மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு
Added : நவ 27, 2020 23:23
சென்னை:மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, 15 சதவீத இடங்கள்; முதுநிலை படிப்புகளுக்கு, 50 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடுக்காக ஒப்படைக்கப்படுகின்றன.இந்த இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீடு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மனுக்கள் தாக்கல் செய்தன.
மனுக்களை விசாரித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டு சலுகையை நீட்டிப்பதில், சட்டப்பூர்வ தடை ஏதும் இல்லை. இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்த பிரச்னைக்கு தீர்வு காண, குழுவுக்கு அனுப்பப்படுகிறது. தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் செயலர்கள் அடங்கிய கூட்டத்தை, மத்திய அரசு கூட்ட வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சலுகை வழங்கும் முறையை, கூட்டத்தில் இறுதி செய்ய வேண்டும்.எத்தனை சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்பதை மூன்று மாதங்களில், மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தி.மு.க., செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு நியமித்த குழுவில், தமிழக சுகாதாரத்துறை செயலர், சுகாதாரப்பணிகள் இயக்குனர் ஜெனரல் ஆகியோர் இடம் பெறவில்லை.தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு பதில், மருத்துவச் சேவை கழகத்தின் உறுப்பினரை, குழுவில் நியமித்துள்ளனர்.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்ததன்படி, 69 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்துவதன் அடிப்படையில், குழுவின் விசாரணை வரம்பு இருக்க வேண்டும். ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீடு பற்றி மட்டுமே, குழுவின் விசாரணை வரம்பில் உள்ளது. இது, நீதிமன்ற அவமதிப்பு.மூன்று மாதங்களில் குழு முடிவெடுக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அக்., 27 க்குள் முடிவெடுத்திருக்க வேண்டும். அதுவும் மீறப்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசு அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment