Wednesday, April 17, 2019

தமிழகத்தில் தற்போது எங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது?

By DIN  |   Published on : 17th April 2019 12:52 PM  | 
தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.


இந்த நிலையில், இன்று தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

அதன்படி, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை முருகன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலத்தக் காற்றுடன் கன மழை வருகிறது.

ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் இன்று முற்பகல் 11 மணியளவில் கன மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, பிங்கர்போஸ்ட் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் இன்றும் மழை கொட்டியது. ஆனந்தபுரி, நாயுடுபுரம், அண்ணாநகர், வட்டகாணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து வறட்சியான வானிலை நிலவிய நிலையில் தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை மக்கள் கோடை வெப்பத்தால் வாடி வதங்கினாலும், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்ற செய்தியைக் கேட்டு மனம் குளிர்ந்துள்ளனர்.
•••
நேற்றைய மழைச் செய்தியைப் பார்க்கலாமா?

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இரவு கோடை மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்யாததால், கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால், மலைப் பகுதிகளில் காட்டுத் தீப்பிடித்து எரிந்தது. இந் நிலையில், கடந்த 2 நாள்களாக கொடைக்கானலில் பகலில் கடுமையான வெயிலும், மாலையில் குளிர்ந்த காற்றும் வீசியது. இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

பேச்சிப்பாறை அணை பகுதியில் பலத்த மழை

குமரி மாவட்டத்தின் அணைப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயிலும், வெப்பமும் நிலவி வருகிறது. வெயில் காரணமாக பயிர்கள் கருகுவதோடு, குடிநீர் ஆதாரங்களும் வறண்டு வருகின்றன. 

விவசாயிகளும், மக்களும் மழையை எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாள்களாக மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கார்மேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. 

இதில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் திற்பரப்பு, குலசேகரம், அருமனை, திருவட்டாறு, வேர்க்கிளம்பி, தக்கலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது.
அருப்புக்கோட்டையில் பலத்த மழை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாகவே கடும் வெயில் அடித்து வந்தது. இதனால் படிப்படியாக வெப்ப நிலை உயர்ந்து கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை 100 டிகிரியைக் கடந்து சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் இளநீர், மோர், பனை நுங்கு, பத நீர் உள்ளிட்ட இயற்கையான பானங்களையும் குளிர்பானங்களையும் மிகுந்த ஆவலுடன் அருந்தி வந்தனர். இதனிடையே செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு பிற்பகல் சுமார் 3 மணிக்குத் தொடங்கி சுமார் 40 நிமிடங்கள் வரை பலத்த மழை பெய்தது. அதிகம் காற்று வீசாமல், இடி மின்னல் இல்லாமல் பெய்த இம்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இம்மழையால் அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் கோடை வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது. பல மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் பெய்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024