குழந்தைகளும் தொழில்நுட்பமும்
By கோதை ஜோதிலட்சுமி | Published on : 09th February 2019 01:35 AM |
மகாகவி பாரதி குழந்தைகள் குறித்து பாடிய பாடலை நினைவுகூரலாம்.
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா
கல்வியும் கலையும் விளையாட்டும் வாழ்வின் அத்தியாவசிய அம்சங்கள் என்பதை இந்தப் பாடல் சொல்லிக் கொண்டிருக்கிறது. கல்வி என்பது நம்முடைய கலாசாரத்தைப் பொருத்தவரை மொழியைக் கற்பது, விரும்பிய தொழிலைக் கற்பது என்று வகுக்கப்பட்டிருந்தது. கல்வி கற்பதற்கும் கடல் கடந்து செல்லலாம் என்று இலக்கணமே வகுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழர் வாழ்வியலில் விளையாட்டிற்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. பெண்கள் விளையாடும் விளையாட்டுகள், ஆண் குழந்தைகளின் விளையாட்டுகள் என்று பல விளையாட்டுகளைக் காண்கிறோம். உடல் ஆரோக்கியம் மற்றும் மனம் ஒருமுகப்படுத்துதல் என்ற இரண்டு சாத்தியங்கள் விளையாட்டினால் ஏற்படுகின்றன. அதனால்தான் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதை, அதற்கென அரங்கங்கள் அமைந்திருந்ததை இலக்கியங்கள் கூறியுள்ளன.
இப்படிக் காலம் காலமாய் கல்வி, கலை, விளையாட்டு முதலானவற்றில் கவனம் செலுத்திய தமிழ் தலைமுறைகள், இந்த 21-ஆம் நூற்றாண்டில் எப்படி இருக்கிறார்கள்? ஆரோக்கியக் குறைபாடு என்பது மேல்தட்டு மக்கள், கீழ்த்தட்டு மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஏறத்தாழ எல்லா நிலைகளிலும் உள்ளது. இன்றைய சூழலில் கல்வியும் கலையும் விளையாட்டும் எத்தகைய நிலையை தற்போது அடைந்துள்ளன என உற்று நோக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
கற்பனைக்கும் எட்டாத பல புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப வசதிகள் தற்போது கிடைத்திருக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்புகள் இளைய தலைமுறையின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்
களைக் காணும்போது, ஒருபுறம் வளர்ச்சியை எண்ணிப் பெருமை கொண்டாலும், அதனால் ஏற்படும் தீங்குகளை நினைத்து அச்சம் கொள்ளாமல் இருக்க முடியாது. கணினி மற்றும் இணைய தொழில்நுட்பம் அசுர வேகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. விழுமியங்களில்தொய்வு ஏற்படுவதைக் கண்முன் காண்கிறோம்.
தற்போது கல்வி என்பது மதிப்பெண்கள் பெறுவது, போட்டித் தேர்வுக்குத் தயாராவது என்ற புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. கல்வி என்பது வாழ்க்கைக்கான பாதையைத் தெளிந்து அறிவது என்ற கோட்பாடு முற்றிலும் மறக்கப்பட்டு மதிப்பெண்கள், தேர்வுகள், பணி, வருமானம் என்ற புதிய பரிமாணத்தை இப்போது கொண்டுள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி பயில்வது என்பதைத் தாண்டி இணையங்கள் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கின்றன. இணையங்களில் கொட்டிக் கிடக்கும் தரவுகளும் செய்திகளும் அளவற்றவை என்ற போதிலும், அவை நேர்மறையாகவும் எதிர்மறை சிந்தனைகளைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கின்றன. வளர்இளம் பருவத்தில் நல்லன, தேவையற்றவை என்று பகுத்துணரும் பக்குவம் தோன்றுவதற்கு முன்பே அவர்கள் இரண்டையும் எளிதாகத் தங்கள் உள்ளங்கைகளில் பெறுகிறார்கள் என்பது சற்றே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
எதிர்மறை சிந்தனைகளை முதலில் பெறும் குழந்தைகள் அவற்றை நம்பி தம் வாழ்வைத் தொலைத்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இணையத்தை நம்பும் குழந்தைகள் மனிதர்கள் மீது நம்பிக்கை அற்றவர்களாக உருவாகிறார்கள். அனுபவத்தை, பொறுமையை, வாழ்க்கைக்குத் தேவையான விழுமியங்களை தொழில்நுட்பம் தரும் கல்வி ஒருபோதும் கற்றுத் தருவதில்லை. அதனால், வாழ்க்கையை எதிர்கொள்ளப் போதுமான மனபலம் இல்லாத குழந்தைகளைத் தொடர்ந்து இந்தக் கல்வி உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அன்றாட வாழ்க்கைக்கான விஷயங்களைக்கூட இணையத்தில் தேடுவது அல்லது இணையத்தில் இருக்கும் தரவுகள் அனைத்தும் சரியானவை என்று நம்புவது போன்றவை குழந்தைகளின் மன நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காலப்போக்கில் இது உடல் நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நம் நாட்டின் கலை வடிவங்கள் அற்புதமானவை. அவற்றைக் கற்றுத் தேர்வதற்கு நல்ல குருவை நாடிச் சென்று அவர்களின் பாணியை நமக்குள் உள்வாங்கி அதைக் கொண்டு ஒரு புதிய வடிவத்தைக் கலையின் அம்சமாக நாம் வெளிப்படுத்துகிறோம். அதனையும் கூட தற்போது இணையத்தில் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். பலரும் கற்றுத் தரவும் முன்வருகிறார்கள். இதனால் குருவுக்கும் சீடர்களுக்கும் இடையிலான பந்தம் அறுபட்டுப் போகிறது. அதே நேரத்தில், கலையின் சூட்சுமங்களை நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பும் குறைந்து போகிறது. யோகா போன்ற கலைகளை இப்படி கற்கும்போது தவறுகள் நிகழ்ந்து விடுவதற்கும் சாத்தியங்கள் அதிகம். எந்த ஒரு கலையையும் குற்றமறக் கற்க வேண்டும். அத்தகைய கற்றலுக்கு இந்த இணைய வழி முழுமையான தீர்வு அல்ல.
