சர்வர்’ கோளாறால் எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு எழுத முடியாமல் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் ஏமாற்றம்
குன்றத்தூரில் ‘சர்வர்’ கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வு நேற்று ரத்து செய்யப்பட்டது. தேர்வு எழுத முடியாத டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பதிவு: ஏப்ரல் 07, 2019 03:45 AM
பூந்தமல்லி,
எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை படிப்பில் சேருவதற்கான நுழைவு தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை கம்ப்யூட்டர் மூலமாக எழுத வேண்டும். இதற்கான தேர்வு மையம் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்தது.
தேர்வு எழுதுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் தேர்வுக்கு வந்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் நுழைவுத் தேர்வு தொடங்கவில்லை. ‘சர்வர்’ கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனது. இதனையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து தேர்வு மையம் முன்பு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோஷங்கள் எழுப்பினார்கள் இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:-
இந்த தேர்வுக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் பஸ் மூலமாக வந்துள்ளோம். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 11 மணிக்கு முடியும். ஆனால் இங்கு எங்களை சோதனை செய்து உள்ளே அனுப்புவதற்கான ‘பயோ மெட்ரிக் சிஸ்டம்’ கூட சரியாக வைக்கவில்லை. அதற்கே காலதாமதம் ஏற்பட்டது. கேட்டால் ‘சர்வர்’ சரியில்லை என்று தெரிவித்தனர். பின்னர் வேறு தேர்வு மையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி விட்டு நீண்ட நேரம் எங்களை காக்க வைத்தனர்.
ஆனால் அதற்கும் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் நாங்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மற்ற இடங்களில் எல்லாம் தேர்வு நடந்து முடிந்து விட்டது. தற்போது எங்களுக்கு வேறு ஒரு நாளில் மீண்டும் தேர்வு நடக்கும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்து விட்டு மீண்டும் அனைவருக்கும் தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment