Sunday, November 29, 2020

நன்மையாக நடக்கட்டும் :நடக்கப்போகும் நாட்களெல்லாம்: -திருக்கார்த்திகை ஸ்பெஷல்

நன்மையாக நடக்கட்டும் :நடக்கப்போகும் நாட்களெல்லாம்: -திருக்கார்த்திகை ஸ்பெஷல்

Added : நவ 28, 2020 23:59



விளக்கு ஏற்றுவது என்பது மங்கலம் தரும் விஷயம். வீட்டிற்கு வரும் மருமகளை 'வீட்டிற்கு விளக்கேற்ற வந்த மகாலட்சுமி' என்றே குறிப்பிடுவர். காலையும், மாலையும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது நம் கடமை. 'இல்லக விளக்கது இருள் கெடுப்பது' என்கிறது அப்பர் தேவாரம்.

ஐந்துமுக குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கையே வீட்டில் ஏற்ற வேண்டும். கோயில்களில் களிமண்ணால் ஆன அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும்.அகல் விளக்கு மூலமாக நவக்கிரகங்களை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும். அகல் சூரியனாகவும், அதில் ஊற்றப்படும் நெய் சந்திரனாகவும், ஜூவாலை செவ்வாயாகவும், திரி புதனாகவும், ஜூவாலையின் மஞ்சள் நிறம் குருவாகவும், திரி எரிய எரியக் குறைவது சுக்கிரனாகவும், திரியில் உள்ள கரியானது சனீஸ்வரனாகவும், ஜூவாலையின் நிழல் ராகுவாகவும், அதன் வெளிச்சம் கேதுவாகவும் கருதப்படுகிறது. எனவே அகல் விளக்கு மூலம் மறைமுகமாக நவக்கிரகங்களை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும்.

மேலை நாட்டு கலாசாரத்தை பின்பற்றி குழந்தைகளின் பிறந்த நாளில் பலுான் உடைத்து, ஏற்றிய மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அணைக்கின்றனர். நல்ல நாளில் நெருப்பை வாயால் ஊதி அணைப்பது கூடாது. ஆன்மிக ரீதியாக இது பாவம். மனோதத்துவ ரீதியாகவும் இச்செயல் அபசகுனம். இந்த நிகழ்வு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. இதற்குப் பதிலாக பூஜை அறையில் எத்தனாவது பிறந்தநாளோ அத்தனை விளக்குகளை ஏற்றலாம். இதன் மூலம் விளக்கேற்றிய புண்ணியமும், ஒளியைப் பரவச் செய்த மகிழ்வும் குழந்தையின் மனதில் தோன்றும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும். கார்த்திகைத் திருநாளில் இந்த உறுதிமொழியை நம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்போம்.

மண் அகலுக்கு பதிலாக கடைகளில் கிடைக்கும் சில்வர் பேப்பரிலான மெழுகு விளக்கு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதுடன் மண்ணில் மட்க நீண்ட காலமாகும் என்பதால் தவிர்ப்பது நல்லது. அப்பர் தேவார பாடலில் விளக்கின் பெருமை பற்றிய சம்பவம் ஒன்று உள்ளது. வேதாரண்யம் சிவன் கோயிலில் நடந்தது இது. ஒருநாள் சன்னதியில் விளக்கில் உள்ள நெய்யைக் குடிக்க வந்த எலி ஒன்று, விளக்கு சூடாக இருந்ததால் வந்த வேகத்தில் திரும்பியது. அப்போது அதன் வால் பட்டு விளக்கின் திரி துாண்டப்படவே, விளக்கு பிரகாசமானது. இதைக் கண்டு மகிழ்ந்த சிவன் எலிக்கு வரம் ஒன்றைக் கொடுத்தார். அதை சக்ரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார். விளக்கைத் தெரியாமல் துாண்டியதற்கே இவ்வளவு நன்மை என்றால் பக்தியுடன் விளக்கு ஏற்றினால் அதன் பலனை எப்படி விளக்க முடியும்?

