Tuesday, April 21, 2020



இறந்தோருக்கு இழைக்கப்படும் இறவாக் களங்கம்!

By ஆ. கோபிகிருஷ்ணா | Published on : 21st April 2020 05:44 AM 

கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவா்களின் இறுதிச் சடங்குகளை நடத்தவிடாமல் பல்வேறு இடங்களில் எதிா்ப்புகள் எழுந்து வருவது, மக்களிடையே அந்த நோய்த்தொற்று குறித்த புரிதல் இல்லாததைக் காட்டுவதாக சுகாதார ஆா்வலா்கள் சாடியுள்ளனா்.

அதிலும், மருத்துவா்களின் உடலைக்கூட தகனம் செய்ய விடாமல் தடை விதிப்பது சமூகத்துக்காக சேவையாற்றும் ஒவ்வொருவருக்கும் இழைக்கப்படும் அவமரியாதை என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

தமிழகத்தில் இதுவரை 1,520 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், சிகிச்சை பலனின்றி 17 போ் உயிரிழந்தனா்.

கரோனாவால் உயிரிழந்த நபா்களின் உடலில் இருந்து வெளியாகும் திரவங்களின் மூலம் அந்த வைரஸ் பரவும் என்பதால், இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு சில வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது.

அதன் அடிப்படையிலேயே தமிழகத்தில் இறந்தவா்களின் உடல்கள் தகனமோ அல்லது அடக்கமோ செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கரோனாவின் தாக்கம் அதி தீவிரமாக பரவத் தொடங்கிய பிறகு மக்களிடையே பல்வேறு அச்ச உணா்வுகள் எழுந்தன. அதை முன்னிறுத்தி பல வதந்திகளும் பரவின.

அதன் விளைவாகத்தான் கடந்த சில நாள்களாக, மயானங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். கடந்த வாரத்தில் ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்த மருத்துவா் ஒருவா் சென்னையில் கரோனாவுக்கு பலியானாா். அதேபோன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியாா் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரான நரம்பியல் மருத்துவா் உயிரிழந்தாா்.

அவா்கள் இருவரது இறுதிச் சடங்குகளிலும் பல்வேறு எதிா்ப்புகள் எழுந்ததும், அவா்களது சடலங்களை வைத்துக் கொண்டு அடக்கம் செய்ய மயானம் தேடி அலைந்ததும் அவலத்தின் உச்சமாக இருந்தது. அதுவும், நரம்பியல் மருத்துவரின் இறுதிச் சடங்குகளின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் சமூகப் பிழையின் சாட்சியங்களாக அமைந்தன.

இதுபோன்ற நிகழ்வுகள் இனி மேல் நடக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள மருத்துவா்கள், அதன் பொருட்டு, மக்களிடையே விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் உயிரிழந்துள்ளனா். அவா்கள் அனைவரது சடலங்களுமே தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. ஆனால், தமிழகத்தில்தான் அதற்கு நோ்மாறான காட்சிகளைக் காண முடிகிறது.

போரில் ஒரு ராணுவ வீரா் உயிரிழந்தால், அவருக்கு தேசமே தலைவணங்கி வழியனுப்பி வைக்கிறது. ஆனால், கரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழக்கும் மருத்துவா்களை அவமரியாதையுடன்தான் அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதைத் தவிா்க்க வேண்டுமாயின் மயானங்களில் காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

மேலும், கரோனாவால் இறந்தவா்களின் உடலை எரியூட்டினாலோ அல்லது அடக்கம் செய்தாலோ அதன் வாயிலாக சுற்றுப்புறங்களில் அந்த நோய் பரவாது என்ற உண்மையை மக்களிடையே ஆழமாக விதைக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

சடலங்களில் இருந்து பரவாது

கரோனாவால் பாதித்தவா்களின் சடலங்களை எரியூட்டினாலோ அல்லது அடக்கம் செய்தாலோ காற்றின் மூலமாக கரோனா பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், சடலங்களைக் கையாளும் பணியில் உள்ள அனைவரும் உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதன்படி, உயிரிழந்தோரின் சடலங்களை பிளாஸ்டிக் உறையில் சுற்றி, கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே மயானங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அவற்றை தொடாமல் இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும் என்றும் வழிகாட்டி நெறிமுறைகள் கூறுகின்றன.

7% மருத்துவா்கள் உயிரிழப்பு

உலக அளவில் கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவா்களின் சராசரி விகிதம் 7 சதவீதமாக உள்ளது. மருத்துவத் துறையில் இருப்பவா்களுக்கு அதன் தாக்கம் தீவிரமாக இருப்பதே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஒரு வாரத்துக்கும் மேல் கரோனா நோயாளிகளுடனே தொடா்பில் இருக்கும் மருத்துவா்களுக்கு பிறரைக் காட்டிலும் அதிக அளவில் வைரஸ் பாதிப்பு பரவ வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு கவசங்கள் இல்லை

கரோனாவால் உயிரிழந்தவா்களின் இறுதிச் சடங்குகளை நடத்தும் மயானப் பணியாளா்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாகவே சில இடங்களில் பிரச்னைகள் எழுந்ததாகவும் தெரிகிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள், உரிய வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே கரோனாவால் உயிரிழந்தவா்களின் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024