Thursday, March 28, 2019


தேர்வுகளும், தேர்தல்களும்


By உதயை மு.வீரையன் | Published on : 28th March 2019 01:42 AM 

மிகப் பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவில் அரசியல் சட்டத்துக்குட்பட்டு அமைதியாக தேர்தல் நடைபெறுவது உலகப் பார்வையில் அதிசயம்தான். மாணவர்களுக்கான தேர்வுகளும், மக்களுக்கான தேர்தல்களும் ஒரே காலத்தில் வந்திருப்பது பொருத்தம்தான். தேர்வுகளுக்கும், தேர்தல்களுக்கும் உள்ள ஒற்றுமையும், வேற்றுமையும் சிந்திக்கத்தக்கதுதான்.

ஆண்டு முழுவதும் படித்த மாணவர்களின் கல்வியறிவைச் சோதிப்பது தேர்வுகளாகும். அதுபோல அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளுக்கு மக்கள் மதிப்பெண் அளிக்கும் தேர்தல்களே அரசியல்வாதி
களின் எதிர்காலத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன.
வகுப்பறைகளே ஒரு தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன என்று கோத்தாரி கல்விக் குழு கூறியது பொருள் பொதிந்த வார்த்தைகளாகும். இன்றைய மாணவர்களே நாளைய இளைஞர்களாகவும், அடுத்து முழு மனிதர்களாகவும் மாறுகின்றனர். அவர்களைத் தேசத் தலைவர்களாக மாற்றும் பணியையே கல்விச் சாலைகள் செய்கின்றன.

மாணவர்களுக்கான அறிவு வளர்ச்சியை ஆக்கும் பணியை கல்விக் கூடங்கள் செய்கின்றன. அவர்களது கல்வித் தகுதியை மதிப்பிடும் பணியை தேர்வுகள் செய்கின்றன. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் முதல் நாள் தொடங்கி மார்ச் 19-இல் முடிவடைந்தன. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 2,944 மையங்களில் 8.2 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30-இல் தொடங்கி ஏப்ரல் 11 வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் 19 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிளஸ் 1 தேர்வு கடந்த மார்ச் 6 முதல் தொடங்கி மார்ச் 22-இல் முடிவடைந்தன. தமிழகம் முழுவதும் 2,914 மையங்களில் 8 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதி வருகின்றனர்.

இதேபோன்று அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு தேர்வு எழுதப் போகின்றனர். வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் களத்தில் போட்டியிட இருக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏன் இத்தனை பரபரப்பு? 16-ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 2019 ஜூன் 3 அன்றுடன் முடிவடைகிறது. எனவே மே 31க்குள் புதிய நாடாளுமன்றம் பொறுப்பேற்க வேண்டும்.

17-ஆவது மக்களவைக்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 அன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 23 அன்று எண்ணப்படும். இதை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தில்லியில் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகள் உள்பட சில மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் அந்தந்த மாநிலங்களில் நடைபெற உள்லது. தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு வழக்குகள் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. காவல் துறையினரும், அதிரடிப் படையினரும், பறக்கும் படை யினரும் தங்கள் பணிகளை விரைவுபடுத்தியுள்ளனர்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கருப்புப் பண நடமாட்டத்தைக் கண்காணிக்க வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொடர்பான செலவினங்களைக் கண்காணிக்கும்படி வருமான வரித் துறைப் (புலனாய்வு) பிரிவை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனையடுத்து தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காகக் கணக்கில் வராத பணத்தை தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தத் தேர்தலில் கருப்புப் பண நடமாட்டத்தைக் கண்காணித்துத் தடுப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை (புலனாய்வு) திறந்துள்ளது.

எனவே, யாராவது அதிக அளவு பணம், அதிக மதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு சென்றாலோ பொதுமக்கள் அதுபற்றி அறிந்தால் குறிப்பிட்ட எண்களில் தொடர்பு காண்டு தகவல் அளிக்கலாம்.

இதேபோல பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 29-இல் தொடங்கி ஏப்ரல் 11 வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர்கள் விடைத்தாளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை முதன்மைத் தேர்வாளர்களின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும்.

