Saturday, January 2, 2021

கல்வி தகுதி நிர்ணயிக்க பல்கலைக்கு உரிமை

கல்வி தகுதி நிர்ணயிக்க பல்கலைக்கு உரிமை

Added : ஜன 02, 2021 00:51

மதுரை:'உயர்கல்வி படிக்க, குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயிக்க, நிகர்நிலை பல்கலைக்கு உரிமை உள்ளது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஜனனி என்பவர் தாக்கல் செய்த மனு:சுகாதார ஆய்வாளர் முதுகலை பட்டயப் படிப்பில், 2020 - 21ல் சேர, பி.எஸ்.சி., - வேதியியல், பிளஸ் 2வில் உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலை நிபந்தனை விதித்தது. இது, சட்டவிரோதம்.இதை ரத்து செய்து, 2018 - 19ல் நிர்ணயித்த பி.எஸ்.சி., வேதியியல் கல்வித் தகுதி அடிப்படையில், என் விண்ணப்பத்தை பரிசீலித்து, இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் தரப்பு, 'தற்போது கல்வித் தகுதியை மாற்றி அமைத்துள்ளதால், பிளஸ் 2வில் உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் படிக்காமல், பி.எஸ்.சி., பட்டம் பெற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என தெரிவித்தது.

நீதிபதி உத்தரவு:குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயிக்க, நிகர்நிலை பல்கலைக்கு உரிமை உள்ளது. கல்வித் தகுதி தொடர்பான நிர்வாக முடிவுகளில், நீதிமன்றம் தலையிட முடியாது. தற்போது, தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். தொழில்நுட்பம் மேம்பாடு அடைந்துள்ளது. இதற்கேற்ப, குறிப்பிட்ட திட்டத்திற்கு திறமையான நபர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

இதன் அடிப்படையில், பல்கலை நிர்ணயித்த கல்வித் தகுதியில் தவறு காண முடியாது. எதிர்காலத்தில், உயர் கல்வித் தகுதியை பல்கலை நிர்ணயிக்கலாம். மனுவை தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024