Thursday, March 28, 2019

பாராட்டப் பழகு!

By மேலை. பழநியப்பன் | Published on : 26th March 2019 01:26 AM


இன்றைய வேகமான உலகில் பாராட்டு என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சிறந்த அங்கீகாரம் ஆகிறது. தனி மனிதனுடைய, அமைப்புகளுடைய தேடலை, ஆற்றலை, செயலை, மேன்மேலும் வளர்த்துக் கொள்ள உந்து சக்தியாகிறது பாராட்டு. சமுதாயத்தில் பாராட்டுப் பெறுகிறவர் எல்லோராலும் போற்றப்படுகிறார். உலகப் பொதுமறையாய் போற்றப்படும் வள்ளுவம் ஒன்றா உலகத்து உயர்ந்தது புகழ்அல்லால்... எனக் கூறுகிறது. 

ஒரு கண்டுபிடிப்பாளன் பாராட்டப்படும்போது, அதைவிடச் சிறந்த கண்டுபிடிப்பைத் தேட ஆரம்பிக்கிறான். குறிப்பிட்ட தொலைவினை இரண்டு நிமிஷங்களில் கடந்தார் என்பதற்காக ஓர் ஓட்டப்பந்தய வீரரைப் பாராட்டினால், அதே தொலைவை அடுத்த ஓட்டத்தில் ஒன்றரை நிமிஷத்தில் கடந்து அவர் சாதனை படைப்பார். இந்த ஊக்குவிப்பினை பாராட்டு அளிக்கிறது.

சிறந்த மனிதர்களைப் பாராட்டும் அதே சமயம், இவரை மகனாகப் பெற்றிட இவருடைய தாய், தந்தையர் என்ன தவம் செய்தார்கள் என அவர்களும் பாராட்டப்படுகின்றனர். கல்விக்கூடங்களில் பணி வாய்ப்புகளில் பதவி உயர்வுகளில் கூடுதல் தகுதியாகவும் பாராட்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஒரு மாணவன், குறள் ஒப்பிப்பவராகவோ, ஓவியத் திறமை கொண்டவராகவோ, கவிதை படைப்பவராகவோ இருந்தால் அவருக்கு வாய்ப்புத் தந்து திறமையை வெளிக்கொணர்ந்து, பாராட்டு பெறச் செய்யும், பாராட்டுக்குரியவர்கள் பெரும்பாலும், பெற்றோர்களும், ஆசிரியர்களுமே.
வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் இயந்திரம் போல் மட்டும் ஆசிரியர் செயல்பட்டால், அது சிறப்பைத் தராது; ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்து, மாணவரின் திறமையைக் கண்டறிந்து அதை வெளிக் கொணர துணை நின்று கல்விக்கூடத்தையும் மேம்படுத்தினால் நல்லாசிரியர் விருதும் இன்னும் கூடுதல் அக்கறை காட்டினால் தேசிய நல்லாசிரியர் விருதும் அளித்துப் பாராட்டப்படுகிறார்கள்.

