Saturday, February 27, 2021

நீரவ் மோடியை அடைக்க மும்பையில் சிறை தயார்


நீரவ் மோடியை அடைக்க மும்பையில் சிறை தயார்

Updated : பிப் 26, 2021 23:42

மும்பை பிரிட்டனில் இருந்து, நாடு கடத்தப்பட உள்ள நீரவ் மோடியை அடைத்து வைக்க, மும்பையில் உள்ள மத்திய சிறைச் சாலையில், அவருக்காக சிறப்பு அறை, தயார் செய்யப்பட்டு உள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.

கைது

இதையடுத்து, அவர் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சி களில், மத்திய அரசு இறங்கியது. இதையடுத்து, 2019ம் ஆண்டு, லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்தும் வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், நீரவ் மோடியை நாடு கடத்த, நீதிமன்றம், நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கான உத்தரவை, பிரிட்டன் அரசு பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நாடு கடத்தப்படும் நீரவ் மோடியை அடைத்து வைக்க, மும்பையின் ஆர்தர் சாலை மத்திய சிறைச் சாலையில், அவருக்காக சிறப்பு அறை, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முடிவு

அதிக பாதுகாப்புடன் இருக்கும், 12ம் எண் சிறை அறையில் அவரை அடைத்து வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, சிறை நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நீரவ் மோடியை அடைத்து வைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. அவருக்காக சிறை தயாராக உள்ளது'
என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024