லஷ்மி விலாஸ் வங்கி - டி.பி.எஸ்., இணைப்புக்கு தடை விதிக்க மறுப்பு
Added : நவ 26, 2020 23:09
மும்பை:லஷ்மி விலாஸ் வங்கியை, ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கியுடன் இணைப்பதற்கு தடை விதிக்க, மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லஷ்மி விலாஸ் வங்கியை மீட்கும் வகையில், அதை, டி.பி.எஸ்., வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வழக்கு இந்த இணைப்புக்கு, மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, இன்று முதல், லஷ்மி விலாஸ் வங்கி கிளைகள், டி.பி.எஸ்., வங்கி கிளைகளாக செயல்படும்.
இந்நிலையில், இந்த இணைப்பை எதிர்த்து, லஷ்மி விலாஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்கள், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.'காரோ எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெவலப்மென்ட் லிமிடெட், பிரணவா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' போன்ற நிறுவனங்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளன.
அபாயம்
இந்த நிறுவனங்களுக்கு, லஷ்மி விலாஸ் வங்கியில், 6.80 சதவீத பங்குகள் உள்ளன.'வங்கி இணைப்பு தொடர்பான திட்டத்தின்படி, அனைத்து பங்கு மூலதனங்களும் ரத்து செய்யப்படும் என, கூறப்பட்டுள்ளது.'இதனால், பங்கு முதலீடு செய்துள்ளவர்கள், தங்கள் முதலீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. அதனால், இந்த இணைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்ற அமர்வு, இணைப்புக்கு தடை விதிக்க மறுத்து உள்ளது. வழக்கின் விசாரணை, டிச., 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி, லஷ்மி விலாஸ் வங்கி, ரிசர்வ் வங்கி மற்றும் டி.பி.எஸ்., வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment