கு வழிவகுக்குமே தவிர விடிவுக்கு வழிகோலாது. தற்காலிக அரசுத் திட்டம் என்று ஒன்று கிடையாது. 

2019 மக்களவைத் தேர்தல் கொள்கைக்கான அல்லது மாற்றுத் திட்டத்துக்கான போட்டியாக இருக்கப் போவதில்லை. மானியங்களுக்கும், சலுகைகளுக்கும் இடையேயான போட்டியாகத்தான் இருக்கப் போகிறது!

குழந்தைகளும் தொழில்நுட்பமும்
By கோதை ஜோதிலட்சுமி | Published on : 09th February 2019 01:35 AM |

மகாகவி பாரதி குழந்தைகள் குறித்து பாடிய பாடலை நினைவுகூரலாம்.
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா 

கல்வியும் கலையும் விளையாட்டும் வாழ்வின் அத்தியாவசிய அம்சங்கள் என்பதை இந்தப் பாடல் சொல்லிக் கொண்டிருக்கிறது. கல்வி என்பது நம்முடைய கலாசாரத்தைப் பொருத்தவரை மொழியைக் கற்பது, விரும்பிய தொழிலைக் கற்பது என்று வகுக்கப்பட்டிருந்தது. கல்வி கற்பதற்கும் கடல் கடந்து செல்லலாம் என்று இலக்கணமே வகுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழர் வாழ்வியலில் விளையாட்டிற்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. பெண்கள் விளையாடும் விளையாட்டுகள், ஆண் குழந்தைகளின் விளையாட்டுகள் என்று பல விளையாட்டுகளைக் காண்கிறோம். உடல் ஆரோக்கியம் மற்றும் மனம் ஒருமுகப்படுத்துதல் என்ற இரண்டு சாத்தியங்கள் விளையாட்டினால் ஏற்படுகின்றன. அதனால்தான் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதை, அதற்கென அரங்கங்கள் அமைந்திருந்ததை இலக்கியங்கள் கூறியுள்ளன.

இப்படிக் காலம் காலமாய் கல்வி, கலை, விளையாட்டு முதலானவற்றில் கவனம் செலுத்திய தமிழ் தலைமுறைகள், இந்த 21-ஆம் நூற்றாண்டில் எப்படி இருக்கிறார்கள்? ஆரோக்கியக் குறைபாடு என்பது மேல்தட்டு மக்கள், கீழ்த்தட்டு மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஏறத்தாழ எல்லா நிலைகளிலும் உள்ளது. இன்றைய சூழலில் கல்வியும் கலையும் விளையாட்டும் எத்தகைய நிலையை தற்போது அடைந்துள்ளன என உற்று நோக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. 
 
