புதிய மருத்துவ கல்லுாரிகள் கவுன்சிலிங்கில் சேர்க்க மனு
Added : நவ 29, 2020 00:34
மதுரை:மருத்துவப் படிப்பு கலந்தாய்வு பட்டியலில் அரசின் புதிய மருத்துவக் கல்லுாரிகளைச் சேர்க்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை சக்தி நகரைச் சேர்ந்த வாசுதேவா தாக்கல் செய்த மனு:நீட் தேர்வில், 720க்கு, 521 மதிப்பெண் பெற்றுள்ளேன். திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், அரியலுார், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய புதிய, 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள், 2020 - 21ல் துவக்கப்படும்; கலந்தாய்வு பட்டியலில் இடம்பெறும் என தமிழக அரசு செப்.,7 ல் அறிவித்தது.
இக்கல்லுாரிகளுக்கு டீன்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், நடப்பு கலந்தாய்வு பட்டியலில் இப்புதிய, கல்லுாரிகள் இடம் பெறவில்லை. இதற்கான காரணத்தை அரசு தெளிவு படுத்த வில்லை.பழைய மருத்துவக் கல்லுாரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ், 3,031 இடங்கள் உள்ளன. புதிய கல்லுாரிகளுக்கான இடங்கள், 1,650. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
புதிய கல்லுாரிகளை துவக்கினால், 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில், 124 மாணவர்கள் கூடுதலாக பயனடைவர்.நடப்பாண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வு பட்டியலில் அரசின், 11 புதிய மருத்துவக் கல்லுாரிகள் இடம் பெற வேண்டும். அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்புகள் துவக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment