பத்மஸ்ரீ' விருதுக்கு தேர்வானவர் மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு
Added : பிப் 21, 2021 00:38
அயோத்தியா:உ.பி.,யில், ஜனாதிபதியின் 'பத்மஸ்ரீ' விருதுக்கு தேர்வானவர், மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி படுக்கையில் கிடக்கும் அவல நிலை, காண்போர் கண்களை குளமாக்குவதாக உள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பைசாபாத் நகரைச் சேர்ந்த, முகமது ஷெரீப், 83, கடந்த, 25 ஆண்டுகளாக, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனாதை பிணங்களின் இறுதிச் சடங்குகளை செய்துள்ளார். இவரின் சேவையை பாராட்டும் வகையில், 2020, ஜனவரியில், இவருக்கு, ஜனாதிபதியின் 'பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சில மாதங்களாக முகமது ஷெரீப், நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையில் உள்ளார். அவரின் மருத்துவ சிகிச்சைக்கு செலவு செய்யக் கூட, பணமில்லாத நிலையில் குடும்பத்தார் உள்ளனர். இது குறித்து, வாடகை வாகன ஓட்டுனரான, முகமது ஷெரீப் மகன் ஷகீர் கூறியதாவது:தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு, மாதம், 4,000 ரூபாய் செலவாகிறது. நான், 7,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்.
பத்மஸ்ரீ விருது கிடைத்தால், மாதந்தோறும் கவுரவத் தொகை வழங்கப்படும் என்றார்கள். ஆனால், விருதும் வழங்கப்படவில்லை. பணமும் கிடைக்கவில்லை. இது குறித்து, விருதுக்கு சிபாரிசு செய்த, எம்.பி., லாலு சிங்கிடம் கேட்டதற்கு, 'இன்னுமா வழங்கவில்லை?' என ஆச்சரியத்துடன் கேட்டு, ஆவன செய்வதாக கூறியுள்ளார்.
உள்ளூர் டாக்டர் ஒருவர், தந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். தற்போது, அவருக்கு கூட, பணம் தர முடியாத நிலையில் குடும்பம் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.ஜனாதிபதி விருதுக்கு தேர்வான ஒருவர், பணம் இல்லாமல், இறப்பை எதிர்நோக்கி இருப்பது, அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment