சரவண பவன் நிறுவனருக்கு ஆயுள்: ஜீவஜோதி வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்
Published : 29 Mar 2019 11:52 IST
புதுடெல்லி
சரவண பவனில் வேலை பார்த்த ஊழியரைக் கொலை செய்த வழக்கில், ஓட்டல் நிறுவனர் பி.ராஜகோபாலுக்கு (அண்ணாச்சி) ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் அதிபர் பி.ராஜகோபாலுக்கு விதிக் கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவர் தனது கணவர் சாந்தகுமார் மற்றும் பெற்றோருடன் வேளச்சேரியில் வசித்து வந்தார். ஜீவஜோதியின் தந்தை சென்னையில் உள்ள சரவணபவன் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
கூலிப்படை உதவியுடன்
ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்ய எண்ணிய சரவண பவன் அதிபர் பி.ராஜகோபால், கடந்த 2001-ம் ஆண்டு அக். 26 அன்று ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொடைக்கானல் பெருமாள்மலை பகுதிக்கு கடத்திச் சென்று கூலிப்படையினரின் உதவியுடன் கொலை செய்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர் பாக ராஜகோபால் உள்ளிட்ட 9 பேர் மீது வேளச்சேரி போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2004-ம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.55 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய எஞ்சிய 8 பேருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜ கோபால் மற்றும் அவரது கூட்டாளி கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2009-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், ‘‘குற்றவாளி களுக்கு கொலைக் குற்றத்தைக் கருத்தில் கொண்டு தண்டனை வழங்காமல் கீழமை நீதிமன்றம் தவறு இழைத்துவிட்டது.
ஆயுள் தண்டனையாக அதிகரிப்பு
இந்த வழக்கில் கொலைக்குற்றம் ஆதாரப்பூர்வமாக தகுந்த சாட்சியங் களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தெளிவான நோக்கத்துடன் பயங்கர குற்றம் இழைத்துள்ளனர். இதை மன்னிக்க முடியாது என்பதால் குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் மற்றும் பட்டுராஜன், ஜனார்த்தன், டேனியல், தமிழ் என்ற தமிழ்செல்வன், கார்மேகம் ஆகிய 6 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை நாங்கள் ஆயுள் தண்டனையாக அதிகரித்து உத்தரவிடுகிறோம்’ என தீர்ப்பளித்து இருந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2009-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.வி.ரமணா, மோகன் எம்.சாந்தன கவுடர், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.யோகேஷ் கண்ணா ஆஜராகி குற்றச்சாட்டுகளை நிரூபித்து வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘இந்த வழக்கில் எவ்வித சந்தேகத் துக்கும் இடமின்றி அரசு தரப் பில் சரியாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆதாரமாக பறிமுதல் செய்யப்பட்ட காரில் தான் கொலை செய்யப்பட்ட சாந்தகுமாரை, குற்றவாளிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
பழனியில் உள்ள பெட்ரோல் பங்கில் அந்த காரை நிறுத்தியது முதல் கொடைக்கானல் மலைக்குச் சென்றது வரை சாட்சியங்கள் தெளிவாக உள்ளன. அதன் அடிப்படையில்தான் சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக் கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில் எவ்வித தவறும் இல்லை என்பதால் நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை.
எனவே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப் பித்த தீர்ப்பு உறுதி செய்யப்படு கிறது. ஆயுள் தண்டனை விதிக் கப்பட்ட பி.ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் வரும் ஜூலை 7-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும்’ என தீர்ப்பளித்துள்ளனர்.
நீதி மீண்டும் வென்றது
இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் எம்.யோகேஷ் கண்ணா கூறும்போது, ‘‘இந்த வழக்கைப் பொருத்தமட்டில் நீதி மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. கொலைக் குற்றவாளிகளான 6 பேருக்கும் எதிராக திரட்டப்பட்ட சாட்சியங்களையும் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் எடுத்துரைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டோம்.
ஒரு பெண்ணுக்காக அவரது கணவரை கொலை செய்த இந்த வழக்கில் சரவணபவன் அதிபர் ராஜகோபால் மட்டுமின்றி எஞ்சிய நபர்களுக்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுமைக்கான தண் டனை என்பதை உச்ச நீதிமன்றம் முத்துராமலிங்கம் (எதிர்) தமிழ்நாடு அரசு வழக்கில் கடைசியாக உறுதி செய்துள்ளது. பொதுவாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் 14 ஆண்டுகள் கழித்து தங்களின் தண்டனையை குறைக்குமாறு அரசிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 433(ஏ) பிரிவில் உரிமை கோரலாம். ஆனால் அதை ஏற்பதும், ஏற்காததும் அரசின் கையில்தான் உள்ளது. இந்த வழக்கைப் பொருத்தமட்டில் தமிழக அரசுதான் கடைசி வரை போராடி குற்றத்தை நிரூபித்துள்ளது’ என்றார்.‘இப்பதான் என் மகள் நிம்மதியா இருக்கா’
ஜீவஜோதியின் தாயார் தவமணி உருக்கம்
"என் பொண்ணு இப்பதான் நிம்மதியா இருக்கா" என்று ஜீவஜோதியின் தாயார் தவமணி தெரிவித்தார்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட பிறகு பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஜீவஜோதி, மறுமணம் செய்துகொண்டு கணவர், மகனுடன் தஞ்சாவூரில் குடியேறினார். ஜீவஜோதியின் தாயார் தவமணி அவருடன் உள்ளார்.
தஞ்சாவூரில் பெண்களுக்கான தையல் கடையும், தாயாருடன் சேர்ந்து சைவ உணவகமும் நடத்தி வருகிறார்.
ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது குறித்து ஜீவஜோதியிடம் கேட்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றபோது, அவர் சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர் உணவகத்தில் இருந்த அவரது தாயார் தவமணியை அணுகி, ஜீவஜோதி இல்லையா என்று கேட்டபோது, "இப்பதான் அவள் எல்லாவற்றையும் மறந்து விட்டு நிம்மதியாக வாழ்கிறாள். தீர்ப்பு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. ஜீவஜோதிதான் சொல்லணும். தீர்ப்புக்காகத்தான் கடைக்கு விடுமுறை விட்டுவிட்டேன். வழக்கறிஞருடன் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார். அதன் பிறகு தீர்ப்பு குறித்த தன் கருத்தை தெரிவிப்பார்" எனக் கூறினார்.
No comments:
Post a Comment