கற்பனைக்கும் எட்டாத பல புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப வசதிகள் தற்போது கிடைத்திருக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்புகள் இளைய தலைமுறையின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்
களைக் காணும்போது, ஒருபுறம் வளர்ச்சியை எண்ணிப் பெருமை கொண்டாலும், அதனால் ஏற்படும் தீங்குகளை நினைத்து அச்சம் கொள்ளாமல் இருக்க முடியாது. கணினி மற்றும் இணைய தொழில்நுட்பம் அசுர வேகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. விழுமியங்களில்தொய்வு ஏற்படுவதைக் கண்முன் காண்கிறோம்.
தற்போது கல்வி என்பது மதிப்பெண்கள் பெறுவது, போட்டித் தேர்வுக்குத் தயாராவது என்ற புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. கல்வி என்பது வாழ்க்கைக்கான பாதையைத் தெளிந்து அறிவது என்ற கோட்பாடு முற்றிலும் மறக்கப்பட்டு மதிப்பெண்கள், தேர்வுகள், பணி, வருமானம் என்ற புதிய பரிமாணத்தை இப்போது கொண்டுள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி பயில்வது என்பதைத் தாண்டி இணையங்கள் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கின்றன. இணையங்களில் கொட்டிக் கிடக்கும் தரவுகளும் செய்திகளும் அளவற்றவை என்ற போதிலும், அவை நேர்மறையாகவும் எதிர்மறை சிந்தனைகளைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கின்றன. வளர்இளம் பருவத்தில் நல்லன, தேவையற்றவை என்று பகுத்துணரும் பக்குவம் தோன்றுவதற்கு முன்பே அவர்கள் இரண்டையும் எளிதாகத் தங்கள் உள்ளங்கைகளில் பெறுகிறார்கள் என்பது சற்றே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
எதிர்மறை சிந்தனைகளை முதலில் பெறும் குழந்தைகள் அவற்றை நம்பி தம் வாழ்வைத் தொலைத்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இணையத்தை நம்பும் குழந்தைகள் மனிதர்கள் மீது நம்பிக்கை அற்றவர்களாக உருவாகிறார்கள். அனுபவத்தை, பொறுமையை, வாழ்க்கைக்குத் தேவையான விழுமியங்களை தொழில்நுட்பம் தரும் கல்வி ஒருபோதும் கற்றுத் தருவதில்லை. அதனால், வாழ்க்கையை எதிர்கொள்ளப் போதுமான மனபலம் இல்லாத குழந்தைகளைத் தொடர்ந்து இந்தக் கல்வி உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அன்றாட வாழ்க்கைக்கான விஷயங்களைக்கூட இணையத்தில் தேடுவது அல்லது இணையத்தில் இருக்கும் தரவுகள் அனைத்தும் சரியானவை என்று நம்புவது போன்றவை குழந்தைகளின் மன நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காலப்போக்கில் இது உடல் நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நம் நாட்டின் கலை வடிவங்கள் அற்புதமானவை. அவற்றைக் கற்றுத் தேர்வதற்கு நல்ல குருவை நாடிச் சென்று அவர்களின் பாணியை நமக்குள் உள்வாங்கி அதைக் கொண்டு ஒரு புதிய வடிவத்தைக் கலையின் அம்சமாக நாம் வெளிப்படுத்துகிறோம். அதனையும் கூட தற்போது இணையத்தில் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். பலரும் கற்றுத் தரவும் முன்வருகிறார்கள். இதனால் குருவுக்கும் சீடர்களுக்கும் இடையிலான பந்தம் அறுபட்டுப் போகிறது. அதே நேரத்தில், கலையின் சூட்சுமங்களை நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பும் குறைந்து போகிறது. யோகா போன்ற கலைகளை இப்படி கற்கும்போது தவறுகள் நிகழ்ந்து விடுவதற்கும் சாத்தியங்கள் அதிகம். எந்த ஒரு கலையையும் குற்றமறக் கற்க வேண்டும். அத்தகைய கற்றலுக்கு இந்த இணைய வழி முழுமையான தீர்வு அல்ல.
கோடை காலங்களில் விடுமுறை நாள்களில் குழந்தைகள் திறந்தவெளிகளில் மைதானங்களில் விளையாடுவதை ஓய்வின்றி உற்சாகமாய் அவர்கள் நண்பர்களோடு பொழுதைக் கழிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போதைய இளம் தலைமுறை கணினி மோகத்தில் ஆட்பட்டு விளையாட்டு மைதானங்களையோ திறந்த
வெளியையோ நாடிச் செல்லாமல் அலைபேசி விடியோ கேம் இன்ன பிற விளையாட்டுக்கு என்றே இருக்கும் தொழில்நுட்ப சாதனங்கள், கணினி முதலானவற்றில் தங்களை முழுமையாக மூழ்கடித்துக்கொண்டு நவீன விளையாட்டுகளை கணினிகளின் திரைகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் பலன் விளையாட்டு என்பது ஆரோக்கியத்துக்கானது என்பதை மறந்து, பொழுதுபோக்குக்கானது என்று கருதி தங்கள் ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். விளையாடுவதற்கு குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ இவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. அதே நேரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கரைந்து கிடக்கும் இவர்கள் பார்வைக் குறைபாடு, மன அழுத்தம், உடல் பருமன் போன்ற தேவையற்ற உடல் பிரச்னைகளை வரவழைத்துக் கொள்கிறார்கள். ஏறத்தாழ 12% குழந்தைகளுக்கு இதனால் பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 

செல்லிடப்பேசி, விடியோ கேம் திரைகள் போன்ற சாதனங்களில் இருந்து வரும் ஒளிக்கற்றைகள் நம் கண்களை மட்டும் பாதிப்பதில்லை; அவை நமது தூக்கத்தையும் பாதிக்கின்றன. இதனால் ஆழ்ந்த உறக்கம்கூட சாத்தியமற்றுப் போகிறது. இரவு-பகல் என்று பாராமல் விளையாடுகிறார்கள். அவற்றிலும் சில விளையாட்டுகள் அவர்களை எதிர்மறையாகச் சிந்திக்கத் தூண்டி அல்லது அந்த விளையாட்டுக்கு அடிமைப்படுத்தி தன் வசமிழந்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை வரை தூண்டுகின்றன. 

இன்றைய சிறுவர்களும் இளைஞர்களும் அளவுக்கு அதிகமாக இணையப் பயன்பாட்டை மேற்கொள்ளும்போது அவர்கள் அதற்கு அடிமைப்பட்டுப் போகிறார்கள். இது ஒரு மருத்துவ ரீதியான பிரச்னை என்கிறது பெங்களூருவில் அமைந்துள்ள தேசிய மனநல சுகாதார மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்). இந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் கூறுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அடிமைப்பட்டு இருப்போருக்கு சிகிச்சை அளிப்பதற்கு என இந்தியாவில் மருத்துவமனைகள்கூட ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது வருத்தத்துக்குரியது. 