விடைக்குறிப்பின் அடிப்படையில் விடைத்தாள் திருத்தப்பட வேண்டும். அனைத்துப் பக்கங்களிலும் உள்ள அனைத்து விடைகளும் எதுவும் விடுபடாமல் முழுவதும் சரியாகத் திருத்தப்பட வேண்டும். தேர்வர் விடை எழுதிய கடைசி வரியின் கீழ் தேர்வுத் துறை முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே ஆசிரியர் மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மதிப்பெண்ணை முதல் பக்கத்தில் அதற்குரிய கட்டத்துக்குள் தெளிவாக எழுத வேண்டும். ஆசிரியர் செய்யும் தவறுகள் விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டலின்போது கண்டுபிடிக்கப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தேர்விலும் தவறு ஏற்படக் கூடாது; தேர்தலிலும் தவறு ஏற்படக் கூடாது. தேர்வில் தவறு ஏற்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்; தேர்தலில் தவறு ஏற்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவர். நாடும் பாதிக்கப்படும்.
சட்டங்களை மாற்றிட மக்களுக்கு அதிகாரம் உண்டு. அரசாங்கத்தை மாற்றுவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமையை அமைதியான முறையில், ஜனநாயக முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு ஜனநாயக முறையில் நம்பிக்கையில்லை. அவர்கள் கை ஓங்கிவிடின் நாட்டில் ஒரே குழப்பம் ஏற்பட்டு மக்களின் நிலை இன்னும் மோசமாகி விடும். அடுத்துவரும் தலைமுறையினர்களின் பளு அதிகமாகி விடும் என்று நாட்டின் முதல் பிரதமர் பண்டித நேரு கூறியிருக்கிறார்.

தேச நலனில் அக்கறை கொண்ட அனைவரின் கருத்தும் இப்படித்தான் இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாட்டு மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடம் கொடுக்காமல் அதனைப் பயன்படுத்துவதுதான் மக்களாட்சிக்குச் செய்யும் உச்சநிலை மரியாதையாகும்.

ஏமாற்றுவது எவ்வளவு பெரிய தவறோ, ஏமாறுவதும் அதைவிடப் பெரிய தவறாகும். வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவது, பணத்தையும், பதவிகளையும் கண்டு ஏமாறுவது இன்னும் தொடர்கதையாகி வருகிறது. இதுவே மக்களாட்சிக்கு விடுக்கப்படும் அறைகூவலாகும்.
சில நேரங்களில் படித்த மாணவர்கள் தோல்வியுறுவதும், பல நேரங்களில் செயல்படாத கட்சிகள்வெற்றி பெறுவதும் நாட்டில் எதிர்பாராமல் காணப்படும் காட்சிகள்தாம். என்றாலும், நாம் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. ஆரம்ப காலத்தில் தோல்வியுற்றவர்கள் பிற்காலத்தில் பெரும் சாதனையாளர்களாக நிமிர்ந்து நிற்பதைக் காணலாம்.
உண்மையில் அதிகாரம் மக்களிடத்தில்தான் இருக்கிறது. இப்போதைக்குப் பிரதிநிதிகள் என்று யாரைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மக்கள் இல்லாமல் சுயேச்சையாக நாடாளுமன்றத்துக்கு அதிகாரமும் இல்லை. அது இருக்கவும் இயலாது என்பதுதான் மகாத்மா காந்தியின் கருத்தாகும்.

மாணவர்கள் இல்லாமல் கல்வி நிலையங்கள் இல்லாதது போல, மக்கள் இல்லாமல் தேசமும் இல்லை. கல்வி கற்பது மாணவர்களின் கடமை போன்று வாக்களிப்பது குடிமக்களின் கடமையாகும். கடமையைச் செய்யாமல் உரிமையை மட்டும் எதிர்பார்ப்பது தவறு.தேர்வில் ஆசிரியர்கள் போடும் மதிப்பெண்களே மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் போடும் வாக்குகளே தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. 

அதிகாரங்கள் மக்களால் தரப்படுகிறது என்பதை அறியாமல் ஆட்சியாளர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களைக் கண்டு அழுவதா, சிரிப்பதா? காலம் பதில் சொல்லும்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024