மருத்துவ கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்குமா?திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டது!
Added : நவ 27, 2020 22:51
சென்னை:எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கின், திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து ஒரு புயல் அறிவிப்பு வெளியாகி உள்ளதால், திட்டமிட்டப்படி மாணவர் சேர்க்கை நடைபெறுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், இம்மாதம், 18ம் தேதி துவங்கியது.அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று நாட்கள்; சிறப்பு பிரிவினர் மற்றும் பொது பிரிவினருக்கு தலா, ஒரு நாட்கள் என, மொத்தம், ஐந்து நாட்கள் கவுன்சிலிங் நடந்தது.
மாணவர் சேர்க்கை
'நிவர்' புயலை தொடர்ந்து, மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும், 30ம் தேதி முதல், டிசம்பர், 10 வரை, பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் வரும், 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களை, https://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
கோரிக்கை
இதற்கிடையே, வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக மாறி, தமிழகத்தில் பாதிப்பை உண்டாக்கினால், மீண்டும், மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது.இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை, ஆன்லைனில் நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துஉள்ளது.
இதற்கான பணிகள், 2017 --18ம் ஆண்டிலேயே முன்னெடுக்கப்பட்ட நிலையில், செயல்படுத்தாதது ஏன் என்ற, கேள்வியும் எழுந்துள்ளது.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ படிப்பில் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 'தமிழகத்தில், புயல் தாக்கம் ஏற்பட்டால், அட்டவணையில் மாற்றம் ஏற்படலாம். தற்போது வரை, திட்டமிட்டப்படி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவெடுத்துள்ளோம்' என்றனர்.
No comments:
Post a Comment