Tuesday, March 26, 2019

மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

Published : 26 Mar 2019 05:14 IST

கி.மகாராஜன்  மதுரை



மதுரையில் நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையில் உள்ள நாளிதழ் அலுவலகம் ஒன்றில் 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஊழியர்கள் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அட்டாக் பாண்டி, அப்போதைய ஊமச்சிக்குளம் டிஎஸ்பியாக இருந்த வி.ராஜாராம் (ஏடிஎஸ்பியாக ஓய்வுபெற்றார்) உட்பட 17 பேர் மீது சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை மதுரை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து, 17 பேரையும் விடுதலை செய்து 9.12.2009-ல் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், கொலை செய்யப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி சார்பிலும் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, அட்டாக் பாண்டி, பிரபு என்ற ஆரோக்கிய பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகிய 9 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நேரில் ஆஜராக உத்தரவு

இந்த வழக்கில் 17-வது எதிரியான வி.ராஜாராம் குற்றவாளி என அறிவித்த நீதிபதிகள், அவருக்கு தண்டனை வழங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க ராஜாராமை நேற்று நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வி.ராஜாராம் நேரில் ஆஜரானார். அவரிடம் தண்டனை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், எனக்கு 62 வயதாகிறது. இருதய பிரச்சினை உள்ளது. திருமணமாகாத இரு மகள்கள் உள்ளனர். குடும்பப் பிரச்சினையும் உள்ளது. எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

கடுங்காவல் தண்டனை

இதையடுத்து, இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டதை கருத்தில் கொண்டு வி.ராஜாராமுக்கு இபிகோ 217 (பொது ஊழியராக இருக்கும் நபர், சட்டத்துக்கு கீழ்படியாத நபர்களை உள்நோக்கத்துடன் காப்பாற்றுதல்) பிரிவில் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. இபிகோ 221 (பார்ட் ஒன்) (பொது ஊழியராக இருந்துகொண்டு வேண்டும் என்றே ஒருவர் தப்பிக்க துணையாக இருத்தல்) பிரிவில் அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம். ஆனால் ராஜாராமுக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும். உடனடியாக அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராஜாராமிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி

நீதிபதிகளிடம் ராஜாராம் கூறியதாவது: சம்பவம் நடைபெற்றபோது அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அலுவலகத்துக்குள் பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ராமநாராயணன், அலுவலகத்துக்குள் சிலர் தீவைத்துவிட்டதாகத் தெரிவித்தார்.

உடனே நான் அலுவலகத்துக்குள் சென்றேன். அப்போது ஏட்டுகள் சிலர் அங்கு நின்றிருந்தனர். நான் தீ வைத்தவர்களை விரட்டிவிட்டு, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு அலுவலகத்துக்கு வெளியே வந்தேன். அப்போது அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த போலீஸாரும், ஏடிஎஸ்பியும் அங்கு இல்லை.

இந்த சம்பவத்தில் என்னை பலிகடா ஆக்கியுள்ளனர். அது குறித்து நீதிபதிகளிடம் தனியாகச் சொல்ல விரும்புகிறேன் என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், குற்றவாளிகளை விரட்டி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டிருக்கலாமே என கேள்வி எழுப்பினர். அதற்கு துப்பாக்கியை நான் வண்டியில் வைத்துவிட்டுச் சென்றேன். உடன் எடுத்துச் செல்லவில்லை என்றார்.

அதற்கு துப்பாக்கியை பத்திரமாக வண்டியில் வைத்துவிட்டு, அலுவலகத்துக்குள் சென்றுள்ளீர்கள், அப்படித்தானே? என நீதிபதிகள் கேட்டனர்.

தொடர்ந்து, உங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர், அதில் ஒருவர் நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிந்திருந்தால் என்ன செய்வீர்கள்? அவர்களை காப்பாற்ற நினைப்பீர்களா? இல்லை அப்படியே விட்டுவிடுவீர்களா? என நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு, ‘காப்பாற்ற முயல்வேன்’ என்றார் ராஜாராம். ‘அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் உங்கள் குழந்தைகள் இல்லாததால் காப்பாற்ற முயலவில்லைதானே’ என நீதிபதிகள் கேட்டனர்.

‘இல்லை, காப்பாற்ற முயன்றேன்’ என்றார் ராஜாராம்.

இதையடுத்து ஒரு மணி நேரமாக நீதிமன்றத்தில் ராஜாராம் அமர வைக்கப்பட்டார். பின்னர் நீதிபதிகள் தண்டனையை வாசித்தனர். மாலை 5 மணியளவில் ராஜாராம் நீதிமன்றத்தில் இருந்து மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தலை வணங்குகிறோம்!

நாளிதழ் அலுவலக எரிப்பு சம்பவத்தில் மரணமடைந்த ஊழியர் கோபிநாத்தின் தாயார் திலகவல்லியிடம் இந்த தீர்ப்பு குறித்து கேட்டபோது கூறியதாவது:

தெய்வம் நின்று கொன்றிருக்கிறது. தெய்வங்கள்போல் நின்று நீதி வழங்கியிருக்கும் நீதியரசர்களுக்கு எங்கள் குடும்பம் தலைவணங்குகிறது. முந்தைய தீர்ப்பால் கடும் மன உளைச்சலில் இருந்தோம். தற்போது பெரும் மன ஆறுதல் அடைந்திருக்கிறோம். வலியவர்களை எதிர்த்து, சாதாரண மனிதர்கள் நீண்ட நாள் போராட முடியாத சூழ்நிலையே இருக்கிறது. ஆனாலும், ’நீதி சாகாது’ என்பதை, சிபிஐ விசாரணையும், தற்போதைய தீர்ப்பும் எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்த வழக்கில் சட்டத்தில் சிக்காமல் தப்பிவிட்ட குற்றவாளிகளையும் நாங்கள் வணங்கும் தெய்வங்கள் நிச்சயம் தண்டிக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024