பி.எஸ்.என்.எல்., சேவை: புயலால் 18 சதவீதம் பாதிப்பு
Added : நவ 26, 2020 23:36
சென்னை:'நிவர்' புயல் கரையை கடந்த போது, மொபைல் போன் சிக்னல் கோபுரங்களில், 18 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டதாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல், தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே, நேற்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது, வீசிய பலத்த காற்றால், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சிக்னல் வழங்க கூடிய கருவிகள் பாதிக்கப்பட்டன. இதனால், மாலை வரை, சில இடங்களில் மொபைல் சேவை பாதிக்கப்பட்டது.
சிக்னல்
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:புயல் கரையை கடந்த போது வீசிய காற்றால், அம்பத்துார், நத்தமேடு, நெமிலிச்சேரி, பழவந்தாங்கல் உட்பட, பல்வேறு பகுதிகளில், மொபைல் போன் சிக்னல் வழங்கக் கூடிய, பி.டி.எஸ்., நிலையங்கள், 18 சதவீதம் பாதிக்கப் பட்டன.இவை அனைத்தும், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு சொந்தமில்லாத நிலையங்கள். இவை, மாலைக்குள் சரி செய்யப்பட்டு, சேவைகள் வழங்கப்பட்டன.
ரூ.5 கோடி
இதேபோல, பாலவாக்கம், இடையம்பாக்கம், சோமங்கலம் உட்பட, 15 பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில், சேவை பாதிக்கப்பட்டது. இந்த அலுவலகங்களிலும் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு, மாலைக்குள் சேவை வழங்கப்பட்டது. பலத்த சேதம் இல்லாததால், தொலை தொடர்பு சேவை வழங்குவதில், அதிக சிரமம் ஏற்படவில்லை. மேலும், புயல் முன்னெச்சரிக்கை மற்றும் சேதங்களை சரி செய்ய, 5 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment