Thursday, March 28, 2019


திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தயார்: விரைவில் ரயில் சேவை


By DIN | Published on : 28th March 2019 06:12 AM

திருவாரூர் - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் (மார்ச் 29) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டத்துக்குப் பிறகு விரைவில் ரயில் சேவை தொடங்கவுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காரைக்குடி - விழுப்புரம் இடையே அகல ரயில் பாதையாக்கும் பணிக்காக 2006-2007-ஆம் ஆண்டிலிருந்து ரயில் போக்குவரத்து சிறிது, சிறிதாக குறைக்கப்பட்டது. இறுதியாக 2012 அக்டோர் 19-ஆம் தேதி திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இப்பணிகள் நிறைவு பெற்று மார்ச்-29-ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் ரயில்பாதை பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

திருவாரூர்-திருத்துறைப்பூண்டிக்கு இடையே உள்பகுதியில் திருநெல்லிக்காவல், செருவாமணி, திருக்கொள்ளிக்காடு, திருத்தங்கூர், பொன்னிரை, ஆலிவலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். ரயில் போக்குவரத்து இருந்த காலத்தில், விவசாயத்துக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு, கிராமப்புற மக்கள் ரயில் போக்குவரத்தையை நம்பியிருந்தனர். ஏனெனில் அவர்கள் பேருந்துக்கு செல்ல வேண்டுமெனில், சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி சாலைக்கு வந்து அங்கிருந்து, பேருந்து ஏறி மீண்டும் நகருக்கு செல்ல வேண்டும். இதனால், நேரம் விரயமானதோடு, இதர பணிகளும் பாதிக்கப்பட்டன. குறைவான நேரத்தில் விரைவில் நகருக்கு செல்லப்பயன்பட்டதால், ரயில் போக்குவரத்து கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வரப்பிரசாதமாக இருந்தது. 
 
இதேபோல் புதூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்களின் அருகிலேயே பள்ளிகள் அமைந்துள்ளன. இந்த கிராமப்புற பள்ளிகளுக்கு பணிக்கு வர ஆசிரியர்களுக்கு உதவியாக ரயில் போக்குவரத்து இருந்தது. கிராமப்புறங்களுக்கு சரியான பேருந்து வசதி இல்லாததால், இருசக்கர வாகனங்களிலோ அல்லது பேருந்தில் பயணித்து பின்னர் சில கிலோ மீட்டர் தூரம் நடந்து, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டியுள்ளது. எனவே கிராமப்புற பள்ளிகளுக்கு மாறுதல் கேட்கும் ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர். 

ரயில் போக்குவரத்து வந்தால், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் எவ்வித கவலையும் இல்லாமல் கிராமப்புற பள்ளிகளில் பணியாற்ற ஆர்வத்துடன் முன்வருவர் என்பதால் கிராமப்புற பள்ளிகளின் கல்வித்தரம் மேலும் உயரக்கூடும் அத்துடன் கல்லூரிக்கு வரும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள். 

இதுகுறித்து, திருநெல்லிக்காவல் -புதூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் கூறியது: திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்திருக்கும். இதேபோல், திருத்துறைப்பூண்டியிலிருந்து கம்பன் விரைவு ரயில் சென்னைக்கு செல்லும்போது, திருநெல்லிக்காவலில் நின்று செல்லும். சுற்று வட்டாரங்களில் உள்ள மக்கள் சென்னை மட்டுமின்றி இதர இடங்களுக்குச் செல்ல இது உதவியாக இருந்தது. மேலும் இங்கிருந்து சிதம்பரத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பலர் நாள்தோறும் ரயிலில் சென்று வந்தனர். ரயில் இருக்கும் போது தூரம் என்பதே தெரியாமல் இருந்தது. தற்போது திருவாரூர் செல்வதற்கு கூட பல மணி நேரங்கள் ஆகிறது என்றார்.
திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கச் செயலர் பாஸ்கரன் கூறியது: சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்ல, திருவாரூர் - காரைக்குடி வழியாக குறைந்த நேரத்தில் சென்று விடலாம். தற்போது கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி சென்று செல்ல வேண்டியுள்ளது. எனவே, தூரமும், நேரமும் மிச்சமளிக்கக்கூடியது இந்த ரயில்பாதை. 

அத்துடன் சிறு வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இந்த ரயில் பாதை மிகவும் பயனளிக்கும். மயிலாடுதுறையுடன் நிறுத்தி விடாமல், செங்கல்பட்டு வரை அனைத்து பயணிகள் ரயில்களும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கட்டணங்களை பொறுத்தவரை, பேருந்து கட்டணங்களை விட, ரயில் கட்டணங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி இடையே உள்ள பகுதி மக்களுக்கு ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக கிழக்கு டெல்டா பகுதி மக்களுக்கு இந்த ரயில் பாதை சேவை மிகவும் பயனளிக்கக்கூடியது என்றார்.
 
ஆலத்தம்பாடி அருகே புற்றடி மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கோயிலின் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கோயில் திருவிழாவின்போது , சிறப்பு ரயில்கள் விடப்படுவது வழக்கம். இதனால் பல்வேறு ஊர்களிலிருந்தும் இந்த கோயில் திருவிழாவுக்கு மக்கள் கூட்டமாக வருவார்கள். ஆனால் தற்போது ரயில் போக்குவரத்து இல்லாததால், திருவிழாவில் மக்கள் கூட்டமும் அதிகம் இல்லை. ரயில் போக்குவரத்து திரும்ப வரும்போது, திருவிழா கொண்டாட்ட உற்சாகங்களும் கிராமப்புறங்களுக்கு திரும்பவும் வரும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024