பொது மேடைகளில் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்குவர். இங்கு மெழுகுவர்த்தி மூலம் விளக்கினை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். கைவிளக்கை இதற்கு பயன்படுத்த வேண்டும். விளக்கேற்றும் சிலர் காலணி, பூட்ஸ் அணிந்தும் வருகின்றனர். மகாலட்சுமியின் அம்சமான விளக்கை அவமதிக்க கூடாது. திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி வைப்போம். இனி நடக்கப் போகும் நாட்களெல்லாம் நன்மையாக நடக்கட்டும். கார்த்திகை தீபத்தின் பேரொளியால் கொரோனா எனும் கொடிய இருள் விலகி மகிழ்ச்சி மலர அண்ணாமலையாரை வழிபடுவோம். - என்.ஸ்ரீநிவாஸன் ஆன்மிக சொற்பொழிவாளர்94869 65655

திக்கெல்லாம் ஒளி வீசும் திருக்கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேரும் நாளில் கொண்டாடப்படுவது திருக்கார்த்திகை. இதற்காக இரு புராண வரலாறு கூறப்படுகிறது. ஒருமுறை பிரம்மா, மகாவிஷ்ணுவுக்குள் சிறந்தவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்காக ஜோதி வடிவாக நின்ற சிவபெருமான் தன் அடி, முடியை முதலில் கண்டு வருபவரே சிறந்தவர் எனத் தீர்ப்பளித்தார். பன்றி வடிவத்தில் மகாவிஷ்ணுவும், அன்னப்பறவையாக பிரம்மாவும் உருமாறி அடி, முடியைத் தேடிச் சென்றும் காண முடியவில்லை. அப்போது சிவபெருமான் ஜோதி வடிவமாகத் தோன்றினார். அந்த நாளே திருக்கார்த்திகை.

மற்றொரு வரலாறு முருகனுடன் தொடர்புடையது. சிவனின் நெற்றிக் கண்ணில் வெளிப்பட்ட தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தன. கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட அக்குழந்தைகளை பார்வதி ஒன்றாகச் சேர்த்து ஆறுமுகனாக மாற்றினாள். அந்த நாளே கார்த்திகை. இந்நாளில் விளக்குகளை ஏற்றி வழிபடுவர். பண்டைய காலத்திலிருந்தே விளக்கு வழிபாடு இருந்ததற்கு அகநானுாறு, அவ்வையாரின் பாடல்களில் சான்றுகள் உள்ளன. அகல் விளக்கு என்பது மண், பஞ்சு, எண்ணெய் அல்லது நெய் என மக்கும் பொருட்களால் ஆனது. இதனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாது. விளக்கு ஏற்றுவதால் புற இருள் மட்டுமின்றி அறியாமை என்னும் அக இருளும் மறையும். விளக்குகளின் ஒளியைக் கண்டால் மனதில் புது நம்பிக்கை பிறக்கும். தேங்காய், வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை திருக்கார்த்திகை பிரசாதமாக படைப்பர். பொரியின் வெண்மை நிறம் விளக்கொளியில் பிரகாசிப்பது போல வழிபடுவோரின் வாழ்வும் ஜொலிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். பொரியும், வெல்லமும் எளிதில் ஜீரணமாகும் என்பதால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணலாம்.

திருவண்ணாமலையில் இன்று மாலையில் மலை தீபம் ஏற்றுவர். இதற்கு முன்னதாக அதிகாலையில் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மலை தீபத்தை தரிசிக்கும் பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவர். அனைத்து கோயில்களிலும் மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்படும். இதற்காக பனை மரத்தில் ஓலை, இயற்கைப் பட்டாசுகளையும் இணைத்து கொளுத்துவர். தீயில் பனையோலை எரிந்து சாம்பலாவது போல நம் அறியாமை, ஆணவம் போன்ற தீய குணங்கள் அழிய வேண்டும் என்பது இதன் நோக்கம். திக்கெல்லாம் ஒளி வீசும் திருக்கார்த்திகை தீபத்தைக் கண்ட இருட்டு போல துன்பம் எல்லாம் விலகி நன்மைகள் பெருக வழிபடுவோம். - பா. ரங்கராஜன் thedal.articles@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024