Friday, February 19, 2021

பறவைகளை ஈர்க்கும் மதுரை கல்லூரி வளாகங்கள்: 4 நாட்கள் கணக்கெடுப்பில் பல புதிய பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

பறவைகளை ஈர்க்கும் மதுரை கல்லூரி வளாகங்கள்: 4 நாட்கள் கணக்கெடுப்பில் பல புதிய பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

மதுரை  19.02.2021 


மதுரையில் உள்ள அனைத்துக் கல்லூரி வளாகங்களிலும் மரங்கள் அடர்த்தியாகவும், பசுமையாகவும் அமைந்துள்ளதால் அவை, பறவைகளை அதிகளவு ஈர்த்து வருகின்றன.

இந்த ஆண்டு நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் மதுரை கல்லூரி வளாகங்களில் பல புதிய பறவை இனங்கள் கண்டயறிப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் பறவை கணக்கெடுப்பு நடக்கும். இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி, பிப்ரவரி 12 முதல் 15 வரை மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, ஸ்ரீமீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி, யாதவர் கல்லூரி, சவுராஸ்டிரா கல்லூரி மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் நடைபெற்றது.

கடந்த ஆண்டு உலக அளவில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்திய அளவில் இந்த நிகழ்வு மூலம், பல புதிய பறவை இனங்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரி விலங்கியல்துறை உதவிப்பேராசிரியர் ராஜேஷ் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு கல்லூரி வளாகங்களில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பழைய மாணவர்களும் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.

அமெரிக்கன் கல்லூரி பசுமைச் சங்கம் மற்றும் விலங்கியல் துறை சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் 20 பறவை சிற்றினங்கள் இருப்பது கல்லூரி வளாகத்தில் கணக்கெடுக்கப்பட்டது.

அதில் முக்கியமாக பழுப்பு ஈ பிடிப்பான், புள்ளி ஆந்தை, வல்லூறு, செம்மார்பு குக்குறுப்பான், இரட்டை வால் குருவி, ஏழு சகோதரிகள் (தவிட்டு குருவி), மரங்கொத்தி, பனை உழவாரன் போன்ற இனங்களைக் கண்டறிந்தனர்.

யாதவர் கல்லூரியில் 40க்கும் மேற்பட்ட விலங்கியல்துறை மாணவர்கள் தங்களின் துறைத்தலைவர் மதியழகன், பேராசிரியர் ராஜ்குமார் மற்றும் பிற பேராசிரியர்களின் துணையோடு கல்லூரி வளாகத்தில் பறவைகளைக் கணக்கெடுத்தனர்.

இதில், சுடலைக் குயில், பச்சை பஞ்சுருட்டான், உண்ணிக் கொக்கு, சாம்பல் நாரை, கொண்டலாத்தி, வண்ணாத்தி குருவி போன்ற 36 சிற்றினங்களை கணக்கிட்டனர்.

வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் விலங்கியல் துறை பறவை கணக்கெடுப்பில் பல புதிய பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன, ’’ என்றார்.

பறவை கணக்கெடுப்பால் என்ன பயன்?

ராஜேஷ் மேலும் கூறுகையில், ‘‘உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும்.

இது போன்ற நீண்ட காலத் திட்டங்களின் முடிவுகள் பறவைகளின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும்.

பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றவாறு நாம் உயிரினங்களின் வாழிடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

இதன் மூலம் நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும்’’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024