குழந்தைகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், தொழில்நுட்பமே தேவை இல்லை என்று ஒதுக்கி விடலாமா என்றால் அதுவும் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. அதனால் இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட அதற்கான வழிமுறைகளையும் நாம் சிந்திக்க வேண்டும். சில பல்கலைக்கழகங்களில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

நன்மை-தீமை இரண்டையுமே கொண்டதாகவே எப்போதும் அறிவியல் இருந்து வருகிறது. இருபுறமும் கூரான ஆயுதத்தைப் பயன்படுத்தும் கவனத்துடன் கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. சிறுவர்களின் கையில் அதை முழுமையாகத் தந்து விடாமல் இருப்பதே சிறந்தது.
செல்லிடப்பேசி என்பது மக்கள் ஒருவருக்கொருவர் அவசியம் ஏற்படும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சாதனம். தற்போது அதனுள் பல ஆபாசங்களும் வந்து சேர்ந்திருக்கின்றன. இவற்றை அப்படியே பிள்ளைகளின் கைகளில் தருவது அறிவுடைமை ஆகாது. இதைப் பெற்றோரும் அரசும் உணர வேண்டும்.

நமது பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளச் செய்ய வேண்டியது யாது எனும் கேள்வி எழும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் பதிலாக இருக்கிறது. கலாசார விழுமியங்களை மனித உறவின், நட்பின் மேன்மைகளை அவர்களுக்கு உணர்த்தியாக வேண்டும்.
மொத்தத்தில் வாழ்க்கையை கல்வி சொல்லித் தர வேண்டும். கலைகள் மனதை மேம்படுத்த வேண்டும், மேம்பட்ட மனதோடு கலை மேம்படுத்தப்பட வேண்டும். விளையாட்டு என்பது ஆரோக்கியத்தை, மன ஒருமைப்பாட்டைத் தருவதாக இருக்க வேண்டும். இவற்றுள் எதையும் நவீன தொழில்நுட்பம் நமக்குத் தந்து விட முடியாது.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
'சர்வர்' பிரச்னையால் பத்திரப்பதிவு முடக்கம்

Added : பிப் 10, 2019 02:22

தமிழகத்தில் சர்வர் பிரச்னையால், ஆன்லைன் பத்திரப்பதிவு, வில்லங்க சான்றிதழ் பெறுவது, 15 நாட்களாக முடங்கியுள்ளது.
கால தாமதத்தை குறைக்கவும், வெளிப்படை தன்மைக்காகவும், ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வழியே, பத்திரப்பதிவு செய்வது, வில்லங்க சான்றிதழ் பெறுவது, ஆவணங்களின் நகல்களை வாங்குவது போன்ற சேவைகளை பெற முடியும்.
ஒரே நேரத்தில், பலரும், பல்வேறு தேவைகளுக்காக பத்திரப்பதிவு இணையதளத்தை பயன்படுத்துவதால், சர்வர் பிரச்னை ஏற்பட்டு, பத்திரப்பதிவு பணி பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.தற்போது, இரண்டு வாரமாக ஏற்பட்டுள்ள சர்வர், நெட் ஒர்க் பிரச்னையால், பத்திரப்பதிவு சேவை முடங்கியுள்ளது. பத்திரப் பதிவுக்கு விண்ணப்பித்த, 1,000க்கும் மேற்பட்டோர், 15 நாட்களாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
மாவட்ட செய்திகள்

சென்னை-மதுரைக்கு 6½ மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரெயில் பிரதமர் நரேந்திர மோடி 19-ந்தேதி தொடங்கி வைக்கிறார்



சென்னையில் இருந்து மதுரைக்கு 6½ மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 19-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 05:00 AM
சென்னை,

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘தேஜஸ்’ 2-வது ரக ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டது.

இந்த பெட்டியில், ‘வை-பை’, கண்காணிப்பு கேமரா, தீ மற்றும் புகை கண்டுபிடிக்கும் கருவி, ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன. விமானத்தில் இருப்பது போன்று அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 23 ‘தேஜஸ்’ ரக ரெயில் பெட்டிகளை ஐ.சி.எப். தயாரித்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில் சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் முதல் முறையாக ‘தேஜஸ்’ 2-வது ரக பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் இந்த ரெயிலை வரும் 19-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

மேலும் இந்த ரெயிலுக்கான அட்டவணையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னையில் இருந்து 6½ மணி நேரத்தில் மதுரைக்கு ‘தேஜஸ்’ ரெயில் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு மதுரை சென்றடையும். பின்னர் மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் திருச்சி மற்றும் கொடை ரோடு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

‘தேஜஸ்’ ரெயில் வியாழக்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களில் இயக்கப்படும். இந்த ரெயிலில் 12 இருக்கை வசதி கொண்ட ஏ.சி.பெட்டிகளும், 2 இருக்கை வசதி கொண்ட முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளும், 1 ஜெனரேட்டர் பெட்டியும் உட்பட 15 பெட்டிகள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரெயில்வேயில் இதுவரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலே வேகமான ரெயிலாக கருதப்படுகிறது. இந்த ரெயில் மதுரை-சென்னை இடையே 7 மணி நேரம் 40 நிமிடங்களில் பயணிக்கிறது. இந்தநிலையில் ‘தேஜஸ்’ ரெயில் 6½ மணி நேரத்தில் மதுரை செல்வதால், தெற்கு ரெயில்வேயின் அதிவேக ரெயிலாக ‘தேஜஸ்’ ரெயில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS TODAY 10.06.2026