கோடை காலங்களில் விடுமுறை நாள்களில் குழந்தைகள் திறந்தவெளிகளில் மைதானங்களில் விளையாடுவதை ஓய்வின்றி உற்சாகமாய் அவர்கள் நண்பர்களோடு பொழுதைக் கழிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போதைய இளம் தலைமுறை கணினி மோகத்தில் ஆட்பட்டு விளையாட்டு மைதானங்களையோ திறந்த
வெளியையோ நாடிச் செல்லாமல் அலைபேசி விடியோ கேம் இன்ன பிற விளையாட்டுக்கு என்றே இருக்கும் தொழில்நுட்ப சாதனங்கள், கணினி முதலானவற்றில் தங்களை முழுமையாக மூழ்கடித்துக்கொண்டு நவீன விளையாட்டுகளை கணினிகளின் திரைகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் பலன் விளையாட்டு என்பது ஆரோக்கியத்துக்கானது என்பதை மறந்து, பொழுதுபோக்குக்கானது என்று கருதி தங்கள் ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். விளையாடுவதற்கு குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ இவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. அதே நேரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கரைந்து கிடக்கும் இவர்கள் பார்வைக் குறைபாடு, மன அழுத்தம், உடல் பருமன் போன்ற தேவையற்ற உடல் பிரச்னைகளை வரவழைத்துக் கொள்கிறார்கள். ஏறத்தாழ 12% குழந்தைகளுக்கு இதனால் பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
செல்லிடப்பேசி, விடியோ கேம் திரைகள் போன்ற சாதனங்களில் இருந்து வரும் ஒளிக்கற்றைகள் நம் கண்களை மட்டும் பாதிப்பதில்லை; அவை நமது தூக்கத்தையும் பாதிக்கின்றன. இதனால் ஆழ்ந்த உறக்கம்கூட சாத்தியமற்றுப் போகிறது. இரவு-பகல் என்று பாராமல் விளையாடுகிறார்கள். அவற்றிலும் சில விளையாட்டுகள் அவர்களை எதிர்மறையாகச் சிந்திக்கத் தூண்டி அல்லது அந்த விளையாட்டுக்கு அடிமைப்படுத்தி தன் வசமிழந்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை வரை தூண்டுகின்றன.
இன்றைய சிறுவர்களும் இளைஞர்களும் அளவுக்கு அதிகமாக இணையப் பயன்பாட்டை மேற்கொள்ளும்போது அவர்கள் அதற்கு அடிமைப்பட்டுப் போகிறார்கள். இது ஒரு மருத்துவ ரீதியான பிரச்னை என்கிறது பெங்களூருவில் அமைந்துள்ள தேசிய மனநல சுகாதார மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்). இந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் கூறுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அடிமைப்பட்டு இருப்போருக்கு சிகிச்சை அளிப்பதற்கு என இந்தியாவில் மருத்துவமனைகள்கூட ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது வருத்தத்துக்குரியது.
குழந்தைகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், தொழில்நுட்பமே தேவை இல்லை என்று ஒதுக்கி விடலாமா என்றால் அதுவும் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. அதனால் இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட அதற்கான வழிமுறைகளையும் நாம் சிந்திக்க வேண்டும். சில பல்கலைக்கழகங்களில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நன்மை-தீமை இரண்டையுமே கொண்டதாகவே எப்போதும் அறிவியல் இருந்து வருகிறது. இருபுறமும் கூரான ஆயுதத்தைப் பயன்படுத்தும் கவனத்துடன் கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. சிறுவர்களின் கையில் அதை முழுமையாகத் தந்து விடாமல் இருப்பதே சிறந்தது.
செல்லிடப்பேசி என்பது மக்கள் ஒருவருக்கொருவர் அவசியம் ஏற்படும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சாதனம். தற்போது அதனுள் பல ஆபாசங்களும் வந்து சேர்ந்திருக்கின்றன. இவற்றை அப்படியே பிள்ளைகளின் கைகளில் தருவது அறிவுடைமை ஆகாது. இதைப் பெற்றோரும் அரசும் உணர வேண்டும்.
நமது பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளச் செய்ய வேண்டியது யாது எனும் கேள்வி எழும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் பதிலாக இருக்கிறது. கலாசார விழுமியங்களை மனித உறவின், நட்பின் மேன்மைகளை அவர்களுக்கு உணர்த்தியாக வேண்டும்.
மொத்தத்தில் வாழ்க்கையை கல்வி சொல்லித் தர வேண்டும். கலைகள் மனதை மேம்படுத்த வேண்டும், மேம்பட்ட மனதோடு கலை மேம்படுத்தப்பட வேண்டும். விளையாட்டு என்பது ஆரோக்கியத்தை, மன ஒருமைப்பாட்டைத் தருவதாக இருக்க வேண்டும். இவற்றுள் எதையும் நவீன தொழில்நுட்பம் நமக்குத் தந்து விட முடியாது.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
No comments:
Post a Comment