அண்மையில் குரூப் 1 தேர்வினை மூன்று முறை எழுதி வெற்றி பெறாத சூழலில், ஒரு குடும்பப் பெண் இடைவிடாது முயற்சித்தும் வெற்றி தவறி விடுகிறதே எனச் சிந்தித்து நான்காவது முறையாக தேர்வுக்குப் போகும் முன், நானே என் வீட்டில் பலமுறை மாதிரி தேர்வெழுதி நானே மதிப்பீடு செய்து, பின் தேர்வைச் சந்தித்தபோது வெற்றி கிடைத்து சென்னையில் துணை ஆட்சியராகப் பணி நியமனம் பெற்றிருக்கிறேன் என்று கம்பீரமாகச் சொல்வது பலருடைய பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது.
ஒரு கிராமியச் சூழலில் அரசுப் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தேன்; தமிழ் ஆர்வம் மிக்கவன் என்பதால், மாணவர் தலைவனாகவும், இலக்கிய மன்றச் செயலாளராகவும், செயல்பட்டேன்; பள்ளி ஆண்டு விழா என்றால் பல போட்டிகள் நடத்தப்படும்; பேச்சு, கட்டுரை, ஒப்புவித்தல் என ஒவ்வொன்றுக்கும் பரிசு அறிவிக்கும்போது சில சினிமா காட்சிகளில் வருவதுபோல, அனைத்திலும் தொடர்ந்து முதல் பரிசினைப் பெறுவேன்; ஆனால் ஆங்கிலம் சார்ந்த போட்டிகளில் பரிசு பெற்றதில்லை.
ஒரு முறை மறுநாள் ஆங்கிலம் ஒப்புவித்தல் போட்டி; முதல் நாள் மாலைக்குள் பெயர் கொடுக்க வேண்டும்; அந்தக் கடைசி நேரத்தில், தலைமை ஆசிரியர் என்னை அழைத்து நாளை ஆங்கில ஒப்புவித்தலில் உன் பெயரையும் எழுதி விட்டேன்; இதோ நீ ஒப்புவிக்க வேண்டிய பாடல்; ஆங்கிலத்தில் ஒன் முதல் டென் வரை (ஒன்று முதல் 10 வரை); அத்துடன் ஓரிரு வார்த்தை மட்டுமே திரும்பத் திரும்ப வரும்; இதை இரவு படித்து நாளை ஒப்புவித்து விடு; இதில் வேறொரு காரணமும் உள்ளது; நாளை நீயே தெரிந்து கொள்வாய் என்று சொல்லி, பாடலை என்னிடம் தந்தார். இரவு வெகுநேரம் கண் விழித்து அந்த ஆங்கிலப் பாடலை மனப்பாடம் செய்தேன்; போட்டியின் போது தடுமாற்றம் இல்லாமல் ஒப்புவித்தேன்; கிராம மக்களும் பலத்த கரவொலி எழுப்பினர்.

வேறு வழியில்லாமல், முதல் பரிசு எனக்கே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் உண்டு; ஆங்கிலம் ஒப்புவித்தலுக்கு நேற்று பிற்பகல் வரை இருவர் மட்டுமே பெயர் அளித்தனர்; எனவேதான், எப்படி ஒப்புவித்தாலும், மூன்றாம் பரிசு உனக்கு என்பதற்காக நானே பெயரைச் சேர்த்தேன்; வாய்ப்பினை உருவாக்கினேன்; எளிய ஆங்கிலப் பாட்டை, தடுமாற்றம் இன்றி உன் குரல் வளம் கூடுதல் தகுதியாகி, ஊர்பொதுமக்கள் கரவொலியும் சேர்ந்து முதல் பரிசினை பெறச் செய்தது. வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினால், பாராட்டு வசப்படும் என்பதற்கு இன்று நீ பெற்ற பரிசே சாட்சி என்றார் தலைமை ஆசிரியர்.
வலிமை உடலில் இருந்து வருவதில்லை, அசைக்க முடியாத மன உறுதியில் இருந்து வருகிறது. நமது மனதின் தூய்மை, அதிகமாக இருந்தால், நமது வலிமையும் அதிகமாக இருக்கும் அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றியும் பாராட்டும் கிட்டும் என்றார் மகாத்மா காந்தி. வாழ்க்கையைப் பாராட்டும் படி வாழ, குன்றாத உழைப்பு குறையாத முயற்சி அவசியம் என்றார் தாமஸ் ஆல்வா எடிசன்.

ஏதோ சாதனை படைத்தால் மட்டுமே அளிக்கக் கூடியதாக பாராட்டு இருக்கக் கூடாது. குழந்தைகளின் சின்னச் சின்ன செயலையும் பாராட்ட வேண்டும். 

தாய், மனைவி, சகோதர, சகோதரிகள் எல்லோரும் பாராட்டுக்குரியவர்களே. விருந்தில் சாப்பாடு சிறப்பாக இருந்தால், சமையல் கலைஞர்களைப் பாராட்டுங்கள். வாசித்த புத்தகம் சிறப்பாக இருந்தால், அதன் ஆசிரியரைப் பாராட்டி கடிதம் எழுதுங்கள். 

பாராட்டுகளில் சிக்கனம் தவிர்த்து தாராளமாய் பாராட்ட வேண்டும், பாராட்டிட, பாராட்டுப் பெறுபவரை முன்பின் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாராட்டு, பாராட்டுபவர்களுக்கும் ஊக்கம் தரும் ஆதலினால் பாராட்டுங்கள்; பாராட்டோடு பரிசு எனில், முப்பால் நூலாம் திருக்குறளைப் பரிசளித்துப் பாராட்டுங்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024